Tuesday, August 8, 2017

சக்தி கொடு! - 7 சிவராம் ஜெகதீசன்

ஒவ்வொரு நாளும் உடலானது புதுப்புது செல்களை உருவாக்கியும் பழைய செல்களை வெளியேற்றியும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. இது ஒரு மனிதர் வாழும் காலம் வரை தொடர்ந்து நிகழும் ஒரு செயல். ஒவ்வொரு கணத்திலும், ரத்தச் சிவப்பணுக்கள் ஆக்சிஜனையும், நுண் சத்துகளையும் சுமந்துகொண்டு உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்கிறது. நரம்புகள் சமிக்ஞைகளை ஆயிரக்கணக்கான மைல்கள் பயனிக்க வைத்து மூளைக்கும் உடலும் மற்ற பாகங்களுக்கும் அனுப்புகிறது. உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடையே கெமிக்கல் சமிக்ஞைகளைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் உடலை இயங்கச் செய்கிறது. இதில் ஒன்று தடைபட்டாலும், சமநிலை தவறினாலும் நமக்குப் பிரச்னைகள் வருகின்றன.
உடலின் இந்த இயக்கம் ஒழுங்காக நடைபெற சில மூலப்பொருட்கள் தேவைப்படுகிறது. இதை வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் என்று அழைக்கிறோம். கிட்டத்தட்ட 30 வகையான முக்கியமான வைட்டமின்களும் மினரல்களும் உள்ளன. உடலின் தினசரித் தேவைக்காக இந்த வைட்டமின்களையும் மினரல்களையும் கணக்குப் போடுவது குழப்பத்தைத் தரும் ஒரு விஷயம். இந்த வைட்டமின்கள் பொதுவாக ஆங்கில எழுத்துருக்களில் அழைக்கப்படும். A, B, C, D, K போல. இந்த வைட்டமின்களை உடலால் நேரடியாகத் தயாரிக்க முடியாது. உணவின் மூலமே இது கிடைக்கும். இந்த வைட்டமின்களின் மூலப் பொருட்கள் உள்ள உணவை உண்ணும் பொழுது, அந்த உணவிலிருந்து உடல் அதைத் தயாரித்துக் கொள்கிறது. சத்தான உணவை உண்ண வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுவது இதற்காகத்தான். சத்தற்ற ருசியை மட்டுமே பிரதானமாகக் கொண்ட (பொரித்த அல்லது ஃபாஸ்ட் ஃபுட்) உணவுகளில் இதுபோன்ற அத்யாவசிய வைட்டமின்கள் குறைவாகவும் தரமற்றதாகவும் இருக்கும்.
இந்த வைட்டமின்களை கீழ்க்கண்ட இரு வகைகளாகப் பிரிக்கலாம்:
1. கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்கள் (கொ.க)
2. தண்ணீரில் கரையக் கூடிய வைட்டமின்கள். (த.க)
1. கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்கள் (கொ.க)
*******************************
கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்கள் A, D, E மற்றும் K. இந்த கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின் உள்ள உணவுகளை உண்ணும் பொழுதும் சப்ளிமெண்டுகளை உண்ணும் பொழுதும் கொழுப்புள்ள உணவுகளுடன் உண்ண வேண்டும். சப்ளிமெண்டுகளை ஒரு கை நிறைய வெண்ணெய்யுடனோ அல்லது நெய்யுடனோ எடுப்பது இந்த வைட்டமின்களை உடல் எளிதாக கிரகிக்கவும் சேமித்து வைக்கவும் உதவும். கொழுப்பில் கரையக் கூடிய இந்த வைட்டமின்கள் கீழ்க்கண்ட வழிகளில் பயணித்து ரத்தத்தில் கலக்கிறது.
1. வைட்டமின்கள் உள்ள உணவை உண்ணுகிறோம்.
2. வயிற்றில் உள்ள அமிலங்களால் உணவு உடைக்கப்பட்டு, ஜீரணமாகி, சிறு குடலுக்குள் தள்ளப்பட்டு அங்கு அதில் உள்ள சத்துகள் கு(உ)டலால் உறிஞ்சப் படுகிறது. கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்களை உடல் கிரகிக்க பித்த நீர் தேவை. கல்லீரலால் இந்த பித்த நீர் சுரக்கப்பட்டு சிறுகுடலில் கலந்து, கொழுப்பை உடைத்து சிறுகுடலின் சுவர்கள் மூலம் சத்துகள் உடலால் உறிஞ்சப்படுகிறது.
3. இந்த வைட்டமின்கள் நிணநீர்க் குழாய்கள் வழியாக புரதத்துடன் சேர்ந்து உடல் முழுதும் பயணிக்கிறது. இந்தப் பயனத்தில் உடலால் உபயோகப் படுத்தப்பட்டு, மீதமுள்ள கொழுப்பில்
கரையக் கூடிய வைட்டமின்கள் கல்லீரலிலும் கொழுப்புத் திசுக்களிலும் சேமிக்கப் படுகிறது.
4. எப்பொழுதெல்லாம் இந்த வைட்டமின்கள் உடலுக்குத் தேவைப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் இந்தச் சேமிப்பிலிருந்து உடல் கிரகித்துக் கொள்ளும்.

இந்த சேமிப்பே ஒரு எதிர் விளைவையும் உருவாக்குகிறது. கணக்கு வழக்கில்லாமல் சப்ளிமெண்டுகள் மூலமாக இந்த கொ.க. கூடிய வைட்டமின்களை உண்ணும் பொழுது அதிக டாக்சிக் லெவல் எனப்படும் உடலுக்கு ஊறு விளைக்கக் கூடிய அளவுக்கு இவற்றின் அளவுகள் அதிகமாகும். கொழுப்புள்ள உணவுகளும் கொழுப்பு எண்ணெய்களும் கொ.க. வைட்டமின்களைத் தேக்கி வைக்கும் தேக்கங்கள். உடல், இந்தத் தேக்கங்களில் கொ.க வைட்டமின்களை மாதக்கணக்கில் தேக்கி வைத்து அதாவது சேமித்து வைத்து உடலுக்கு எப்போது தேவையோ அப்போது உடல் அவற்றை உபயோகித்துக் கொள்ளும்.
2. தண்ணீரில் கரையக் கூடிய வைட்டமின்கள். (த.க)
******************************
கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்களான A, D, E, K தவிர மற்ற அனைத்து வைட்டமின்களும் தண்ணீரில்
கரையக் கூடிய வைட்டமின்களாகும். உணவிலிருந்தோ அல்லது சப்ளிமெண்டுகள் மூலமாகவோ இந்த த.க வைட்டமின்களை உண்ணும் பொழுது உணவு செரிமானமாகும் செயலின் மூலமாக இவை நேரடியாக ரத்தத்தில் கலக்கும். அதிகப் படியான த.க வைட்டமின்களை எடுக்கும் போது அவற்றை சிறுநீரகம் சிறுநீரில் வெளியேற்றி விடும். த.க வைட்டமினை உடல் சேமித்து வைக்காது என்றாலும் பி12 மற்றும் சி வைட்டமின்கள் விதி விலக்கு. உதாரணத்துக்கு பல வருடங்களுக்குத் தேவையான வைட்டமின் பி12ஐக் கல்லீரல் சேமித்து வைக்கும். போலவே பல மாதங்களுக்குத் தேவையான வைட்டமின் சியையும்.
உண்ட உணவிலிருந்து சக்தியை உடலுக்குத் தேவையான முறையில் விடுவிக்க இந்த த.க வைட்டமின்கள் ஒரு முக்கியத் தேவை. உணவில் இருந்து சக்தியைத் தயாரிக்கவும் நியாசின், பயோடின் போன்ற த.க வைட்டமின்கள் தேவை. இவை அமினோ அமிலங்களின் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிப்பதன் மூலம் செல்களின் பெருக்கத்துக்கும் இவை தேவைப்படுகிறது. இந்த த.க வைட்டமின்கள் வகையில் உள்ள வைட்டமின் சி யானது, கொலாஜனை உருவாக்கி, காயங்களை ஆற்றுவதிலும், ரத்தக் குழாயின் சுவர்களைப் பாதுகாப்பதிலும், பற்கள் மற்றும் எலும்புகளுக்கான அடிப்படை வேதிப் பொருட்களை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 75 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் நமது உடல் மறு கட்டமைக்கப்படுகிறது. அதாவது 75 சதவீத செல்கள் அழிக்கப்பட்டு மறுபடி உருவாக்கப் படுகிறது. செல்களில் உள்ள டிஎன்ஏ மூலக்கூறுகள் உட்பட. நீங்கள் உண்ணும் உணவில் உள்ள சத்துகளே இதற்குக் காரணம். நீங்கள் உண்ணும் உணவு அல்லது வைட்டமின்களின் தரம் மிக முக்கியம். கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்களை ஒரு நாளுக்கு ஒரு முறை எடுத்தால் போதுமானது. ஆனால் தண்ணீரில் கரையக் கூடிய வைட்டமின்களை ஒரு நாளுக்கு இரு முறை எடுப்பது நல்லது. அதாவது உங்கள் மருத்துவர் தினசரி வைட்டமின் சியை 500 மில்லி கிராம் எடுக்கச் சொன்னால் அதை 250 மில்லி கிராமாக இரு முறை எடுக்க வேண்டும். வைட்டமின்களை குளிர் சாதனப்பெட்டியில் வைப்பது சரியான முறையாகும். ஒவ்வொரு முறையும் முழு டம்ப்ளர் தண்ணீருடன் வைட்டமின் சப்ளிமெண்டுகளை விழுங்க வேண்டும்.
சப்ளிமெண்டுகள் அடல்டரேஷன் ஸ்கிரீன் என்று சொல்லப்படும் ஒரு தரக் கட்டுப்பாட்டு சோதனையால் அதன் பியூரிட்டி எனப்படும் சுத்தத் தன்மை அளவிடப் படுகிறது. இந்தப் பரிசோதனை வைட்டமின் மாத்திரைகளில் ஆர்செனிக், காரீயம், பாதரசம், கேட்மியம் போன்ற உலோகங்கள் கலந்திருக்கிறதா என்று கண்டறிவதற்காக. மேலும் இந்தச் சோதனை வைட்டமின் மாத்திரைகளில் பூச்சிக் கொல்லிகள், பூஞ்சைக் காளான் போன்ற நச்சுப் பொருட்கள் கலந்துள்ளதா என்றும் ஆய்வு செய்கிறது. நாம் இந்தச் சோதனைகளை வீட்டில் செய்ய முடியாது. பாட்டிலில் லேபிளில் போட்டிருப்பதை நம்பிக்கொள்ள வேண்டியதுதான்.
இனி வரும் பாகங்களில் ஒவ்வொரு வைட்டமினைப் பற்றியும் மினரலைப் பற்றியும் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம்.
* ஒவ்வொரு வைட்டமினும் என்ன செய்கிறது அதன் செயல்பாடுகள்
என்னென்ன?
* எந்த உணவுப் பொருட்களில் அந்த வைட்டமின் உள்ளது?
* குறிப்பிட்ட வைட்டமின் குறைபாடுகள் எதனால் வரும்?
* அதன் ரெகமண்டட் டோசேஜ் என்ன?
* குறிப்பிட்ட வைட்டமின்கள் உள்ள உணவுப் பொருட்கள் என்னென்ன?
* அவற்றின் இயற்கை மற்றும் செயற்கை வடிவங்கள் என்ன?
என்பது போன்ற அனைத்துத் தகவல்களையும் வைட்டமின் A யில் ஆரம்பித்து ஒவ்வொன்றாகப் பார்க்கப் போகிறோம்.

No comments: