Tuesday, August 8, 2017

சக்தி கொடு! - 3 - சிவராம் ஜெகதீசன்

ஆரோக்கிய வாழ்வுக்கான வைட்டமின்களும் மினரல்களும்
********************************
பயோஅவைலபிலிடி.
நாம் உணவில் எடுக்கும் வைட்டமின்களும் மினரல்களும் எந்த அளவு உடலால் உறிஞ்சப்பட்டு உபயோகிக்கப்படும் என்பதைப் புரிந்து கொள்ள, இந்த பயோஅவைலபிலிட்டியை அறிவது அவசியம்.
இந்த பயோஅவைலபிலிடி என்பது, உண்ணும் உணவு, எடுக்கும் வைட்டமின்கள் & மினரல் சப்ளிமெண்டுகள், மருந்து வகைகள் என்று அனைத்துக்கும் பொருந்தும். ஏதாவது உணவையோ அல்லது பானங்களையோ எடுக்கும்போது அதிலுள்ள நியூட்ரியண்டுகள் ரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்பட்டு, அதன் வழியே கொண்டு செல்லப்பட்டு திசுக்களைச் சென்று அடைகின்றன.
ஒவ்வொரு உணவுக்கும் இந்த பயோஅவைலபிலிடியைக் கணக்கிட கடினமான சமன்பாடுகள் உண்டு. இப்போதைக்கு, உண்ணப்படும் உணவானது உடலால் உறிஞ்சப்படும் அளவை பயோஅவைலபிலிடி என்று எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். உணவு ஜீரனமாதலின் வளர்சிதை மாற்ற வழித்தடத்தில் உணவின் சத்துகள் உடலால் உறிஞ்சப்படுகின்றன. இது வாயில் இருந்து வயிறு, குடல் போன்ற அனைத்துப் பகுதிகளிலும் நடக்கிறது.
இந்த சத்துகள் உடலால் உறிஞ்சப்படும் அளவு என்பது பல வகையான வெளி மற்றும் உட்காரணிகளால் பாதிக்கப்படுகிறது. எடுக்கும் உணவின் தரம் (ரெடிமேட் உணவா, பல நாட்கள் கடைகளில் இருந்த உணவா போன்றவை), எதையெல்லாம் சேர்த்து உண்ணுகிறோம், உண்பவரின் வயது, பாலினம் போன்ற பல காரணிகள் இந்த பயோஅவைலபிலிட்டியைத் தீர்மானிகின்றன. மேக்ரோ நியூட்ரியண்ட்ஸ் என்று சொல்லப்படும் மாவு, புரதம் மற்றும் கொழுப்புச் சத்துகளின் பயோஅவைலபிலிடி அதிகமாக இருக்கும். ஆனால் மைக்ரோ நியூட்ரியண்ட்ஸ் எனப்படும் வைட்டமின்கள் மற்றும் மினரல்களில் பயோஅவைலபிலிட்டி குறைவாகவே இருக்கும்.
உணவில் உள்ள சத்துகளை உடல் உறிஞ்ச முதல் படி நிலை, உணவிலிருந்து அந்த சத்துக்களை விடுவித்து, வேறொரு வடிவத்துக்கு மாற்றி, குடலால் கிரகிக்கப் படுவதற்கு ஏதுவாக மாற்றுவதே. இந்த செயல்பாடு, உணவை மென்று சாப்பிடுவதில் ஆரம்பிக்கிறது. உமிழ்நீருடன் கலந்து உள்ளே செல்லும் போது பலவித என்சைம்கள் மற்றும் வயிற்றிலிருக்கும் அமிலங்களுடன் கலந்து சிறுகுடலுக்குச் செல்கிறது. சிறுகுடலில் பல என்சைம்களுடன் கலந்து உணவு முற்றிலுமாக உடைக்கப்பட்டு, பெரும்பாலான சத்துகள் உடலால் உறிஞ்சப்படுகிறது. இத்துடன் சமைத்தலும் உணவை உடைக்க முக்கியப் பங்காற்றுகிறது.
பல சத்துகள் உடலுக்குத் தேவையான வடிவத்தில் (chemical form) இல்லாமல் வேறு வடிவங்களில் உள்ளது.
உதாரணமாக இரும்புச் சத்து. ஹீம் அயர்ன் மற்றும் நான் ஹீம் அயர்ன் என்று இரு வகை அயர்ன்கள் உள்ளன. இறைச்சிகளில் உள்ள ஹீம் அயர்ன் உணவிலிருந்து விடுவிக்கப்பட்டவுடனேயே, மைய இரும்பு அனுவைச் சுற்றி ஒரு ஹீம் மூலக்கூறாலான பாதுகாப்பு வளையத்தை அமைக்கிறது. இந்த வளையம் மற்ற சத்துகளால் தொடர்பு கொள்ள முடியாமல் ஒரு பாதுகாப்பு கேடயமாக செயல்படுகிறது. இதனால் குடல் செல்களால் நேரடியாக உறிஞ்சப்படுகிறது. தாவரங்களில் இருக்கும் நான் ஹீம் அயர்னில் இந்த அமைப்பு இல்லாததால் வேறு சத்துகளுடன் கலந்து மிகக் குறைவான அளவே குடல் செல்களால் உறிஞ்சப் படுகிறது.
உணவு கம்பெனிகள் சில வித உணவுகளில் வைட்டமின்களைக் கலக்கும். இதனை ஃபோர்டிஃபை செய்வது என்று சொல்வார்கள். உதாரணத்துக்கு வைட்டமின் டி ஏற்றப்பட்ட சமையல் எண்ணெய். இது போல ஃபோர்டிஃபை செய்யப்பட்ட வைட்டமின்கள் கிட்டத்தட்ட 20சதம் முதல் 70 சதம் வரையே பயோஅவைலபிலிட்டியைக் கொண்டிருக்கும். ஆனால், அதிக சதவீத பயோஅவைலபிலிட்டி உள்ள உணவுப் பொருட்கள் உடலுக்கு நல்லது.
இந்த பயோஅவைலபிலிட்டியை மேம்படுத்தும் காரணிகளும் உள்ளன. சத்துகள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும் போது ஒரு சத்தின் கிரகிப்புத்திறன் அதிகரிக்கும் அல்லது இரண்டு சத்துகளுமே ஏற்கப்படாது. உதாரணத்துக்கு வைட்டமின் சியோடு சேர்த்து எடுக்கப்படும் இரும்புச் சத்து இரண்டிலிருந்து மூன்று மடங்கு வரை அதிகரிக்கிறது. இது போல உதவி செய்பவற்றை ஹெல்பர்ஸ் என்று சொல்லலாம்.
இன்னொரு பக்கம் சில சத்துகள் மற்ற சத்துகளை உடல் ஏற்க விடாது. இவற்றை இன்ஹிபிட்டர்ஸ் என்று சொல்லலாம். இவை முக்கிய உயிர்ச்சத்துடன் ஒட்டிக் கொண்டு குடல் செல்களால் ஏற்கப்படாத படிவத்தை அடைந்து விடும். இப்படிச் செய்து அந்த சத்துகளை உடல் உறிஞ்ச விடாமல் செய்து அவற்றை வெளித்தள்ளி விடும். அல்லது இந்த இன்ஹிபிட்டர்ஸ் போட்டி போட்டுக் கொண்டு உண்மையான சத்தை உடல் ஏற்க விடாமல் செய்யும். இந்த இன்ஹிபிட்டர்களில் முக்கியமானது ஃபைட்டிக் ஆசிட். இந்த பைட்டிக் ஆசிட், பாதாம் போன்ற கொட்டை வகைகளிலும் அனைத்து தானியங்களிலும் உள்ளது.
இதனால்தான் பாதாமை ஊற வைக்காமல் உண்ணக்கூடாது. ஊற வைப்பதும், நெய்யில் வறுப்பதும் பாதாமில் உள்ள ஃபைட்டிக் ஆசிட்டை பெரும்பாலான அளவு நீக்கி விடும். இந்த ஃபைட்டிக் ஆசிட், உணவில் இருக்கும் இரும்பு, கால்சியம், ஜிங்க் போன்ற தாதுக்களை உடல் உறிஞ்ச விடாது. இன்னொரு உதாரணம், கால்சியமும் நான் ஹீம் அயனும் ஒன்றாகச் சேர்த்து எடுக்கும் போது, கால்சியம் அயர்ன் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும். அதனால் கால்சியம் மாத்திரையையும் அயர்ன் மாத்திரையையும் ஒன்றாக எடுக்கக் கூடாது.
இன்னொரு உதாரணம் பார்ப்போம். வைட்டமின் பி12, வயிற்றிலிருக்கும் அமிலங்களால் பிரிக்கப்பட்டு வேறொரு ப்ரொட்டீனுடன் (R - protein) சேர்க்கப்பட்டு மேலும் மாற்றமடைந்து உடலால் கிரகிக்கப் படுகிறது. ஆண்டாசிட்கள் (antacid) எனப்படும் ஜெலுசில் போன்றவற்றை எடுக்கும் போது அத்துடன் பி12 எடுத்தால் அந்த பி12 உடலால் கிரகிக்கப்படாது. தொடர்ச்சியாக ஆண்டாசிட்கள் எடுக்கும் போது பி12 குறைபாடு வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்.
இவை ஆரம்ப நிலை உதாரனங்கள் மட்டுமே. இனி வரும் அத்தியாயங்களில் ஒன்றுக்கொன்று எதிராக செயல்படும் சத்துகளையும், ஒன்றுக்கொன்று உதவி செய்யும் ஹெல்பர்ஸ் பற்றியும் விளக்கமாகப் பார்க்கலாம்.

No comments: