Tuesday, August 8, 2017

சக்தி கொடு! - 8 சிவராம் ஜெகதீசன்

ஆரோக்கிய வாழ்வுக்கான வைட்டமின்களும் மினரல்களும்********************************
இந்த பாகம் தொடங்கி இனிமேல் வரப்போகும் பல பாகங்களிலும், ஒவ்வொரு வைட்டமினால் ஏற்படும் நன்மைகளோடு கூட, அம்மாத்திரைகளை எடுப்பதால் / எடுக்காததால் விளையும் உடற்கேடுகள் குறித்தும் சொல்லப்படும். அடடே இவர் சொல்வது நமக்குப் பொருந்துகிறதே, நமக்கு இந்தப் பிரச்னை இருப்பதுபோலத் தெரிகிறதே என்று உடனே ஃபார்மசிக்குச் சென்று, வைட்டமின் மாத்திரைகளை வாங்கி, பாதாம் உண்ணுவது போல எடுக்கக் கூடாது. உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்த பின்னரே, வைட்டமின் சப்ளிமெண்டுகளை நீங்கள் எடுக்க ஆரம்பிக்க வேண்டும். அப்படி இல்லாமல், நீங்களே சப்ளிமெண்டுகள் எடுப்பது பெரிய ஆபத்து. சரியாகச் சொல்லுவதென்றால், வைட்டமின் குறைவால் விளையும் ஆபத்தைக் காட்டிலும் மிகு வைட்டமின் அதிக ஆபத்து. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டியது உங்கள் கடமை.
வைட்டமின் A 
************
வைட்டமின்கள் கண்டுபிடிக்கப்பட்டு சப்ளிமெண்டுகளாக உபயோகப் படுத்துவதற்குப் பல காலம் முன்னரே சில வகையான உணவுகள் சில வகையான நோய்களைக் குணப்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்து உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். எகிப்தியர்கள் ஈரலை உணவாகக் கொடுக்கும்போது மாலைக்கண் நோய் சரியாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள். ஈரலில் இருக்கும் வைட்டமின் A வே இதற்குக் காரணம்.
1912ஆம் ஆண்டு டாக்டர் காசிமிர் ஃபங்க் (Casimir Funk) என்பவர், நெல் உமியில் உள்ள நுண்சத்துகளைக் கண்டறிந்து அதற்கு Vitamines என்று பெயர் வைத்தார். வைட்டமின் A முதல் முதலாக காட் லிவர் ஆயிலில் இருந்து 1913ஆம் வருடம் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது.

வைட்டமின் A எனப்படும் கொழுப்பில் கரையும் வைட்டமின் இரண்டு வகைப்படும். ரெட்டினாய்டுகள் மற்றும் கரோடினாய்டுகள் (Retinoids and Carotenoids). இதில் ரெட்டினாய்ட் வகை, இறைச்சி உணவிலும் கரோடினாய்ட் வகை, காய்கறி உணவிலும் உள்ளது. ரெட்டினாய்ட் வகை வைட்டமின் ஆக்டிவ் வகை என்று அழைக்கப்படும். அதாவது இறைச்சியில் உள்ள வைட்டமின் A உடல் உபயோகிப்பதற்கான வடிவத்தில் இருக்கும்.

ஆனால் காய்கறிகளில் இருக்கும் கரோடினாய்ட் வகை வைட்டமின் A ப்ரொ வைட்டமின் அல்லது பிரீ கர்சர் என்று அழைக்கப்படும். அதாவது இந்த பிரீகர்சர்களை ஈரல் சேமித்து வைத்துக் கொண்டு உடலுக்குத் தேவைப்படும் நேரத்தில் வைட்டமின் A வாக மாற்றும். இது மேலும் ஆல்பா கரோட்டின், பீட்டா கரோட்டின் மற்றும் காமா கரோட்டின் என்று மூன்று வகைப்படும். இந்த கரொடினாய்டுகள் வைட்டமின் A வாக மாற்றப் பட்டு ஆக்டிவ் வடிவத்துக்கு மாறும். அதிகபட்சமாக உடலானது நான்கு முதல் ஆறு சதவீதம் வரையே கரோடினாய்டுகளை ஆக்டிவ் வைட்டமின் Aவாக மாற்ற முடியும், அதுவும் உடல் நல்ல நலத்துடன் இருந்தால் மட்டுமே. இந்த வைட்டமின் A வகையில் உள்ள பீட்டா கரோட்டின், ஃபிரீ ராடிகல்களால் ஏற்படும் செல்களின் சேதத்தைக் குறைக்க உதவும் ஷாக் அப்சார்பர் போல செயல்படுகிறது. முக்கியமாக கேன்சர் நோய் வராமல் தடுக்க பெருமளவில் உபயோகமாகிறது.
உடலின் இரண்டாவது மூளை எனப்படும் குடல், நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே கரோடின்களை ஆக்டிவ் வைட்டமின் A வாக மாற்ற முடியும். வயிற்றில் சுரக்கும் அமிலங்களும் இந்த வைட்டமினை கிரகிக்க சரியான அளவில் தேவை. ஆண்டாசிட்டுகள் வைட்டமின் A கிரகிப்பைக் குறைக்கும். பித்தப் பையில் சுரக்கும் பித்த நீரும் வைட்டமின் A கிரகிப்புக்கு முக்கியத் தேவை.
காய்கறி உணவுகளில் பிரீகர்சர் எனப்படும் கரோட்டின்கள் உள்ளன என்று பார்த்தோம். நீரிழிவு, ஹைப்போதைராய்டிசம் மற்றும் கல்லீரல் பிரச்சினை இருப்பவர்களுக்கு, உடலானது கரோட்டின்களை வைட்டமின் A வாக மாற்றும் சக்தி குறைகிறது.
கொழுப்பில் கரையும் இந்த வைட்டமின் A, கொழுப்பில் பயனித்து செல்களுக்குள் நேரடியாகச் செல்லும் வல்லமை படைத்தவை. செல்களைச் சுற்றி கொழுப்பு இருப்பதால் தண்ணீரில் கரையும் வைட்டமின்களால் இப்படி செல்களுக்குள் நேரடியாகச் செல்வது இயலாது.
இதன் செயற்கை வடிவங்களாக வைட்டமின் A பால்மிடேட் மற்றும் வைட்டமின் A அசிட்டேட் என்ற இரண்டு வகைகளாக உள்ளது. இந்த செயற்கை வைட்டமின்கள் ரெட்டினாய்ட் போல உடல் உபயோகிக்க ஏற்ற ஆக்டிவ் வடிவத்தில் இருக்கும்.
வைட்டமின் A வின் சிறப்பு வடிவங்களான Trentonoin மற்றும் isotrentinoin முகப்பரு போன்றவற்றைச் சரி செய்ய உதவுகிறது. மேலும் சில வகையான ரெட்டினாய்டுகள் கேன்சர் போன்ற நோய்களைத் தடுப்பதற்கு உபயோகமாகிறது. இந்த வகை ரெட்டினாய்டுகள் இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. இந்த வடிவங்கள் இப்போது சந்தையில் கிடைப்பதில்லை. ஆனால் உணவு மூலம் இவற்றை எடுப்பதில் எந்தத் தடையுமில்லை.

உடலின் கீழ்க்கண்ட செயல்களுக்கு வைட்டமின் A தேவை:
. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. ரத்த வெள்ளை அணுக்களைப் பெருகச் செய்து நோய் எதிர்ப்பில் முக்கியப் பங்காற்றுகிறது.
. தோல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
. சுற்றுச் சூழலால் உடலில் ஏற்படும் நச்சுகளை அகற்ற உதவுகிறது.
. கேன்சர் எனப்படும் புற்று நோய் வராமல் காக்க உதவுகிறது.
. கண் பார்வைக்கு வைட்டமின் A அவசியமான ஒன்றாகும்.
. எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
இந்த வைட்டமின் A ஆண்டி ஆக்சிடண்டுகளில் ஒன்றாகும். கர்ப்பிணிப் பெண்களுக்கும் மூன்றாம் டிரைமெஸ்டர் என்று சொல்லப்படும் 7 மாதங்களுக்கு மேலான நிலையில் வைட்டமின் A வின் தேவை அதிகரிக்கும். அந்த வேளையில் வைட்டமின் A உள்ள உணவுகளையோ சப்ளிமெண்டுகளையோ எடுப்பது தாய்க்கும் சேய்க்கும் நன்மை பயக்கும்.
நம்ம போலீஸ் ஆஃபீஸர் கோகுல் சாரோட மகன் அபிஷேக்குக்கு சில நாளாகவே சாயங்காலமானா கண் பார்வை சரியா தெரியாம இருந்தது. பார்வை மங்கலாக இருந்ததால சாயங்காலம் கூடப் படிக்கற பசங்களோட விளையாட முடியாம சீக்கிரமா வீட்டுக்குப் போக ஆரம்பித்தான். மாதக்கணக்கில் இது நீடிக்கவே, கோகுல்நாத் சார் அவனைக் கூட்டிட்டுப் போய் மருத்துவரைப் பார்த்தார். இது ஒரு நிகழ்வு.
இன்னொரு நிகழ்வாக, நம்ம கோகிலா டீச்சரோட பையன் ரமேஷுக்கு, அடிக்கடி காய்ச்சலும் இன்ஃபெக்‌ஷனும் வந்துட்டே இருந்தது. சின்னதா ரெண்டு துளி மழை தலைல பட்டாக்கூட காய்ச்சல், உடனே காய்ச்சலுக்கு மருந்து சாப்பிட்டுட்டு இருந்தான். இது இன்னொரு நிகழ்வு.
மேலே சொன்ன ரெண்டு பேரும் மருத்துவரைச் சந்தித்ததில், இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம் வைட்டமின் A குறைபாடு இருப்பதைக் கண்டு பிடித்தார். அவர்களுக்குத் தேவையான வைட்டமின் A உள்ள உணவுகளைப் பரிந்துரைத்தும் வைட்டமின் A சப்ளிமெண்டுகளைக் கொடுத்தும் இந்தக் குறைகளைச் சரி செய்தார்.
உங்கள் உடலில் வைட்டமின் A குறைபாடு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடியுமா? முடியும். கீழ்க்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் உங்கள் உடலில் வைட்டமின் A குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.
. கண்கள் வறண்டு போவது
. அடிக்கடி சோர்வுடன் தலை சுற்றல் வருவது
. ஹைப்போ தைராய்டிசம்
. அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுவது
. பெண்களுக்கு அடிக்கடி யீஸ்ட் இன்ஃபெக்‌ஷன் வருவது
. மாலைக் கண் நோய்
. பற்கள் மற்றும் எலும்புகள் வலுவிழத்தல்
. காயங்கள் ஆற அதிக காலம் எடுப்பது
. தோல் வறண்டு போய் செதிள் செதிளாக ஆகுதல்
மேற்கண்ட அறிகுறிகள் உங்களுக்குத் தெரிந்தால் வைட்டமின் A சப்ளிமெண்டுகளையோ அல்லது வைட்டமின் A அதிகம் உள்ள உணவுகளையோ எடுக்க வேண்டும். குறைபாடு இருக்கும் போது 25000 IU வரை ஒரு நாளுக்கு எடுக்கலாம். 50000 IU அளவுகளில் இதை தினமும்
எடுப்பது நச்சுத் தன்மையை உருவாக்கும்.
ஆண்டிபயாடிக்குகள், செரிமானக் கோளாறுகள், கொலஸ்டிராலைக் குறைக்கும் மருந்துகள் போன்றவை வைட்டமின் A குறைபாட்டை உருவாக்கும். ரத்தப் பரிசோதனை மூலம் உங்களுடைய ரத்தத்தில் உள்ள வைட்டமின் A அளவை அறியலாம்.
மேலே சொன்ன உதாரணத்தில் கோகிலா டீச்சர் இந்த வைட்டமின் A ரொம்ப நல்லது போல இருக்கேன்னு, வைட்டமின் சப்ளிமெண்ட்டை தொடர்ச்சியாக, டாக்டர் ரெகமண்ட் செய்த அளவை விட அதிகமான டோஸை தொடர்ச்சியாக கொடுக்க ஆரம்பித்தார். அதன் விளைவாக அவனுக்கு பசி குறைய ஆரம்பித்தது. முடி உதிர ஆரம்பித்தது. விரல்கள் பின்னிக் கொண்டன. வயதுக்குத் தகுந்த வளர்ச்சியும் இல்லை.
ஒரு நாள் மிகவும் முடியாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவனுடைய ஈரலும் மண்ணீரலும் வீங்கியிருப்பதைக் கண்டு பிடித்தார்கள். கோகிலா டீச்சரிடம் கேட்டபோது அவர் வைட்டமின் A சப்ளிமெண்ட்டைக் கொடுத்தைத் தெரிவித்தார். உடனடியாக வைட்டமின் Aவைக் கொடுப்பதை நிறுத்தச் சொன்னவுடன் சில மாதங்களில் ஆரம்பித்து இரண்டு வருசத்துக்குள் எல்லாப் பிரச்சினைகளும் சரியானது.
ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். வைட்டமின்கள் குறைவாக இருந்தாலும் ஆபத்து. அதிகமாகப் போனால் அதை விட ஆபத்து. அதனால் மருத்துவரிடம் ஆலோசனை செய்து அவர் கொடுக்கும் அளவுகளில் மட்டுமே வைட்டமின் சப்ளிமெண்டுகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதிகப் பிரச்சினைகள்தான் வரும்.
வைட்டமின் A வை உணவு மூலம் எடுக்கும்போது வைட்டமின் A நச்சுத்தன்மை உடலில் உருவாக பெரும்பாலும் வாய்ப்பில்லை. உதாரணத்துக்கு ஈரலை மட்டும் தினசரி முழு நேர உணவாக உண்டு கொண்டிருந்தால் மட்டுமே வைட்டமின் அதிகமாகி நச்சுத்தன்மை வரலாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே. இந்த வைட்டமின் A உடலில் அதிகமாகி நச்சானால் கீழ்க்கண்ட அறிகுறிகள் தோன்றும்.
. பசி உணர்வின்மை
. முடி கொட்டிப் போதல்
. அடிக்கடி தலை வலி
. மூட்டுகளில் வலி
. எடையிழப்பு
. எரிச்சலான மனநிலை
வைட்டமின் A வின் பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவு:
0-3 வயது: 2000 IU அல்லது 600 mcg
4-8 வயது: 3000 IU அல்லது 900 mcg
9-13 வயது: 5610 IU அல்லது 1700 mcg
14-18 வயது: 9240 IU அல்லது 2800 mcg
19 வயதுக்கு மேல்: 10000 IU அல்லது 3000 mcg
கீழ்க்கண்ட உணவுகளில் வைட்டமின் A உள்ளது.
அசைவ உணவுகள்: ஈரல், மீன்கள், முட்டை, சிக்கன்.
சைவ உணவுகள்: கேரட், மிளகாய், கீரைகள், ஆப்ரிகாட் பழங்கள், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, வெங்காயத்தாள், பால், பப்பாளிப் பழம், வெண்டைக்காய் தர்பூசனிப் பழம் போன்ற அனைத்துக் காய்கறி பழங்களிலும் கரோடினாய்டுகள் வடிவத்தில் வைட்டமின் A உள்ளது.
தாவர உணவுகளில் உள்ள கரோடினாய்டுகள் 700க்கும் மேல் உள்ளன. அவற்றில் 60 வகையான கரோடினாய்டுகள் உணவுப் பொருட்களில் உள்ளன. அதில் ஆல்ஃபா கரோட்டின், பீட்டா கரோட்டின், கிரிப்டோசாந்தின், லைகோபீன், லூட்டின் மற்றும் ஜீசாந்தின் போன்ற ஆறு வகைகள் நாம் சாதாரனமாக உண்ணும் உணவில் உள்ளன. (Alpha - carotene, beta - carotene, cryptoxanthin, lucopene, luetin and zeaxanthin - உங்களுக்கு விருப்பம் இருந்தால் இது பற்றி மேலதிக தகவல்களை கூகுள் மூலமாகப் பெறுவதற்காக இவற்றை ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறேன்).
இவற்றில் கிரிடோசாந்தின் வகை கரோடினாய்ட் கேன்சர் ஆபத்தைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. இது வெண்ணெய், ஆரஞ்சுப்பழம், முட்டை மஞ்சள் கரு, பப்பாளிப் பழம் போன்றவற்றில் உள்ளது. இது கண்களில் ஏற்படும் பார்வைக் குறைபாடுகளைப் போக்குவதில் முக்கியப் பங்காற்றுகிறது.
லைகோபீன் என்ற வகை கரோடினாய்டும் சில வகையான கேன்சரைத் தடுப்பதில் உதவுகிறது. LDL கொலஸ்டிராலைக் குறைக்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இவை அடர்த்தியான பச்சை நிறமுள்ள கீரைகள், கொய்யா, தர்பூசனிப் பழம், தக்காளி போன்றவற்றில் உள்ளது. இவற்றை கொழுப்புடன் சேர்த்து உணவாகத் தயாரிக்கும் போதும் சீஸுடன் சாப்பிடும் போதும் இதன் பயோஅவைலபிலிட்டி அதிகரிக்கிறது.
லூட்டின் மற்றும் ஜீசாந்தின் வகை கரோடினாய்டுகள் கண்கள் ஒளியை சரியாக கிரகிக்கவும் ஃபிரீ ராடிகல்ஸ்களில் இருந்து கண்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
நுரையீரல், வயிறு மற்றும் பல இடங்களில் உருவாகும் புற்று நோயை வர விடாமல் தடுப்பதுல் வைட்டமின் A முக்கியப் பங்காற்றுகிறது. தொடர்ச்சியாக தினமும் பச்சை மற்றும் மஞ்சள் நிறமுள்ள காய்கறிகளை உண்பது, கேன்சர் வருவதைத் தடுக்கும்.
Post a Comment