Tuesday, August 8, 2017

சிவராம் ஜெகதீசன் சக்தி கொடு! - 1

சக்தி கொடு! - 1
ஆரோக்கிய வாழ்வுக்கான வைட்டமின்களும் மினரல்களும் 
ஒரு விரிவான அறிமுகம்.


[பொறுப்புத் துறப்பு : நான் மெடிகல் பிராக்டிஷனர் - மருத்துவர் அல்ல. இந்தத் தொடரின் மூலம் சொல்லப்படும் விஷயங்களை நீங்களாக முயற்சிப்பதோ அல்லது தக்க மருத்துவர் ஆலொசனையின்றி முயற்சி செய்து பார்ப்பதோ தவறு என்பதுடன், அதற்காகவோ அதன் விளைவுகளுக்காகவோ நானோ இந்தக் குழுமமோ எவ்வகையிலும் பொறுப்பாக மாட்டோம் என்று கூறி என் பொறுப்பைத் துறக்கிறேன்]


********************************
வணக்கம் நண்பர்களே,
மேக்ரோ நியூடிரியண்ட்ஸ் என்றால் என்னவென்று நமக்குத் தெரியும். மாவு - புரதம் - கொழுப்புச் சத்துகளை அக்கு வேறு ஆணி வேறாக அலசி, அதன் அடிப்படையில் ஆரோக்கிய வாழ்வுக்கான பேலியோ உணவு முறையை செல்வன் ஜி அவர்கள் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். எடைக்குறைப்பு முதல் எத்தனையோ நோய்களில் இருந்து நாம் விடுதலையடைந்தும் இருக்கிறோம்.
அடிப்படையில் இந்த மேக்ரோ நியுட்ரியண்டுகள் உடலின் கட்டுமானத்துக்கு உதவி செய்பவை; இயக்க சக்திக்கான கலோரிகளைத் தருபவை. இவை அல்லாமல் ஆரோக்கியமான உடலுக்குத் தேவையான மைக்ரோ நீயூட்ரியண்டுகள் எனப்படும் நுன்ணளவு ஊட்டச் சத்துகள் பற்றியும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான உயிர்ச்சத்துக்கள் என்று சொல்லப்படும் வைட்டமின்கள், தாது உப்புகள் என்று சொல்லப்படும் மினரல்கள், ஃபைட்டோ கெமிகல்ஸ், ஹார்மோன்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் அனைத்தைக் குறித்தும் இதில் நாம் விளக்கமாகப் பேசலாம்.
காய்கறிக் கடைகளில் சாதாரனமாகக் கிடைக்கும் எலுமிச்சம் பழத்தில் உள்ள வைட்டமின் சி முதல், அரிதாகக் கிடைக்கும், புற்று நோயைக் கட்டுப்படுத்தி குணமாக்கும் வைட்டமின் பி17 (B17) வரை பேச எவ்வளவோ இருக்கிறது.
எதற்குப் பேசவேண்டும்? நம் உடலைப் பற்றி நாம் அக்கறை கொள்ளாவிட்டால் வேறு யார் அதைச் செய்வார்கள்?
ஒவ்வொரு வைட்டமினும் எந்த உணவுப் பொருளில் உள்ளது, உடலுக்கான அவற்றின் தினசரித் தேவை என்ன, எந்த வைட்டமினை எப்படி எடுத்தால் அது உடலால் முழுமையாக கிரகிக்கப் படும் என்பது பற்றியெல்லாம் விரிவாகப் பார்க்கப் போகிறோம். இந்த வைட்டமின்களும் மினரல்களும் எவ்வாறு ஆய்வகத்தில் செயற்கையாகக் கட்டமைக்கப் பட்டு சந்தைப் படுத்தப் படுகிறது போன்றவற்றையும் சேர்த்தேதான் பார்க்கவிருக்கிறோம்.
இந்த மைக்ரோ நியூடிரியண்டுகள், மேக்ரோ நியூடிரியண்டுகளுடனும், என்சைம்களுடனும், கோஃபேக்டர் என்று சொல்லப்படும் உப காரணிகளுடனும் சேர்ந்து செயல் பட்டு உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைக்கிறது. ஒவ்வொரு வைட்டமின், மினரல் குறைபாட்டால் வரும் உடல் ரீதியான பிரச்சினைகள், அவற்றைச் சரி செய்யும் விதங்கள் பற்றியும் இந்தத் தொடரில் எழுதப் போகிறேன்.
இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு நாள் நண்பரின் மனைவியிடமிருந்து போன்.
'அண்ணா, பொன்னு அடிக்கடி மயங்கி விழுந்துடறா, என்னன்னே தெரியல. உங்க கிட்ட பேசலாம்னு போன் செஞ்சேன்.'
'டாக்டர்ட்ட போனியா, என்ன சொன்னார் டாக்டர்?'
'போனேன்ணா. அயர்ன் குறைவா இருக்குன்னு ஆறு மாசமா அயரன் டேப்லட் எடுத்துட்டுருக்கா'
'சரி, லேடஸ்ட் பிளட் டெஸ்ட் ரிப்போர்ட்ட எனக்கு வாட்சப்ல அனுப்பு'
ரிப்போர்ட் வந்தது. ஹீமோகுளோபின் 5.8. ஆறு மாசமா அயர்ன் டேப்லட் எடுத்தும் 5.8.
'நீ ஒன்னு செய். ஈரல், சுவரொட்டி, ரத்தப் பொரியல், இதுகள்ல ஏதாவது ஒன்னையோ அல்லது கலந்தோ தினமும் 150 கிராம் அவளுக்குக் கொடு. கூடவே உப்பு போட்டு எலுமிச்சம்பழ ஜூஸ் தினசரி கொடு’'
'சரிண்ணா, இன்னிகே ஆரம்பிக்கறேன்'
ஒரு மாதம் கழித்து 'அண்ணா, இப்ப அந்தப் பிரச்சினையே இல்ல, மயங்கி விழற பிரச்சினை எங்க போச்சுன்னே தெரியல. ஈரல் செம வொர்க் அவுட் ஆயிடுச்சுண்ணா.'
என்ன நடக்கிறது என்று புரிகிறதா? இரும்புச் சத்தை அதன் இயற்கையான வடிவத்தில் எடுக்க வேண்டும். லட்சக்கணக்கான வருடங்களாக உடலுக்கு அதுதான் தெரியும். திடீரென்று அயர்ன் என்று ஒன்றைப் பிரித்தெடுத்து அல்லது ஆய்வகத்தில கெமிகல்கள் மூலம் தயாரித்து விழுங்கினால் அதை உடல் எப்படி ஏற்கும்?
சிக்கல் இதுதான். பெரும் பிரச்னையும் இதுவேதான். இது எப்படி நிகழ்கிறது, ஏன் நிகழ்கிறது என்பதை ஒவ்வொரு வைட்டமினுக்கும் மினரலுக்கும் விரிவாக இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம்.
சத்தத்தினுள்ளே சதாசிவங்காட்டி சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டியதைப் போல ஒவ்வொரு உணவிலும் மறைந்திருக்கும் உயிர்ச்சத்துகளைப் பார்க்கப் போகிறோம்.
"உள்ளம் பெருங்கோவில், ஊனுடம்பு ஆலயம்" என்று சித்தர் திருமூலர் திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறார். உடல் பராமரிப்பை, கோவிலைப் பராமரிப்பது போலப் பராமரித்து அதை ஆரோக்கியத்துடன் வாழச் செய்ய உதவும் அனைத்து உபாயங்களையும் இந்தத் தொடர் சொல்லப் போகிறது.
போலவே, அளவுக்கதிகமாக இந்த வைட்டமின்களும் மினரல்களும் எடுத்தால் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பதையும் பார்க்கப் போகிறோம். பொதுவாக இந்த வைட்டமின்களும் மினரல்களும் உள்ள உணவை எடுப்பதால், அளவுக்கதிகமாக உடலில் சேராது. கடைகளில் கிடைக்கும் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதன் மூலமே இந்த "ஓவர் டோஸ்" என்று சொல்லும் வகையில் அளவுக்கதிகமாக ஆகிறது. வைட்டமின் குறைபாட்டால் பிரச்சினைகள் வருவது போலவே ஓவர் டோஸாலும் பிரச்சினைகள் வரும். கூடவே எந்த வகையான மருந்துகள் மற்றும் மாத்திரைகள், எந்த விதமான வைட்டமின்களையும் மினரல்களையும் உடம்பிலிருந்து அழித்து பல பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது என்பதையும் அலசப் போகிறோம். அத்துடன் பல வகையான வியாதிகளுக்கு பலனளிக்கும் வைட்டமின்களைப் பற்றியும் பார்க்கப் போகிறோம்.
திருமூலரின் இன்னொரு பாடலை உதாரணம் காட்டி இந்த அறிமுகப் பகுதியை முடித்துக் கொள்கிறேன்.
"உடம்பால் அழியின் உயிரால் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே"

No comments: