Sunday, September 20, 2015

பேலியோவில் ஏன் எடை மேலும் குறைவதில்லை? Weightloss stages in Paleo.

பேலியோ டயட் துவங்கி முதலில் ஏற்படும் எடை இழப்பு மிகவும் ஆச்சரியகரமாகவும், ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்கும். ஒரே வாரத்தில் எனக்கு 5கிலோ குறைந்திருக்கிறது. பலருக்கும் இப்படியே.

இதற்கான காரணம் தானிய உணவு எடுப்பதால் உடலில் சேர்க்கப்படும் அதிகப்படியான நீர் (எடை), தானியத்தை நிப்பாட்டிய உடன் நீர் உடலில் தேங்குவதில்லை. அந்த நீர் எடைதான் முதலில் நம் உடலிலிருந்து வெளியேறும் எடை. அது ஒவ்வொருவரின் உடல் வாகுக்கு ஏற்ப கூடவோ, குறையவோ இருக்கும். ஆக, கொழுப்பு உடலிலிருந்து குறையத் துவங்கிவிட்டது என்று ஆனந்தமடையக்கூடாது.

ஏனென்றால் அடுத்த வாரங்களில் உடல் எடை குறைவது மிகவும் மெதுவாக நடக்கும். ஒரு மாதம் கழித்து 100கிராம் குறைக்கவே படாத பாடு படுவோம். சரியாக இந்த காலகட்டத்தில்தான் 3கிலோ மீட்டருக்கும் மேலான நடை, உடற்பயிற்சிகள், 100% பேலியோ டயட் என்று எல்லாம் சரியான முறையில் கடைபிடித்துக்கொண்டிருப்போம்.

பலர் கவலைப்படுவதும், டயட்டை விட்டு விலகுவதும், சீட்டிங் அதிகம் செய்ய முனைவதும் இந்த காலகட்டத்தில்தான்.

பொறுமையும், நம் உடல் எப்படி எடை குறைப்பிற்கு ஒத்துழைக்கிறது என்ற ஆர்வம் இருப்பவர்கள் மட்டுமே அடுத்த கட்டமான கொழுப்பு எரிப்பு என்ற நிலைக்குச் செல்கிறார்கள். கரைக்க முடியாத எடையயும் கரைக்கிறார்கள்.

--

ஆக எடைகுறைவது பல கட்டங்களாக நிகழும்.

முதல் நிலை:

உடலில் அதிகப்படியாக தானியங்கள் சேர்க்கும் நீர் எடை. இது டயட்டின் முதல் நாளிலிருந்து, பத்து நாட்களுக்குள்ளாகவே நிகழும். இந்த எடைகுறைவே பல நல்ல மாற்றங்களை உடலில் ஏற்படுத்தும்.

இரண்டாம் நிலை:

குறைவாகச் சாப்பிடுவது, கலோரி குறைவாக எடுப்பது, உண்ணும் கலோரிகளை விட அதிகமாகச் செலவழிப்பது போன்றவைகளால் நிகழும் எடை குறைவு. இதில் பெரும்பாலும் தசைகள் இழப்பால் ஏற்படும் எடை குறைவு இருக்கலாம்.

சரியாக டயட் எடுத்து குறிப்பாக ப்ரோட்டீன் அளவுகள், கொழுப்பு, கார்ப் அளவுகள் விகிதம் சரியாக அமையும்போது கொழுப்பு மிக மெதுவாக செலவழிக்க உடல் தயாராகும். உடற்பயிற்சி, மெது நடை, நீச்சல், சைக்கிளிங் போன்றவையும் சேரும்போது எடை இழப்பு தொடர்ச்சியாகவும், மெதூவாகவும் நிகழும். (டயட் சார்ட் படி உண்ணுங்கள், சுவைக்கேற்ப உண்ணாதீர்கள் என்று கூறுவது இதற்குத்தான்)

மூன்றாம் நிலை:

சரியாக டயட் எடுத்தாலும் ஒருகட்டத்தில் எடை இழப்பு அப்படியே நின்றுவிடும். என்ன செய்தாலும் அசைந்துகொடுக்காது.

இங்கே எந்தப் பொது விதிகளும் உதவுவதில்லை. இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடல் நிலை சார்ந்தது.
இந்த கட்டத்தில் நிகழும் எடை இழப்பே உங்கள் இலக்கு நோக்கி பயணிக்க வைக்கும். அதற்கு முழுமையான ஆராய்ச்சி செய்யவேண்டியது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கடமையாகும்.

இந்தக் கட்டத்தை அடைந்தவுடன் நீங்கள் முதலில் செய்யவேண்டியது.

பொறுமையாக இருப்பதுதான். டயட்டை சரியாகக் கடைபிடித்து ஒரு மாதம் கூட காத்திருக்கலாம். சில நேரம் ஏதோ பயங்கரமான பஞ்சம் போல, சரி சேர்த்து வைத்திருக்கும் கொழுப்பை எரிப்போம் என்று உடல் அநிச்சையாக முடிவெடுக்க ஒரு அவகாசம் தேவைப்படுகிறது. அதற்கு தேவையான காலகட்டம் வரும் வரை பொறுமையாக இருப்பது அவசியம்.

கிட்டத்தட்ட, அந்தப் பஞ்சம் வந்துவிட்டது, இந்த உடலைக் காப்பாற்ற சேமித்த கொழுப்பை எரிப்பது தவிர வேறு வழியில்லை என்று அந்தப் பஞ்ச சமிக்ஞையை நமக்கு நாமே ஏமாற்றும் திட்டத்தில் செயல்படுத்துவதுதான் வாட்டர் பாஸ்டிங், சதுர்த்தி/பிரதோஷ விரதங்கள், வாரியர் இன்னபிற மிகக்குறைந்த உணவு விரத முறைகள்.

சிலருக்கு வாரியர் உதவும், சிலருக்கு தொடர் நடை உதவும், சிலருக்கு பளு தூக்கும் உடற்பயிற்சிகள் உதவும், சிலருக்கு கீட்டோ, சிலருக்கு ஒருவேளை முழுக்கொழுப்பு சிகப்பிறைச்சி 23.5 மணி நேர பாஸ்டிங். இப்படி. இதில் எது உங்களுக்கான வழி என்று நீங்கள் அதைக் கண்டுபிடிக்க இருக்கும் ஒரே வழி, உங்கள் உடல் எதற்கு சரியாக ஒத்துப் போகிறது என்று ஆராய்ந்து அதை நீங்களே கண்டுபிடிப்பதுதான்.

அதை நீங்கள்தான் செய்யவேண்டும். அனைத்து வழிமுறைகளும் குழுமத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. உங்கள் உடலை தொடர்ந்து கவனிப்பதும், எந்த வழிமுறையில் உங்கள் உடல் கொழுப்பை எரிக்க உத்தரவிடுகிறது என்ற சூத்திரம் அறிந்துகொண்டால் அதைப் பயன்படுத்தி உங்கள் இலக்கு எடையை அடைவது சுலபமாக இருக்கும்.

தேவை, பொறுமை மட்டுமே.

No comments:

Post a Comment