Tuesday, August 8, 2017

சக்தி கொடு! - 2 , சிவராம் ஜெகதீசன்


ஆரோக்கிய வாழ்வுக்கான வைட்டமின்களும் மினரல்களும் 

********************************
வைட்டமின்கள் & மினரல்கள் என்றால் என்ன?
வைட்டமின், மினரல், ஃபைட்டோ கெமிகல்ஸ், ஆண்ட்டி ஆக்சிடண்ட்ஸ் - இவையெல்லாம் என்ன?
வைட்டமின்கள் என்பவை இயற்கை மூலக்கூறுகள். இவற்றை நம் உடல் தானே தயாரிக்காது. அல்லது மிகுந்த சிரமப்பட்டு ஏதோ கொஞ்சம் தயாரிக்கலாம். சூரிய ஒளியில் இருந்து டி வைட்டமின் தயாரித்துக்கொள்வது போல. ஆனால் வைட்டமின்கள் நமக்கு மிகவும் அவசியம். எனவே, நாம் உண்ணும் உணவிலிருந்துதான் பெரும்பாலான வைட்டமின்கள் உடலுக்குக் கிடைக்கவேண்டும்.
நாம எதைச் சாப்பிடுகிறோம்? தாவரங்கள், மற்றும் இறைச்சிகள். மனிதர்களுக்கிஉ இரையாகும் விலம்க்குகளும் தாவரத்தை உண்பவை தான். அதனால், பொதுவாகத் தாவரங்கள்தாம் இந்த வைட்டமின்கள் கிடைப்பதற்கு ஒரே வழி. அந்தத் தாவரங்கள் எப்படி இந்த வைட்டமின்களைப் பெறுகின்றன? என்றால், மண்ணிலிருந்து.
அதாவது இயற்கையாக மண்ணில் விளைகிறது தாவரம்; அதை உண்ணும் விலங்குகளுக்கு இந்த வைட்டமின்களும் மினரல்களும் கிடைகின்றன. மண்ணிலிருந்து சத்துகளை உறிஞ்சி அதைத் தேவைக்கேற்ப மாற்றி தாவரங்கள் அவற்றைத் தன்னகத்தே வைத்திருக்கும். இதை உண்பதன் மூலம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தேவையான வைட்டமின்களும் மினரல்களும் கிடைக்கின்றன. மலையில் இருந்தும் மழையில் இருந்தும் ஆறு கிளம்பி, அதை அணைகள் தேக்கி, பைப்புகள் வழியே மெட்ரோ வாட்டர் நம் வீட்டுக்கு அனுப்புகிறதல்லவா? அந்த மாதிரி.
பிரச்னை என்னவென்றால், இப்படித் தொடர்ச்சியாக விளைவிக்கப்பட்ட நிலங்கள் அதன் சத்துகளைக் கிட்டத்தட்ட இன்று இழந்தே விட்டது. இந்த நிலங்களில் போடப்படும் உரங்கள் பயிர்களை அதிகமாக வளர்க்க உதவி செய்தாலும், தேவையான அல்லது ஒரு நூற்றாண்டுக்கு முன் இருந்ததைப் போல சத்தான நிலங்கள் இப்போது நம்மிடம் இல்லை. மண்ணிலிருக்கும் நுண்ணுயிரிகளை உரங்கள் பெரும்பாலும் அழித்து விட்டன. உலகில் மிகச் சில விவசாய நிலங்களைத் தவிர பெரும்பாலான விவசாய நிலங்களின் நிலை இதுதான். மேலும் தற்போதைய ஆராய்ச்சிகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளும் உணவுப் பழக்கத்துக்கு வந்து விட்டன. இப்போதே தேவையான நோய்களை வைத்திருக்கிறோம். இன்னும் இந்த நிலை மோசமாக ஆகும்போது நோய்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.
இன்னொரு பிரச்னையும் உள்ளது. இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் உணவுகளையும் பதப்படுத்துதல் என்ற பெயரில் ருசிக்காகவும், அதிக நாட்கள் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களின் அலமாரிகளில் கெடாமல் இருக்கச் செய்வதற்காக இன்னும் அவற்றின் சத்துகள் முற்றிலுமாக உறிஞ்சப்பட்டு, வேறு செயற்கையான ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு, அழகாக பேக் செய்து விற்கப் படுகிறது.
அதனால்தான் பேலியோவில் இயற்கையாகக் கிடைப்பதை மட்டும் (சிறிது சத்துக் குறைபாட்டுடன் இருந்தாலும்) வீட்டில் சமைத்து உண்ணச் சொல்கிறோம். பொரிப்பதையும், ரெடிமேட் உணவுகளையும் வேண்டாம் என்று சொல்கிறோம்.
நாம் உண்ணும் உணவிலிருந்து தேவையான சத்துகளைக் கிரகிக்க முடியாமல் உடல் திணறுகிறது. இன்னும் உணவு வேண்டும் வேண்டும் என்று கேட்கிறது. எதிலிருந்தாவது உடல் தனக்குத் தேவையான சத்துகள் கிடைக்காதா என்று தேடுகிறது. இந்த சத்துகள் உடலுக்கு வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
உணவுகளில் ஏற்பட்ட இந்த உயிர்ச்சத்துகள் பற்றாக் குறையின் காரணமாக மருத்துவ அறிவியல் எந்தக் குறிப்பிட்ட சத்து உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது என்று கண்டு பிடித்து அவற்றை கெமிக்கல்கள் மூலம் கட்டமைத்து, இயற்கையைப் போலவே தோற்றமளிக்கும் செயற்கைப் பிரதிகளை உருவாக்க ஆரம்பித்தது.
தற்போது கடைகளில் கிடைக்கும் காய்கறிகள், லட்சக்கணக்கான ஆண்டுகளாக உண்ணப்பட்டு வந்த காய்கறிளின் வடிவங்களே அல்ல. மலடாகிப் போன மண்ணிலிருந்து விளைவிக்கப்படும் காய்கறிகளில் உடலுக்குத் தேவையான சத்துகள் முழுமையாகக் கிடைக்காது. இதன் காரணமாகத்தான் பல வகையான ஆட்டோ இம்யூன் நோய்களும், மெடபாலிக் சிண்ட்ரோம் என்று சொல்லப்படும் வளர்சிதை மாற்ற நோய்களும், உடல் பருமனும் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை நோய்களும் நமக்கு வருகின்றன.
ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கை வைட்டமின்களை மல்ட்டி வைட்டமின்கள் என்ற பெயரிலும், உணவிலேயே சேர்த்தும் (வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட எண்ணெய், பால், வைட்டமின்களும் மினரல்களும் உள்ள குளிர் பானங்கள் போன்றவை இந்தப் பிரிவில் வருபவை) நம்மிடம் விற்க ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட அனைத்து வகையான மல்ட்டி வைட்டமின்களும் சிந்தெடிக் என்று சொல்லப்படும் செயற்கை வைட்டமின்களே. அதற்காக இந்த செயற்கை வைட்டமின்கள் முழுக்க முழுக்கப் பயனற்றவை என்று சொல்லி விடவும் முடியாது. இந்த செயற்கை வைட்டமின்களைத் தயாரிப்பது சுலபம், விலையும் மலிவு. அதிக நாட்கள் பாட்டிலில் வைத்தாலும் அதன் தன்மை மாறாது, அதாவது கெட்டுப் போகாது. பெரிய அளவான டோசேஜ்களை சின்ன மாத்திரைக்குள் அடக்கி விட முடியும். இந்த செயற்கை வைட்டமின்களையும் "இயற்கை" என்றே சொல்லி விற்க அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.
ஏனெனில் இந்த செயற்கை வைட்டமின்களின் மூலக்கூறுகளும் இயற்கை வைட்டமினின் மூலக்கூறுகளும் ஒன்றே. ஆனால் இயற்கையில் - உணவில் கிடைக்கும் வைட்டமின்களுக்கும் செயற்கைக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு, செயற்கை என்பது தனியாகக் குறிப்பிட்ட வைட்டமினை மட்டுமே கொண்டிருக்கும். இயற்கையில் கிடைக்கும் என்சைம்களும், கோ ஃபேக்டர்களும் செயற்கையில் கிடைக்காது. இந்த கோ ஃபேக்டர்கள் தான் உடலால் இந்த சத்துகள் கிரகிக்கப்படுவதற்கு மிக மிக மிக முக்கியமானது.
இந்த செயற்கை வைட்டமின்கள் தயாரிக்கப்படும் முறைக்கும் இயற்கையாக தாவரங்களோ அல்லது விலங்குகளோ, வளர்சிதை மாற்றத்தினால் தயாரிக்கும் முறைக்கும் அளவு கடந்த வேறுபாடு உள்ளது.
ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கை வைட்டமின்கள், உடலால் கிரகிக்கப்படும் அளவு மிக மிகக் குறைவு. உடல் எதிர்பார்ப்பது இந்த செயற்கை வைட்டமினை அல்ல. பெரும்பாலாலான நேரத்தில் உடலுக்கு இந்த செயற்கை வைட்டமினை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாது விழிக்கும் அல்லது கழிவு என்று வெளியே தள்ளி விடும்.
அதனால், மெகா டோஸ்களில் வைட்டமின்களையும் மினரல்களையும் எடுத்தால் எல்லா வியாதியும் சரியாகிவிடும் என்று நினைக்க வேண்டாம். இதற்கான டோசேஜை மருத்துவரிடம் ஆலோசித்து எடுப்பதே பாதுகாப்பானதாகும்.
உண்ணப்படும் உணவிலிருந்தோ அல்லது எடுக்கும் சப்ளிமெண்டுகளில் இருந்தோ, ஒரு வைட்டமின் எந்த அளவு உடலால் கிரகிக்கப்படுகிறது, உபயோகமாகிறது என்பது முக்கியம்.
இதை பயோஅவைலபிலிடி என்று சொல்வார்கள்.

சிவராம் ஜெகதீசன் சக்தி கொடு! - 1

சக்தி கொடு! - 1
ஆரோக்கிய வாழ்வுக்கான வைட்டமின்களும் மினரல்களும் 
ஒரு விரிவான அறிமுகம்.


[பொறுப்புத் துறப்பு : நான் மெடிகல் பிராக்டிஷனர் - மருத்துவர் அல்ல. இந்தத் தொடரின் மூலம் சொல்லப்படும் விஷயங்களை நீங்களாக முயற்சிப்பதோ அல்லது தக்க மருத்துவர் ஆலொசனையின்றி முயற்சி செய்து பார்ப்பதோ தவறு என்பதுடன், அதற்காகவோ அதன் விளைவுகளுக்காகவோ நானோ இந்தக் குழுமமோ எவ்வகையிலும் பொறுப்பாக மாட்டோம் என்று கூறி என் பொறுப்பைத் துறக்கிறேன்]


********************************
வணக்கம் நண்பர்களே,
மேக்ரோ நியூடிரியண்ட்ஸ் என்றால் என்னவென்று நமக்குத் தெரியும். மாவு - புரதம் - கொழுப்புச் சத்துகளை அக்கு வேறு ஆணி வேறாக அலசி, அதன் அடிப்படையில் ஆரோக்கிய வாழ்வுக்கான பேலியோ உணவு முறையை செல்வன் ஜி அவர்கள் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். எடைக்குறைப்பு முதல் எத்தனையோ நோய்களில் இருந்து நாம் விடுதலையடைந்தும் இருக்கிறோம்.
அடிப்படையில் இந்த மேக்ரோ நியுட்ரியண்டுகள் உடலின் கட்டுமானத்துக்கு உதவி செய்பவை; இயக்க சக்திக்கான கலோரிகளைத் தருபவை. இவை அல்லாமல் ஆரோக்கியமான உடலுக்குத் தேவையான மைக்ரோ நீயூட்ரியண்டுகள் எனப்படும் நுன்ணளவு ஊட்டச் சத்துகள் பற்றியும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான உயிர்ச்சத்துக்கள் என்று சொல்லப்படும் வைட்டமின்கள், தாது உப்புகள் என்று சொல்லப்படும் மினரல்கள், ஃபைட்டோ கெமிகல்ஸ், ஹார்மோன்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் அனைத்தைக் குறித்தும் இதில் நாம் விளக்கமாகப் பேசலாம்.
காய்கறிக் கடைகளில் சாதாரனமாகக் கிடைக்கும் எலுமிச்சம் பழத்தில் உள்ள வைட்டமின் சி முதல், அரிதாகக் கிடைக்கும், புற்று நோயைக் கட்டுப்படுத்தி குணமாக்கும் வைட்டமின் பி17 (B17) வரை பேச எவ்வளவோ இருக்கிறது.
எதற்குப் பேசவேண்டும்? நம் உடலைப் பற்றி நாம் அக்கறை கொள்ளாவிட்டால் வேறு யார் அதைச் செய்வார்கள்?
ஒவ்வொரு வைட்டமினும் எந்த உணவுப் பொருளில் உள்ளது, உடலுக்கான அவற்றின் தினசரித் தேவை என்ன, எந்த வைட்டமினை எப்படி எடுத்தால் அது உடலால் முழுமையாக கிரகிக்கப் படும் என்பது பற்றியெல்லாம் விரிவாகப் பார்க்கப் போகிறோம். இந்த வைட்டமின்களும் மினரல்களும் எவ்வாறு ஆய்வகத்தில் செயற்கையாகக் கட்டமைக்கப் பட்டு சந்தைப் படுத்தப் படுகிறது போன்றவற்றையும் சேர்த்தேதான் பார்க்கவிருக்கிறோம்.
இந்த மைக்ரோ நியூடிரியண்டுகள், மேக்ரோ நியூடிரியண்டுகளுடனும், என்சைம்களுடனும், கோஃபேக்டர் என்று சொல்லப்படும் உப காரணிகளுடனும் சேர்ந்து செயல் பட்டு உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைக்கிறது. ஒவ்வொரு வைட்டமின், மினரல் குறைபாட்டால் வரும் உடல் ரீதியான பிரச்சினைகள், அவற்றைச் சரி செய்யும் விதங்கள் பற்றியும் இந்தத் தொடரில் எழுதப் போகிறேன்.
இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு நாள் நண்பரின் மனைவியிடமிருந்து போன்.
'அண்ணா, பொன்னு அடிக்கடி மயங்கி விழுந்துடறா, என்னன்னே தெரியல. உங்க கிட்ட பேசலாம்னு போன் செஞ்சேன்.'
'டாக்டர்ட்ட போனியா, என்ன சொன்னார் டாக்டர்?'
'போனேன்ணா. அயர்ன் குறைவா இருக்குன்னு ஆறு மாசமா அயரன் டேப்லட் எடுத்துட்டுருக்கா'
'சரி, லேடஸ்ட் பிளட் டெஸ்ட் ரிப்போர்ட்ட எனக்கு வாட்சப்ல அனுப்பு'
ரிப்போர்ட் வந்தது. ஹீமோகுளோபின் 5.8. ஆறு மாசமா அயர்ன் டேப்லட் எடுத்தும் 5.8.
'நீ ஒன்னு செய். ஈரல், சுவரொட்டி, ரத்தப் பொரியல், இதுகள்ல ஏதாவது ஒன்னையோ அல்லது கலந்தோ தினமும் 150 கிராம் அவளுக்குக் கொடு. கூடவே உப்பு போட்டு எலுமிச்சம்பழ ஜூஸ் தினசரி கொடு’'
'சரிண்ணா, இன்னிகே ஆரம்பிக்கறேன்'
ஒரு மாதம் கழித்து 'அண்ணா, இப்ப அந்தப் பிரச்சினையே இல்ல, மயங்கி விழற பிரச்சினை எங்க போச்சுன்னே தெரியல. ஈரல் செம வொர்க் அவுட் ஆயிடுச்சுண்ணா.'
என்ன நடக்கிறது என்று புரிகிறதா? இரும்புச் சத்தை அதன் இயற்கையான வடிவத்தில் எடுக்க வேண்டும். லட்சக்கணக்கான வருடங்களாக உடலுக்கு அதுதான் தெரியும். திடீரென்று அயர்ன் என்று ஒன்றைப் பிரித்தெடுத்து அல்லது ஆய்வகத்தில கெமிகல்கள் மூலம் தயாரித்து விழுங்கினால் அதை உடல் எப்படி ஏற்கும்?
சிக்கல் இதுதான். பெரும் பிரச்னையும் இதுவேதான். இது எப்படி நிகழ்கிறது, ஏன் நிகழ்கிறது என்பதை ஒவ்வொரு வைட்டமினுக்கும் மினரலுக்கும் விரிவாக இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம்.
சத்தத்தினுள்ளே சதாசிவங்காட்டி சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டியதைப் போல ஒவ்வொரு உணவிலும் மறைந்திருக்கும் உயிர்ச்சத்துகளைப் பார்க்கப் போகிறோம்.
"உள்ளம் பெருங்கோவில், ஊனுடம்பு ஆலயம்" என்று சித்தர் திருமூலர் திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறார். உடல் பராமரிப்பை, கோவிலைப் பராமரிப்பது போலப் பராமரித்து அதை ஆரோக்கியத்துடன் வாழச் செய்ய உதவும் அனைத்து உபாயங்களையும் இந்தத் தொடர் சொல்லப் போகிறது.
போலவே, அளவுக்கதிகமாக இந்த வைட்டமின்களும் மினரல்களும் எடுத்தால் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பதையும் பார்க்கப் போகிறோம். பொதுவாக இந்த வைட்டமின்களும் மினரல்களும் உள்ள உணவை எடுப்பதால், அளவுக்கதிகமாக உடலில் சேராது. கடைகளில் கிடைக்கும் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதன் மூலமே இந்த "ஓவர் டோஸ்" என்று சொல்லும் வகையில் அளவுக்கதிகமாக ஆகிறது. வைட்டமின் குறைபாட்டால் பிரச்சினைகள் வருவது போலவே ஓவர் டோஸாலும் பிரச்சினைகள் வரும். கூடவே எந்த வகையான மருந்துகள் மற்றும் மாத்திரைகள், எந்த விதமான வைட்டமின்களையும் மினரல்களையும் உடம்பிலிருந்து அழித்து பல பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது என்பதையும் அலசப் போகிறோம். அத்துடன் பல வகையான வியாதிகளுக்கு பலனளிக்கும் வைட்டமின்களைப் பற்றியும் பார்க்கப் போகிறோம்.
திருமூலரின் இன்னொரு பாடலை உதாரணம் காட்டி இந்த அறிமுகப் பகுதியை முடித்துக் கொள்கிறேன்.
"உடம்பால் அழியின் உயிரால் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே"

Thursday, July 20, 2017

Homocysteine-இது அதிகம் இருந்தால் மாரடைப்பு வரலாம்.

Homocysteine-இது அதிகம் இருந்தால் மாரடைப்பு வரலாம்.

யாருக்கு அதிகமாகிறது?
1. வயது ஏற ஏற இது அதிகரிக்கலாம்.
2. பெண்களை விட ஆண்களுக்கு இது அதிகமாக இருக்கும்.
3. புகை பிடித்தால் இது அதிகமாகும்.
4. அதிகம் காபி சாப்பிட்டாலும் இது அதிகமாகலாம்.
5. பிரஷர் அதிகம் இருந்தாலும் இது அதிகமாகலாம்.
6. கொலஸ்டிரால் பிரச்சினை இருந்தாலும் இது அதிகரிக்கும்.
7. கிட்னி பிரச்சினை இருந்தாலும் அதிகரிக்கலாம்.
8. முக்கியமாக B12, B6, folic acid விட்டமின்கள் கம்மியாக இருப்பதாலேயே இது அதிகம் காணப்படுகிறது
அதனால் ஹோமோ சிஸ்டின் அதிகம் இருந்தால் பேலியோ டயட் நல்ல பலனளிக்கும்.
உங்களுக்கு ஹோமோசிஸ்டின் அதிகம் இருந்தால் செய்ய வேண்டியது:
1.பிரஷர் செக் செய்யவும். அதை மருந்துகள் மற்றும் பேலியோ மூலம் சரி செய்யவும் (blood pressure file பார்க்கவும்-files sectionல்)
2. 30-40அளவுகள் இருந்தால், பேலியோ டயட் மட்டுமே போதும். அதற்கு மேல் இருந்தால் பேலியோ டயட்டுடன் Tablet. Homocheck காலை உணவிற்கு பின் ஒரு மாத்திரை எடுக்கலாம். இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு. இதில் B12, B6, folate விட்டமின்கள் உள்ளன. (B12 அளவுகள் நார்மலாக இருந்தாலும் இந்த மாத்திரை எடுக்கலாம்). 65க்கு மேல் இருந்தால் இருதய டாக்டரை பார்த்தல் நலம்.

3. காபி, புகையை விட்டு விடவும்.

4. creatinine அளவுகள் நார்மலாக இருந்தால் பிரச்சினை இல்லை. அதிகம் என்றால் nephrologistஐ பார்க்கவும். மற்றும் கிட்னி பெயிலியர் பேலியோ டயட் பாலோ செய்யவும்

5. டயட்டில் இருக்கும் அனைவரும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பேலியோ டெஸ்டுகள் எடுக்க வேண்டும்.
மேலே உள்ளது போல் செய்தும் மூன்று மாதங்களில் homocysteine குறையவில்லை என்றால் இருதய டாக்டரைப் பார்த்து டிரட்மில் டெஸ்ட் எடுக்கவும்.
B12 அதிகம் உள்ள உணவுகள்-ஈரல், பால், தயிர், சீஸ், நான் வெஜ், முட்டை
Folic acid- கீரை, புரோக்கோலி, அவகேடோ, எலுமிச்சை
B6- மீன், பிஸ்தா, மிளகு பொடி, நான்வெஜ், கீரை

வெரிகோஸ் வெய்ன் ( varicose vein )

டயபடிஸ்



வெரிகோஸ் வெய்ன் எனப்படும் கால்நரம்புகள் வீக்கம்
யுரியா அளவு நார்மல் எனினும் உயர் எல்லைக்கு சற்று அருகே உள்ளது.
டயபடிஸில் பெருத்த முன்னேற்றம் காணபடுகிறது. ஆனால் நல்ல உடல்பயிற்சி செய்து, ஒல்லியாக இருக்கும் ஒருவருக்கு இந்த மூன்று பிரச்சனைகளும் வர காரணம் ஊட்டசத்து குறைபாடே என தோன்றுகிறது.
வெரிகோஸ் வெயின் எனும் நரம்பு வலி/வீக்கம் வர ஒரு காரணம் அதிக நேரம் நின்றுகொண்டே இருப்பது. இன்னும் சில காரணங்கள் வைட்டமின் டீ, வைட்டமின் கே குறைபாடு. இவை குறைவாக இருந்தால் உடலில் மக்னிசியம் நுகர்வும் குறைவாக இருக்கும். இவை மூன்றும் குறைவாக இருந்தால் கால்ஷியம் அப்சார்ப்ஷன் குறைந்து யுரியா பிரச்சனையும் வரலாம்.
அதனால் கீழ்காணும் வகையில் உணவுமுறையை மாற்றி அமைக்கலாம்
1. நிறையநேரம் வெயிலில் நிற்பதை தவிர்க்கவேண்டும். வெயிலில் அல்ட்ராவயலட் கதிர்கள் அதிகம். வைட்டமின் டி கிடைக்கும் நேரம் மற்ர நேரங்களில் வெயிலில் நிற்பது உடலில் உள்ள வைட்டமின் டி அளவை குறைத்துவிடும். அத்துடன் அது வெரிகோஸ் வெயின் பிரச்சனையையும் உருவாக்கலாம். ஆக 11- 1 மணி தவிர்த்து மற்ர நேரங்களில் நேரடி சூரிய வெளிச்சம் படாவண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். முழுகால் சட்டை, முழு கை சட்டை, தொப்பி, கண்னாடி அணிந்து கொள்ளலாம். வெயிலில் நிற்காமல் முடிந்தவரை தவிர்க்கலாம். நீன்டநேரம் நிற்பதையும் தவிர்க்கவேண்டும்.
2. 11- 1 மணிக்குள் தினம் 15- 20 நிமிடம் மட்டும் நேரடி வெயில் உடலில் படுமாறு செய்தால் வைட்டமின் டி கிடைக்கும். இந்த சமயம் அரைக்கை சட்டை, ஷார்ட்ஸ் மாதிரி அணிந்துகொன்டால் அதிக அளவில் தோல் எக்ஸ்போஸ் ஆகும். தினமும் நிற்க முடியாதெனில் வாரவிடுமுறையிலாவது இதை செய்யவேண்டும்.
3. உணவை கீழ்காணும் வகையில் மாற்றி அமைக்கலாம்
தினம் 100 பாதாம் எண்ணி சாப்பிடவேண்டும். இது கிட்னி செயல்பாட்டை மேம்படுத்தும்.
தினம் 4 முட்டை, நெய்யில் சமைத்தது. முட்டை/நெய் இரண்டிலும் கே2 வைட்டமின் உள்ளது. இது வெரிகோஸ் வெய்னுக்கு நல்லது
தினம் 100- 200 கிராம் சமைத்த கீரை மற்றும் கால் கிலோ + காய்கறிகள். கீரையையும், காயையும் வேக வைக்கவேண்டாம். கீரையை நெய்யில் போட்டு சிறிதுநேரம் வணக்கி உண்ணும் பக்குவம் வந்ததும் எடுத்து விடுங்கள். காய்களிலும் நெய் விட்டு வணக்கி எடுக்கலாம். இரவு உணவு காய்கறி சூப்/ ஸ்டிர்ப்ரை மற்றும் தேங்காய் துன்டுகள் விரும்பும் வரை அமையலாம். தேங்காய் துருவலை காய்கறிகள் மேல் போட்டும் உண்னலாம். அவகாடோ பழமும் விரும்பும் அளவு சேர்த்துகொள்ள்லாம்.
1 கப் முழு கொழுப்பு உள்ள பால் தினமும் போதும்.
தினம் 2 எலுமிச்சை பிழிந்து லேசாக உப்பு போட்டு ஜூஸ் மற்றும் முடிந்தவரை நெல்லிகனிகள் உண்னவேண்டும். எத்தனை எலுமிச்சையும், நெல்லிகனியும் சேர்க்கிறொமோ அந்த அளவு கிட்னிக்கு நல்லது
தினம் 6- 8 டம்ளர் நீர் பருகவேண்டும். சிறுநீர் கடும் மஞ்சள் நிறத்தில் வந்தால் குறைவாக நீர் அருந்துகிறோஒம் என பொருள். வெள்ளை நிறத்தில் வந்தால் அதிக நீர் அருந்துகிறோம் என பொருள். இரண்டுக்கும் இடைப்பட்ட லேசான/மிதமான மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வந்தால் கிட்னிக்கு தேவையான நீர் கிடைப்பதாக பொருள்
இது குறைவான புரதம் இருக்கும் உணவு. அதனால் மாமிசத்தை எடுத்துவிட்டேன். காரணம் சுகர் அளவால் கிட்னியில் யுரியா தேங்கும் அளவை குறைக்க. அடுத்த டெஸ்ட் ரிப்போர்ட் பார்த்தபின் மாமிசம் சேர்த்துகொள்வோம்.
ஆக
காலை காய்கறி/தேங்காய்..
மதியம் 100 பாதாம்
மாலை 1 கப் பால்
டின்னர் 4 முட்டை ஆம்லட்
இப்படி உணவு அமையலாம்..
இது வெரிகோஸ் வெய்ன், யுரியா, டயபடிஸ் மூன்றுக்கும் தீர்வாக அமையும்.
எடை மிக இறங்குவது போல் தோன்றினால், வலு குறைவது போல் உணர்ந்தால் உடனே மடல் அனுப்பவும்.

லுகொ டெர்மா அல்லது விடில்கோ


சிலருக்கு தோலில் வெள்ளையாக திட்டுக்கள் மாதிரி பரவும். உடலெங்கும் பரவி ஆண்டுக்கணக்கில் குணமாகாமல் அவதிபடுபவர்கள் உண்டு. இது வெறும் தோல்நிறமாற்றமே, தொட்டால் பரவும் வியாதி அல்ல என்றாலும் மக்கள் இதை புரிந்துகொள்ளாமல் அவர்களை தள்ளி வைத்து மேலும் வேதனைபடுத்துவார்கள்.
விடில்கோ ஏன் வருகிறது என்பதுக்கு நவீன மருத்துவத்திடம் பெரிய அளவில் விளக்கங்கள் இல்லை. ஜெனடிக்கலாக வருகிறது என ஒரு தியரி உண்டு. ஆனால் இது தவறு. விடில்கோ வந்தவர்களின் குழந்தைகளுக்கு இது வரும், அவர்கள் பெற்றோருக்கு இருந்திருக்கும் என சொல்லமுடியாது. ஆக ஜெனடிக்ஸ் தியரி தவறானது விடில்கோ வர இன்னொரு காரணமாக கூறபடுவது இது ஒரு ஆட்டோஇம்யூன் வியாதி என்பது. ஆட்டோஇம்யூன் வியாதிகளை பற்றி முன்பே படித்துள்ளோம்.
ஆனால் தற்போது வரும் ஆய்வுகள் விடில்கோ வர காரணம் ஊட்டசத்து குறைவே என கண்டறிந்துள்ளன. குறிப்பாக பி12 வைட்டமின், போலிக் அமிலம், ஸின்க் மற்றும் வைட்டமின் டி.....இவற்றின் பற்றாகுறையும், ஆட்டோஇம்யூன் சூழலும் சேர்ந்து விடில்கோவை வரவழைக்கிறது. நம் நோயெதிர்ப்பு சக்தி நம் தோலில் உள்ள மெலனின் செல்களை தாக்கி அழிக்க தோல் நிறம் மாறுகிறது. புகைபிடித்தல் முதலான பழக்கங்களும் பி12 வைட்டமின் இழப்பை துரிதபடுத்துகின்றன. தோல் மறுபடி கருப்பாக பி12 உதவும். ஆனால் பி12இன் இந்த பணியை நிகோடின் தடுத்துவிடுகிறது.
ஆக லுகொடெர்மா உள்ளவர்கள் தானியம் தவிர்த்த, நட்ஸ் தவிர்த்த, விதைகள் தவிர்த்த பேலியோ உணவு எடுப்பதன் மூலம் லுகொடெர்மாவை குணபடுத்த துவக்கலாம். சொரொயாசிஸுக்கு பலனளிக்கும் ஆட்டோஇம்யூன் டயட்டே இதற்கும் சிறந்த பலனளிக்கும். டயட் வேண்டுமெனில் மெஸேஜ் பாக்ஸில் அல்லது குழுவில் கேளுங்கள். அத்துடன் முக்கியமாக பி12 நிரம்பிய இறைச்சி, முட்டை உணவுகளை அதிகம் எடுக்கவேண்டும். அதை விட முக்கியமாக பாதிக்கபட்ட தோல்பகுதிகளை வைட்டமின் டி கிடைக்கும் மதிய வெயிலில் காட்டிவர தோலில் வெளுத்த பகுதிகள் கருப்பாக துவங்கும். விரைவில் லுகொடெர்மாவிலிருந்து விடுதலையும் கிடைக்கும்

Tuesday, April 4, 2017

விரதத்தினால் நம் உடலில் ஏற்படும் பத்து (10) நன்மைகள்

1) நம் உடலின் உள்காயங்களை (அழற்சி-INFLAMMATION) குணப்படுத்துகிறது.
2) எடை குறைப்பு திடீரென்று நிற்கும் போது, மீண்டும் எடை குறைப்பைத் தூண்டுகிறது.
3) இன்சுலின் எதிர்ப்பைக்(INSULIN RESISTANCE) குறைத்து டையபடிஸ் டைப் - 2 வருவதைத் தடுக்கிறது.
4) வளர்ச்சி ஹார்மோன்களின் (HUMAN GROWTH HARMONES) உற்பத்தி 5 மடங்கு அதிகமாகி, உடல் கொழுப்பை எரிக்க, தசைகளை வளர்க்க உதவுகிறது.
5) குறைபாடுள்ள செல்கள் பழுது பார்க்க தூண்டுகிறது. செல்களில் உள்ள உபயோகமற்ற பொருட்கள் வெளியேற்றப்படுகிறது. (AUTOPHAGY PROCESS)
6) நமது ஆயுளை நீடிக்கச் செய்யும்மற்ற மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரக் கூடிய ஜீன் களில் (GENE EXPRESSION) நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி, ஆயுளைக் கூட்டுகிறது.
7) ஆரோக்கியமான இருதயத்தை தந்து நமது ஆயுளை கூட்டுகிறது.
8) புற்று நோய் (CANCER) வருவதை தடுக்கிறது
9) நமது மூலையில் புதிய நியூரான்கள் (NEURONS) உற்பத்தியைத் தூண்டி மூளையை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
10) அல்சீமர் நோய் (Alzheimer’s Disease) வருவதைத் தடுக்கிறது.
விரதம் இருப்போம்....பயன் / பலன் பெறுவோம்.

முக்கிய குறிப்பு :
நீரிழிவு நோய் உள்ளவர்கள், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இருதய நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் விரதம் இருப்பதை தவிர்க்கவும்.

பேலியோவை புதியதாக முயற்சிப்பவர்கள் பலர் மலச்சிக்கல் வருவதை தடுப்பது எப்படி ?

பேலியோவை புதியதாக முயற்சிப்பவர்கள் பலர் மலச்சிக்கல் வருவதாகப் பதிவிடுகிறீர்கள்.
உங்களுக்கு சில டிப்ஸ்.
முதலில் ஒரு உணவு முறை மாற்றத்திற்கு உடல் பழக சில நாட்கள் பிடிக்கும். அதை உணரவேண்டும். எல்லாமே இரண்டு நிமிட மேகி நூடுல்ஸ் அல்ல.
வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
பரிந்துரைக்கப்படும் உணவுகளை சரியாகப் பின்பற்றி உண்பது அவசியம்.
பேலியோ பரிந்துரையில் வாரம் 3 நாட்கள் கீரை ஸ்மூத்தி, சாலட், பழுக்காத கொய்யா, 3 லி நீர் போன்றவை பரிந்துரைக்கப்படுவதின் காரணம் அதிக நார்சத்து மற்றும் நுண் சத்துக்களுக்காகவே.
மலச்சிக்கலுக்கும், மலம் சேர்வதற்குமான வேறுபாட்டினை அறிந்துகொள்ளவேண்டும்.
அன்றாடம் உண்ணும் உணவில் ஜீரணிக்க இயலாதவைகள்தான் கழிவாக, மலமாக வெளியேறும். இறைச்சி, முட்டை போன்ற உணவுகள் முழுவதும் ஜீரணிக்கப்படுவதால் 3 நாட்களுக்கு ஒருமுறை என்றாலும் வலியோ, கெட்டித்தன்மையோ இல்லாமல் இலகுவாக சரக்கு இறங்கினால் பயப்படவேண்டியதில்லை. உங்கள் உணவில் செரிக்க இயலாத குப்பைகள் குறைவு என்பதை அறிக.
வயிற்றினை சரியாக சுத்தம் செய்யாமல் தடாலடியாக பேலியோவுக்கு வருபவர்கள் காண்ஸ்டிபேஷன் கண்டத்தில் மாட்டிக்கொள்கிறார்கள். போலவே தினம் காலை எழுந்தவுடன் லோடை இறக்கியாகவேண்டும் என்ற பழக்கம் இருப்பவர்களும். Iron சப்ளிமெண்ட் எடுப்பவர்களும்.
இதிலிருந்து சுலபமாக மீளும் வழிமுறைகள் பின்வருமாறு..
01. கீரை ஸ்மூத்தி காண்ஸ்டிபேஷன் கில்லர். பேலியோ துவங்கும் நாட்களில் பிடிக்கிறதோ இல்லையோ காலை உணவாக கீரை ஸ்மூத்தி, மதியம் சாலட் இரவு ஏதேனும் பேலியோ ஹெவி உணவை முதல் 2 வாரங்கள் உண்ணுங்கள்.
02. தயிர் + சிக்கரி. ஒரு ஸ்பூன் சிக்கரியை 100எம் எல் தயிரில் கலந்து கல்பாக அடித்தால் நகராத நரகல்லும் நகரும்.
03. திரிபலா சூர்ணம் அல்லது மாத்திரை காலை / மாலை ஒரு சிட்டிகை அல்லது ஒரு மாத்திரை.
04. பழுக்காத கொய்யா - 2 இரவில்.
05. மக்னீசியம் க்ளைசினேட் சப்ளிமெண்ட்.
06. நிறைய தண்ணீர்.
07. விரதங்கள்.
08. பரிந்துரைக்கப்படும் உணவை மட்டும் சரியான அளவுகளில் உண்பது.
09. நடைப்பயிற்சி.
இதுபோக சிலருக்கு மூலம், பைல்ஸ், என்று விதவிதமாக ஆசனப் பிரச்னைகள் இருக்கும். அவர்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து சிகிச்சை பெறுவது நல்லது.
மேலும் சில உடல் சார்ந்த பிரச்னைகளாலும் மலம் கழிக்க முடியாமல் போகலாம். தகுந்த மருத்துவ சிகிச்சை, பரிசோதனைகள் அவசியம். குறிப்பாக வயதானவர்களுக்கு.
மலம் கழிக்க சிரமமாக இருந்து மிகவம் கட்டியாகி என்ன முக்கி முயன்றும் வராமல் அதை ஏதேனும் செய்து ஆசனவாயைக் காயப்படுத்தி அந்த வாயில் ரத்தவாந்தி எடுக்க சிலர் கட்டிங் ப்ளேயரை எல்லாம் எடுத்துக்கொண்டு ரெஸ்ட்ரூம் செல்வார்கள். தயவு செய்து உடனடியாக மருத்துவரைப் பார்த்து தகுந்த சிகிச்சையைப் பெறவும். இல்லையெனில் அவதிப்பட நேரிடும்.