Saturday, November 12, 2016

பீட் கவாஸ் புரோபயாட்டிக் டானிக்
புரோபயாட்டிக் உணவுகளில் பிரதானமாக நாம் அறிவது கெபிர் மட்டுமே. ஒவ்வோரு நாட்டிலும் பராம்பரியமான முறையில் பல புரோபயாட்டிக் உணவுகள் உள்ளன. இனி வரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக பார்ப்போம். இப்பொழுது முதலில் பீட் கவாஸ் எவ்வாறு செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
பீட் கவாஸ் எளிதாக அதிகமான பொருட்கள் இல்லாமல் தயார் செய்யலாம். இது ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக உபயோகத்தில் உள்ளது. இதில் உடலுக்கு நன்மை தரும் புரோபயாட்டிக் உருவாகி நமது ஜூரண சக்தியை மேம்படுத்துகிறது. அத்துடன் நமது சிறுநீரகங்களுக்கும், ஈரலுக்கும் ஒரு டிடாக்ஸாக அமைகின்றது. சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் இதை அருந்தி பயன்கள் பெறலாம். ஐரோப்பியா நாடுகளில் கான்சர் தெரப்பியில் முக்கிய அங்கம் வகிக்கின்றது. அலர்ஜிகளுக்கும், chronic fatigue எனப்படும் நாள்பட்ட சோர்வு, ரசாயண அலர்ஜிகளுக்கும் நல்ல தீர்வாக அமைகின்றது.
டால்ஸ்டாய் பீட்கவாஸை தண்ணீரைவிட சிறந்தது என்றும், எவ்வாறு ரஷ்ய போர்வீரர்கள் காலரா தோன்றிய காலத்தில் தங்களது ராணுவ குடியிருப்பிகளிலிருந்து கவாஸை கொண்டு வந்து மாஸ்கோ தெருக்களில் மக்களை எவ்வாறு தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றினார்கள் என்று அழகாக வர்ணித்திருப்பார். பீட் கவாஸ் ஆயிரம் வருடங்களாக ரஷ்யா, போலன்ட், லாட்டிவியா, லித்துவானியா, பெலாரஸ், ஜார்ஜியா, கஜக்ஸ்தான், ஆர்மேனியா மற்றும் சீனாவிலும் பிரபலமாக உள்ளது. இன்றும் தெருக்களில் ஒரு ஆரோக்கியபானமாக விற்க்கப்படுகிறது.
இதில் உண்டாகும் புரோபயாட்டிக் பாக்டீரியாக்களின் மூலம் பயன்பெற இன்றும் பழமையான முறையில் கம்பு ரொட்டிகளை சேர்த்து செய்கிறார்கள். எளிமையான முறையில் கெபிர் வே சேர்த்து செய்வதால் கம்பு ரொட்டி நமக்கு தேவையில்லை.
இவ்வாறு உண்டாக்கும் பீட்கவாஸில் வைட்டமின்கள் B-1, B-6, மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ், அமினோ ஆசிட்கள், லாக்டிக் ஆசிட் மற்றும் பேன்டோதெனேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. பீட்ரூட்டில் உள்ள என்சைம்கள், நலம் தரும் பாக்டீரியாக்கள் பீட்டாசயானின் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்சிட்ட்டாக மாறி இதய நோய்களுக்கும், கான்சருக்கும் மற்றும் தொற்று நோய்களுக்கு நல்ல பயன் தருகிறது.
பீட் கவாஸை இரண்டு முறைகளில் தயாரிக்கலாம். ஒன்று கெபிர் வே (whey) அல்லது சாதரண தயிரின் வேயுடன்.
கெபிர் வே எவ்வாறு தயார் செய்வது ?
கெபிர் அதிகமாக புளித்தால் கெபிர் தயிர் மேலேயும், வே கீழேயும் தங்கிவிடும். இதனை தனியாக பிரித்து உபயோகப்படுத்தலாம். அல்லது பனீர் தயாரிக்கும் போது எவ்வாறு தயிரிலிருந்து தண்ணீரை (வே) ஒரு துணியில் கட்டி வடிக்கிறமோ அந்த முறையில் கெபிர் தயிரையும் பிரிக்கலாம்.
எவ்வாறு பீட்ரூட் கவாஸ் தயார் செய்வது ?
தேவையான பொருட்கள்:
2,3 மூன்று ஆர்கானிக் பீட்ரூட்
கெபிர் அல்லது சாதாரண தயிர் வே - கால்கப்
கல் உப்பு அல்லது இந்துப்பு - 2 டீஸ்பூன்
ஒரு மேசன் ஜார்
ஸ்பிரிங் அல்லது பில்ட்டர் தண்ணீர் (குளோரின் இல்லாத தண்ணீராகிருக்க வேண்டும்)
கெபிர் வே இல்லையென்றால் கெபிர் ஸ்ட்டார்டர் கல்சரும் பயன்படுத்தலாம்
செய்முறை:
▪️ஆர்கானிக் பீட்ரூட்டை நன்றாக கழுவி அரை/ஒரு இன்ச் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
சாதாரண பீட்ரூட்டாக இருந்தால் தலைபாகத்தை சிறிது அதிகமாகவும், அடிபாகத்தை சாதரணமாகவும் வெட்டி நீக்கிவிட்டு தோலை சீவி மேற்சொன்ன அளவில் நறுக்கிக்கொள்ளவும்.
▪️நறுக்கிய பீட்ரூட் துண்டுகளை ஜாரில் இட்டு, கெபிர் வே அல்லது ஒரு பேக்கட் கெபிர் ஸ்டார்ட்டர் கல்ச்சரையும், உப்பையும், தண்ணீரையும் சேர்க்கவும்.
நன்றாக கலக்கி ஜாரை நன்றாக காற்று புகாதவாறு அடைத்து வைக்கவும். குறைந்தது மூன்று நாட்கள் வைக்க வேண்டும். தினமும் ஒரு முறை திறந்து பூஞ்சை ஏற்படாதவாறு கவனித்துக் கொள்ள வேண்டும்.
▪️இப்பொழுது லாக்ட்டிக் ஆசிட்டால் பெர்மன்ட் ஆகி சிறிய குமிழிகள் நிறைந்துள்ளதை பார்க்கலாம்.
▪️நான்கு நாட்கள் முதல் ஒரு வாரம் கழித்து திறந்து வேறு ஒரு கண்ணாடி பாட்டிலில் தனியாக பிரித்து ஊற்றி பிரிட்ஜில் வைத்துக்கொள்ளவும்.
▪️தினமும் காலையும் இரவும் 2-3 அவுன்ஸ் குடிக்கலாம்.
குழந்தைகளுக்கு எவ்வாறு செய்யலாம் ?
ஆப்பிள், ஆரஞ்ச், ஸ்ட்ராபெரி, கொய்யாப்பழம், பைனாப்பிள் போன்ற பழங்களை துண்டுகளாக்கி சேர்த்து செய்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.
▪️நமது உணவுமுறைகளுக்கு ஏற்ப எவ்வாறு செய்வது ?
இஞ்சி, எலுமிச்சை, சோம்பு, மல்லி, மாங்காய் இஞ்சி,ஏலக்காய், கிராம்பு, பட்டை என்று உங்களுக்கு பிடித்த மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களை சேர்த்து செய்யலாம். பீட்ரூட்டின் பச்சை வாசனை பிடிக்காதவர்களுக்கு இந்த முறையில் செய்யும்போது மேலும் மருத்துவ குணங்களுடன் சுவையையும் கூட்டும்.

குறிப்பு:
▪️வடிகட்டிய பீட் கவாஸ் கால்கப் எப்பொழுதும் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த முறை தயாரிக்கும் போது கெபிர் வேக்கு பதிலாக இதையே சேர்த்துக்கொள்ளலாம்.
▪️பில்ட்டர் செய்த பிறகு மீதமுள்ள பீட்ரூட் துண்டுகளில் இராண்டாம் முறையும் பீட் கவாஸ் செய்யலாம். அல்லது இதை சலாட்டுகளில் சேர்த்துக்கொள்ளலாம்.
▪️நான் செய்த முறையில் வெறும் இஞ்சி மட்டுமே பீட்ரூட்டுடன் சேர்க்கப்பட்டுள்ளது.


Abdul Farook
Post a Comment