Tuesday, August 8, 2017

சக்தி கொடு! - 9 சிவராம் ஜெகதீசன்


ஆரோக்கிய வாழ்வுக்கான வைட்டமின்களும் மினரல்களும்
********************************
வைட்டமின் B காம்ப்ளக்ஸ்***********************
வைட்டமின் B காம்ப்ளக்ஸ் என்ற உடலின் வளர்சிதை மாற்றத்திற்குத் தேவையான, சக்தியை உடலுக்குக் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும், உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் முக்கியக் காரணமான வைட்டமினைப் பற்றிப் பார்ப்போம்.
இந்த வைட்டமின் B என்பது கீழ்க்கண்ட 11 வகையான B வைட்டமின்களின் தொகுப்பு. அனைத்து B வைட்டமின்களை சேர்த்து பி காம்ப்ளக்ஸ் என்று அழைக்கிறார்கள்.
. B1 தையமின் (Thiamine)
. B2 ரிபோஃப்ளேவின் (Riboflavin)
. B3 நியாசின் மற்றும் நியாசினமைட் (Niacin and Niacinamide)
. B5 பேண்டோதெனிக் ஆசிட் (Pantothenic acid)
. B6 பைரிடாக்சின் (Pyridoxine)
. B7 பயோட்டின் (Biotin)
. B9 ஃபோலிக் ஆசிட் (Folic acid)
. B10 பாரா-அமினோபென்சாயிக் ஆசிட் (Para-aminobenzoic acid)
. B12 கோபாலமின் (Cobalamin)
. கோலின் Choline
. ஐனோசிடால் Inositol
இவையல்லாமல் B17 போன்ற வகை வைட்டமின்களும் உள்ளன.
பொதுவாக இந்த பல வகையான வைட்டமின் B க்கள் அனைத்தும் உண்ணும் உணவில் சேர்ந்து கலந்தே உள்ளது. இது ஒரு தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின் வகையாகும். இவை பெரும்பாலும் உடலில் சேமித்து வைக்கப்படாமல் உடலால் வெளியேற்றப் படும். அதனால் உடல் இந்த வைட்டமின் சப்ளிமெண்டுகளை அதிக பட்சம் உபயோகிக்க இரண்டு வேளையாக எடுப்பது நல்ல பலனைத் தரும். அதாவது ஒரு நாளுக்கு 1000 மில்லி கிராம் வைட்டமின் எடுக்க வேண்டும் என்றால் காலையில் 500மிகி இரவில் 500மிகி என்று எடுக்க வேண்டும்.
எஸ்டிரோஜன் தெரபி மற்றும் குழந்தைப் பிறப்பைக் கட்டுப் படுத்தும் மருந்துகள் - போன்ற ஹார்மோன்களைச் சரி செய்யும் மருந்துகள் எடுக்கும் போது உடலுக்கு வைட்டமின் B அதிகம் தேவைப்படும். ஆண்டிபயாடிக்குகள் எடுக்கும் போதும் கூடவே வைட்டமின் பி12 மாத்திரை ஒன்றை எடுக்க வேண்டும். பெரும்பாலும் நீரிழிவு வியாதிக்காரர்கள் அனைவரும் வைட்டமின் B12, B1 அல்லது பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகளை எடுப்பது தவறில்லை என்றாலும், ரத்தப் பரிசோதனையில் வைட்டமின் B பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால் உடனடியா நிறுத்தவோ அல்லது டோசேஜ் குறைக்கவோ வேண்டும்.
வைட்டமின் B யானது, ஈரலின் செயல்பாட்டுக்கு உதவி செய்வது, கால்கள் மரத்துப் போதல் பிரச்சினையைச் சரி செய்வது, தைராய்ட் சுரப்பியின் செயல்பாட்டுக்குக்கு உதவுவது, மூளையின் வேதிச் செயலின் ஸ்திரத்தன்மைக்கு உதவுவது, புரதம்-கொழுப்பு-மாவுச்சத்துகளை உடல் சக்தியாக மாற்றும் வளர்சிதை மாற்றத்தில் உதவுவது போன்ற உடலின் முக்கியச் செயல்களுக்குக் காரணமாகிறது.
வைட்டமின் பி குறைபாட்டால், பசியின்மை, எரிச்சலான மனப்பான்மை, நோயெதிர்ப்பு சக்தியின்மை, தூக்கமின்மை, சர்க்கரை மீதான ஏக்கம் (Sugar Cravings), நரம்பு மண்டலப் பிரச்சினைகள் போன்றவைகள் ஏற்படும்.
வைட்டமின் B1 - தையமின்
***********************
இப்போது வைட்டமின் பி தொகுப்பில் உள்ள முதல் வைட்டமினான B1-தையமின் பற்றிப் பார்ப்போம்.
இந்த B1 - தையமின் வைட்டமின் என்பது, நவரத்தினங்களில் வைரம் போல, உடலுக்கான நுண்சத்து தேவைகளில் மதிப்பு மிக்க ஒன்றாகும்.
இந்த தையமின் வைட்டமின், உண்ட உணவிலிருந்து சக்தியை விடுவித்து உடலுக்கு அளிப்பதில் உதவி செய்கிறது. இந்த சக்தி விடுவிப்பு செயலைச் செய்வதால் உடலின் முக்கியச் நிகழ்வுகளான பசி, ஜீரனம் மற்றும் நரம்பு மண்டலச் செயல்பாடுகளில் முக்கியப் பங்காற்றுகிறது. இந்த தையமின் இருக்கும் உணவுகளில் மற்ற வகையான நுண் சத்துகளும் செறிந்து காணப்படும்.
நம்ம அபிஷேக் பையன் நல்ல படிப்பாளி, ஜிம்முக்கு எல்லாம் போய் நல்லா உடம்பை மெய்ண்டெய்ன் செய்யும் ஒரு டீனேஜர். ஆனா கடந்த ஆறு மாசமா அவனோட நடவடிக்களால அவனோட ஃபிரண்ட்ஸ் கடுப்பாகி யாரும் அவனோட பேசறதே இல்ல. போன வாரம் அவனோட அம்மா ஏதோ சொல்லப் போய் கோபம் வந்து டீவியத் தூக்கிப் போட்டு உடைச்சிட்டான். இது ஒரு சம்பவம்.
நம்ம கோகிலா டீச்சர், செய்யும் ஆசிரியர் தொழிலில் நல்ல ஈடுபாடு உள்ள, கடமையில் எந்தத் தவறும் செய்யாத, அடுத்தது தலைமையாசிரியையாகப் போகும் ஒரு குடும்பத்தலைவி. இவங்க கொஞ்சம் குண்டாவும் இருக்கறதால சாப்பாட்டைக் குறைச்சு, சிப்ஸ், சாக்கலேட் மற்றும் கூல் டிரிங்க்ஸ்னு ஏதோ ஒன்ன சாப்பிட்டுக்கிட்டு ஒழுங்கான சாப்பாட்டைச் சாப்பிடாம ரொம்ப பிசியா இருக்கறவங்க. ஒரு நாள் திடீர்னு பசியே எடுக்காம போய் எடையிழப்பும் ஆக ஆரம்பிச்சது. இது இன்னொரு சம்பவம்.
நம்ம ஸ்டீஃபன் ராஜ் ஒரு ஓட்டப் பந்தைய வீரன், கொஞ்சம் ரவுடிப் பயலும் கூட. அடிக்கடி தகறாரு ஆகி விழுப்புண்கள் ஏற்படறதும் காயங்கள் ஆறுவதும் சகஜம். ஒரு நாள் அப்படி சாதாரனமா ஆன ஒரு காயம் ரொம்ப நாளா ஆறவே இல்ல. இது மூனாவது சம்பவம்.
மூனு பேரும் டாக்டரைப் பார்க்கப் போனாங்க. டாக்டர் என்ன சொன்னாருன்னு சரியா யூகிச்சிருப்பீங்க. அதான் சார், இந்த மூனு பேரோட பிரச்சினைகளுக்கும் காரணம் தையமின் என்று சொல்லப்படும் வைட்டமின் B1 குறைபாடு. வைட்டமின் B1 சப்ளிமெண்டுகளை கொடுத்ததும் படிப்படியா அவங்க பிரச்சினை சரியாக ஆரம்பிச்சது. உடலின் ஒவ்வொரு செல்களிலும் நடக்கும் ஆக்சிடேஷன் செயல்பாட்டில் B1 முக்கியப் பங்கு வகிக்கிறது. முக்கியமாக நரம்பு மண்டலச் செயல்பாட்டில்.
அதிகப் படியான சர்க்கரை சாப்பிடுவதும் B1 செயல்பாட்டையும் உடலின் B1 வைட்டமின் கிரகிப்புத் தன்மையையும் குறைக்கும். இதனால் நரம்பு மண்டலக் கோளாறுகள் ஏற்பட்டு ஞாபக சக்தி போன்ற மூளையின் செயல்பாடுகளையும் குறைக்கும். இதனால் பிஹேவியரல் குறைபாடுகள் எனப்படும் நடத்தையின் மாற்றங்களைக் கொண்டு வரும். திடீரென மூர்க்கமாக நடந்து கொள்ளுதல் போன்றவை இதில் அடங்கும். ஆம், Big Boss நிகழ்ச்சியில் கஞ்சா கருப்பு அவர்கள் தீயனைப்பு சிலிண்டரை எடுத்து பரணியை அடிக்கப் போனதற்கு B1-தையமின் குறைபாடும் காரணமாக இருக்கலாம்.
டயட் இருக்கிறேன் பேர்வழி என்று சரியான சத்துகள் உள்ள உணவுகளைச் சாப்பிடாமல் போனாலும் B1 குறைபாடு வரும். உடல் உஷ்னம் தொடர்ச்சியாக குறைந்திருந்தால் அது B1 குறைபாடாக இருக்கலாம். மாவுச்சத்து சக்தியாக மாற்றப்பட தையமின் அவசியம் தேவை. நீங்கள் குளூக்கோஸேயே சாப்பிட்டாலும், தேவையான தையமின் உடலில் இல்லையென்றால் குளூக்கோஸ் சாப்பிடதுக்கு உண்டான சக்தி உடலில் சேராது. முக்கியமாக குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு தையமின் உடலில் சேராது. உடலில் இருக்கும் தையமினையும் குடிப்பழக்கம் அழித்து விடும்.
மிக மோசமான தையமின் குறைபாடு - தசைகள் கட்டுப்பாடிழப்பு, ஞாபக சக்தி இழப்பு, ஏற்கனவே இருக்கும் உடல் நலக் கோளாறுகளை மேலும் அதிகரிப்பது போன்றவற்றை ஏற்படுத்தி Wernicke-Korsakoff syndrome எனப்படும் மூளை பாதிப்பை உருவாக்கும்.
நரம்பு மண்டலக் கோளாறுகளை உடலில்
நிரந்தரமாக ஏற்படுத்தும்.
மாவுச்சத்து சக்தியாக மாற்றப்படும் போது உருவாகும் லாக்டிக் ஆசிட் சரியாக வெளியேற்றப் படாத போது கால்களில் அசௌகர்யமான ஒரு உணர்வு ஏற்பட்டு Restless Leg Syndrome (RLS) என்ற நிலை வருவதற்குக் காரணம் தையமின் குறைபாடே. இது உடலின் வேறு பகுதிகளிலும் ஏற்படும். கடுமையான உடற்பயிற்சியின் போது ஏற்படும் வலி சரியாவதற்கும் வைட்டமின் பி1 ஐ எடுக்கலாம்.
தையமின் குறைபாடு ஏற்படும் போது ஒவ்வொரு கட்டத்திலும் விதவிதமான அறிகுறிகள் தோன்றும். முதல் நிலையில் சக்தி இல்லாத உணர்வும் சோர்வும் ஏற்படும். மன அழுத்தமும், எரிச்சலான மன நிலையும் ஏற்படும். பசியின்மை ஏற்படும். இதைச் சரி செய்யாத போது அடுத்த நிலையில் இந்த உடல் ரீதியான அசௌகர்யங்கள் அதிகமாகும். தலைவலி, ஜீரனக் கோளாறுகள் போன்றவை ஏற்படும். இதயத் துடிப்பு அதிகமாகும். இதன் அதிக பட்ச குறைபாட்டில் நரம்பு பாதிப்பு ஏற்பட்டு பெரிஃபெரல் நியூரிடிஸ் (peripheral neuritis) என்ற நிலை ஏற்படும். இதனால் கால்களில் மிகுந்த சோர்வு ஏற்பட்டு குறக்களி பிடித்தல், எரியும் உணர்வு, மரத்துப் போதல் போன்றவை ஏற்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் தையமின் குறைபாடு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். இவை சரி செய்யப் படாத போது உச்ச கட்டமாக பெரிபெரி நோய் ஏற்படும்.
வைட்டமின் பி1 குறைபாடு அதிகமாக இருந்தால் வருவது பெரிபெரி (beriberi) நோய். இந்த நிலையில் இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும். இந்த நிலை மோசமானால் என்லார்ஜ்ட் ஹார்ட் எனப்படும் இதயம் வீங்குவது போன்றவை ஏற்பட்டு மாரடைப்புக்குக் காரணமாகும். இதில் வெட் பெரிபெரி (wet) மற்றும் டிரை பெரிபெரி (dry) என்ற இரண்டு வகை உள்ளது. உடல் அதிக நீர்ச் சத்தைத் தேக்கி வைத்துக் கொண்டும், இதயக் கோளாறுகளை ஏற்படுத்துவதும் வெட் டைப் பெரிபெரி. நரம்பு மண்டலம் மற்றும் தசைகளில் ஏற்படும் தையமின் குறைபாடு அறிகுறிகள் டிரை டைப் பெரிபெரி. இதற்குச் சரியான சிகிச்சை எடுக்காவிடில் இறப்பு வரை கொண்டு போகும். இதில் வெட் ஃபார்ம் என்பதை சப்ளிமெண்டுகள் மூலம் முற்றிலும் சரிப்படுத்தலாம். ஆனால் டிரை ஃபார்ம் கோளாறுகளை அவ்வாறு முற்றிலும் சரி செய்ய முடியாது. அது உடலில் நிரந்திரமான பாதிப்பை ஏற்படுத்தும்.
பி1 குறைபாடு இருந்தால் உடலில் உள்ள நரம்புகளைச் சுற்றி உள்ள myelin எனப்படும் பாதுகாப்பு உறை சிதையும். இந்தக் குறைபாடு இருக்கும் போது இப்படி சிதைந்த myelin ஐ மறு சீரமைக்க முடியாது. இந்த நிலையில் விரல்கள், கைகள், கால்கள் மற்றும் பாதங்கள் மரத்துப் போகும் நிலை அல்லது டிங்கிளிங் எனப்படும் கூச்ச உணர்வும் ஏற்படும். இதனால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பெரிஃபெரல் நியூரோபதி எனப்படும் நரம்பு மண்டலக் கோளாறு வைட்டமின் பி1 குறைபாட்டால் ஏற்படும்.
***நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சராசரி மனிதர்களை விட 15 மடங்கு அதிகமாக வைட்டமின் பி1 தேவைப்படும்.
வைட்டமின் பி1 குறைபாட்டால் தலையைத் திருப்பும் போது கண் பார்வை ஒத்துழைக்காமல் போகும். உதாரணத்துக்கு ஒரு பேனாவைப் பார்த்துக் கொண்டு உங்கள் தலையைத் திருப்பினால், தலை போகும் திசைக்கு எதிர்த்திசையில் கண் விழி நகர்ந்து பார்க்கும் பொருள் மீது நிலை கொள்ளும். இதற்கு காதுகளின் உட்புறத்தில் உள்ள நரம்புகளின் ஒருங்கினைப்பால் நடக்கிறது. அதற்கான நரம்புகளின் சமிக்ஞையில், பி1 குறைபாடு இடையூறு செய்கிறது. இதனால் கண் ல்விழி அலைபாயும் நிலை ஏற்படும். இந்த நிலைக்குப் பெயர் Nystagmus. வைட்டமின் பி1 சரியான அளவில் எடுப்பதால் இந்நிலை சரி செய்யப்படும்.
அதிகப்படியான ஸ்டிரெஸ் என்று சொல்லப்படும் மன அழுத்தம் பி1 குறைபாட்டை ஏற்படுத்துகிறது.
இந்த முக்கியமான பி1 (தையமின்) வைட்டமினின் பரிந்துரைக்கப்பட்ட ஒரு நாள் அளவு பின் வருமாறு:
உடல் ரீதியான பிரச்சினைகள் எதுவும் இல்லையென்றால்:
குழந்தைகளில் இருந்து 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு : 0.2 முதல் 1.4 மில்லி கிராம் (மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றே பி1 சப்ளிமெண்ட் எடுக்க வேண்டும்)
18 வயதுக்கு மேல் : ஆண்களுக்கு 1.2 மிகி, பெண்களுக்கு 1.1 மிகி.
பாலூட்டும் தாய்மார்களுக்கு : 1.4 மிகி
தையமின் குறைபாடு இருந்தால்: 50 மிகி வரை மாத்திரையாகவோ அல்லது ஊசி மூலமாகவோ எடுக்க வேண்டும்.
குடிப்பழக்கம் நிறுத்தியவர்களுக்கு அவர்களின் வித்டிராயல் அறிகுறிகளைச் சரிப் படுத்துவதற்காக 100 மிகி ஊசி மூலம் கொடுக்கப்பட வேண்டும்.
நீரிழிவு உள்ளவர்களுக்கு 18 முதல் 20 மில்லி கிராம் வரையில் பி1 தேவை.
தையமின் சப்ளிமெண்ட்டை எடுப்பதன் மூலம் கொசு போன்ற சிறு பூச்சிகள் அணுகுவதில் இருந்து தப்பிக்கலாம். பூண்டு அதிகம் சேர்ப்பதும் கொசுக்கடிகளில் இருந்து தப்பிக்க வைக்கும்.
கீழ்க்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் உங்கள் உடலில் வைட்டமின் B1 குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.
. மனக் குழப்பம்
. பசியின்மை
. சோர்வு
. ஞாபகமறதி
. தலைவலி
. எரிச்சலான மற்றும் பதட்டமான மன நிலை
. மன அழுத்தம்
. இதயத்துடிப்பு அதிகமாதல்
. தூக்கமின்மை
. நரம்புக் கோளாறுகள்
தினசரி ஆல்கஹால் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் மூர்க்கமான செயல்பாடுகள் தையமின் குறைபாட்டினால் ஏற்படுவதே.
கீழ்க்கண்டவைகள் வைட்டமின் பி1 குறைபாட்டை உருவாக்கும்.
. ஆல்கஹால்
. ஆண்டிபயாடிக்ஸ்
. காஃபி மற்றும் டீ
. சிறுநீரகப் பிரச்சினைக்குக் கொடுக்கப்படும் மருந்துகள்
. கருத்தடை மாத்திரைகள்
. சர்க்கரை
. உணவுகளில் சேர்க்கப்படும் ரசாயனங்கள்
. ஆஸ்த்துமாவுக்குக் கொடுக்கப்படும் தியோஃபைலின் மருந்துகள்
இதே தையமின் அதிகமாக எடுத்தால் உடலின் வைட்டமின் பி6ஐயும் மக்னீசியம் குறைபாட்டையும் உருவாக்கும்.
வைட்டமின் பி1 உள்ள உணவுகள்:
. நட்ஸ் எனப்படும் கொட்டை வகைகள்
. மாமிசம் மற்றும் ஈரல்
. பூண்டு
வைட்டமின் B1 உள்ள உணவுகளை தினசரி சேர்ப்பதன் மூலம் வைட்டமின் B1 சம்பந்தமான பிரச்சினைகள் உடலுக்கு வராமல் பாதுகாப்போம்.

No comments: