Monday, February 20, 2017

Paleo Blood Test Protocol - பேலியோ உணவுமுறைக்கு முன்பாக எடுக்கவேண்டிய ரத்தப் பரிசோதனை பாக்கேஜ்.

  பேலியோ உணவுமுறைக்கு முன்பாக ரத்தப் பரிசோதனைகள் எடுக்கவேண்டியது கட்டாயம்.
அது ஏன் கட்டாயம் என்று ஏற்கனவே பலமுறை விளக்கி இருந்தாலும், தினமும் குழுவில் புதியவர்கள் இணைவதால் அடிக்கடி இதைப் பற்றி எடுத்துச் சொல்லிப் புரியவைப்பது நம் கடமை.
திருப்பூரில் ஒரு பெண்மணி என்னிடம் இப்படிக் கேட்டார்.

"ஐ அம் பர்பெக்ட்லி ஆல்ரைட். நான் ஏன் இந்த டெஸ்ட் எடுக்கனும்? எனக்கு பீபி, சுகர், தைராய்டு எதுவும் இல்லை. நான் டெஸ்ட் எடுக்காம பேலியோ ட்ரை பண்ணக் கூடாதா?"
 
"ஓ தாராளமாக பேலியோ முயற்சிக்கலாம். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்."

"சொல்லுங்க."

"பேலியோ உணவுமுறைக்கு மாறியபிறகு மறு நாளோ 3 மாதங்களோ கழித்து, யாரோ எதுவோ சொன்னார்கள் என்று ப்ளட் டெஸ்ட் எடுத்து, ஏதேனும் அதில் கூடக் குறைய இருந்தால், 'ஈஸ் திஸ் பிகாஸ் ஆஃப் பேலியோ அன்ட் ஹைபேட்?' என்று கேட்கக் கூடாது. அப்படியே உங்களுக்குள்ளாகவே வைத்துக்கொள்ளவேண்டும், அதற்கும் பேலியோவுக்கும் சம்ப்ந்தமே இல்லை ஓக்கேயா?" என்று கேட்டேன்.
அவர் புரிந்துகொண்டார். அதாவது பேலியோவுக்கு முன்பாக தனக்கு ஒன்றுமே இல்லை என்று நம்புபவரின் நம்பிக்கை பேலியோவிற்குப் பிறகு பொய்த்துப்போய் டெஸ்ட் எடுக்கச் சொல்கிறது. நம்பிக்கைக்கு டெஸ்ட் தரவுகள் இல்லாமல் அவரால் நம்மிடம் கேள்வி ஏதும் கேட்க முடியாது. ஆயிரக்கணக்கான டெஸ்ட் ரிப்போர்ட்களை நாங்கள் பார்த்தவகையில் 30% மக்களுக்கு முதல் முறையாக நாங்கள் சொல்லித்தான் டயபடிக், ஃபேட்டி லிவர், தைராய்டு, விட்டமின் டி குறைபாடு, ஹார்மோன் குறைபாடுகள், கிட்னி பிரச்னைகள் தெரிந்தது. இதில் மருத்துவர்களும் உண்டு என்பது கூடுதல் தகவல். ரத்தப் பரிசோதனை மூலம் மட்டுமே இவற்றை அறிய முடியும். அந்த ரிப்போர்டை வைத்துக்கொண்டு நாங்கள் ஆப்பரேஷனோ, தொடுசிகிச்சையோ, அக்குமர்மமோ செய்வதில்லை. உங்களுக்கு ரிப்போர்ட்படி இந்தக் குறைபாடு இருக்கிறது. உங்கள் குடும்ப மருத்துவரிடம் இந்த ரிப்போர்ட்டைக் காட்டி ஆலோசனை பெறவும் என்று சொல்லி அனுப்புகிறோம். அஷ்டே.

சரி, இனி ரத்தப் பரிசோனை பற்றி சில விவரங்கள்.

மூன்று முக்கிய பரிசோதனைக் கூடங்கள் நம் குழுவிற்காக குறைந்த செலவில் ரத்தப் பரிசோதனைகள் செய்து தருகிறார்கள். இதில் பல டெஸ்ட்கள் பல விலைகளில் சொல்லப்படுவதால். எந்த டெஸ்டை பேலியோவிற்கு முன்பாக செய்வது என்ற குழப்பம் நிலவுகிறது. அதைப் போக்கி உங்களுக்கு ஏற்ற பரிசோதனைகள் பரிந்துரைக்கிறோம். கவனமாக குறித்துக்கொள்ளவும்.

உங்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நீங்கள் முதன் முதலாக பேலியோ உணவுமுறைக்கு வருவதற்கு முன்பாக முழு டெஸ்ட்கள் + அப்டமன் ஸ்கேன் அடங்கிய பாக்கேஜில் உள்ள டெஸ்ட்களை செய்துகொள்வது நல்லது.

முழு டெஸ்ட் பாக்கேஜ்கள் + அப்டமன் ஸ்கான் யாருக்கு?

01. இதுவரை இதுபோன்ற ரத்தப் பரிசோதனைகள் வாழ்க்கையில் / சமீபத்தில் செய்யாதவர்கள்.
02. முழு பரிசோதனையில் உள்ள முக்கியமான டெஸ்ட்களான விட்டமின் டி, ஹார்மோன்கள், eGFR, Microalbumin Urea போன்ற டெஸ்ட்கள் விடுபட்டவர்கள்.
03. குடிப்பழக்கம், சிகரெட் பழக்கம் உள்ளவர்கள்.
04. அதிக உடல் எடை கொண்டவர்கள் 100+
05. உடல் எடை குறைக்க ஹெர்பாலைஃப், மாற்று மருத்துவங்கள், நாட்டு மருந்து, லேகியம், பவுடர் போன்றவைகள் உபயோகித்தவர்கள்.
06. ஆண்டுக்கணக்கில் டயபடிஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள்.
07. ஆண்டுக்கணக்கில் டயபடிஸால் பாதிக்கப்பட்டு சரியாக ஆங்கில மருந்து உட்கொள்ளாமல் மாற்று மருத்துவம், லேகியம், பவுடர் உண்டவர்கள்/ உண்ணாதவர்கள்.
08. குழந்தையின்மைக்காக உடல் பருமன் குறைக்க பேலியோ முயற்சிப்பவர்கள்.
09. சில பல வருடங்களுக்கு முன் செயின் ஸ்மோக்கர், சங்கிலி குடிகாரர்களாக இருந்து தற்பொழுது நல்ல பிள்ளையாக இருப்பவர்கள்.
10. வருடம் தவறாது இதுபோன்ற உடல் பரிசோதனை மேற்கொள்பவர்கள்.
11. முதன் முறையாக பேலியோ முயற்சிக்க வருபவர்கள் அனைவரும்.

 விலை குறைந்த டெஸ்ட்கள் யார் முயற்சிக்கலாம்?

01. பேலியோ பற்றி நன்கு அறிந்து 100 நாட்கள் கடந்தவர்கள்.
02. தன் உடல் நிலை பற்றி ஏற்கனவே முழு டெஸ்ட் எடுத்து அதன் மூலம் தெளிவாக அறிந்துகொண்டவர்கள்.
மேற்கூறியவர்கள் தங்கள் பிரச்னைக்கேற்ப டெஸ்ட் பாக்கேஜ்களை தேர்வுசெய்துகொள்ளலாம்.
இதுபோக கிட்னி பிரச்னை இருப்பவர்கள், தைராய்டு குறைபாடு இருப்பவர்கள் அவரவர் நிலைக்கேற்ப சில டெஸ்ட்களை மாதந்தோறும் எடுக்கவேண்டி இருக்கலாம். அது குறித்து உங்கள் மருத்துவர் முடிவு செய்வார்.
ஆரோக்கியம் நல்வாழ்வில் பேலியோவுக்கு முன்பாக கட்டாயம் எடுக்கவேண்டிய ரத்தப் பரிசோதனைகளை குழு பரிந்துரைக்கும் மூன்று லேப்களில் மட்டும்தான் எடுக்கவேண்டுமா?
அவசியம் இல்லை. நாங்கள் பரிந்துரைக்கும் முழுமையான பாக்கேஜ்களை நீங்கள் உங்கள் அருகாமையில் இருக்கும் பரிசோதனை நிலையங்களில் கூட எடுக்கலாம். ஆனால் விலை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது உங்களுக்கு வித்தியாசம் புரியவரும். மற்றபடி எங்களுக்குத் தேவை எக்ஸல் ஷீட்டில் முழுமையாக நிரப்பப்படும் எண்கள் மட்டுமே.

நீங்கள் பரிந்துரைக்கும் ரத்தப் பரிசோதனை லேப்களில் சிலவற்றில் ஸ்கான் இருக்கிறது, சிலவற்றில் இல்லை. என்ன செய்வது?

உங்களுக்கு உகந்த மூன்று லேபுகளிலோ அல்லது அருகாமையில் இருக்கும் லேபிலோ ரத்தப் பரிசோதனை செய்துகொண்டு அருகில் இருக்கும் பரிசோதனை நிலையத்தில் அப்டமன் ஸ்கேன் மட்டும் தனியாக செய்துகொள்ளலாம். எளிமையாகப் புரிந்துகொள்ளுங்கள். முழு ரத்தப் பரிசோதனை மற்றும் அப்டமன் ஸ்கேன் பரிந்துரைக்கப்படும் லேப்களில் இருப்பின் அங்கேயே இரண்டையும் தள்ளுபடி விலையில் செய்துகொள்ளவும். அல்லது தள்ளுபடி விலையில் ரத்தப் பரிசோதனையும், அப்டமன் ஸ்கானை அருகாமையில் இருக்கும் நல்ல லேபிலும் செய்துகொள்ளலாம்.

நான் வெளிநாட்டில் வசிக்கிறேன். என்னால் இங்கு பரிந்துரைக்கப்படும் எல்லா டெஸ்ட்களையும் எடுக்க இயலாது. ஆனால் நான் பேலியோ முயற்சிக்க விரும்புகிறேன். நான் என்ன செய்வது?

 நீங்கள் வெளிநாட்டில் இருந்தாலும் ரத்தப் பரிசோதனை என்பது அவசியம். ஆனால் வெளிநாடுகளில் இந்தப் பரிசோதனைகள் செய்வது கடினம் மற்றும் மிக அதிக பொருட்செலவினை அளிப்பது என்பதால், நீங்கள் உங்கள் சுய ஆர்வத்தில் பிகினர்ஸ் பேலியோ துவங்கலாம். குறைந்தபட்சம் உங்கள் ரத்த சர்க்கரை அளவுகள், தைராய்டு, விட்டமின் டி, கொழுப்பு அளவுகளை அறிந்துகொண்டு பேலியோ முயற்சிப்பது நலம். இந்தியாவிற்கு வரும்பொழுது முழுமையான டெஸ்ட்கள் எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.

ரத்தப் பரிசோதனை எடுத்தபிறகு என்ன செய்யவேண்டும்?

பின் போஸ்டில் உள்ள இந்த இணைப்பிலிருந்து http://tiny.cc/paleoreport எக்ஸல் ஷீட்டை டவுன்லோடு செய்து அதில் உங்கள் பரிசோதனை ரிசல்ட்டில் உள்ள எண்களை சரியாக உள்ளிட்டு அதை ஒரு ஸ்க்ரீன் ஷாட் அல்லது தெளிவாக மொபைலில் புகைப்படம் எடுத்து குழுவில் அப்லோடு செய்து போஸ்ட் போட்டு தெளிவாக உங்கள் உடல் பிரச்னைகள், தற்பொழுது உண்ணும் மாத்திரை, மருந்துகள், எதற்காக இந்த பேலியோ உணவுமுறையை முயற்சிக்க விரும்புகிறீர்கள் போன்ற தகவல்களை சரியாக விவரித்துக் கேட்டால் உங்களுக்கான பேலியோ பரிந்துரை கிடைக்கும்.

என் குடும்பத்தில் 6 நபர்கள் இருக்கிறோம். நான் மட்டுமே பேலியோ முயற்சிக்க இருக்கிறேன். நான் மட்டும் ரத்தப் பரிசோதனை செய்தால் போதுமா?

பேலியோவுக்கு முன்பான ரத்தப் பரிசோதனைகள் என்பது பேலியோவால் நீங்கள் அடைந்த பலனை ஒப்பிட்டுப் பார்க்கவும், உங்கள் உடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் பேலியோவால் குணமடைந்ததை உங்கள் மருத்துவர் ஒப்பிட்டுப் பார்த்து மருந்துகள் அளவைக் குறைக்கவும் பயன்படும்.
ஆனால், பேலியோவில் அல்லாத உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு வருடம் ஒருமுறையாவது இதுபோன்ற ரத்தப் பரிசோதனைகளை நீங்கள் செய்வதின் மூலம், வருங்கால குறைபாடுகள், நோய்களை முன்னரே கண்டறிந்து காப்பாற்றிக்கொள்ள முடியும். நம் குழுவில் பரிந்துரைக்கப்படும் லேபுகளில் குறைந்த செலவில் பேலியோ பாக்கேஜையோ அல்லது, வெளியில் உள்ள லேபுகளில் குறைந்தபட்ச ரத்தக் கொழுப்பு, சர்க்கரை, தைராய்டு, விட்டமின் டி, லிவர், கிட்னி, ஹார்மோன் டெஸ்ட்களை அவரவர் பொருளாதார வசதி மற்றும் உடல்நலன் அடிப்படையில் எடுத்து மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.

குழு தவிர்த்து வெளியே காசு கொடுத்து மருத்துவர்கள் அல்லாத பேலியோ அடிப்படை அறிவற்ற, ப்ளட் டெஸ்டே எடுக்காமல் மூன்று வேளையும் முட்டையும், கறியும், பாதாமும் தின்னச் சொல்லும் போலிகளிடம் அர்ஜன்ட் பேலியோவை நீங்கள் முயற்சித்து, ஒரிஜினல் டூப்ளிகேட் பேலியோ டயட் புத்தகங்கள் படித்து, அதனால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு எங்களிடம் கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்காமல் இருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இதேபோல பலமுறை குழு சார்பில் பேசி, முக்கிய ரத்தப் பரிசோதனைகளை சகாய விலையில் தருமாறு கோரிக்கை வைத்து புதிய பரிசோதனை நிலையங்களை நாங்கள் அறிமுகப்படுத்தினால் சிலர் டெஸ்ட் எடுக்கவேண்டும் என்று வீட்டுக்கு வரச்சொல்லிவிட்டு காலங்காலையில் ரத்தப் பரிசோதனை எடுக்க வருபவரிடம் இன்னிக்கு வேணாங்க, வடக்குல சூலம் அடுத்த மாசம் பார்க்கலாம் என்று திருப்பி அனுப்பும் பொறுப்பற்றத்தனமும் ரிப்போர்ட் செய்யப்பட்டிருக்கிறது. உங்களுக்கு டெஸ்ட் எடுக்க விருப்பமில்லை என்றால் புக்கிங் செய்யவேண்டாம். புக்கிங் செய்துவிட்டால் டெஸ்ட் எடுத்துவிடுங்கள். உங்களின் பொறுப்பற்ற செயலால், டெஸ்ட் விலைகள் கூடி ஆர்வமுடையவர்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளவும். இதனால் வீட்டிற்கு வந்து டெஸ்ட் எடுப்பது நிறுத்தப்பட்டு நீங்கள் காலங்காலையில் காசு எடுத்துக்கொண்டு லேபில் நிற்கவேண்டிய நிலை வரலாம். ஒரு வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி அதில் மேலும் தள்ளுபடியோ, புதிய வசதிகளோ பெற எங்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
போலவே, சம்பந்தப்பட்ட லேபுகளின் சேவைகளில் ஏதேனும் குறை இருப்பின் நேரடியாக அவர்களைத் தொடர்புகொண்டு புகார் அளித்து நிவாரணம் பெறவும் வேண்டுகிறோம்.

 நன்றி.