Tuesday, August 8, 2017

சக்தி கொடு! - 4 சிவராம் ஜெகதீசன்


ஆரோக்கிய வாழ்வுக்கான வைட்டமின்களும் மினரல்களும்********************************
நாம் உண்ணும் உணவிலிருந்து போதுமான சத்துகள் கிடைப்பதில்லை. அனைத்துக் காய்கறிகளும், பழ வகைகளும், பறிக்கப்பட்டவுடனேயே அதன் சத்துக்களை இழக்கத் துவங்கி விடுகிறது. ஃபிரீஸரில் வைக்கப்படும் போது இன்னும் அதிகமாக சத்துகள் இழப்பு ஏற்படுகிறது. பழங்களும் காய்கறிகளும் கிட்டதட்ட 30 முதல் 50 சதவீதம் வரை குளிரூட்டப்பட்ட நிலையில் சத்துகளை இழக்கின்றன.
உதாரணத்துக்கு, திராட்சைப் பழம் ஃபிரிஜ்ஜில் வைக்கப் படும் போது அது அழுகாமல் வேண்டுமானால் இருக்கும். ஆனால் கடைகளுக்கு வரும் போது அதன் 30 சதவீத வைட்டமின் பி சத்துகளை இழந்திருக்கும். பளபளவென்று கடைகளில் நீங்கள் வாங்கும் ஆரஞ்சுப் பழங்களின் 50 சதவீத வைட்டமின் சி, குளிரூட்டப்படும் முறையால் காணாமல் போய் விடும். அஸ்பராகஸ் எனும் காய், ஒரே வாரத்தில் 90 சதவீதம் வரை வைட்டமின் சியை இழக்கும்.
அதனால் காய்கறிகளை வாரக்கணக்கில் ஃபிரிஜ்ஜில் வைப்பதைத் தவிருங்கள். அன்றன்றைக்கு லோக்கலில் கிடைப்பதை வாங்கி அன்றே சமையலுக்கு உபயோகிப்பதை வழக்கமாக்குங்கள். அதிக பட்ச வெப்பத்தில் சமைப்பதையும் தவிருங்கள். முடிந்த வரை ஆவியில் காய்கறிகளை அதன் நிறம் மாறாமல் வேக வைப்பது, அதிலுள்ள சத்துகளை அதிகபட்சம் உடல் ஏற்றுக் கொள்ளும் நிலையில் உடலில் சேர்க்கும். எண்ணெய்களைச் சேர்த்து அதிக வெப்பத்தில் சமைக்கும் போது, ருசி வேண்டுமானால் சேரலாம், ஆனால் சத்துகளை இழந்து வெறும் சக்கைகளையே உண்பீர்கள்.
இதன் காரணமாகத்தான் வைட்டமின் சப்ளிமெண்டுகளை தற்காலத்தில் அதிகமாக எடுக்கிறோம். டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பழரசங்களையும் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. உதாரணத்துக்கு டப்பாவில் அடைக்கப்பட்ட ஆரஞ்சுப் பழ ரசத்தில் உள்ள வைட்டமின் சி, 40 சதவீதம் வரையில் உடலால் உபயோகப் படுத்த முடியாத செயலற்ற நிலையில்தான் இருக்கும். சப்ளிமெண்டுகளிலும் 500mg, 1000 mg என்று லேபிளில் போட்டிருந்தாலும் அதன் பயோஅவைலபிலிட்டி என்பது மிக மிக குறைவாகவே இருக்கும். ஆனால் உடலுக்குத் தொடர்ச்சியாக இந்த சத்துகளானது தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும்.
சாதாரணமாக உணவில் கிடைக்கும் வைட்டமின்களையும் மினரல்களையும் உடலில் சேர விடாமல் தடுப்பதில் நம் வாழ்க்கை முறையும் பெரும் பங்காற்றுகிறது. ஸ்டிரெஸ் என்று சொல்லப்படும் மன அழுத்தம் பல சத்துகளை உடலில் சேர விடாமல் செய்யும். அதை விட முக்கியமானது ஆல்கஹால். ஆல்கஹால் பழக்கம் நம் உடலில் இருக்கும் அனைத்து வைட்டமின் மற்றும் மினரல் சேமிப்பை மொத்தமாக அழித்து விடும். முக்கியமாக பயோடின், காப்பர், ஜிங்க், மற்றும் வைட்டமின்கள் B1, B6, B12 மற்றும் C.
உண்ணும் உணவை உடைத்து, உடலானது சக்தியைத் தயாரிக்கும் செயலின் போது, அதாவது வளர்சிதை மாற்றத்தின் போது, தயாராகும் இன்னொரு மூலக்கூறு ஃபிரீ ராடிகல்ஸ் (free radicals). இந்த ஃபிரீ ராடிகல் மூலக்கூறுகளில் எலெக்டிரான்கள் இருக்காது அல்லது ஒரு எலெக்டிரான் மட்டுமே இருக்கும். எலெக்டிரான்கள் எப்போதுமே ஜோடியாக இயங்குபவை. அதனால் ஃபிரீ ராடிகல்ஸ் இன்னொரு எலெக்டிரானைத் தேடும். அப்போது உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களின் எலெக்டிரான்களை இவை திருடிக் கொண்டு அந்த செல்களின் அழிவுக்குக் காரணமாகி விடும். இந்த செயல் முறைக்குப் பெயர் ஆக்சிடேஷன். இந்த ஆக்சிடேஷனால், ஆக்சிடேடிவ் ஸ்டிரெஸ் அல்லது டேமேஜ் ஏற்பட்டு திசுக்களைச் சேதப் படுத்தி, நோய்களுக்கும், விரைவாக வயதான தோற்றம் வருவதற்கும் காரணமாகி விடும். இந்த ஃபிரீ ராடிகல்ஸிடமிருந்து காத்துக் கொள்ளவும் நமக்கு அதிகமான சத்துகள் தேவை.
ஃபிரீ ராடிகல்ஸ் மொத்தமாகவே மோசம் என்று சொல்லி விடவும் முடியாது. உதாரணமாக, கல்லீரல் ஃபிரீ ராடிகல்ஸைத் தயாரித்து சில நச்சுப் பொருட்களை உடலிலிருந்து நீக்கும். ரத்த வெள்ளையணுக்கள் ஃபிரீ ராடிகல்ஸை அனுப்பி பாக்டீரியா, வைரஸ் மற்றும் சேதமுற்ற செல்களை அழிக்கும்.
இந்த ஃபிரீ ராடிகல்ஸ் வெளிக்காரணிகளாலும் ஏற்படும். முக்கியமாக இந்தக் காலகட்டத்தில் வெளிக்காரணிகளின் பங்கு அதிகமாகவே உள்ளது. டெலிவிஷன் திரைகள், கம்ப்யூட்டர் திரைகள், செல்போன்கள், விமானப் பயணங்கள், ஹேர் டிரையர்கள், பளிச்சிடும் லைட் பல்புகள், மைக்ரோவேவ் ஓவன்கள், கெமிக்கல்கள்
கலந்த உணவுப் பொருட்கள் / தண்ணீர் / காற்று, அதிகபட்ச சூரிய ஒளி போன்றவை உடலுக்கு வெளியில் இருந்து கொண்டு உடலுக்குள் நடக்கும் ஃபிரீ ராடிகல்ஸ் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
உடல் மேற்சொன்ன காரணிகளுக்கு ஆட்படும்போது, உடலுக்குள் மேலதிக ஆக்சிடேஷன் ஏற்பட்டு, உடலில் ஃபிரீ ராடிகல்ஸ்களின் சுமை அதிகமாகிறது.
அதனால் மேற்கூறியவற்றில் இருந்து முடிந்த வரை உடலைப் பாதுகாக்கவும். இதனால் ஏற்படும் ஆக்சிடேஷன் என்பது, இரும்புச் சாமானில் ஏற்படும் துரு போல. எந்த அளவு உங்கள் உடல் மேற்கூறிய காரணிகளுக்கு எக்ஸ்போஸ் செய்யப்படுகிறதோ அந்த அளவு உடல் மேலும் அதிகமாக துருப் பிடிக்கும். இந்த ஆக்சிடேஷன் செயலை நிறுத்த உங்கள் உடலுக்குத் தேவை ஆண்டி ஆக்சிடண்டுகள். இந்த ஆண்டி ஆக்சிடண்டுகள், ஃபிரீ ராடிகல்ஸ்களுக்குத் தேவையான எலெக்டிரான்களைக் கொடுத்து, செல்களை அழிவிலிருந்து காப்பாற்றுகின்றன.
இந்த ஆண்டி ஆக்சிடண்டுகளையும் மாத்திரைகள் வடிவத்தில் அளவுக்கதிகமாக எடுப்பதும் ஆபத்தே. ஆண்டி ஆக்சிடண்டுகளுக்கு உதாரணமாக வைட்டமின் A, C, E போன்றவைகளையும், செலினியம், கோஎன்சைம் Q10 (CoQ10), ஆல்ஃபா லிப்போயிக் ஆசிட், மெலடோனின் போன்ற சத்துகளைக் கூறலாம்.
பூண்டு ஒரு முக்கியமான ஆண்டி ஆக்சிடண்ட் ஆகும். வயதாக ஆக, உடல் மேற்சொன்ன ஆண்டி ஆக்சிடண்டுகளைக் குறைவாகவே தயாரிக்கும். அதனால் இந்த ஆண்டி ஆக்சிடண்டுகள் உள்ள உணவுகளை - முக்கியமாகப் பழங்களை எடுப்பதன் மூலம் உடலின் ஆண்டி ஆக்சிடண்ட் தேவையைப் பூர்த்தி செய்து வயதான தோற்றம் வருவதைத் தள்ளிப் போடலாம். இதில் மாதுளம் பழமும், பெர்ரிகள் என்று சொல்லப்படும் சிறு பழங்களும், கிரீன் டீயும் முக்கியமானவை.
நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளும் கொத்துமல்லித்தழையிலும் ஆண்டி ஆக்சிடண்டுகள் உள்ளன. கொத்துமல்லித் தழையை உணவைத் தயாரித்த பின் கடைசியில் பச்சையாக மேலே தூவி சாப்பிட வேண்டும். நம் ஊரில் கிடைக்கும் நாவல் பழமும் அருமையானதே. தினசரி நாலைந்து நாவல் பழங்களைத் தொடர்சியாக உணவில் சேர்ப்பதும் மிகுந்த பலனைத் தரும்.
சில பேர் தம் வயது 50க்கு மேல் என்பார்கள். ஆனால் 35 வயது போலத் தோற்றமளிப்பார்கள். அதற்கான முக்கியக் காரணம் ஆண்டி ஆக்சிடடுண்டுகள் அதிகம் உள்ள உணவுகளை அவர்கள் உண்பதே. இப்படி உணவுப் பொருட்களில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட் அளவுகளை அளக்க ORAC Score (Oxygen Radical Absorption Capacity) என்ற அளவு முறையைப் பயன் படுத்துகிறார்கள். 100 கிராம் உணவுப் பொருளில் எவ்வளவு ORAC இருக்கிறது என்ற அளவே இது.
இளமை தங்கவேண்டுமானால் உணவில் ஆண்ட்டி ஆக்சிடண்டுகள் அவசியம்.

No comments: