கொலஸ்டிரால் உடலுக்குக் கெடுதலா?
கொழுப்பு, நிறைவுற்ற கொழுப்பு (Saturated
fat) போன்ற
வார்த்தைகளைக் கேட்டாலே பலரும் பதறுவார்கள். அதிலும் முட்டை, சிகப்பு இறைச்சி (Red
meat), பன்றிக்கொழுப்பு, வெண்ணெய் என்றால் அவ்வளவுதான்.
உடனே வரும் கேள்வி – இவற்றைச்
சாப்பிட்டால் மாரடைப்பு வரும் அல்லவா?’
சிகப்பு
இறைச்சியும், நிறைவுற்ற
கொழுப்பும் இதயத்துக்குக் கெடுதலானவை என்று பலரும் நினைப்பது நம் இதயத்துக்குத்
தெரிந்தால், விழுந்து
விழுந்து சிரிக்கும். ஏன் எனில், நம் இதயமே மிகப்பெரிய சிகப்பு இறைச்சித் துண்டுதான். முழுக்க
முழுக்க சிகப்பு இறைச்சியாலும், நிறைவுற்ற கொழுப்பாலும் ஆனதுதான். இதயம் மட்டுமல்ல, மனித உடலே அப்படித் தான்.
அதிலும் மனித மூளை என்பது மிகப்பெரிய கொலஸ்டிரால் பந்து. உள் உறுப்புக்களில் மிக
அதிக அளவில் கொலஸ்டிராலைத் தேக்கி இருக்கும் மனித உறுப்பு, மூளையே. வேறு எந்த உறுப்புக்களை
விடவும் பத்து மடங்கு அதிக கொலஸ்டிரால் நம் மூளையில் உள்ளது.
கொலஸ்டிரால்
நம் தோழன். அதிலும் உற்ற தோழன். நம் உயிர் காத்து, ஆண்களுக்கு ஆண்மையையும், பெண்களுக்குப் பெண்மையையும்
அளித்து, மாரடைப்பின்
பிடியில் இருந்து நம்மைக் காக்கும் தோழன். கர்ணனுக்கு துரியோதனன் போல, அவ்வைக்கு அதியமான் போல, அர்ஜுனனுக்கு கிருஷ்ண பரமாத்மா
போல நமக்கு உற்ற நண்பன். கொலஸ்டிரால் இல்லையென்றால் நாம் இல்லை, நம் சந்ததி இல்லை, மனித இனம் மட்டுமல்ல, பாலூட்டிகள் என்கிற இனமே இல்லை.
கொலஸ்டிரால்
என்பது பசை மாதிரி உள்ள ஒரு வகைப் பொருள். பலரும் நினைப்பது போல அதில் கலோரி எல்லாம்
கிடையாது. கொலஸ்டிரால் உடலுக்குத் தேவையான மிக, மிக முக்கியமான ஒரு
மூலப்பொருள். நம் உடல் இயங்க பல ஹார்மோன்கள் அவசியமானவை.
உதாரணமாக
ஆண்களுக்கு ஆண்மையை அளிப்பது டெஸ்டோஸ்டிரான் (Testosterone) எனும் ஹார்மோன். இந்த
ஹார்மோன்தான் உயிர் அணுக்களை உற்பத்தி செய்யத் தூண்டுகிறது. ஆண்களுக்கு முடி
வளர்வது முதல் விந்தணு உற்பத்தி வரை அனைத்துக்கும் மூலக்காரணி டெஸ்டோஸ்டிரான்
தான். ஆண்களுக்கு வலிமையை அளிப்பதும் இதுதான். அதனால்தான் பெண்களை விட ஆண்களுக்கு
அதிக உடல் வலு உள்ளது.
பெண்களுக்குப்
பெண்மையை அளிப்பது ஈஸ்ட்ரோஜென் (Estrogen) எனும் ஹார்மோன்.
ஈஸ்ட்ரோஜெனால்தான் பெண்கள் வயதுக்கு வருகிறார்கள், மார்பக வளர்ச்சியைப்
பெறுகிறார்கள். பெண்களுக்கு, கருமுட்டை வளர்ச்சிக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அவசியம்.
கொலஸ்டிராலுக்கும்
ஹார்மோன்களுக்கும் இடையே உள்ள உறவு வெண்ணெய்க்கும், நெய்க்கும் இடையே உள்ள உறவு
போன்றது. அதாவது உடலால் உற்பத்தி செய்யப்படுகிற அனைத்து ஹார்மோன்களுக்கான
மூலப்பொருளே கொலஸ்டிரால்தான். உடலில் வேறு எந்த மூலப்பொருள் தட்டுப்பாடு வந்தாலும்
ஓரளவு சமாளிக்க முடியும். ஆனால், கொலஸ்டிரால் உற்பத்தி மட்டும் தடைபட்டால் அவ்வளவுதான். பல
ஹார்மோன்களின் உற்பத்தி நின்று, உடலே ஸ்தம்பித்துவிடும்.
இத்தனை
முக்கிய மூலப்பொருளான கொலஸ்டிராலை, நம் உடல் தானே
தயாரித்துக்கொள்ளும் வல்லமையைப் பெற்றுள்ளது. நம் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும்
கொலஸ்டிராலை உற்பத்தி செய்யும் சக்தி உள்ளது. இருப்பினும் நமக்குத் தேவையான கொலஸ்டிராலை
நம் உணவு மூலமாகவும் பெறலாம். அதாவது இறைச்சி, முட்டை, பால், மீன் போன்ற உணவுகளில்
கொலஸ்டிரால் உண்டு. அதே சமயம் எந்த ஒரு தாவர உணவிலும் கொலஸ்டிரால் கிடையாது.
உடலில்
உள்ள ஒவ்வொரு செல்லுக்குள் உள்ள சவ்வை (Membrane) உற்பத்தி செய்ய கொலஸ்டிரால்
அவசியமாகிறது. மேலும், ஒவ்வொரு
செல்லிலும் நீர் புகாதபடி, ‘வாட்டர் ஃப்ரூப்’ ஆக செல்களைக் காப்பாற்றுகிறது. கொலஸ்டிரால் இல்லையெனில்
ஈஸ்ட்ரோஜென் (Estrogen), புரோஜெஸ்டிரான் (Progesterone), டெஸ்டோஸ்டிரான் (Testosterone),
அட்ரினலின்
(Adrenaline), கார்ட்டிசோல் (Cortisol) ப்ரக்னனோலோன் (Pregnenolone)
போன்ற
ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் டி போன்றவை நம் உடலில் உற்பத்தி ஆகாது.
இதனால்
நம் உடல் கொலஸ்டிராலை உற்பத்தி செய்ய அதிக முயற்சி எடுக்கிறது. இத்தனை
பணிகளுக்கும் தினமும் 2000 மி.கி. கொலஸ்டிரால் தேவை. அதனால், கல்லீரல் (Liver) நம் உணவில் இருந்து கொலஸ்டிராலை
உற்பத்தி செய்வதில் பெரும் ஆற்றலையும், நேரத்தையும் செலவழிக்கிறது.
உணவில்
இருந்து கொலஸ்டிராலை நம் உடல் உற்பத்தி செய்வது எளிதான காரியம் அல்ல. அது 30 படிகள் கொண்ட ஒரு வழிமுறை.
இதைச் செய்வதால் கல்லீரலுக்கு அதிக வேலை. அதற்குப் பதிலாக, உணவின் மூலமாகவே நம் உடலுக்கு
கொலஸ்டிரால் கிடைத்துவிட்டால்? கல்லீரலுக்கு அதிக ஓய்வு கிடைக்கும் இல்லையா! இதனால் அது
புரதத்தை ஜீரணம் செய்தல், பைல்
ஆசிட் (Bile acid) எனப்படும் ஜீரண ஆசிட்டை உற்பத்தி செய்தல் போன்ற வேறு
வேலைகளில் ஈடுபடும்.
ஆக, எத்தனைக்கு எத்தனை கொலஸ்டிரால்
நம் உணவில் அதிகமாக இருக்கிறதோ அத்தனைக்கு அத்தனை நம் கல்லீரல் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருக்கும்.
உணவின்
வழியாக கல்லீரலுக்கு கொலஸ்டிராலைக் கொடுப்பது என்பது தினமும் ஐந்து மணிநேரம்
கையால் துணி துவைக்கும் இல்லத்தரசிக்குச் சலவை இயந்திரம் வாங்கிக் கொடுப்பது
மாதிரி.
நம்
உடலில் உற்பத்தி செய்யப்படும் கொலஸ்டிராலுக்கும் முட்டை, இறைச்சி, வெண்ணெய் போன்றவற்றில் இருந்து
கிடைக்கும் கொலஸ்டிராலுக்கும் துளி வேறுபாடு கிடையாது. இரண்டும் ஒன்றே. முட்டையில்
உள்ள கொலஸ்டிரால் உடலுக்குக் கெடுதல் என்று சொன்னால், நம் கல்லீரல் மாங்கு மாங்கு
என்று உற்பத்தி செய்யும் கொலஸ்டிராலும் கெடுதலானது என அர்த்தம் வரும் இல்லையா? உடலுக்குக் கெடுதல்
விளைவிக்கும் பொருளை எதற்காக நம் கல்லீரல் உற்பத்தி செய்யவேண்டும்? கொஞ்சம் யோசியுங்கள்.
நம்
உடலுக்குத் தினமும் தேவைப்படும் கொலஸ்டிரால் அளவு - 2000 மிகி. அதாவது கிட்டத்தட்ட பத்து
முட்டைகளில் உள்ள அளவு. தினமும் எட்டு முட்டைகள் சாப்பிட்டால், நம் கல்லீரலுக்குச் சுமார் 1600 மி.கி. கொலஸ்டிராலை உற்பத்தி
செய்யும் வேலை மிச்சம் ஆகும். மீதமுள்ள நானூறு மி.கி. கொலஸ்டிராலை மட்டும் அது
உற்பத்தி செய்துவிட்டு ஹாயாக ஓய்வெடுக்கும். எனவே, கொலஸ்டிரால் உள்ள உணவுகளை
உண்டால் ஆபத்து என்று எச்சரிப்பதில் எந்த அர்த்தமும் இருக்கமுடியாது இல்லையா?
ஒரு
அமெரிக்கருக்கு அவரது உணவின் மூலம் தினமும் 400 மி.கி. அளவுள்ள கொலஸ்டிரால்
கிடைக்கிறது (அமெரிக்க அரசின் பரிந்துரை 300 மி.கி.). இந்திய அரசு, உணவில் தினமும் 365 மி.கி. மட்டுமே கொலஸ்டிரால்
இருக்கவேண்டும் எனப் பரிந்துரை செய்கிறது. இந்தப் பரிந்துரைகள் அபத்தமானவை.
7 comments:
Fantasic article
Fantastic article
விளக்கம் அருமை ஜி
Good one
Good explanation.
மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள். நன்றி.
Hi This is SRK i'm suggesting you this is app Rail Rush Mod Apk
Post a Comment