Tuesday, August 8, 2017

சக்தி கொடு! - 6 சிவராம் ஜெகதீசன்

ஆரோக்கிய வாழ்வுக்கான வைட்டமின்களும் மினரல்களும்
********************************
வைட்டமின்களும் மினரல்களும் உடலுக்கு அத்தியாவசியமான சத்துகள் என்பதுடன் நமது உடலில் பெரும்பாலான செயல்களுக்குக் காரணமாகின்றன. எனவே, அவற்றைத் தேவையான அளவு எடுக்க வேண்டும். குறைவான வைட்டமின்களும் மினரல்களும் எவ்வாறு பிரச்னைக்கு வழி வகுக்குமோ அதேபோல் அதிகமாக எடுப்பதும் ஆரோக்கியத்தைக் குலைக்கும்.
எது தேவையான அளவு?
அமெரிக்க உணவுக்கழகம் இதற்காக ஒவ்வொரு வைட்டமின் மற்றும் மினரலுக்கும் Recommended Dietary Allowance - RDA என்று ஒரு அளவைச் சொல்லியிருக்கிறது. இந்த அளவுகள் ஒரு நாளின் தேவைக்கேற்ற அளவு. ஆனால் சில காரணங்களுக்காக அதிகமாக எடுக்க வேண்டியது வரும். அதிலும் தவறில்லை. அளவுக்கதிகமான அளவு என்பது, உடலில் குறிப்பிட்ட வைட்டமின் சப்ளிமெண்டுகளால் சேரும் நச்சுத் தன்மையைப் பொறுத்ததே. இதனால் உடல் ரீதியான பாதிப்பு ஏற்படும்போது குறைக்கவோ நிறுத்தவோ செய்யலாம்.
மைக்ரோ நியூட்ரியண்டுகள் என்று சொல்லப்படும் வைட்டமின்களும் மினரல்களும் உங்களுடைய உடலுக்கு மிகக் குறைந்த அளவே தேவைப்படும். அந்த நுண்ணிய அளவு கூட உடலுக்குக் கிடைக்காத நிலையை வைட்டமின் குறைபாடு என்று சொல்கிறோம்.
உதாரணத்துக்கு வைட்டமின் C குறைபாடு ஸ்கர்வி நோயைக் கொடுக்கும், வைட்டமின் A குறைபாடு பார்வைக் கோளாறுகளைக் கொடுக்கும், வைட்டமின் D குறைபாடு ரிக்கெட்ஸ் எனப்படும் எலும்புகள் பலமிழக்கும் நோயைக் கொடுக்கும்.
போலவே வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் காம்பினேஷன் உடலுக்கு அதிக பட்ச ஆரோக்கியத்தைக் கொடுக்கும். உதாரணத்துக்கு கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் D, வைட்டமின் K அனைத்தும் சேர்ந்து வலிமையான எலும்புகளைக் கொடுக்கும். கர்ப்பிணிப் பெண்கள் போதுமான அளவு ஃபோலிக் ஆசிட் உள்ள உணவுகளை எடுப்பதும் சப்ளிமெண்டுகள் எடுப்பதும் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மூளை மற்றும் தண்டுவட சம்பந்தப்பட்ட குறைபாடுகள் இல்லாமல் காக்கும். பற்களுக்கு நல்ல பாதுகாப்பாக ஃபுளோரைட் இருக்கும். அதனால் தான் நீங்கள் ஃபுளோரைட் சேர்க்கப்பட்ட டூத் பேஸ்டுகள் என்ற விளம்பரத்தைப் பார்க்கலாம்.
உங்கள் உடம்பில் வைட்டமின்கள் குறைவாக இருக்கிறதா, அதிகமாக இருக்கிறதா என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது?
சில வகையான ரத்தப் பரிசோதனைகள் உடலில் இருக்கும் வைட்டமின்களின் அளவைச் சொல்லிவிடும். அதை அடிப்படையாக வைத்து உணவின் மூலமோ அல்லது வைட்டமின் சப்ளிமெண்டுகள் மூலமோ சரி செய்யலாம். பரிசோதனைகளை விடச் சிறந்தது உங்கள் உடம்பில் ஏற்படும் அறிகுறிகள்.
உதாரணமாக உங்களுக்குக் கை கால்களில் மரத்துப் போன உணர்வோ அல்லது கிராம்ப்ஸ் என்னும் குறக்களி அடிக்கடிப் பிடித்தாலோ உங்களுக்கு மக்னீசியம் குறைபாடு என்று அறிந்து கொள்ளலாம். உங்கள் மருத்துவர் அனைத்து ரத்தப் பரிசோதனைகளையும் செய்து விட்டு எல்லாப் பரிசோதனைகளும் நார்மல். ஆனாலும் நோயாளிக்கு பசியின்மை, எரிச்சலான மனநிலை, எடையிழப்பு போன்றவை இருக்கிறது. காரணம் தெரியவில்லை என்று கூறி வைட்டமின்களை எழுதிக் கொடுப்பார். உங்களிடம் இது வயதாவதன் காரணமாக வருவது அல்லது ஸ்டிரெஸ் எனப்படும் மன அழுத்தத்தால் வருவது என்று சொல்வார்.
ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலுக்கு உங்களை விடச் சிறந்த மருத்துவர் உலகில் இல்லை. இது போன்ற நிலைமைதான் ஆரம்பக் கட்ட வைட்டமின் குறைபாடு. இந்த அறிகுறிகள் என்பவை நபருக்கு நபர் வேறுபடும். பொதுவாக, சாதாரண நிலையில் இருந்து எந்த மாற்றம் உடம்பிலோ அல்லது மன நிலையிலோ தெரிந்தாலும் அதை வைட்டமின் மற்றும் மினரல் குறைபாட்டுடன் பொருத்திப் பார்க்க வேண்டும். அல்லது நீரிழிவு போன்ற நோய்கள் அணுகியிருக்கிறதா என்று மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.
இது போன்ற ஆரம்பக்கட்ட வைட்டமின் குறைபாடுகளை, ரத்தப் பரிசோதனைகளாலோ அல்லது மருத்துவராலோ கண்டு பிடிக்க முடியாது. இந்த ஆரம்பக் கட்டத்தை மார்ஜினல் அல்லது சப்-கிளினிகல் டெஃபிசியன்சி என்று சொல்வார்கள். உங்கள் உடலில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல் சேமிப்புகள் கிட்டத்தட்ட மொத்தமாக காலியாகும் வரை இந்தக் குறைபாட்டைக் கண்டு பிடிப்பது சிரமம். ஒவ்வொரு நாளும் உடலில் தோல், செல்கள், திசுக்கள் வளர்ச்சி என்பது நடந்து வளர்சிதை மாற்றம் நடந்து கொண்டே இருக்கிறது. வளர்ச்சிக் குறைபாடோ, ஜீரணக் கோளாறுகளோ, தோலில் ஏற்படும் தடிப்புகள் போன்றவையோ, முடி உதிர்தலோ, நகங்கள் வடிவமிழத்தலோ, அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மையோ, மலஜலம் கழிப்பதில் பிரச்சினைகளோ, அடிக்கடி சளி பிடித்தலோ, வேலை செய்வதில் சலிப்போ, உடலுறவில் நாட்டமின்மையோ, எரிச்சலான மனநிலையோ இப்படி எந்தப் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை வைட்டமின் மற்றும் மினரல் குறைபாட்டுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். இவை ஏற்படும் போது உடலுக்கு தினப்படித் தேவைக்கான வைட்டமின்களும் மினரல்களும் போதுமான அளவில் கிடைக்கப் பெறுவதில்லை. இதனால் உடலில் சத்துகள்-வறுமை ஏற்படுகிறது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் காரணமான வைட்டமின் மற்றும் மினரல்களையும் பின்வரும் பாகங்களில் பார்க்கலாம்.
இது போக நாம் சாப்பிடும் ஆண்டி பயாடிக்குகள் போன்ற மருந்துகளும் உடலில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல் சேமிப்பைக் காலி செய்கின்றன. மேலும் ஆல்கஹால் கிட்டத்தட்ட உடலின் அத்தனை சத்துகள் சேமிப்பையும் காலி செய்கிறது. அத்துடன் இந்த சத்துகள் உடலால் உறிஞ்சப் படுவதையும் ஆல்கஹால் தடுத்து விடுகிறது. நீங்கள் எத்தனை வைட்டமின் மாத்திரைகள் எடுத்தாலும் ஆல்கஹால் அருந்தினால், எடுக்கும் வைட்டமின்களால் எந்த உபயோகமும் இல்லை.
வைட்டமின் C, B1 மற்றும் B6 குறைபாடுகள் Behavioral Problems எனப்படும் நடத்தைக் குறைபாடுகளை உருவாக்கும். எப்போதும் கோபமாகவே இருத்தல், முரட்டுத்தனமாக நடந்து கொள்ளுதல் போன்றவை ஏற்படும். எடுக்கும் உணவில் இருக்கும் சத்துக் குறைபாட்டாலோ, உடலால் சத்துகளை போதுமான அளவு கிரகிக்க முடியாமல் போனாலோ, இந்த வைட்டமின் குறைபாடு ஏற்படத் துவங்கும். எந்த விதமான அறிகுறியுமே இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக வைட்டமின் மற்றும் மினரல் சேமிப்புகள் உடலில் இருந்து காலியாகத் தொடங்கும். மிக அத்தியாவசியமான வைட்டமின்கள் இல்லாத நிலையில், உண்ட உணவை சக்தியாக மாற்றும் என்சைம்கள் அதன் வேலையைச் செய்யாமல் உடையத் தொடங்கும். இந்த நிலையில் உடல்,நோய்க்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும். முதியவர்களுக்கு இந்தப் பிரச்சினை இன்னும் அதிகமாக இருக்கும்.
உடலில் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு வைட்டமின் A மற்றும் C முக்கியமானது. முதியவர்களுக்கு ஏற்படும் குழம்பிய மனநிலை, அல்சைமர் நோய்கள் போன்றவை தையமின் குறைபாட்டால் வரும். வைட்டமின் B வரிசைகளில் உள்ள B1, B2, B5 போன்ற அனைத்தும் ஆரோக்கியமான உடலுக்கும், ஆரோக்கியமான மனநிலைக்கும் முக்கியத் தேவையானவை ஆகும். முதியவர்களைப் போலவே கர்ப்பிணிப் பெண்களுக்கும் வைட்டமின்களும் மினரல்களும் போதுமான அளவில் கிடைப்பதும் தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
Post a Comment