Tuesday, August 8, 2017

சக்தி கொடு! - 5 சிவராம் ஜெகதீசன்

ஃபைட்டோ கெமிகல்ஸ் (Phytochemicals) என்கிற பதத்தை எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
மருத்துவ உலகில், நியூட்ரியண்ட் பிரிவில் நடக்கும் தொடரச்சியான ஆய்வுகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உண்ணுவது பல உடல் நல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு
கொடுக்கிறது என்று கூறுகின்றன. இதற்குக் காரணம் உணவுப் பொருட்களில் உள்ள ஃபைட்டோ கெமிகல்ஸ்.
ஃபைட்டோகெமிகல்ஸ் என்பவை தாவரங்களால் தயாரிக்கப்படும் ஒரு வேதிப் பொருள். இது காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பாதாம் போன்ற கொட்டை வகைகள் அனைத்திலும் உள்ளது. இது உடலுக்குப் பெரும்பாலும் நல்லது செய்தாலும், கெட்டதைச் செய்யும் ஃபைட்டோ கெமிகல்களும் உள்ளன. உதாரணமாக கோகெய்ன் கூட ஒரு பைட்டோகெமிகல்தான்.
நல்லது செய்யும் ஃபைட்டோ கெமிகல்களுக்கு உதாரணமாக கரோடினாய்ட்ஸ் (carotenoids), பாலிஃபீனால் (polyphenols), ஃபிளேவனாய்ட்ஸ் (Flavonoids), ஆந்தோசயனைன்ஸ் (Anthocyanins), லிகன்ஸ் (Ligans), ரெஸ்வரேட்ரால் (Resveratrol) எனச் சிலவற்றைச் சொல்லலாம். இம்மாதிரி ஆயிரக்கணக்கில் உள்ளன.
பொதுவாக இந்த ஃபைட்டோகெமிகல்கள் பழங்களிலும், காய்கறிகளிலும், கிழங்குகளிலும் காணப்படும் நிறத்தைக் கொடுப்பவை. பப்பாளிப் பழத்தின் மஞ்சள் நிறத்துக்கும், கேரட்டின் ஆரஞ்சு நிறத்துக்கும், தக்காளியின் சிவப்பு நிறத்துக்கும் கரோடினாய்டுகளே காரணம். நாம் அறிந்த கரோடினாய்ட் பீட்டா கரோடின் (Beta carotine), ஆரஞ்சு, பூசனி போன்றவற்றில் உள்ளது. உடல் இந்த பீட்டா கரோட்டினைத்தான் வைட்டமின் ஏ வாக மாற்றி உபயோகிக்கும்.
இந்த ஃபைட்டோகெமிகல்கள் மிகச் சிறந்த ஆண்ட்டிஆக்சிடண்டுகள். சென்ற பாகத்தில் பார்த்த ஃபிரீ ராடிகல்ஸ்களால், செல்களுக்கு ஏற்படும் பாதிப்பை இவை சரி செய்கின்றன. அதன் மூலமாக இளமையான தோற்றத்தைத் தக்க வைக்கின்றன. உள்காயத்தை ஆற்றுகின்றன. கண்கள், இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகளுக்கு இவை பாதுகாப்பு அளிக்கின்றன. ரத்த அழுத்தத்தைக் குறைப்பதிலும், நீரிழிவைத் தள்ளிப் போடுவதிலும்,கட்டுப் படுத்திவதிலும், கேன்ஸர் செல்கள் உருவாகாமல் தடுப்பதிலும் இந்த ஃபைட்டோ கெமிக்கல்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
உணவில் ஆரோக்கியமான கொழுப்புகளை எடுக்கும் போது இந்த ஃபைட்டோ கெமிகல்களின் பயோஅவைலபிலிட்டி அதிகரிக்கிறது. செயற்கை உரங்கள் போடாத ஆர்கானிக் காய்கறிகளில் இந்த ஃபைட்டோ கெமிகல்களின் செறிவு அதிகமாக இருக்கிறது.
இவை பூண்டு, கிராம்பு, கேரட், திராட்சை, பப்பாளி, தக்காளி, காலிபிளவர், முட்டைக்கோஸ், கத்திரிக்காய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, ரோஸ்மெரி, ஆலிவ் காய்கள், பாதாம், பிஸ்தா, செர்ரிப் பழங்கள், ஸ்டிராபெர்ரி, புளூபெர்ரி, பிளாக்பெர்ரி, கீரைகள் உட்பட அனைத்துக் காய்கறிகள் பழங்களிலும், டார்க் சாக்கலேட்டிலும் உள்ளன. இவை டிஎன்ஏ மூலக்கூறுகளில் ஏதேனும் பாதிப்பு இருந்தால்கூட அதைச் சரி செய்யும் வல்லமை பெற்றவை.
முக்கியமாக, பளிச்சென்ற நிறங்களை உடைய சிறு பழங்களில் (பெர்ரிகள்) அதிக ஃபைட்டோ கெமிகல்கள் உள்ளன. இவையனைத்தும் நோய் எதிர்ப்புச் செயல்பாட்டில் முக்கியப் பங்காற்றுகின்றன. இவற்றில் உள்ள ஆன்ந்தோசையனின், இதயத்தைப் பாதுகாக்கிறது. மேலும் குடலில் உள்ள நல்லது செய்யும் ப்ரோ-பாக்டிரியாக்களை அதிகரிக்கிறது. அதன் மூலமாக நியூட்ரியண்ட் அப்சார்ப்ஷனை அதிகரிக்கிறது. இந்த நல்லது செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குண்டாக இருப்பவர்களின் உடலில் குறைந்து கொண்டே போகும்.
சரியான அளவில் சேர்ப்பதன் மூலம் அல்சைமர் போன்ற நோய்களை அண்ட விடாமலே செய்யலாம்.
வைட்டமின்கள் மற்றும் மினரல்களுக்கு ஒரு நாளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவு (Recommended Daily Allowance - RDA) என்று இருக்கிறது. ஆனால் ஃபைட்டோ கெமிகல்களுக்கு அப்படி அளவு எதுவும் இல்லை. இருந்தாலும் அதிக டோசேஜ்களில் சப்ளிமெண்டுகளாக இவற்றை எடுக்கும் போது உடலில் உள்ள இரும்புச் சத்தைக் குறைப்பதும், தைராய்ட் போன்ற ஹார்மோன்களின் செயல்பாட்டையும் குழப்புகின்றன.
இந்த ஃபைட்டோ கெமிகல்கள் என்பவை அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் அற்புத சக்தி பெற்றவை அல்ல என்றாலும் தொடர்ச்சியாக ஃபிரெஷ் காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடல் நலத்தில் பலவித பலன்களை அடையலாம். இதற்கான சப்ளிமெண்டுகளும் உள்ளன. வைட்டமின்கள் போலவே இவையும் செயற்கையாக தயாரிக்கப் படுகின்றன.
வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஃபைட்டோ கெமிகல்களை உணவுப் பொருட்களின் மூலமாக எடுப்பதே பாதுகாப்பானது என்று பார்த்தோம். பல காரணிகளால் உணவில் உடலுக்குத் தேவையான சத்துகளை எடுக்க முடியாமல் போகும் போது சப்ளிமெண்டுகளின் உதவியை நாடலாம். இப்படி சப்ளிமெண்டுகள் எடுக்கும்போது சிலவற்றை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்:
* கடுமையான பாதிப்பு : வைட்டமின் மாத்திரைகள் சிலருக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இந்த நிலையில் அவற்றை உடனடியாக முழுமையாக நிறுத்தி விட வேண்டும்.
* நீண்ட காலப் பின் விளைவுகள் : சில வகை வைட்டமின் மாத்திரைகள், தலை வலி போன்ற சிறிய உடல் நலக் கோளாறில் ஆரம்பித்து, நீண்ட கால நோக்கில் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். தொடர்ச்சியாக வைட்டமின் மாத்திரைகளை எடுக்கும் போது இது வரலாம். அதாவது நீங்கள் எடுக்கும் மாத்திரைகளின் நச்சுத்தன்மை உடலில் சிறிது சிறிதாக அதிகமாகும் போது இப்படி ஆகும்.
* முரண்பட்ட மருந்து சேர்க்கைகள் : வைட்டமின் மற்றும் மினரல் சப்ளிமெண்டுகள், ஒன்றுக்கு மேல் ஒரே வேளையில் எடுக்கும் போதோ அல்லது வேறு நோய் தீர்க்கும் மருந்துகளுடன் எடுக்கும் போதோ, ஒன்றுக்கொன்று முரண்பட்டு அதனால் உடல நலத்தில் கெடுதல் உண்டாக்கலாம்.
* பக்க விளைவுகள் : நோயைச் சரி செய்யும் ஆண்ட்டிபயாடிக் மருந்துகளை எடுத்தால் தான் பக்க விளைவுகள் வரும் என்பது இல்லை. வைட்டமின் மாத்திரைகள் எடுத்தாலும் வரலாம். அப்படி ஏதேனும் பக்க விளைவுகள் இருப்பின் மருத்துவரைக் கலந்தாலோசித்துவிட வேண்டும்.
* மறைமுக விளைவுகள் : சில சப்ளிமெண்டுகளை அதிக பட்ச டோசேஜ்களில் எடுக்கும் போது அது வேறு சில நோய் அறிகுறிகளை மறைத்து விடலாம். இதன் காரணமாக உண்மைப் பிரச்சினையைக் கண்டு பிடிக்க முடியாமல் போகலாம். மேலும் ரத்தப் பரிசோதனை அளவுகளில் மாற்றத்தைக் கொடுக்கலாம்.
உங்கள் உடல் நலம் உங்கள் கைகளில். ஏதேனும் சிறு பிரச்சினை என்று தோன்றினாலும் உடனடியாக மருத்துவரை ஆலோசித்துக் கொள்ளவும். எந்த நோய்க்கூறுகளையும், எவ்வளவு விரைவாக கண்டு பிடிக்கிறோமோ அந்த அளவு நல்லது. ஆரம்பத்திலேயே அறிந்து கொள்வதன் மூலம், அதைக் குணப்படுத்துவதன் விகிதத்தை அதிகரிக்க முடியும்.
அதற்காக சிறு சிறு பிரச்சினைகள வரும் போதே எல்லா வைட்டமின்களையும் நிறுத்த வேண்டும் என்பதில்லை. எந்த வைட்டமின்களை எப்படி எடுக்கலாம் என்பதையும் எந்தெந்த வைட்டமின் காம்பினேஷன்களை, எப்படி உடலுக்கு அதிகபட்ச பலன்கள் கிடைக்கும் படியாக எடுக்கலாம் என்பதையும், பல நோய்க்குறிகளுக்கு வைட்டமின் காம்பினேஷன் எப்படி வேலை செய்யும் என்பதையும் பின்வரும் பாகங்களில் விரிவாகப் பார்க்கலாம்.
Post a Comment