Showing posts with label Paleo. Show all posts
Showing posts with label Paleo. Show all posts

Sunday, October 13, 2019

OPOS Paleo, மேஜிக் பாட் என்றால் என்ன? முதல் பாடம்.

முதல் பாடம்.
Standardisation. ஒரு குக்கரை மேஜிக் பாட் ஆக்குவது எப்படி?
குழு துவங்கி சற்றொப்ப 2 நாள் கூட ஆகவில்லை. 2000 உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்டி இருக்கிறோம்.
மேஜிக் பாட் என்றால் என்ன? நம் வீட்டில் இருக்கும் குக்கரே போதுமா? தனியே காசு செலவழிக்க வேண்டுமா? இந்தக் குக்கர் அல்லது மேஜிக் பாட் எங்கே கிடைக்கும்? உங்களில் பலருக்கு இந்தக் கேள்விகள் இருக்கிறது. பலர் கமெண்ட்டில் கேட்டிருக்கிறீர்கள்.
ஒவ்வொரு படியாக கற்றுக்கொண்டு பொறுமையாக ஒபோஸ் சித்தாந்தத்தைப் புரிந்துகொள்வது நல்லது.
பேலியோவுக்கும் இதேதான்.
அதிரடியாக பாதாம், முட்டை, இந்துப்பு, பசுமஞ்சள், ஆப்பிள் சைடர் வினிகர் வாங்கி, கார்ப் ஃப்ளூ தாக்குப் பிடிக்க முடியாமல், பேலியோ பற்றிப் புரிந்துகொள்ளாமல் 3 ம் நாள் பேலியோ வேஸ்ட் என்று கைவிடுவதற்கும், அதிரடியாக குக்கர் வாங்கி, சித்தாந்தம் புரியாமல் ஏதோ ஒன்றைச் சமைத்து ஒபோஸ் வேஸ்ட் என்று கைவிடுவதற்குப் பதிலாக, பொறுமையாகப் புரிந்துகொண்டு முயற்சிக்கும்பொழுது இதன் முழுமையான பலன் உங்களுக்குக் கிடைக்கும்.
உங்களிடம் இருக்கும் 2லி குக்கர் அல்லது ஒபோஸிற்கான வாங்கிய மேஜிக் பாட் உங்களிடம் இருந்தால். முதன் முதலில் நீங்கள் செய்யவேண்டிய அடிப்படை விஷயம் என்ன? என்பதை இதில் காணலாம்.
அதன் பெயர் ஸ்டாண்டர்டைசேஷன்.
ஒரு இண்டக்‌ஷன் ஸ்டவ்வில், உங்களுக்குக் கிடைக்கும் லோ வோல்டேஜ், ஹை வோல்டேஜ், அல்லது சரியான வோல்டேஜில், 60 எம் எல் அளவுள்ள கால் கப் தண்ணீரை சூடுபடுத்தினால் அல்லது சமைத்தால் அல்லது ப்ரஷர் குக் செய்தால் அந்த கால் கப் நீர் கொதித்து முதல் விஸிலை எவ்வளவு நேரத்தில் அளிக்கிறது என்பதே ஒரு 2லி குக்கர் மேஜிக் பாட்டாக மாற்றும் வழிமுறை.
இதுதான் முதல் பாடம். இதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் ஒபோஸில் எந்த ரெசிபியை நீங்கள் முயற்சித்தாலும் அது முதல் பாவமாக மாறிவிடும்.
-@-
இன்னொருமுறை ஒபோஸ்க்கு தேவையான லிஸ்டை சரிபார்த்துவிடலாம்.
ஒபோஸ் மேஜிக் பாட் = ஒபோஸின் தனிப்பட்ட மேஜிக் பாட் அல்லது உங்களிடம் இருக்கும் 2லிட்டர் ப்ரஷர் குக்கர்.
சரியான அளவுகளுள்ள - கப் Cups & ஸ்பூன்கள் Spoons
இவை அளவுகள் ஒரேமாதிரியானவை.
ஒரு கப் அளவு 1C= 240 ml,
ஒரு டீஸ்பூன் அளவு 1tsp = 5ml,
ஒரு டேபிள் ஸ்பூன் அளவு 1Tbsp = 15ml
கையளவு , ஆழாக்கு, நான்கு சிட்டிகை போன்றவை ஏன் வேலைக்காகாது என்பது புரிகிறதல்லவா?
ஒரு ரெசிபியில் ஒரு கப் காய்கறி, 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர், அரை டீஸ்பூன் உப்பு என்று சொல்லும்பொழுது, மேலே சரியான அளவுகளில் கப் / ஸ்பூன்கள் வாங்கிப் பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரே போல சுவை & Result வருவது மாறாதுதானே? ஏற்கனவே அறிமுகம் 3-ல் சொன்ன பிஸ்கெட் கம்பெனி உதாரணத்தை நினைவில் கொள்ளுங்கள்.
செபரேட்டர்கள் Separators - இதன் பயன்பாட்டைப் பிறகு பார்க்கலாம்.
இண்டக்‌ஷன் ஸ்டவ். 800, 1000, 1200, 1400 வாட்ஸ்கள் செலக்‌ஷன் இருக்கும் டைப் உத்தமம்.
-@-
இப்பொழுது ஒரு ஒபோஸ் மேஜிக் பாட் அல்லது 2 லி குக்கரை எடுத்து அதன் மூடியில் விஸிலைப் போட்டு, காஸ்கெட் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கவனித்து கால் கப் அதாவது சரியாக 60 எம் எல் தண்ணீரை விட்டு. மூடியைப் போட்டு மூடி, இண்டக்‌ஷன் அடுப்பில் வைத்து, 1200 வாட்ஸ் என்ற வெப்ப அளவை செலக்ட் செய்து, அதே நேரம் உங்கள் மொபைலில் டைமரை ஆன் செய்துகொள்ளவேண்டும்.
முதல் விஸில் வரும்போது டைமரை நிறுத்தி எவ்வளவு நேரத்தில் முதல் விஸில் வந்திருக்கிறது என்று பார்க்கவேண்டும்.
அடுப்பையும், டைமரையும் ஒருசேர ஆன் செய்வது முக்கியம். அடுப்பை ஆன் செய்து டிவி சீரியலில் எந்த மாமியார் எந்த மருமகளுக்கு சூனியம் வைக்கிறார் என்று ஒரு எட்டுப் பார்த்துவிட்டு டைமரை ஆன் செய்து மூன்றாவது விஸில் 1.35 நிமிடத்தில் வந்ததை முதல் விஸில் என்று நம்பும் அப்பாவி நீங்கள் என்றால் ஐ அம் பாவம்.
இதுதான் Standardisation எனும் முதல் பாடம்.
சரி, இதைச் சரியாகச் செய்துவிட்டீர்கள். இப்பொழுது என்ன ரிசல்ட் அதன் மூலம் நாம் அறிந்துகொள்ளும் விஷயம் என்ன?
முதல் விஸில் ஒன்றிலிருந்து இரண்டு நிமிடங்களுக்குள் வந்துவிட்டால் உங்கள் குக்கர் ஒபோஸ் சமையல் முறைக்கு தயாராக இருக்கிறது என்று அர்த்தம்.
ஒரு நிமிடத்திற்குள்ளாகவே முதல் விஸில் வந்துவிட்டால். நீங்கள் அதிக வெப்பத்தில் சமைக்கிறீர்கள், வெப்பத்தைக் குறைக்கவேண்டும் என்று பொருள்.
2 நிமிடங்கள் தாண்டியும் உங்களுக்கு விஸில் வரவில்லை என்றால், நீங்கள் குறைவான வெப்பத்தில் சமைக்கிறீர்கள், வெப்பத்தைக் கூட்டவேண்டும் என்று பொருள்.
1 நிமிடம் 35 செகண்ட்களில் முதல் விஸில் என்பது பர்பெக்ட் டைமிங். குக்கர், இண்டக்‌ஷன் அடுப்பு, நல்ல ஏற்றம் இறக்கமில்லாத வோல்டேஜில் இது சுலபமாகக் கிடைக்கும். ஒன்றிலிருந்து இரண்டு நிமிடங்களுக்குள்ளாக என்பதை கணக்கில் கொண்டால் போதும்.
ஏன் இதைச் செய்யவேண்டும்?
இதுதான் உங்கள் 2லி குக்கர் அல்லது மேஜிக் பாட் ஒபோஸ் முறையில் அதன் பார்முலாவில் சொல்லப்படும் ரெசிபிக்களை சுவை, நிறம், மணம் மாறாமல் உங்களுக்கு அளிக்க சரியான ஒன்றாக இருக்கிறது என்பதை உறுதி செய்கிறது.
இதைச் செய்யாமல் குன்ஸாக சமைத்தால் அதிக வெப்பத்தில் தீய்ந்துபோவதும், குறைந்த வெப்பத்தில் உணவு சரியாக சமைக்காமல், அரைகுறையாக இருப்பதும் நிகழும்.
முதல் பாடத்தை மீண்டும் ஒருமுறை கவனமாகப் படித்துவிடுங்கள்.
இனி மக்கள் இதைப் புரிந்துகொள்ளாமல் செய்யும் முதல் பாவத்தைப் பார்க்கலாம்.
இரண்டு லிட்டர் குக்கர் கைவசம் இல்லை. 1.5லிட்டர் அல்லது 5 லிட்டர் இருக்கிறது. அதனால் என்ன? கூட்டி, வகுத்து, பெருக்கிக் கழித்து முக்காலே அரைக்கால் கப் தண்ணீரை விடுவோம்.
இண்டக்‌ஷன் ஸ்டவ்வில் 2500 வாட்ஸ்தான் இருக்கிறது. மீண்டும் கூட்டி, வகுத்து, பெருக்கிக் கழித்து 30 செகண்டில் முதல் விஸில் வருகிறதா என்று பார்க்கலாம்.
மேலே சொன்ன இரண்டுமே இல்லை. பால் குக்கர்தான் இருக்கிறது. அதுவும் விஸில் அடிக்குமே? கால் கப் தண்ணீரை விட்டு அடுப்பில் வைப்போம்.
மேலே சொன்ன எதுவும் பலனளிக்காது. அல்லது ஒபோஸ் சமையலுக்கு ஒத்துவராது. தயவுசெய்து ஒரு சித்தாந்தத்தின் அறிவியல் கணக்கீடுகளின் அடிப்படையில் புரிந்துகொண்டு முன்னேறி 1000 லிட்டர் குக்கரில் கூட ஒபோஸில் சமைக்கும் திறனை வளர்த்துக்கொள்ள முயற்சியுங்கள். முதல் பாடத்திலேயே முதல் பாவத்தைச் செய்யவேண்டாம். அது மிகப்பெரிய பின்னடைவை, மனக்கஷ்டத்தை, வெறுப்பை உங்களுக்குத் தரும்.
ஒரு உன்னதமான எளிமையான சமையல் முறையை நீங்கள் உங்கள் அறியாமையால் வெறுக்கும் நிலை வரும்.
பேலியோவின் முதல் பாவமும் இதேதான்.
முதன் முதலாக கார்ப் எனும் மாவுச்சத்து உணவுகளை தவிர்க்கும்பொழுது கார்ப் ஃப்ளூ எனும் உடல் பிரச்னை வரும்.
தலைவலி, சோர்வு, கைகால் உதறுவது, வயிற்றுப் போக்கு என்று முதல் 4-5 நாட்கள் வரும் இதைப் புரிந்துகொள்ளாமல் பேலியோ விட்டு ஓடியவர்கள் பலர். அவர்கள் இழந்தது எவ்வளவு விலைமதிப்பில்லாத ஆரோக்கியத்தை? அதைக் கடந்தவர்கள் அடைந்த அபரிமிதமான பலன்கள்தான் எத்தனை?
பொறுமை, புரிந்துகொள்ளுதல், புரியாததை தெளிவுபடுத்தித் தெரிந்துகொள்ளுதல், தேடல், பகுத்தறிதல், ஏற்றுக்கொள்ளுதல், செயல்படுத்துதல், வெற்றியடைதல்.
இதுதானே புதிய ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கான படிநிலைகள்?
ஆக, Standardisation ஒபோஸின் முதல் பாடம். உங்கள் மேஜிக் பாட் அல்லது 2லிட்டர் குக்கரில் கால் கப் நீருக்கு முதல் விஸில் எப்பொழுது வந்தது? நிமிடங்கள், நொடிகள் என்ன?
சரி, இனி மேஜிக் பாட் எங்கே கிடைக்கும் என்று கேட்டவர்களுக்கு:
ஒபோஸுக்கென்று வடிவமைக்கப்பட்ட பிரத்யேக 2லிட்டர் மேஜிக் பாட் கிடைக்கிறது. அதற்கான லிங்க் மற்றும் டிஸ்கவுண்ட் கூப்பன் கோட் கீழே கொடுக்கிறேன். அதில் என்ன இருக்கும்?
ஒரு 2லி மேஜிக் பாட்.
அளவுகளுக்கான ஸ்பூன்கள்.
அளவுகளுக்கான கப்கள்.
ஒரு சபரேட்டர்.
Link:

2லி மேஜிக் பாட் செலெக்ட் செய்து
2லிட்டர் மேஜிக் பாட்டுக்கான டிஸ்கவுண்ட் கூப்பன் கோட் : OPOSpaleo2 பயன்படுத்தி வாங்கலாம்.
3லிட்டர் மேஜிக் பாட்  டிஸ்கவுண்ட் கூப்பன் கோட் : opospaleo பயன்படுத்தி வாங்கலாம்.

(இந்த கூப்பனைப் பயன்படுத்தாவிட்டால் டிஸ்கவுண்ட் கிடைக்காது. )

இந்த மேஜிக் பாட் எப்படி இருக்கும்? வீடியோ:

மேலுள்ள யுட்யூப் சானலை சப்ஸ்க்ரைப் செய்து பேலியோ உணவுகளை எப்படி ஒபோஸ் முறையில் தயார் செய்வது என்று எளிமையாக வீடியோக்கள் மூலம் அறிந்துகொள்ளுங்கள்.

இந்தக் குக்கர் வாங்கும்பொழுது ஏற்படும் ஆன்லைன் பேமெண்ட் பிரச்னைகள், ஆர்டர், டெலிவரி விவரங்கள் அனைத்திற்கும் கீழுள்ள இமெயிலில் தொடர்புகொண்டால் அவர்கள் தேவையான பதில் அளிப்பார்கள்.

care@smarteer.com

மேலுள்ள இமெயிலுக்குப் புகார் அனுப்பிவிட்டு ஒரு காப்பியை கீழ்க்கண்ட இமெயிலுக்கும் அனுப்பவும்:

oposmods@gmail.com

பேலியோவிற்காக இன்னும் விலை குறைவாக ஒரு கிட் தயாரித்து தருமாறு கேட்டிருக்கிறேன். அது எப்பொழுது கிடைக்கும் என்பது தெரியாது. விவரம் வரும்பொழுது அறிவுக்கிறேன்.
சரி.
இந்தக் குக்கர் விற்கத்தான் இந்தக் க்ரூப்பா?
இல்லை. ஒபோஸ் முறையில் பேலியோ உணவுகளை எப்படி எளிதாக, விரைவாகச் சமைப்பது? சமைக்கத் தெரியாதவர்களும் சமைக்கக் கற்றுக்கொள்வது, நமது உணவை நாமே சமைத்து உண்பது போன்றவற்றிற்காகத்தான் இந்தக் குழு.
பேலியோ இலவசம்தானே?
பேலியோ சித்தாந்தம் இலவசம்.
ஒபோஸ் சித்தாந்தம் இலவசம்.
பேலியோ கடைபிடிக்க சமையல் பாத்திரம் துவங்கி, கேஸ் சிலிண்டர், சமையல் பொருட்கள், காய்கறி, எண்ணெய், நெய், முட்டை, இறைச்சி, பாதாம் அனைத்தையும் காசு கொடுத்து வாங்கத்தானே வேண்டும்.
ஏற்கனவே உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டும் பேலியோ முயற்சிக்கலாம். தேவை பேலியோ பற்றிய புரிதல்.
அதே போல ஒபோஸ் சித்தாந்தம் இலவசம். அதனடிப்படையில் சமைக்க, சில பொருட்கள் காசுகொடுத்து வாங்கவேண்டும்.
ஏற்கனவே உங்கள் சமையலறையில் இருக்கும் குக்கரைக் கொண்டும் ஒபோஸ் முயற்சிக்கலாம். தேவை ஒபோஸ் பற்றிய புரிதல்.
முழுவதுமாக பாடங்கள் முடிந்து, சமையல் துவங்கும் வரை காத்திருந்து அதன் பின் உங்களுக்கு உபயோகமென்றாலும் வாங்கலாம்.
முதலில் சித்தாந்தத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
மேலே உள்ள சைட்டில்தான் வாங்க வேண்டுமா?
மேஜிக் பாட் என்றால் ஆம். சாதாரன குக்கர் என்றால் இல்லை.
என்னிடம் 2லி குக்கர் இருக்கிறது. அதைப் பயன்படுத்தலாமா?
ஒபோஸ் ஸ்டாண்டர்டைசேஷன் டைமிங் சரியாக இருப்பின் தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அதிக வெப்பத்தில் சமைக்கப்படும் ஒபோஸ் சமையல்கள் அனைத்திற்கும் அது ஏற்றதா என்பதை நீங்கள்தான் பயன்படுத்தி முடிவுசெய்யவேண்டும். பொதுவாக சாதாரண குக்கர்கள் அதிகவெப்பம் குறுகிய நேரம், தண்ணீர் இல்லாத அல்லது குறைவான சமையலுக்காக டிசைன் செய்யப்படுவதில்லை.
Induction stove எதை வாங்கலாம்?
நான் பயன்படுத்துவது இது :

இண்டக்‌ஷன் ஸ்டவ் மட்டும்தான் பயன்படுத்த முடியுமா? கேஸ் ஸ்டவ், விறகடுப்பு போன்றவற்றில் ஒபோஸ் முறையில் சமைக்க முடியாதா?
முடியும். ஆனால் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்தப்பட்ட வெப்ப அளவை சீராகக் கொடுப்பது இண்டக்‌ஷன் ஸ்டவ் மட்டுமே என்பதால் ஒபோஸில் அது மட்டுமே பரிசீலிக்கப்படுகிறது. ஆக , இப்பொழுதைக்கு அதில் சமைப்பதை மட்டும் பேசுவோம்.
உங்களிடம் 1200 வாட்ஸ் உள்ள அடுப்பை நீங்கள் பயன்படுத்தி முதல் பாடம் சரியாக வருகிறதா என்று சரிபார்க்கலாம். உங்களிடம் 1200 வாட்ஸில் இல்லாவிட்டால் அக்கம் பக்கம் தெரிந்தவர்களிடத்தில் இருந்தாலும் வாங்கிப் பரிசோதிக்கலாம். முதல் பாடத்தில் குக்கருக்கோ, அடுப்பிற்கோ ஒரு ஆபத்தும் வராது. ஆனால், ஒபோஸ் முழுமையான சமையலுக்கு இந்த இரவல் சமாச்சாரம் ஒத்துவராது.
கிச்சன் எடைக் கருவி எதை வாங்கலாம்?
நான் பயன்படுத்தும் இருப்பதிலேயே விலை குறைவான மாடல்
இன்னும் அளவுகள் கொண்ட கப்கள், ஸ்பூன்கள் எல்லாமே அமேசானில் கிடைக்கிறது.
தேடுங்கள் கிடைக்கும்.
-@-

Monday, February 20, 2017

Paleo Blood Test Protocol - பேலியோ உணவுமுறைக்கு முன்பாக எடுக்கவேண்டிய ரத்தப் பரிசோதனை பாக்கேஜ்.

  பேலியோ உணவுமுறைக்கு முன்பாக ரத்தப் பரிசோதனைகள் எடுக்கவேண்டியது கட்டாயம்.
அது ஏன் கட்டாயம் என்று ஏற்கனவே பலமுறை விளக்கி இருந்தாலும், தினமும் குழுவில் புதியவர்கள் இணைவதால் அடிக்கடி இதைப் பற்றி எடுத்துச் சொல்லிப் புரியவைப்பது நம் கடமை.
திருப்பூரில் ஒரு பெண்மணி என்னிடம் இப்படிக் கேட்டார்.

"ஐ அம் பர்பெக்ட்லி ஆல்ரைட். நான் ஏன் இந்த டெஸ்ட் எடுக்கனும்? எனக்கு பீபி, சுகர், தைராய்டு எதுவும் இல்லை. நான் டெஸ்ட் எடுக்காம பேலியோ ட்ரை பண்ணக் கூடாதா?"
 
"ஓ தாராளமாக பேலியோ முயற்சிக்கலாம். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்."

"சொல்லுங்க."

"பேலியோ உணவுமுறைக்கு மாறியபிறகு மறு நாளோ 3 மாதங்களோ கழித்து, யாரோ எதுவோ சொன்னார்கள் என்று ப்ளட் டெஸ்ட் எடுத்து, ஏதேனும் அதில் கூடக் குறைய இருந்தால், 'ஈஸ் திஸ் பிகாஸ் ஆஃப் பேலியோ அன்ட் ஹைபேட்?' என்று கேட்கக் கூடாது. அப்படியே உங்களுக்குள்ளாகவே வைத்துக்கொள்ளவேண்டும், அதற்கும் பேலியோவுக்கும் சம்ப்ந்தமே இல்லை ஓக்கேயா?" என்று கேட்டேன்.
அவர் புரிந்துகொண்டார். அதாவது பேலியோவுக்கு முன்பாக தனக்கு ஒன்றுமே இல்லை என்று நம்புபவரின் நம்பிக்கை பேலியோவிற்குப் பிறகு பொய்த்துப்போய் டெஸ்ட் எடுக்கச் சொல்கிறது. நம்பிக்கைக்கு டெஸ்ட் தரவுகள் இல்லாமல் அவரால் நம்மிடம் கேள்வி ஏதும் கேட்க முடியாது. ஆயிரக்கணக்கான டெஸ்ட் ரிப்போர்ட்களை நாங்கள் பார்த்தவகையில் 30% மக்களுக்கு முதல் முறையாக நாங்கள் சொல்லித்தான் டயபடிக், ஃபேட்டி லிவர், தைராய்டு, விட்டமின் டி குறைபாடு, ஹார்மோன் குறைபாடுகள், கிட்னி பிரச்னைகள் தெரிந்தது. இதில் மருத்துவர்களும் உண்டு என்பது கூடுதல் தகவல். ரத்தப் பரிசோதனை மூலம் மட்டுமே இவற்றை அறிய முடியும். அந்த ரிப்போர்டை வைத்துக்கொண்டு நாங்கள் ஆப்பரேஷனோ, தொடுசிகிச்சையோ, அக்குமர்மமோ செய்வதில்லை. உங்களுக்கு ரிப்போர்ட்படி இந்தக் குறைபாடு இருக்கிறது. உங்கள் குடும்ப மருத்துவரிடம் இந்த ரிப்போர்ட்டைக் காட்டி ஆலோசனை பெறவும் என்று சொல்லி அனுப்புகிறோம். அஷ்டே.

சரி, இனி ரத்தப் பரிசோனை பற்றி சில விவரங்கள்.

மூன்று முக்கிய பரிசோதனைக் கூடங்கள் நம் குழுவிற்காக குறைந்த செலவில் ரத்தப் பரிசோதனைகள் செய்து தருகிறார்கள். இதில் பல டெஸ்ட்கள் பல விலைகளில் சொல்லப்படுவதால். எந்த டெஸ்டை பேலியோவிற்கு முன்பாக செய்வது என்ற குழப்பம் நிலவுகிறது. அதைப் போக்கி உங்களுக்கு ஏற்ற பரிசோதனைகள் பரிந்துரைக்கிறோம். கவனமாக குறித்துக்கொள்ளவும்.

உங்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நீங்கள் முதன் முதலாக பேலியோ உணவுமுறைக்கு வருவதற்கு முன்பாக முழு டெஸ்ட்கள் + அப்டமன் ஸ்கேன் அடங்கிய பாக்கேஜில் உள்ள டெஸ்ட்களை செய்துகொள்வது நல்லது.

முழு டெஸ்ட் பாக்கேஜ்கள் + அப்டமன் ஸ்கான் யாருக்கு?

01. இதுவரை இதுபோன்ற ரத்தப் பரிசோதனைகள் வாழ்க்கையில் / சமீபத்தில் செய்யாதவர்கள்.
02. முழு பரிசோதனையில் உள்ள முக்கியமான டெஸ்ட்களான விட்டமின் டி, ஹார்மோன்கள், eGFR, Microalbumin Urea போன்ற டெஸ்ட்கள் விடுபட்டவர்கள்.
03. குடிப்பழக்கம், சிகரெட் பழக்கம் உள்ளவர்கள்.
04. அதிக உடல் எடை கொண்டவர்கள் 100+
05. உடல் எடை குறைக்க ஹெர்பாலைஃப், மாற்று மருத்துவங்கள், நாட்டு மருந்து, லேகியம், பவுடர் போன்றவைகள் உபயோகித்தவர்கள்.
06. ஆண்டுக்கணக்கில் டயபடிஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள்.
07. ஆண்டுக்கணக்கில் டயபடிஸால் பாதிக்கப்பட்டு சரியாக ஆங்கில மருந்து உட்கொள்ளாமல் மாற்று மருத்துவம், லேகியம், பவுடர் உண்டவர்கள்/ உண்ணாதவர்கள்.
08. குழந்தையின்மைக்காக உடல் பருமன் குறைக்க பேலியோ முயற்சிப்பவர்கள்.
09. சில பல வருடங்களுக்கு முன் செயின் ஸ்மோக்கர், சங்கிலி குடிகாரர்களாக இருந்து தற்பொழுது நல்ல பிள்ளையாக இருப்பவர்கள்.
10. வருடம் தவறாது இதுபோன்ற உடல் பரிசோதனை மேற்கொள்பவர்கள்.
11. முதன் முறையாக பேலியோ முயற்சிக்க வருபவர்கள் அனைவரும்.

 விலை குறைந்த டெஸ்ட்கள் யார் முயற்சிக்கலாம்?

01. பேலியோ பற்றி நன்கு அறிந்து 100 நாட்கள் கடந்தவர்கள்.
02. தன் உடல் நிலை பற்றி ஏற்கனவே முழு டெஸ்ட் எடுத்து அதன் மூலம் தெளிவாக அறிந்துகொண்டவர்கள்.
மேற்கூறியவர்கள் தங்கள் பிரச்னைக்கேற்ப டெஸ்ட் பாக்கேஜ்களை தேர்வுசெய்துகொள்ளலாம்.
இதுபோக கிட்னி பிரச்னை இருப்பவர்கள், தைராய்டு குறைபாடு இருப்பவர்கள் அவரவர் நிலைக்கேற்ப சில டெஸ்ட்களை மாதந்தோறும் எடுக்கவேண்டி இருக்கலாம். அது குறித்து உங்கள் மருத்துவர் முடிவு செய்வார்.
ஆரோக்கியம் நல்வாழ்வில் பேலியோவுக்கு முன்பாக கட்டாயம் எடுக்கவேண்டிய ரத்தப் பரிசோதனைகளை குழு பரிந்துரைக்கும் மூன்று லேப்களில் மட்டும்தான் எடுக்கவேண்டுமா?
அவசியம் இல்லை. நாங்கள் பரிந்துரைக்கும் முழுமையான பாக்கேஜ்களை நீங்கள் உங்கள் அருகாமையில் இருக்கும் பரிசோதனை நிலையங்களில் கூட எடுக்கலாம். ஆனால் விலை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது உங்களுக்கு வித்தியாசம் புரியவரும். மற்றபடி எங்களுக்குத் தேவை எக்ஸல் ஷீட்டில் முழுமையாக நிரப்பப்படும் எண்கள் மட்டுமே.

நீங்கள் பரிந்துரைக்கும் ரத்தப் பரிசோதனை லேப்களில் சிலவற்றில் ஸ்கான் இருக்கிறது, சிலவற்றில் இல்லை. என்ன செய்வது?

உங்களுக்கு உகந்த மூன்று லேபுகளிலோ அல்லது அருகாமையில் இருக்கும் லேபிலோ ரத்தப் பரிசோதனை செய்துகொண்டு அருகில் இருக்கும் பரிசோதனை நிலையத்தில் அப்டமன் ஸ்கேன் மட்டும் தனியாக செய்துகொள்ளலாம். எளிமையாகப் புரிந்துகொள்ளுங்கள். முழு ரத்தப் பரிசோதனை மற்றும் அப்டமன் ஸ்கேன் பரிந்துரைக்கப்படும் லேப்களில் இருப்பின் அங்கேயே இரண்டையும் தள்ளுபடி விலையில் செய்துகொள்ளவும். அல்லது தள்ளுபடி விலையில் ரத்தப் பரிசோதனையும், அப்டமன் ஸ்கானை அருகாமையில் இருக்கும் நல்ல லேபிலும் செய்துகொள்ளலாம்.

நான் வெளிநாட்டில் வசிக்கிறேன். என்னால் இங்கு பரிந்துரைக்கப்படும் எல்லா டெஸ்ட்களையும் எடுக்க இயலாது. ஆனால் நான் பேலியோ முயற்சிக்க விரும்புகிறேன். நான் என்ன செய்வது?

 நீங்கள் வெளிநாட்டில் இருந்தாலும் ரத்தப் பரிசோதனை என்பது அவசியம். ஆனால் வெளிநாடுகளில் இந்தப் பரிசோதனைகள் செய்வது கடினம் மற்றும் மிக அதிக பொருட்செலவினை அளிப்பது என்பதால், நீங்கள் உங்கள் சுய ஆர்வத்தில் பிகினர்ஸ் பேலியோ துவங்கலாம். குறைந்தபட்சம் உங்கள் ரத்த சர்க்கரை அளவுகள், தைராய்டு, விட்டமின் டி, கொழுப்பு அளவுகளை அறிந்துகொண்டு பேலியோ முயற்சிப்பது நலம். இந்தியாவிற்கு வரும்பொழுது முழுமையான டெஸ்ட்கள் எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.

ரத்தப் பரிசோதனை எடுத்தபிறகு என்ன செய்யவேண்டும்?

பின் போஸ்டில் உள்ள இந்த இணைப்பிலிருந்து http://tiny.cc/paleoreport எக்ஸல் ஷீட்டை டவுன்லோடு செய்து அதில் உங்கள் பரிசோதனை ரிசல்ட்டில் உள்ள எண்களை சரியாக உள்ளிட்டு அதை ஒரு ஸ்க்ரீன் ஷாட் அல்லது தெளிவாக மொபைலில் புகைப்படம் எடுத்து குழுவில் அப்லோடு செய்து போஸ்ட் போட்டு தெளிவாக உங்கள் உடல் பிரச்னைகள், தற்பொழுது உண்ணும் மாத்திரை, மருந்துகள், எதற்காக இந்த பேலியோ உணவுமுறையை முயற்சிக்க விரும்புகிறீர்கள் போன்ற தகவல்களை சரியாக விவரித்துக் கேட்டால் உங்களுக்கான பேலியோ பரிந்துரை கிடைக்கும்.

என் குடும்பத்தில் 6 நபர்கள் இருக்கிறோம். நான் மட்டுமே பேலியோ முயற்சிக்க இருக்கிறேன். நான் மட்டும் ரத்தப் பரிசோதனை செய்தால் போதுமா?

பேலியோவுக்கு முன்பான ரத்தப் பரிசோதனைகள் என்பது பேலியோவால் நீங்கள் அடைந்த பலனை ஒப்பிட்டுப் பார்க்கவும், உங்கள் உடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் பேலியோவால் குணமடைந்ததை உங்கள் மருத்துவர் ஒப்பிட்டுப் பார்த்து மருந்துகள் அளவைக் குறைக்கவும் பயன்படும்.
ஆனால், பேலியோவில் அல்லாத உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு வருடம் ஒருமுறையாவது இதுபோன்ற ரத்தப் பரிசோதனைகளை நீங்கள் செய்வதின் மூலம், வருங்கால குறைபாடுகள், நோய்களை முன்னரே கண்டறிந்து காப்பாற்றிக்கொள்ள முடியும். நம் குழுவில் பரிந்துரைக்கப்படும் லேபுகளில் குறைந்த செலவில் பேலியோ பாக்கேஜையோ அல்லது, வெளியில் உள்ள லேபுகளில் குறைந்தபட்ச ரத்தக் கொழுப்பு, சர்க்கரை, தைராய்டு, விட்டமின் டி, லிவர், கிட்னி, ஹார்மோன் டெஸ்ட்களை அவரவர் பொருளாதார வசதி மற்றும் உடல்நலன் அடிப்படையில் எடுத்து மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.

குழு தவிர்த்து வெளியே காசு கொடுத்து மருத்துவர்கள் அல்லாத பேலியோ அடிப்படை அறிவற்ற, ப்ளட் டெஸ்டே எடுக்காமல் மூன்று வேளையும் முட்டையும், கறியும், பாதாமும் தின்னச் சொல்லும் போலிகளிடம் அர்ஜன்ட் பேலியோவை நீங்கள் முயற்சித்து, ஒரிஜினல் டூப்ளிகேட் பேலியோ டயட் புத்தகங்கள் படித்து, அதனால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு எங்களிடம் கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்காமல் இருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இதேபோல பலமுறை குழு சார்பில் பேசி, முக்கிய ரத்தப் பரிசோதனைகளை சகாய விலையில் தருமாறு கோரிக்கை வைத்து புதிய பரிசோதனை நிலையங்களை நாங்கள் அறிமுகப்படுத்தினால் சிலர் டெஸ்ட் எடுக்கவேண்டும் என்று வீட்டுக்கு வரச்சொல்லிவிட்டு காலங்காலையில் ரத்தப் பரிசோதனை எடுக்க வருபவரிடம் இன்னிக்கு வேணாங்க, வடக்குல சூலம் அடுத்த மாசம் பார்க்கலாம் என்று திருப்பி அனுப்பும் பொறுப்பற்றத்தனமும் ரிப்போர்ட் செய்யப்பட்டிருக்கிறது. உங்களுக்கு டெஸ்ட் எடுக்க விருப்பமில்லை என்றால் புக்கிங் செய்யவேண்டாம். புக்கிங் செய்துவிட்டால் டெஸ்ட் எடுத்துவிடுங்கள். உங்களின் பொறுப்பற்ற செயலால், டெஸ்ட் விலைகள் கூடி ஆர்வமுடையவர்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளவும். இதனால் வீட்டிற்கு வந்து டெஸ்ட் எடுப்பது நிறுத்தப்பட்டு நீங்கள் காலங்காலையில் காசு எடுத்துக்கொண்டு லேபில் நிற்கவேண்டிய நிலை வரலாம். ஒரு வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி அதில் மேலும் தள்ளுபடியோ, புதிய வசதிகளோ பெற எங்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
போலவே, சம்பந்தப்பட்ட லேபுகளின் சேவைகளில் ஏதேனும் குறை இருப்பின் நேரடியாக அவர்களைத் தொடர்புகொண்டு புகார் அளித்து நிவாரணம் பெறவும் வேண்டுகிறோம்.

 நன்றி.

Saturday, November 12, 2016

சி ஆர் பி - high sensitive crp

Dr. Arunkumar, MD(Pediatrics), Erode.

Crp என்றால் என்ன?
C-Reactive Protein என்பதன் சுருக்கமே CRP.
இது எங்கிருந்து வருகிறது?
எப்போதெல்லாம் நமது உடலில் கிருமி தாக்கம் (infection) அல்லது, இன்ப்ளமேஷன் (inflammation) அதாவது உள் காயம் ஏற்படுகிறதோ அப்போது நமது கல்லீரல் மற்றும் வேறு சில செல்கள் சுரக்கும் பல acute phase reactants எனப்படும் புரதங்களில் ஒன்று தான் crp.
இதன் வேலை என்ன?
உடலில் எப்போது என்ன டேமேஜ் நடந்தாலும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் செயல் கூறுகளில் வரும் இடை தரகர் தான் இந்த crp. இது அதிகமாக இரத்தத்தில் இருந்தால், உடலில் ஏதோ கிருமி தாக்கமோ அல்லது உள்காயமோ ஏற்பட்டிருக்கிறது என்று முடிவு செய்து கொள்ளலாம்.
நார்மலாக இது எவ்வளவு இருக்க வேண்டும்?
3 mg/dl எனும் அளவிற்கு கீழ் இருக்க வேண்டும்.
எப்பொழுது  இது அதிகமாகும்?
Crp அதிகம் ஆக பல காரணங்கள் உள்ளன.
Infection - கிருமி தாக்கம். சாதாரண சளி காய்ச்சலில் இருந்து, தொண்டை வலி, சீழ் புண், நிமோனியா என எங்கு கிருமிகள் இருந்தாலும் crp பல மடங்கு உயர்ந்திருக்கும். (கிட்டத்தட்ட 100 mg/dl மேல் உயர்ந்திருக்கும்)
Chronic inflammatory states - நீண்ட கால மூட்டு வலி, முதுகு வலி போன்ற பிரச்சனைகள், ருமாட்டாய்டு ஆர்த்திரைட்டிஸ், சொரியாசிஸ், போன்ற ஆட்டோ இம்மியூன் நோய்கள், இருதய வால்வு பிரச்சனைகள், முதலியன. இவற்றில் crp 10 mg/dl மேல் உயர்ந்திருக்கும்.
தீ காயம், எலும்பு முறிவு, போன்ற காயங்கள்.
மாரடைப்பு(myocardial infarction), கணைய பாதிப்பு (pancreatitis), போன்ற உள்ளுறுப்பு பாதிப்புகள்.
தசை சிதைவு.
புற்று நோய்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து நோய்களிலும் crp குறைந்த பட்சம் 10 mg/dl எனும் அளவிற்கு மேல் உயர்ந்திருக்கும்.
High sensitive CRP என்றால் என்ன?
சாதாரண crp பரிசோதனையில் 6 mg எனும் அளவிற்கு கீழ் crp இருந்தால் அதை கண்டுபிடிக்க முடியாது. எனவே குறைந்த அளவு இருந்தாலும் கண்டுபிடிக்க உதவும் பரிசோதனை பெயர் தான் high sensitive crp. இது அதே crp தான். டெஸ்ட் தான் வேறு.
இது எங்கு அதிகம் ஆகும்?
மேலே கூறிய அனைத்து தொந்தரவுகளிலும் hscrp அதிகம் ஆகும்.
அத்துடன்,
புகை பிடிக்கும் பழக்கம்.
உடல் பருமன்.
மெட்டபாலிக் சின்ட்ரோம்
இருதயம் மற்றும் மூளைக்கு செல்லும் இரத்த குழாய்களில் உள்காயம்.
நீரிழிவு நோய்.
இவற்றிலும் hscrp அதிகம் ஆகும்.
ஆனால் இரண்டிற்கும் வித்தியாசம்.
இந்த பிரச்சனைகளில் எப்போதும் hscrp 10 mg மேல் ஏறாது.
Hscrp 10 mg மேல் இருந்தாலே அவற்றிற்கு காரணம், இருதய நோயோ உடல் பருமனோ அல்ல,
மேலே கூறிய கிருமி தாக்கம், மூட்டு வலி, ஆட்டோ இம்மயூன் போன்றவைகளே.
இதை மிக தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், ரிப்போர்ட் பார்த்து ஹார்ட் அட்டாக் தான் வரும்.
அவன் crp 3 mg மேலே இருந்தாலே high ரிஸ்க் என்று கொடுத்திருக்கிறான்.
>10 mg என்றால் கதை முடிந்தது என்று அர்த்தம் இல்லை.
வேறு என்ன காரணங்கள் என்று தேட வேண்டும்.
அல்லது சளி காய்ச்சல் போன்றவைகளால் crp அதிகம் ஆனதா என்று தெரிந்து கொள்ள hscrp பரிசோதனையை 3 வாரம் விட்டு திரும்ப எடுக்க வேண்டும்.
நம் குழு அன்பர் ஒருவரது குழந்தைக்கு சிறுநீர் infection உள்ளது என்றும் அதனால் crp அதிகம் ஆகியுள்ளது என்றும் மருத்துவர் தெரிவித்திருக்கிறார். ஆன்டிபயாடிக் மருந்து செலுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அதற்கு அந்த அன்பர் என்னிடம் கேட்கிறார், பசு மஞ்சள் சாப்பிட்டால் crp குறைந்து விடுமா என்று!!
சரியாக புரிந்து கொள்ள வில்லை என்றால் இப்படி தான் ஆகும்.
Crp குறைய என்ன செய்ய வேண்டும்?
நல்ல உணவுமுறை. நம் பேலியோ உணவுமுறை போன்று இயற்கையை ஒன்றி அமைந்த மாவுச்சத்து கம்மி உண்ணும் நல்ல உணவுமுறை hscrp ஐ குறைக்கும்.
உடல் பருமன் குறைத்தல். அதுவும் நம் பேலியோவில் நடக்கும்.
சர்க்கரை நோய் கட்டுப்படுத்துதல். இதுவும் பேலியோவில் நடக்கும்.
புகை, மது விட்டொழிதல்.
மிதமான உடற்பயிற்சி.
பசு மஞ்சள்
கிருமி தாக்கத்தினால் crp அதிகம் ஆனால் அவற்றுக்குரிய மருந்துகள் எடுத்தால் மட்டுமே crp குறையும். நம் உணவுமுறையோ பசு மஞ்சளோ ஒன்றும் செய்யாது.
ஆட்டோ இம்மியூன் நோய்கள், மூட்டு வலி போன்ற நோய்களில் மருந்துகளுடன் நம் உணவுமுறையும் பசு மஞ்சளும் சேரும்போது பல பயன்களை அளிக்கும்.
பசு மஞ்சளின் வேலை என்ன? ஏன் அது நம் குழுவில் பரிந்துறைக்கப்படுகிறது?
பல தாவரங்களுக்கு anti inflammatory அதாவது உள் காயத்தை குறைக்கும் தன்மை உள்ளது.
அதில் மிக முக்கியமான ஒன்று மஞ்சள். மஞ்சலிலுள்ள cucurmin எனும் மூல பொருளுக்கு, பல விதங்களில் anti inflammatory தன்மை உள்ளதாக பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இரத்த குழாய் சம்பந்தப்பட்ட உள்காயம், ஆட்டோ இம்மியூன் நோய்கள், osteoarthritis எனும் மூட்டு வலி போன்ற பல நோய்களுக்கு மஞ்சள் தீர்வளிக்கும் என்று ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளன.

இது மட்டுமில்லாமல் பல anti oxidant தன்மைகளும் உள்ளன.
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/23013352
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16394323
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/20056736
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/19900435

Atherosclerosis எனப்படும் இரத்த குழாய் அடைப்பையும் மஞ்சள் கட்டுப்படுத்த வல்லது எனவும் ஆராய்ச்சிகள் உள்ளன.
எனவே தான் நம் குழுவில் crp அதிகம் இருப்பவர்களுக்கு பசு மஞ்சள் பரிந்துரைக்கப்படுகிறது.
ஏன் பேலியோ எடுக்கும்போது சிலருக்கு hscrp குறைவதில்லை அல்லது ஏறுகிறது?
மேலே கூறியுள்ளது போல பல்வேறு காரணங்களால் hscrp அதிகம் ஆகிறது. உடல் பருமன், இரத்த குழாய் உள்காயம், மெட்டபாலிக் சின்ரோம் ஆகிய காரணங்களால் hscrp அதிகம் ஆகியிருந்தால் மட்டுமே பேலியோவினால் குறையும். வேறு காரணங்கள் என்றால், தகுந்த மருத்துவரிடம் காண்பித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
Hscrp நார்மலாக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று அர்த்தமா?
இல்லை. Hscrp ஒரு marker. அவ்வளவே. மேகம் கறுத்து இருந்தால் மழை கட்டாயம் வரும் என அர்த்தம் இல்லை. இல்லை மேகமே இல்லை என்றாலும் மழை வராது எனவும் அர்த்தம் இல்லை. Hscrp போல் ஒவ்வொரு நோய்க்கும் நிறைய marker இருக்கும். அனைத்தையும் வைத்து பார்த்து, பொது உடல் ஆரோக்கியத்தையும் வைத்து பார்த்து மட்டுமே நோய் வரும் வாய்ப்புகளை கூற முடியும்.
சுருக்கமாக சொன்னால், hscrp என்பது தூரத்தில் ஒலிக்கும் சைரன் ஒலி போன்றது. அது போலீஸாகவும் இருக்கலாம், அம்புலன்சாகவும் இருக்கலாம், தீயணைப்பு வண்டியாகவும் இருக்கலாம், பக்கத்து வீட்டு குழந்தை விளையாடும் பொம்மையின் ஒலியாகவும் இருக்கலாம். எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ந்து பார்த்தால் தான் உண்மை தெரியும்.
இதுவே hscrp க்கு என் கோனார் உரை.

Tuesday, November 8, 2016

புதியவர்கள் அதிகம் செய்யும் தவறுகள் என்ன?



01. அடிக்கடி சீட்டிங் என்று கண்ட சத்தில்லாத ருசி சார்ந்த உணவுகளை உண்பது.
02. குறைந்த நடைப்பயிற்சி செய்யாமல் தேமே என்று கொழுப்பு சாப்பிட்டு உட்கார்ந்து தெய்வமகள் அண்ணியாரைப் பார்த்து உணர்ச்சிவசப்படுவது.
03. சரியான அளவு நீர் அருந்தாதது.
04. விட்டமின் டிக்காக வெயிலில் நிற்காமல் நிறத்தைக் காக்க ஏசியிலேயே அமர்ந்திருப்பது. அல்லது நிழலிலேயே இருப்பது.
05. சரியான அளவுகளில் உண்ணாமல் குறைந்த கலொரி உணவுகளை எடுப்பது. குறிப்பாக சைவர்கள் காலை பட்டர் டீ, மதியம் பொரியல், இரவு கூட்டு என்று எடையைக் குறைக்கிறோம் என்று மஸிலை கரைத்துக்கொண்டிருப்பது.
06. சரியான அளவுகளில் ப்ரோட்டீன் எடுக்காமல் இந்தியன் தாத்தா கமலைப் போல ஆகிவிடுவது.
07. சைலண்ட்டாக சரக்கு, தம் என்று அடித்துக் கலக்கி ஹார்ட் அட்டாக் வந்து பேலியோ மீது பழி போடத் தயாராக இருப்பது.
08. பக்கம் பக்கமாக எழுதினாலும்.. சார் கொழுப்பு கூடிடுச்சின்னு ரிப்போர்ட் சொல்லுது உடனடியாக அதைக் குறைக்க வழி சொல்லுன்கள் என்று டர்ரியலாவது. கொழுப்பு சாப்பிட்டால் ஏன் கொழுப்பு கூடுகிறது என்பதை பேலியோ டயட் புத்தகத்தில் தேடிப் படிக்கவும்.
09. குறைந்த பட்ச கலோரி அளவான 1200 கலோரி உணவை பரிந்துரைத்தபடி எடுக்காது, குறைவாக எடுத்து அவதிப்படுவது.
10. காய்கறி, கீரைகளை முற்றிலும் புறக்கணித்து முக்கியமான காலைக்கடனை முக்கமுடியாது அவதிப்படுவது.
11. எங்களிடம் ஆலோசனை பெற்று, மருத்துவரிடமும் ஆலோசனை பெற்று ஒன்றுவிட்ட சித்தப்பா பையனிடமும் அதைக் காட்டி பிறகு இரண்டு இட்லி பாதாம் சட்னியுடன் பேலியோ துவங்கினேன் வயிறு வலிக்கிறது சீனியர்களே உதவுங்கள் என்று எங்களை அலறவைப்பது.
12. உண்பதோ சைவம், அதிலும் ஏகப்பட்ட உடல் உபாதைகளுடன் இருக்கும் குறைந்தபட்ச தேர்வில் அது டேஸ்ட் புடிக்காது இது ஸ்மெல் புடிக்காது என்று 10ல் 9 உணவுகளை விலக்கிவிட்டு பேலியோ அல்லாத பேலியோ என்ற ஒன்றைப் பரிந்துரைக்கக் கேட்பது.

Shankar Ji

Monday, November 7, 2016

நாம் பயப்பட வேண்டிய ஒரே கொலஸ்டிரால்!!

Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore
Lp(a) என்ற டெஸ்டை என்றாவது செய்திருக்கிரீர்களா? என்னைப் பொருத்தவரை இதுவே உங்கள் கொலஸ்டிரால் பிரச்சினையை அறிய உதவும் மிக முக்கியமான டெஸ்ட்.
இதய ரத்தக் குழாய் செல்களின் இடுக்கில் இந்த Lp(a) எனப்படும் அபாய கொலஸ்டிரால் அடைத்து, அந்த செல்களுக்கு செல்ல வேண்டிய சத்துகளை அடைய விடாமல் தடுக்கிறது. இதனால் அந்த செல்கள் பாதித்து இன்ப்லமேஷன் எனும் உள்காயம் ஏற்பட்டு, அதில் கொழுப்பு சேர்ந்து மாரடைப்பு வருகிறது.
உங்களுக்கு ஏன் இந்த மிக முக்கியமான டெஸ்ட் பற்றி யாரும் சொல்லவில்லை? மருந்து கம்பெனிகள் உங்களுக்கு அதை சொல்ல விடவில்லை. ஏனென்றால் மாரடைப்பு வராமல் இருக்க உங்களுக்கு தரப்படும் ஸ்டாடினால் (Atorvastatin, Rosuvastatin), இந்த Lp(a) வை குறைக்க முடியாது.
அதிக மாவுச்சத்து (Carbohydrates) உள்ள உணவை உட்கொண்டு அதனால் அதிகம் சுரக்கும் இன்சுலினால், இந்த Lp(a) அதிகமாகிறது என்று ஒரு தரப்பு வாதம். இது முழுக்க ஜெனிடிக் என்பது இன்னொரு வாதம் (உங்கள் பரம்பரையில் கெட்ட பழக்கம் இல்லாத அல்பாயுசில் மாரடைப்பு வந்து இறந்தவர்களுக்கு காரணி இந்த Lp(a) வாக இருக்கலாம்).
பிகு: போன வாரம், ஒரு 22 வயது, எந்த கெட்ட பழக்கமும் இல்லாத பெண்ணிடம் Lp (a) அதிகமாக இருப்பதைக் கண்டேன்.

சப்பாத்தி சர்க்கரை வியாதிக்கு நல்லதா?


Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry)


100கிராம் கோதுமை மாவில் 340கலோரிகள் உள்ளன. 100கிராம் சர்க்கரையில் 387 கலோரிகள் உள்ளன.
சர்க்கரைக்கு அடுத்து ரத்தத்தில் சுகரை ஏற்ற வல்லது கோதுமை உணவு தான்.
சுகர் பேஷண்டை சப்பாத்தி சாப்பிட சொல்வது என்பது நெருப்பை அணைக்க பவர் பெட்ரோலுக்கு பதில் சாதா பெட்ரோலை ஊற்றுவது போலாகும்.
சிறுதானிய உணவு? அதுவும் சப்பாத்திக்கு இணையாக ரத்த சர்க்கரையை உயர்த்தும். கலோரிகளும் அதே அளவு.
புழுங்கல் அரிசி ஓரளவிற்கு தேவலாம். ஆனால் இது டீசல் போன்றதே. (கோதுமை, சிறுதாணியம், அரிசி, சர்க்கரை, கருப்பட்டி, தேன், பனைவெல்லம் முதலிய அனைத்தும் ரத்தத்தில் சர்க்கரை அளவை மிகவும் அதிகரிப்பதே)
ரத்த சர்க்கரை அளவு எனும் தீயை அணைக்கும் தண்ணீர், பேலியோ உணவுகளே. ஒரு நாளில் ஒரு வேளை நீங்கள் எடுக்கும் மாவுச்சத்து அளவை பேலியோ டயட்காரர்கள் மூன்று நாட்களுக்கு எடுக்கிறார்கள்.
இப்போது புரிகிறதா, சர்க்கரை வியாதி பேலியோயால் எப்படி குணமாகிறது என்று.
மேலும் விபரம் அறிய glycemic index/glycemic load என கூகிளில் தேடவும்.

எடைபயிற்சியும் பேலியோவும்! அனுபவ கட்டுரை தொடர் !!! பாகம் -1


.
எச்சரிக்கை! இது உடலில் உயர் இரத்த அழுத்தம், மிகு மற்றும் குறைந்த சர்க்கரை நோய், இதய நோய் , சிறுனீரக கோளாறு, முடக்குவாதம், மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று கடைபிடைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ள படுகிறார்கள்! மீறி செய்து ஏற்ப்படும் விளைவுகளுக்கு குழுவோ கட்டுரையாளரோ பொறுப்பு ஏற்க இயலாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்!
.


.

பேலியோ டயட்டில் இருந்து கொண்டு கடுமையான உடற்பயிற்ச்சி செய்துவருபவர்களுக்கு உடல் எடை குறைவு என்பது மெதுவாகவே நடக்கும்! ஆனால் அதே பேலியோ டயட் எடுத்துகொண்டு மிதமான நடைபயிற்ச்சி மட்டும் செய்பவர்கள்களுக்கு எடை இழப்பு வேகமாக ஏற்படும்! கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? ஆனால் அதுதான் உண்மை! 
.
.
ஏனென்றால் பேலியோ டயட்டில் இருப்பவர்கள் மிக தரமான அதிக அளவு புரோட்டீனும் கொழுப்பும் எடுக்கிறார்கள்! இப்படி ஹை எஸன்ஸியல் ப்ரோட்டீன் எடுத்துகொண்டு நடைபயிற்ச்சியோடு சேர்ந்து ஜிம்மில் கடுமையான எடைபயிற்ச்சிகள் செய்யும்போது உடலில் இரண்டு விதமான வேலைகள் நடக்கும்! ஒன்று கொழுப்பு வேகமாக கரையும்! ஆனால் இன்னொருபக்கம் உடற்பயிற்சியால் தசைகள் வேகமாக வளரும்! 
.
.
எந்த அளவுக்கு கடுமையான பயிர்ச்சியினால் தசை செல்கள் பிளவு படுகிறதோ அந்த அளவுக்கு தசைகளின் வளர்ச்சி வேகமாக நடக்கும்! அதாவது ஒரே நேரத்தில் கொழுப்பு எடை குறையவும் தசைகளின் எடை கூடவும் செய்வதால் நமக்கு எடை இழப்பு அதிகம் இருக்காது! ஆனால் ஒரு குறிப்பிட்ட காலம் சென்று பார்த்தால் அவர்கள் உடல் கொழுப்பு அனைத்தும் எரிக்கப்பட்டு அழகான தசை திரள்களுடன் கட்டுடலாக காட்சியளிப்பார்கள்! 
.
.
இவர்கள் எடைகுறைப்பு நிகழவில்லையே என குழம்ப தேவையில்லை! போதாகுறைக்கு நாம் சாப்பிடும் பாதாம் பருப்பு, பசு மஞ்சள், துளசி, பூண்டு, போன்றவை தசைகளில் ஏற்ப்படும் சிதைவை உடனுக்குடன் சரிசெய்து விடுவதால் மற்ற உணவு முறைகளை விட பேலியோ டயட் எடுத்துகொண்டு எடைபயிற்ச்சி செய்பவர்கள் வேகமாக கட்டுடலை பெறுவார்கள்! 
.
.
மேலும் கடுமையான உடற்பயிற்சியின் போது உடலில் சுரக்கும் கார்டிசால் மற்றும் ஃப்ரீரேடிகல்ஸ் போன்ற தீங்குவிளைவிக்கும் நச்சுபொருட்கள் நாம் எடுத்துகொள்ளும் ஆண்ட்டிஆக்ஸ்டெண்டுகளால் உடனுக்குடன் துப்புறவு செய்யப்படுவதால் பேலியோ டயட் பாடிபில்டர்களுக்கு ஒரு மிகச்சிறந்த டயட்டாக இருக்கும் என்பதில் துளியளவும் சதேகமில்லை!
.
.
பேலியோ டயட்டில் இருப்பவர்கள் வெருமனே நடைபயிற்ச்சி மட்டும் செய்யும் போது உடலில் உள்ள கொழுப்பு மட்டும் வேகமாக கரையும்! ஆனால் தசை வளர்ச்சி என்பது இருக்காது! அதனாலயே அவர்கள் மிக விரைவான எடை இழப்புக்கு ஆளாகிறார்கள்! உடல் முழுதும் திரள் திரளாக தசை வளர்ச்சி பெற்றவர்கள் உடலில் மீண்டும் கொழுப்பு சேர்வது கடினம்! 
.
.
ஆனால் தசை திறள்கள் இல்லாது எடை குறைபவர்கள் டயட்டை கைவிட்டால் சொற்ப காலத்திலேயே மளமளவென எடை கூடிவிடுவார்கள் என்பதும் உண்மையே! ஏனென்றால் தசைதிரள்கள் அதிகமாக இருப்பவர்களுக்கு அந்த தசை அழியாமல் பாதுகாக்க உடல் தன்னிச்சையாக உடலில் சேரும் கொழுப்பை எரித்துகொண்டே இருக்கும்! இந்த ஆட்டோ ஃபேட்பர்னிங் மெட்டபாலிசம் உடல் இளைத்து எலும்பும் தோலுமாக இருப்பவர்களுக்கு நடக்காது! 
.
.
அவர்களை பொருத்தமட்டில் டயட்டில் இருந்தால் எடை மெயின்ட்டென் ஆவதும் டயட்டை நிருத்தி காமன்மேன் டயட்டுக்கு மாறியவுடனே எடை கூடுவதும் தவிற்க்கமுடியாத விஷயமே! ஆனால் கடுமையான எடைபயிற்ச்சி என்பது எல்லா வயதினர்களுக்கும் சாத்தியமில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்! 
.
.
உடலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்து 40 வயதுக்கு கீழ் இருந்தால் தகுந்த எடைபயிற்ச்சி ஆலோசகர்களின் ஆலோசனை பெற்று தாராளமாக ஜிம்மில் பயிற்ச்சி பெறலாம்! சாதகமான மரபனுவும் நோயற்ற உடல் வளமும் கொண்டவர்கள் 50 வயதிலும் தாராளமாக முயற்ச்சிக்கலாம்! 
.
.
ஆரோக்கியமான கட்டுடல் என்பது எல்லோருக்கும் நிச்சயம் சாத்தியமே! இனி வரும் பாகங்களில் ஆரம்ப நிலை எடைபயிற்ச்சிகளையும் அதன் செய்முறைகளையும் ஒவ்வொரு வாரமும் எழுதுகிறேன்!

Gunaseelan

Sunday, November 6, 2016

நாம் ஏன் குண்டாகிறோம்? எப்படி இளைப்பது?




Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore
அதிக கார்ப் (மாவுச்சத்து-இட்லி/தோசை/சப்பாத்தி/சிறுதானியம்/போண்டா/etc.,)சாப்பிட்டால் அதிக இன்சுலின் சுரக்கும். இன்சுலின் ஒரு பஞ்ச கால ஹார்மோன். மனிதனுக்கு பூமியில் உணவு கிடைக்காத நேரத்தில், கையில் கிடைக்கும் உணவை உடலில் சேர்த்து வைப்பதற்காக பரிணாம வளர்ச்சியில் இது தோன்றியது.
கார்ப் உணவுகள் அதிகமாக சாப்பிட்டால், இன்சுலின் அவற்றை எடுத்து கிளைக்கோஜனாகவும் கொழுப்பாகவும் சேமித்து வைத்து நம்மை குண்டாக்கும். நாம் சக்திக்காக உண்ணும் உணவை, இன்சுலின் இப்படி திசைதிருப்பவதால், உடல் இயங்க சக்தி கிடைக்காது. அதனால் உணவு சாபிட்ட சில மணி நேரங்களில் மறுபடி பசி எடுக்கிறது. நாம் மறுபடியும் கார்ப் உணவுகள் எடுக்கிறோம்-->இன்சுலின் சுரக்கிறது-->குண்டாகிறோம்-->உடல் இயங்க சக்தி இல்லை-->மறுபடி பசி. இந்த சுழற்சியில் சிக்கி குண்டாகி, அத்துடன் சில சமயம் பிரஷர், சுகரை வரவழைக்கிறோம்.
நல்ல கொழுப்பு (பேலியோ டயட்) சாப்பிட்டால் வயிறு உடனே நிரம்புகிறது. இன்சுலின் சுரப்பதில்லை. சாப்பிட்ட உணவில் இருந்து உடலுக்கு சக்தி பெறப்படுகிறது. இன்னும் சக்தி தேவைப்பட்டால் உடலில் இருக்கும் கொழுப்பு கரைகிறது. உடற்பருமன் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது. சுகரும், பிரஷரும் தான்.

பேலியோவில் கொழுப்பு சாப்பிட்டும் டிரைகிளிசிரைட் குறைவது எப்படி?

 


Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore

கொழுப்பு சாப்பிடால் கொலஸ்டிரால் வரும் என 1970களில் பயமுறுத்தியதில் கொழுப்பை நீக்கி, அதிக மாவுச்சத்து உணவுகளான இட்லி, தோசை, சாதம், சப்பாத்திக்கு மாறினோம். எல்லோருக்கும் ரத்த கொழுப்பளவு குறைந்திருக்கிறதா? அல்லது கூடியிருக்கிறதா? உடனே செக் செய்து பாருங்கள். கூடியிருக்கலாம்.

ஆனால் அதிக கொழுப்பு நிரம்பிய பேலியோ எடுக்கும் போது டிரைகிளிசிரைட் குறைகிறது. எப்படி இந்த ஆச்சரியம் நிகழ்கிறது? நாம் மாவுச்சத்து அதிகம் உண்ணும் போது இன்சுலின் அதிகம் சுரக்கிறது. இன்சுலின் உணவில் உள்ள தேவைக்கதிகமான கார்புகளை டிரைகிளிசிரைட் எனும் கொழுப்பாக மாற்ற தூண்டுகிறது. டிரைகிளிசிரைட் அளவுகள் அதிகரிக்கின்றன. நாமும் தினமும் மூன்று வேளை கார்புகள் எடுத்து, கொழுப்பை அதிகரித்த வண்ணம் உள்ளோம்.

அதுவே கார்புகள் கம்மியாக (பேலியோ) எடுக்கும் போது க்ளுக்ககான் மற்றும் அட்னிரலின் அதிகரிக்கின்றன. இன்சுலின் சுரப்பு குறைகிறது. இதனால் கொழுப்பு செல்களில் கொழுப்பை உடைய வைக்கும் லைப்பேஸ் எனும் என்சைம் தூண்டப்பட்டு, சேர்ந்திருக்கும் கொழுப்பு கரைந்து சக்திக்காக எரிக்கப்படுகிறது. இன்சுலின் கம்மியாக சுரப்பதால் புதிதாக டிரைகிளிசிரைட் உறப்த்தியாகாது. டிரைகிளிசிரைட் உறபத்தி கம்மி மற்றும் அதன் எரிப்பு அதிகமென்பதால் இதன் அளவு கம்மியாகிறது. நாமும் இளைக்கிறோம்.

பேலியோவில் உணவில் எடுக்கும் அதிக டிரைகிளிசிரைட் என்னாகிறது? அவை நேராக ஈரலுக்கு செல்லாமல் கொழுப்பு செல்களுக்கு சென்று ஸ்டோர் செய்யப்படுகிறது. அதிக கொழுப்பு எடுத்தவுடன் பார்த்தால் டிரைகிளிசிரைட் அதிகமாக இருக்கும். ஆனால் அன்றே அவை எரிக்கப்பட்டு, ஸ்டோரில் உள்ள பழைய கொழுப்பும் எரிக்கப்பட்டு காலை உணவிற்கு முன் டெஸ்ட் எடுத்துப் பார்த்தால் கம்மியாக இருக்கும்.
இது தான் கொழுப்பை கொழுப்பால் எரிப்பது.

நம் முன்னோர்களில் நாம் சிம்பன்சிக்கு மிக நெருக்க சொந்தமாவோம். மற்ற அனைத்து வகை குரங்குகளும் சுத்த சைவம் அல்லது சிலது பூச்சிகளை உண்ணும். ஆனால் சிம்பன்சியின் உணவில் 5% மாமிசம் இருந்துள்ளது. தன் எல்லைக்குள் வேறு வகை குரங்கு வந்துவிட்டால், கூட்டமாக சிம்பன்சிகள் அந்தக் குரங்கை அடித்து சாப்பிட்டு விடும். மற்ற நேரங்களில் பழம் கொட்டைகள், இலைகள் என்று நாள் முழுக்க சாப்பிட்டுக் கொண்டே இருக்கும்.
இதன் வாரிசான Australopithecus africanus குரங்கு, சிம்பன்சியை விட நான்வெஜ் கொஞ்சம் அதிகம் சாப்பிட்டது.

அதன் பின் வந்த homo erectus மனிதன் கல்லால் செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்து மாமிசத்தை கிழித்து சாப்பிட ஆரம்பித்தான். அதன் பிறகு வந்த நியண்டர்தால் மனிதன் மிக சிறந்த வேட்டையன் ஆவான். மிக அதிக அளவில் மாமிசம் தின்றான். சிறிய அளவில் காய்கறிகள், கொட்டைகள் மற்றும் பழங்கள் தின்றான்.

அதன் பிறகு வந்த நாம் homo sapiens, நியண்டர்தால் மனிதனின் அதே உணவை உண்டோம். ஆனால் நியண்டர்தாலை விட கொஞ்சம் அதிகம் கார்ப் உணவுகள் உண்டோம். அதனால் நம் உடல் அதிக கொழுப்பு, மித அளவு புரதம், கம்மி கார்ப் என்ற நிலைக்கு செட்டானது.

சூழ்நிலை 1: அதிக கொழுப்பு, மிக கம்மி கார்புகள்: மனிதன் வேட்டைக்கு சென்று மாமிசம் கிடைத்த நாளில் அதிகம் அவற்றை உண்டான். அதில் உள்ள கொழுப்பு அவனுக்கு சக்தியளித்தது. மாமிசம் மட்டும் சாப்பிடும் போது மனித உடல், அதை சேமிக்காது. கொழுப்பை கீட்டோன் எனப்படும் சிறிய வகை கொழுப்பாக மாற்றி உடலின் பல செல்களுக்கும் அனுப்பி அவற்றை எரித்து விடும். இதனால் டிரைகிளிசிரிட் எனப்படும் ரத்த கொழுப்பின் அளவு குறையும். இப்படி எரிக்கும் போது கொழுப்பிலிருந்து கம்மி சக்தியே மனிதனுக்கு கிடைக்கும். அதனால் அவன் தினசரி வேலைகளுக்காக அதிக கொழுப்பு எரிகிறது. (மிருகங்கள் அதிகம் கிடைக்கும் நாளில்-->மாமிசம் மட்டும் உண்ணுதல்-->அதிக கலோரிகள் கிடைத்தாலும் உடம்பு அதை சேர்க்காமல் எரித்து விடுதல்).

சூழ்நிலை 1ன் வேதியியல்: அவன் கார்ப் கம்மியாக உண்பதால் கார்பிலிருந்து oxaloacetate கிடைக்காது(சாப்பிடும் கார்புகள் ரத்த செல்களுக்கும் மூளைக்கும் சக்தியளிக்க ஒதுக்கப்பட்டு விடும்). oxaloacetate இருந்தால் தான் கொழுப்பு அதிக சக்தி தரும் TCA cycle க்குள் செல்ல முடியும். oxaloacetate இல்லாததால், கொழுப்பு சக்தி கம்மியாக தரும் கீட்டோன்களாக மாறுகிறது. அதிகமான கொழுப்பு இப்படி செலவிடப்படுகிறது

சூழ்நிலை 2: அதுவே மாமிசம் கிடைக்காத பொழுது காய்கறிகள், பழங்கள் மற்றும் கொட்டைகள் உண்ணும் போது அவை சக்திக்காக எரிகின்றது. அதிகமாக உண்டால் அவை கொழுப்பாக மாறுகிறது. கம்மியாக உண்டால், உடலில் உள்ள கொழுப்பு எரியும். ஆனால் அதிகம் எரியாது.

சூழ்நிலை 2ன் வேதியியல்: கம்மியாக கார்ப் உண்ணும் போது உடலில் உள்ள கொழுப்பு எரிந்து சக்தி தரும். ஆனால் கம்மியான கார்பிலும் oxaloacetate கிடைத்து விடுவதால், கொழுப்பு TCA cycle வழியாக எரியும். கீட்டோன்களாக அல்ல. அதனால் கொஞ்சம் கொழுப்பிலிருந்தே அதிக சக்தி கிடைக்கும். உடல் பெரிதாக இளைக்காது.

சூழ்நிலை 3: சாப்பிடாமலேயே இருந்தால்:கொழுப்புகள் கீட்டோன்களாக கரையும். ஏனென்றால் oxaloacetate இல்லை. உடல் இளைக்கும்

சூழ்நிலை 4: தினமும் கார்புகள் மட்டுமே எடுத்தல்: முந்தைய போஸ்டில் சொன்னது போல, கார்புகள் மட்டுமே எடுத்தால் அவை லைட்டாக எரியும், மற்ற கார்புகள் கொழுப்பாக மாற்றப்படும், உடலில் உள்ள கொழுப்பு எரியவே எரியாது. காரணம்-அதிக இன்சுலின் அளவு.

மனிதன் மாமிசம் அதிகம் சாப்பிட்டான். கிடைக்காத நாளில் காய்கறிகள் பழங்கள் கொட்டைகள் சாப்பிட்டான். அதனால் அவன் உணவுமுறை அதிக கொழுப்பு, கம்மி கார்புகள் என்று பழகியது. அதுவே பேலியோ டயட். கொழுப்பை வேகமாக கீட்டோன் முறையில் எரிப்பதால் டிரைகிளிசிரைட் எனும் கொழுப்பு அளவு குறைகிறது

உணவியல் முரண்பாடுகள் - கொழுப்பு கெட்டதா, நல்லதா?




Dr. V. Hariharan, MBBS, MD (Biochemsitry), Coimbatore

ஒரு செயலை செய்தால் அதற்கு தக்க வினை இருக்கும். ஆனால் நாம் எதிர்பார்ப்பதற்கும், அறிவியிலால் சொல்லப்படுவதற்கும் எதிராக அந்தச்செயலுக்கு வினை நடந்தால், அது paradox எனப்படும். மருத்துவ உலகின் சில paradox களை பார்ப்போம்.

1. French paradox(பிரஞ்சு முரண்பாடு): 
அதிகம் சாட்சுரேட்டட் கொழுப்பு (நெய், முட்டை, இறைச்சி)எடுத்தால் மாரடைப்பு வரும் என மருத்துவ அறிவியல் சொல்கிறது. ஆனால் இவற்றை அதிகம் எடுக்கும் பிரஞ்சு மக்களுக்கு இதய வியாதி மிகக் குறைவான அளவில் இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் யோசிக்கப்பட்டது (விட்டமின் k2 அவர்கள் உணவில் அதிகம், ஸ்டிரஸ் கம்மி, உணவில் ஆண்ட்டி ஆக்சிடண்டுகள் அதிகம் என). கடைசியில் சாட்சுரேட்டட் கொழுப்பு நல்லது, அதனால் தான் இதய வியாதி கம்மியாக வருகிறது என்ற முடிவுக்கு வந்தார்கள்.
2. Israeli Paradox : 
டாக்டர்கள் அறிவுறுத்தும் சன்பிளவர் ஆயில், சோயா ஆயில், சோள எண்ணெய்களை பயன்படுத்தி, டாக்டர்கள் எதிர்க்கும் சாட்சுரேட்டட் கொழுப்புகளை கம்மியாக எடுக்கும் இஸ்ரேலியர்களுக்கு மிக அதிக அளவில் மாரடைப்பு வந்தது. இன்று இந்த கமர்சியல் எண்ணெய்களில் அதிகம் உள்ள ஒமேகா 6 எனும் அமிலம் இதய வியாதியை கொண்டு வருவதாக கண்டுப்பிடித்துள்ளனர்.
3.Spanish Paradox
1976ல் திடீரென இதய வியாதி வருதல் குறைந்தது. என்ன காரணம் என்று ஆராய்ந்ததில் அந்த வருடம் தேசிய அளவில் இறைச்சி, பால் பொருட்கள், மீன் ஆகியவை முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தது தெரிய வந்தது. மற்றும் கார்புகள் குறைவாக எடுக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
4. Japanese Paradox:
ஜப்பானியர்களுக்கு இதய வியாதி மற்ற நாட்டினரை விட குறைவு. ஆனால் கொலஸ்டிரால், பிரஷர், சர்க்கரை வியாதிகள் மற்ற நாட்டு அளவுகள் போல் இருக்கிறது. ஆராய்ந்து பார்த்ததில் அவர் அதிக கடலுணவு எடுப்பதே காரணம் என அறிந்தார்கள். இதயத்தை புண்ணாக்கும் ஒமேகா 6 (சூரியகாந்தி, ஆமணக்கு, சோள, தவிட்டு எண்ணெய்கள்) அமிலத்திலின் கெடுதலை, கடல்மீனில் இருக்கும் ஒமேகா 3 அமிலம் தடுக்க வல்லது.
5. masai paradox: 
கென்யா நாட்டின் மசாய் பழங்குடிகள் தினமும் பால் பொருட்கள், இறைச்சி என 3000கலோரிகள் உண்டும் அவர்கள் ஒல்லியாகவும், இருதயத்தில் அடைப்பு சுத்தமாக இல்லாமலும் இருந்திருக்கிறார்கள். கொலஸ்டிராலும் அவர்கள் ஒரு நாளைக்கு 600-2000Mg அளவு எடுக்கிறார்கள். ரெகுலர் உணவுகளில் இவ்வளவு கலோரிகள் எடுத்தால் உடற்பருமன், சுகர், பிரஷர், இதய வியாதி வந்துவிடும். ஆனால் கலோரிகள் எவ்வளவு என்பது முக்கியமல்ல, எதில் இருந்து கிடைக்கிறது என்பது தான் முக்கியம் என இவர்கள் உணர வைத்தார்கள்.
பேலியோ பலருக்கு முரணாக தோன்றலாம். ஆனால் பல வியாதிகளை இல்லாமல் ஆக்குகிறது.

பேலியோ உணவுமுறையால் சிறுநீரக பாதிப்பு வருமா?




பேலியோ உணவுமுறை என்றதுமே, கிட்னி சட்னி ஆகும், சிறுநீரகம் சின்னாபின்னமாகும் போன்ற விமர்சனங்கள் மருத்துவர்களிடமும் சில பொது மக்களிடமும் எழுவது சகஜமாகிவிட்டது. ஊடகங்களும் இது போன்ற ஆதரமில்லாத தவறான ஆனால் சுவாரசியமான பரபரப்பு மிக்க செய்திகளை வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்துகின்றன.
இதன் பின்னணி என்ன?
பேலியோ உணவுமுறை என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கறியும் கோழியும் முட்டையும். இறைச்சி வகைகளில் புரதம்(protein) அதிகம் இருப்பதால் சில வருடங்களில் சிறுநீரக பாதிப்பு உண்டாகும் எனும் தவறான கருத்து நிலவுகிறது.
புரதம் என்றால் என்ன?
நம் உடலின் கட்டுமானத்திற்கு உதவும் building blocks தான் புரதம்.
Cytoskeleton எனப்படும் நமது செல்களின் அஸ்திவாரம் புரதம்.
actin, myosin எனப்படும் புரதங்கள் தான் நம் தசைகளின் முதுகெலும்பு.
நாம் உண்ணும் உணவை செரிமானம் ஆக்க உதவும் அனைத்து என்சைம்களும் புரதம் தான்.
இன்சுலின், பிட்யூட்டரி போன்ற அதிமுக்கிய ஹார்மோன்கள் புரதம் தான்.
நோய் எதிர்ப்பு சக்தி என்று கூறுகிறோமே, அந்த இம்யூனோக்ளோபுளின் புரதம் தான்.
இது மட்டுமில்லாமல் உடலில் நடைபெறும் பல்லாயிரக்கணக்கான உயிர்வேதியியல் செயல்பாடுகளுக்கும் உதவும் பெரும்பாலான என்சைம்கள் புரதம் தான்.
சுருக்கமாகச் சொன்னால் புரதம் தான் நம் உடலின் உயிர்நாடி.
எவ்வளவு புரதம் ஒருநாளைக்கு தேவை?
ஒரு சராசரி மனிதனுக்கு அவனது உடல் எடையை போல 0.7 மடங்கு கிராம் புரதம் தேவை. அதாவது அவனது உடல் எடை 80 கிலோ இருந்தால், அவனுக்கு 56 கிராம் புரதம் தினசரி தேவை. பிரசவமாக இருக்கும் பெண்கள், தாய்ப்பால் ஊட்டும் பெண்கள், குழந்தைகளுக்கு(கிலோவுக்கு 1.5 கிராம் வரை) புரதம் இன்னும் அதிகம் தேவைப்படும். இதில் குறிப்பாக, இந்தியாவில் உள்ளது போன்று, பெரும்பாலும் சைவ உணவுகளில் இருந்து புரதம் எடுத்தால், அதன் குறைந்த தரம் காரணமாக இன்னும் அதிக புரதம்(ஒரு கிலோ எடைக்கு 1 கிராம்) தேவை.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அளவு குறைந்தபட்ச அளவு மட்டுமே. இதற்கு குறைந்து புரதம் எடுத்தால் தளர்வு, தசை இழப்பு, உடல் சோர்வு மற்றும் பல கோளாறுகள் உடலில் ஏற்படும்.
மிருகங்களின் புரதம் உடலுக்கு கெடுதலா?
இது தான் மிகப்பெரிய காமெடி.
புரதங்களின் மூலக்கூறுகள் அமினோ ஆசிட் எனப்படும். 20 வகை அமினோ ஆசிட்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான புரதங்கள் உடலில் தயார் செய்ய படுகின்றன. இதில் 9 வகை அமினோ ஆசிட்கள் உணவில் இருந்து மட்டும் தான் உடலுக்கு கிடைக்க செய்ய வேண்டும். இவை essential amino acids என்றழைக்கப்படும். இவை அனைத்தும் ஒரு சேர கிடைப்பது முட்டை மற்றும் மிருக புரதங்களில் மட்டும் தான். அரிசியிலோ பருப்பிலோ சுண்டலிலோ அனைத்து essential அமினோ ஆசிட்கள் கிட்டுவதில்லை. எனவே தான் பருப்பு சுண்டல் வகைகளை உணவியல் நிபுணர்கள் poor man's meat (ஏழையின் இறைச்சி) என்றழைப்பர். முட்டை புரதத்தை reference protein என்றழைப்பர். அதாவது மற்ற எல்லா உணவு வகைகளிலும் எவ்வளவு புரதம் இருக்கிறது, அதன் தரம் என்ன என்பதை முட்டையுடன் ஒப்பிட்டுத் தான் விளக்குவார்கள். நாம் பள்ளி செல்லும்போது எல்லா பாடத்திலும் ஒருவன் முதல் ரேங்க் வாங்குவானே, எல்லாரும் அவனை மாதிரி படிக்க வேண்டும் என்பார்களே, அவனைப் போல.
பேலியோ அதிக புரதம் எடுக்கும் உணவுமுறையா?
இது பொதுவாக மக்களிடமும் மருத்துவர்களிடமும் நிலவும் தவறான கருத்து.
பேலியோ என்பது
- குறைந்த மாவுச்சத்து (carbohydrate)
- அதிக கொழுப்பு (fat)
- தேவையான அளவு புரதம் (protein)
எடுக்கும் உணவுமுறை.
பொதுவாக இந்தியர்கள் உண்ணும் உணவில் இருப்பது 30-40 கிராம் புரதங்களே. அதுவும் தரம் குறைந்த தானிய புரதங்கள்.
பேலியோ உணவில் கிட்டத்தட்ட 80 முதல் 100 கிராம் வரை உயரிய மிருக புரதங்கள் கிடைக்கும். அனைத்து essential அமினோ ஆசிட்களும் கிட்டும். உடல் தேவையான அளவு புரதங்களைப் பெற்று செழிப்புடன் விளங்கும்.
புரதம் நல்லது சரி, அதிகபட்சம் தினம் எவ்வளவு எடுக்கலாம்?
ஒரு சராசரி மனிதன் ஒரு கிலோவுக்கு 2.5 கிராம் என்கிற அளவு வரை புரதங்கள் எடுக்கலாம். எந்த பிரச்னையும் இல்லை. அதாவது ஒரு 80 கிலோ எடையுள்ள மனிதன் தினசரி 200 கிராம் வரை எடுக்கலாம். எந்த பாதிப்பும் ஏற்படாது. இது ஆராய்ச்சிபூர்வமாக நிரூபிக்கப்பட்ட தகவல். ஆனால் நம் உடலால் அதிகபட்சம் ஜீரணம் செய்யக்கூடியது கிட்டத்தட்ட 375 கிராம் புரதம். (Theoretical maximum)

கவனிக்கவும்: பேலியோவில் பரிந்துரைப்பது 80-100 கிராம் புரதங்களே.
சரி, 56 கிராம் குறைந்தபட்ச தேவை எனும்போது, 150 கிராம் எடுத்தால் என்ன ஆகும்?
1. பாடி பில்டிங்கில், விளையாட்டு துறையில் உள்ளோர், அதிக புரதம் எடுக்கும்போது அந்த புரதங்கள் actin மற்றும் myosin ஆக மாறி, தசைகளை மெருகேற்றும்.
2. குறைந்த கார்போஹைட்ரேட் உணவுமுறையை பின்பற்றும் ஒரு சராசரி மனிதர் அதிக புரதங்கள் எடுத்தால், மிச்ச புரதங்கள், gluconeogenesis எனும் செயல் மூலம், உடலில் குளுக்கோஸ் ஆக மாறி, மூளை, சிவப்பு அணுக்கள், சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்கு சக்தி தரும்.
3. மிச்சக் கழிவுகள் யூரியாவாக மாறி, சிறுநீரகத்தால் வெளியேற்றப்படும்.
இந்த கடைசி பாயிண்டை தான் மக்கள் பிடித்துக்கொண்டு பேலியோவைத் தூற்றிய வண்ணம் உள்ளனர்.
உண்மையில் அதிக புரதம் எடுத்தால் சிறுநீரகம் பாதிக்கப்படுமா?
- ஆராய்ச்சிகளில், ஏற்கனவே சிறுநீரக செயலிழப்பு (renal failure) உள்ள மக்களுக்கு அளவுக்கு மீறிய புரதம் கொடுத்தால், தொந்தரவு அதிகமாகும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே தான், சிறுநீரக கோளாறு ஏற்கனவே இருப்பவர்களுக்கு, 55 கிராமுக்கு கீழ் புரதம் எடுக்க வேண்டும் என்று நம் குழுவில் பரிந்துரைக்கப்படுகிறது.
(கவனிக்கவும்: renal failure உள்ளவர்களுக்கும் கூட 55 கிராம் புரதம் குறைந்தபட்சம் வேண்டும். ஜீரோ புரதம் பரிந்துரைப்பது இல்லை. உடலில் அத்துனை முக்கிய வேலை உள்ளது புரதத்திற்கு.)
- ஆனால், எந்த தொந்தரவும் இல்லாத, சிறுநீரகம் நன்றாக செயல்படும் மக்களுக்கு அதிக புரதம் கொடுத்தால் அவர்களுக்கு சிறுநீரக தொந்தரவு வரும் என்று கூறுவது முட்டாள்தனம். அதற்கு எந்த ஒரு ஆராய்ச்சி அடிப்படையும் இல்லை.
- சிறுநீரகத்தின் முக்கிய வேலைகளுள் ஒன்று புரதம் ஜீரணமாகும்போது உருவாகும் nitrogenous கழிவுகளை வெளியேற்றுவதுதான். அதனால் தான் இந்த சந்தேகங்கள் வருகின்றன.
- உடலில் புரதங்களை ஜீரணம் செய்ய ஒரு எல்லை இருக்கிறது. பல ஆராய்ச்சிகளின் மூலம், அது மொத்த உணவின் 35 சதவீதம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தனை புரதம் உண்பது சாத்தியம் அல்ல. அதனைக் கட்டுப்படுத்த மூளையில் பல்வேறு செயல்பாடுகள் உள்ளன.


https://www.ncbi.nlm.nih.gov/pubmed/22319049


- அளவுக்கு விஞ்சிய புரதங்கள் எடுக்கும்போது சிறுநீரகத்தில் சில மாற்றங்கள் நிகழ்வது சில ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

http://www.sciencedirect.com/science/article/pii/B9780123919342000138

https://www.ncbi.nlm.nih.gov/pubmed/10578207

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3602135/


- இந்த மாற்றங்கள் யாதெனில்
*glomerular filtration rate (GFR) எனப்படும் சிறுநீரகத்தின் வடிகட்டும் வேகம் அதிகம் ஆகிறது.
*glomeruli எனப்படும் சிறுநீரகத்தின் அடிப்படை யூனிட்கள் அளவில் பெரியதாகின்றன.
- இந்த மாற்றங்களை hyperfiltration என்பார்கள். இவற்றை, ஆரோக்கியமான சிறுநீரகத்தின் adaptive changes (தேவைக்கேற்றார் போல் செயல்திறனை மாற்றி அமைத்து கொள்ளும் தன்மை) என்பார்கள்.

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1262767/


அதாவது, மரம் வெட்டுபவனை விட ஓவியனுக்கு கை நேர்த்தி அதிகம் உள்ளதே, அது போல.
- இத்தகைய adaptive changes பிரசவமாக இருப்பவர்க்கும், ஒரு சிறுநீரகத்தை தானம் செய்தவருக்கும் சாதாரணமாக நடப்பதுண்டு. உதாரணத்திற்கு, ஒரு சிறுநீரகத்தை தானம் செய்தவருக்கு, இன்னொரு சிறுநீரகம் கொஞ்சம் அதிக வேலை செய்யும். GFR அதிகமாக இருக்கும். பிரசவமாக இருப்பவர்க்கு 50% கூடுதல் வேலைப்பளு சிறுநீரகத்திற்கு இருக்கும். ஆனால், ஒரு போதும் அது பாதிப்படையாது.
http://journals.plos.org/plosone/article?id=10.1371%2Fjournal.pone.0097656



இந்த மிக உயரிய systematic review ஆராய்ச்சியில், அதிக புரதம் எடுப்பது gfr, urea, uric acid போன்றவற்றை சிறிது அதிகம் அடையச் செய்தாலும், அது சிறுநீரகத்தின் தேவைக்கேற்றார் போல் செயல்திறனை மாற்றி அமைத்து கொள்ளும் தன்மை தான். இதற்கு மருத்துவ ரீதியில் எந்த முக்கியத்துவமும் கொடுக்கத் தேவையில்லை என்று முடிவுரை கூறியுள்ளார்கள்.
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3386674/



இந்த ஆராய்ச்சியில் அத்தகைய சிறு மாற்றங்களும் அதிக புரதம் எடுக்கும் யாருக்கும் நிகழவில்லை என்று கண்டுபிடித்துள்ளார்கள்.

http://www.sciencedirect.com/science/article/pii/B9780123919342000138



இந்த ஆராய்ச்சிக்கட்டுரையில், அதிக புரதம் எடுப்பது பற்றிய எல்லா ஆராய்ச்சிகளையும் ஒப்பீடு செய்து இறுதியாக ஒரு முடிவை எட்டியுள்ளார்கள். அதாவது, மேலே குறிப்பிட்டுள்ளது போல சிறு சிறு மாற்றங்கள் புரதம் அதிகம் எடுக்கும்போது நடந்தாலும், அவை சாதாரண adaptive மாற்றங்களே. அது பற்றி எந்த ஒரு தயக்கமும் தேவை இல்லை. ஆனால், நாம் பொதுவாக எடுக்கும் அதிக மாவுச்சத்து உணவுகளே, நீரிழிவு நோய் போன்ற கொடிய நோய்களை வரவழைத்து, diabetic nephropathy எனும் நீரிழிவினால் ஏற்படும் சிறுநீரக செயழிலப்பை அதிகப்படுத்தி, வருடம் ஒன்றிற்கு பல்லாயிரக்கணக்கான மரணங்களை நிகழ்த்துகின்றன என்கிறார்கள்.
இது மட்டும் இல்லாமல், பேலியோ போன்றதொரு குறைந்த மாவுச்சத்து, அதிக கொழுப்பு, தேவையான அளவு நல்ல புரதம் எடுக்கும் உணவுமுறையில், diabetic nephropathy எனும் நீரிழிவினால் ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு நோய் ஆரம்ப கட்டத்தில் இருந்தால், அது பூர்த்தி குணமடையவும் நிறைய வாய்ப்புகள் இருப்பதாக சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. சிலருக்கு கீட்டோஜெனிக் பேலியோ டயட் மூலம், ஆரம்பக்கட்ட diabetic nephropathy சரியாகி பழைய நல்ல நிலைமைக்கு சிறுநீரகம் திரும்பிவிட்டது என்றும் case ரிப்போர்ட்கள் உள்ளன.


http://journals.plos.org/plosone/article?id=10.1371%2Fjournal.pone.0018604

http://nutritionandmetabolism.biomedcentral.com/articles/10.1186/1743-7075-3-23


கவனிக்கவும்: சிறுநீரக கோளாறுகளுக்கு டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்களில் கிட்டத்தட்ட 60 முதல் 70 சதவீதத்திற்கு மூல காரணம் diabetes(நீரிழிவு நோய்) மற்றும் hypertension(உயர் இரத்த அழுத்தம்). இவற்றை குணமாக்கவோ, ஏற்கனவே ஏற்பட்ட சிறுநீரக கோளாறை சரி செய்யவோ, தற்போது எந்த ஒரு மருத்துவமோ மருந்துகளோ இல்லை என்பதை நினைவில் கொள்ளவும். டயாலிஸிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரே வழி.
மறுபடியும் முதல் கேள்விக்கே வருவோம்.
பேலியோ உணவுமுறையால் சிறுநீரக பாதிப்பு வருமா?
1. பேலியோ உணவு முறையால் சிறுநீரக பாதிப்பு வரும் என்று நினைப்பது அரை வேற்காட்டுத்தனமான ஆதாரம் அடிப்படைகளற்ற குற்றச்சாட்டு.
2. வேண்டுமானால், பேலியோ உணவுமுறை உங்களைப் பல எதிர்கால சிறுநீரக பாதிப்புகளில் இருந்து காப்பாற்றும். உங்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் உயர் அழுத்தத்தில் இருந்து விடுதலை அளிப்பதன் மூலம் உங்கள் சிறுநீரகங்களை செயலிழப்பில் இருந்தும், உங்களை டயாலிசிஸில் இருந்தும், மாற்று சிறுநீரகங்களுக்குக் காத்துக் கிடக்கும் கொடிய நிலைமையில் இருந்தும் காப்பாற்றும்.
எனவே, இல்லாத ஒரு பிரச்சனைக்கு பயந்து மாவுச்சத்து உணவு உண்டு, உங்களின் சிறுநீரகங்களை நீரிழிவு நோய்க்கும் உயர் இரத்த அழுத்தத்திற்கும் பலி கொடுக்க வேண்டுமா?
அல்லது பேலியோ உணவு முறை பின்பற்றி, உங்கள் சிறுநீரகங்களை பொன் போல பாதுகாத்துக்கொள்ள வேண்டுமா?
நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!!

- Dr. Arunkumar, MBBS, MD(Pediatrics),  Erode.