Tuesday, August 8, 2017

சக்தி கொடு! - 11 சிவராம் ஜெகதீசன்

ஆரோக்கிய வாழ்வுக்கான வைட்டமின்களும் மினரல்களும்********************************
வைட்டமின் B3 (Niacin and Niacinamide)***************************
வைட்டமின் B3 என்பது நியாசினும் (அல்லது நிகோடினிக் ஆசிட்) அதன் வழித்தோன்றலான நியாசினமைடும் சேர்ந்ததாகும். தையமினுடனும் (B1) ரிபோபிளேவிடனும் (B2) சேர்ந்து நியாசினும் உடலுக்குத் தேவையான ஒரு முக்கியமான மைக்ரோ நியூட்ரியண்ட்டாகும். ஆனால் நியாசினுக்கும் மற்ற தையமின் அல்லது ரிபோஃபிளேவினுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்னவென்றால், நியாசின் அதிக டோசேஜ் எடுத்தால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும்.
நியாசின் இதயக் கோளாறுகளை உருவாக்கவல்ல ரத்த கொழுப்புகளைக் கட்டுப்படுத்தும் ஒன்றாகும். HDL எனப்படும் நல்ல கொலஸ்டிராலை அதிகப்படுத்துவதிலும், டிரைகிளிசரைட்ஸ் எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைப்பதிலும் நியாசின் உதவி செய்து இதயத்தைப் பாதுகாப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. மேலும் இது சொரியாசிஸ் நோயைத் தணிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. வைட்டமின் A வைப் போலவே பல வடிவங்களில் உள்ளது. நியாசின் சப்ளிமெண்டுகள் என்று வரும் போது அவை நிகோடினிக் ஆசிட் மற்றும் நியாசினமைட் மற்றும் Inositol Hexaniacinate என்ற மூன்று வடிவங்களில் கிடைக்கிறது. இவற்றில் நிகோடினிக் ஆசிட் ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கட்டுப் படுத்துவதற்கும் ரத்த நாளங்களைத் தளர்த்துவதற்கும் உதவுகிறது.
வைட்டமின் பி குழுமத்தில் மூன்றாவதாகக் கண்டு பிடிக்கப்பட்ட வைட்டமின் இது. அதனாலேயே B3 என்று பெயரிடப்பட்டது. இதயத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கும் கொழுப்பின் வளர் சிதை மாற்றத்திற்கும் நியாசின் ஒரு முக்கியமான வைட்டமினாகும். இத்துடன் மூளை செயல்பாடு, ஆரோக்கியமான தோல் மற்றும் நீரிழிவைக் கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது.
நீரிழிவு நோயைக் கட்டுப் படுத்தும் மருந்துகளின் செயல்பாட்டை நியாசின் மேம்படுத்துகிறது. சிலருக்கு சூரிய ஒளியில் போனாலே தோலில் அரிப்பு, சொறி மற்றும் சன் பர்ன் எனப்படும் கொப்புளங்கள் தோன்றும். தோலில் வெடிப்புகள் ஏற்பட்டு இன்ஃபெக்‌ஷன் கூட ஆகும். இதற்கான சிகிச்சைக்கு நியாசின் பயன்படுகிறது. எவ்வளவு லோஷன்களைப் போட்டாலும் நியாசின் குறைபாடு இருந்தால் தோலில் ஏற்படும் வெடிப்புகளை லோஷன்கள் சரி செய்ய முடியாது. ஏனெனில் உள்ளே இருக்கும் வைட்டமின் குறைபாட்டை லோஷன்களைத் தடவுவதன் மூலம் சரி செய்ய முடியாது.
மூப்பின் (வயதாவதன்) காரணமாக வரும் அல்சைமர் வியாதி, ஞாபக சக்திக் கோளாறு, மைக்ரேன் தலைவலி, மன அழுத்தம், மோஷன் சிக்னஸ் எனப்படும் பிரயாணம் செய்யும்போது ஏற்படும் அசௌகர்யம், தூக்கமின்மை போன்றவற்றைக் குணப்படுத்தவும் நியாசின் உதவுகிறது. மைக்ரேன் தலை வலியை உணர ஆரம்பிக்கும் போதே நியாசின் மாத்திரை ஒன்றை எடுத்துக் கொள்வது மைக்ரேன் தலைவலியை உடனடியாக நிறுத்தவும் செய்யும். சீஸோஃபெர்னியா எனப்படும் தெளிவாக செயல்படாத தன்மை, ஹல்லூசினேஷன் (பிக் பாஸ் ஜூலிக்கு இருந்த பல வியாதிகளில் ஒன்று - நடக்காததை நடந்ததாக நம்புவது) போன்ற மன நலக் குறைபாடுகளுக்கும் நியாசின் மருந்தாகிறது.
இந்த வொண்டர் வைட்டமின் நியாசின், நியாசினமைட் என்ற வடிவத்தில் ஆர்த்திரிடிஸ் நோயால் வரும் வலி மற்றும் தசைகளின் ஸ்டிஃப்னஸ் எனப்படும் கெட்டிப்பட்ட தன்மையைக் குறைப்பதிலும் உதவி செய்கிறது. அதிக டோசேஜில் பரிந்துரைக்கப்படும் நியாசின், ஆர்த்திரிடிஸால் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, ஆர்த்திரிடிஸ் வலிக்கு, வலி மாத்திரைகள் எடுப்பதைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த நியாசினானது உள்காயத்தை ஆற்றி எலும்புகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலியைக் குறைக்கிறது. வைட்டமின் பி குறைவால் ஏற்படும் பெல்லக்ரா (Pellagra) என்ற நிலையைச் சரி செய்கிறது.
பெல்லக்ரா என்ற நிலை பொதுவாக சத்தான உணவுகள் எடுத்துக் கொள்ளாதது மற்றும் அதிக பட்ச குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு வரும் ஒரு நிலையாகும். பெல்லக்ரா நிலை ஒரே இரவில் ஏற்படுவதில்லை. ஆரம்ப கட்ட சப்-கிளினிகல் நிலை என்பது வயிற்று உபாதைகளில் ஆரம்பிக்கும். இதற்கு முக்கியக் காரணம், அடிக்கடி அதிகமான ஆண்டிபயாடிக் எடுத்தல், குடிப்பழக்கம் போன்றவற்றால் வயிற்றுப் பகுதியில் இருக்கும் லைனிங் சிதைக்கப் பட்டு வைட்டமின்களை உடல் கிரகிக்க முடியாததே. இதற்கு மருத்துவர் உதவியுடன் அதிகமான டோஸ்களில் நியாசினமைட் எடுத்துக் கொள்வது மிகுந்த பலனைத் தரும்.
இவை அனைத்தைக் காட்டிலும் முக்கியமாக, நியாசின் கேன்சரை வர விடாமல் தடுப்பதிலும் முக்கியப் பஙங்காற்றுகிறது.
எரெக்டைல் டிஸ்ஃபங்ஷன் எனப்படும் ஆணுறுப்பு விறைப்படையாத நிலையை மாற்றவும் நியாசின் உதவி செய்கிறது. மருத்துவர் உதவியுடன் நியாசினை 250 மில்லி கிராம் அளவில் தினமும் மூன்று முறை எடுப்பது சரியான ரத்த ஓட்டத்தை ஆணுறுப்புக்குள் அளிக்கிறது. இதன் மூலமாக எரெக்டைல் டிஸ்ஃபங்ஷன் காரணமாக சரி செய்யப்படுகிறது.
நியாசின் எடுப்பதன் பக்க விளைவுகள் பின் வருமாறு:
. சாப்பிட ஆரம்பிக்கும் போது தோலில் சிகப்பு நிற பேட்ச்கள்
. வயிறு உபாதைகள்
. தோல் வறண்டு போதல்
மேற்கண்ட விளைவுகள் சில வாரங்களில் தானாகவே சரியாகி விடும். நியாசின் எடுப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னால் ஆஸ்பிரின் எடுப்பது இது போன்ற பக்க விளைவுகளைக் குறைக்கும்.
மிக அதிக டோசேஜ்களில் எடுக்கும் நியாசின் ஈரலைச் சேதமாக்கும். மேலும் பெப்டிக் அல்சரையும் ரத்தத்தில் அதிக யூரிக் ஆசிட் அளவுகளைக் கொடுக்கும். வைட்டமின் பி குடும்பத்தில் உள்ள மற்ற வைட்டமின்களைச் சேர்த்து எடுக்காமல் நியாசினை மட்டும் எடுப்பது உங்கள் ரத்த ஹோமோசிஸ்டைன் அளவுகளை அதிகமாக்கி இதயக் கோளாறுகளுக்கு அடிகோலும். மேலும் ஞாபசக்திக் குறைபாட்டையும் உருவாக்கும். மேலும் ரத்த கொலஸ்டிரால் அளவுகளைக் குறைக்கும் ஸ்டாடின் மருந்துகளுடன் சேரும் போது rhabdomyolysis எனப்படும் தசைகள் சேதத்தை விளைவிக்கும். அதனால் தகுந்த மருத்துவரின் மேற்பார்வையில் மட்டுமே நியாசின் சப்ளிமெண்ட்டை எடுக்க வேண்டும்.
உங்களுக்கு நியாசின் குறைபாடு இருந்தால் கீழ்க்கண்ட அறிகுறிகள் உடலில் தோன்றும்:
. தலைவலி
. மன அழுத்தம்
. உடலில் நச்சுப் பொருட்களை வெளியேற்ற முடியாமை (நியாசின் ஒரு வலிமையான ஆண்டி டாக்சின். மேலும் நியாசினமைடானது, சேதப்பட்ட செல்களைச் சுத்தப்படுத்துவதிலும் உதவுகிறது.)
. ஜீரணக் கோளாறுகள்
. தூக்கமின்மை
. தசைகள் வலுவிழத்தல்
. எரிச்சலான மன நிலை
. வாய்ப்புண்கள்
செல்களின் வளர் சிதை மாற்றத்திற்குத் தேவையான இரண்டு முக்கியமான கோ என்சைம்களின் செயலில் நியாசின் முக்கியப் பங்காற்றுகிறது. செல்களுக்கு இடையே பரிமாறிக் கொள்ளப்படும் சமிக்ஞைகளிலும் டி என் ஏ மூலக்கூறுகளை பழுது பார்ப்பதிலும் நியாசினின் தேவை உள்ளது.
கீழ்க்கண்ட உணவுகளில் நியாசின் வைட்டமின் உள்ளது:
. ஈரல்
. கிட்னி
. கோழி, ஆடு மற்றும் சிவப்பிறைச்சிகள்
. மீன்கள்
. முட்டை
. சிகப்பு மிளகாய்
. பாதாம்
மேற்கண்ட உணவுகளை உண்ணும் போது உடலுக்குத் தேவையான நியாசின் உணவின் மூலமே முழுமையாகக் கிடைக்கும். அப்படி உணவின் மூலம் கிடைக்காமல் போனாலோ அல்லது உண்ட உணவிலிருந்து நியாசினை உடலால் உபயோகப் படுத்த முடியாமல் (குடிப்பழக்கம் இருந்தால் நியாசினை குடலால் பிரித்தெடுக்க முடியாது) போனாலோ உங்களுக்கு நியாசின் சப்ளிமெண்டுகள் தேவை. சப்ளிமெண்டுகள் மூலம் கீழ்க்கண்ட நோய்க்குறிகளைக் குணப்படுத்த நியாசின் உபயோகப் படுகிறது:
. முகப்பரு
. மன அழுத்தம்
. நீரிழிவைக் கட்டுப்படுத்துதல்
. அதிக ரத்த கொலஸ்டிரால் அளவுகள்
. அதிக ரத்த டிரைகிளிசரைட் அளவுகள்
. ரத்த ஓட்டம் பாதிப்பதால் வரும் வலி
. ஆஸ்டியோ ஆர்த்திரிடிஸ்
. ருமடாய்ட் ஆர்திரிடிஸ்
. பார்கின்சன்ஸ் டிசீஸ் எனப்படும் மத்திய நரம்பு மண்டலக் கோளாறுகள்
இந்த நியாசின் வைட்டமினின் பரிந்துரைக்கப்பட்ட தினசரி டோசேஜ் 20 Mg.
முதல் முறையாக நியாசின் எடுக்கும் போது ஃபிளஷ் என்று சொல்லப்படும் தோலில் சிவப்பு நிற பேட்ச்கள் ஏற்படும் என்று பார்த்தோம். அப்படி முதல் முறையாக நியாசின் எடுக்கும் போதும் உடலுக்கு ஏற்படும் அதிர்ச்சியால் அது வருகிறது. இதை நியாசின் ஃபிளஷ் என்று அழைப்பார்கள். இது தாங்கிக் கொள்ளக் கூடியதே. ஆனால் அதன் பின்னர் ஒரு தெளிவான மன நிலையயும், மூளைப் பகுதியில் ஒரு சுறு சுறுப்பையும், உடலுக்கு சக்தி கிடைப்பதையும் உணர முடியும். அதாவது உடலின் சக்தி நிலைகளை நியாசின் சரியன விதத்தில் மேம்படுத்துகிறது.
நீங்கள் நீரிழிவு, இதயக் கோளாறுகள், தைராய்ட் போன்றவற்றுக்கு மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்தால் நியாசின் அந்த மருந்துகளின் செயல்பாட்டில் தலையிட்டு வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும். இந்த மருந்துகளை நீங்கள் எடுத்துக் கொண்டிருந்தால் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் நியாசின் வைட்டமினை எடுப்பது தவறு.

சக்தி கொடு! - 10 சிவராம் ஜெகதீசன்

வைட்டமின் B2
*************
வைட்டமின் B2 அல்லது ரிபோஃப்ளேவின் என்ற வைட்டமின், உடலின் சக்தி உருவாக்கும் செயல்பாட்டிலும், ஆண்டிபாடீஸ் எனப்படும் நோயெதிர்ப்பு செல்கள் உருவாக்கத்திலும், ஆரோக்கியமான கண்களுக்கும், திசுக்கள் சேதாரத்தைப் பழுது பார்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
B2 வைட்டமின், உடலில் கொழுப்பு சேராமல் தடுப்பதிலும், ஆண்ட்டி ஆக்சிடண்ட்டாகச் செயல்பட்டு கேன்சர் போன்ற நோய்கள் வராமல் காப்பதிலும், தீங்கு விளைவிக்கும் ஃபிரீ ராடிகல்களுக்கு இன்னொரு எலெக்டிரானைக் கொடுத்து அதை நடு நிலைப்படுத்துவதாகவும் ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
வைட்டமின் B2, மூளையின் செல்களில் உள்ள சிறிய குறைபாடுகளை நீக்குவதன் மூலம் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியைக் குணப்படுத்துவதில் பங்கு வகிக்கிறது. மேலும் ஹோமொசிஸ்டைன் என்ற அமினோ அமிலத்தை உடைப்பதன் மூலம் இதயத்தையும் பாதுகாக்கிறது. இந்த ஹோமோசிஸ்டைன் ரத்தத்தில் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இதய நோய்களும், ஏன் ஸ்டிரோக் என்று சொல்லப்படும் பக்கவாதமும் வரலாம். மேலும் காடராக்ட் எனப்படும் கண்புரை வராமல் காப்பதிலும் வைட்டமின் B2 பங்கு வகிக்கிறது.
ஃபோலேட் மற்றும் வைட்டமின் B6 உடலுக்குத் தேவையான வேதிப் பொருளாக மாற்றப்பட ரிபோபிளேவின் அவசியம் தேவை. அமினோ அமிலங்களை, வைட்டமின் B2 நியூரோ டிரான்ஸ்மிட்டர்களாக மாற்றி சிந்தனைச் செயல்பாட்டுக்கும் ஞாபக சக்திக்கும் உதவுகிறது. தசைகளின் சக்திக்கு உதவுவதால், விளையாட்டு வீரர்களுக்கு இன்றியமையாத ஒன்றாகும்.
உண்ட உணவான கொழுப்பு - புரதம் - கார்போஹைடிரேட்டில் இருந்து சக்தியை பிரிப்பதற்கு வைட்டமின் B2 முக்கியத் தேவை. இந்த அடிப்படைச் செயல்பாடு உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் தேவை. அதனால் இந்த தண்ணீரில் கரையக் கூடிய வைட்டமினை சரிவிகித உணவு எடுப்பதன் மூலம் ஒவ்வொரு நாளும் உடலில் நிரப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.
தையமினைப் போலவே (B1), ரிபோபிளேவினும் உடலின் முக்கிய லீடர் நியூட்ரியண்ட்டாகும்.
இந்த வைட்டமின் B2 குறைபாடு கீழ்க்கண்ட நோய் அறிகுறிகளைத் தோற்றுவித்து உடலின் பல பகுதிகளைப் பாதிக்கும்.
. ஒளியைக் கண்டால் கண்கள் கூசுவது இந்த வைட்டமினின் குறைபாடுகளில் முக்கியமான ஒன்றாகும்
. கண்களில் அரிப்பு
. கண்களில் நீர் வடிதல்
. கண்களில் ரத்தத் திட்டுகள்
. மையோபியா எனப்படும் தூரத்தில் இருக்கும் பொருட்களைக் காண முடியாமை
. உதடு மற்றும் உதட்டோரங்களில் வெடிப்பு
. பாதங்களில் வெடிப்பு
. ரத்தத்தில் அதிக ஹோமோசிஸ்டைன்
. ரத்த சோகை
. மைக்ரேன் தலைவலி
. தைராய்டு செயல்பாடு பிறழ்ச்சி
. வளர்சிதை மாற்றம் தொய்வடைதல்
. மூக்கின் பக்க வாட்டில் எண்ணெய் பசை போல ஏற்படுதல்
. சைனஸ்
. மூக்கு மற்றும் விதைப்பைகளில் ஏற்படும் அரிப்பு மற்றும் தோல் உரிதல்
. வாய் மற்றும் நாக்கில் வீக்கம்
. தொண்டைப் புண்
. சளிச் சவ்வுகளில் வீக்கம்
. மன அழுத்தம் மற்றும் பதட்டமான மனநிலை
இந்த B2 வைட்டமின் அதிக டோசேஜ் ஆக பொதுவாக வாய்ப்பில்லை. அதனால் அதிக டோஸால் ஏற்படும் விளைவுகளுக்கு விரிவான விளக்கம் இல்லை.
ரிபோஃபிளேவின் வைட்டமின் கீழ்க்கண்ட உணவுப் பொருட்களில் உள்ளது.
. ஈரல்
. மீன்
. கிட்னி
. பாதாம்
. புல் உண்ணும் கால்நடைகளின் பாலில் எடுக்கப்படும் சீஸ்
. புல் உண்ணும் விலங்களின் மாமிசம்
. காளான்
. முட்டை
. மிளகாய்
. ப்ரோக்கோலி
உடலின் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு வைட்டமின் B2 தேவை:
. கொழுப்பு - புரதம் - கார்போஹைடிரேட் வளர்சிதை மாற்றம்
. மருந்துகள் வளர் சிதை மாற்றம்
. உடலின் சக்தி தயாரிப்பு
. குளூடாதியோன் (Glutathione) எனப்படும் உடலால் தயாரிக்கப்படும் ஆண்டி ஆக்சிடண்ட் மறு தயாரிப்பு
. வைட்டமின் B6, ஃபோலிக் ஆசிட், வைட்டமின் A மற்றும் நியாசின் போன்ற வைட்டமின்களை ஆக்டிவ் வடிவத்துக்கு மாற்றுதல்.
கீழ்க்கண்டவை வைட்டமின் B2 உடலால் கிரகிக்கப் படுவதைத் தடுக்கும்.
. ஆல்கஹால்
. காப்பர்
. ஆண்டாசிட்டுகள்
. வைட்டமின் B3 மற்றும் C
. தியோஃபிலின் எனப்படும் ஆஸ்த்மா மருந்து
. ஆண்டிபயாடிக்குகள்
. கவுட் எனப்படும் கீல்வாதத்துக்கு எடுக்கும் மருந்துகள்
இந்த வைட்டமின் B2 வின் தினசரி பரிந்துரைக்கப் பட்ட அளவு பின் வருமாறு:
பிறந்த குழந்தைகள் முதல் 6 வயது வரை - 0.4 முதல் 1.0 மில்லி கிராம்
7-10 வயது - 1.4 மிகி
11-14 வயது - 1.6 மிகி
15-22 வயது - 1.7 மிகி
ஆண்கள் 23-50 வயது வரை - 1.6 மிகி
ஆண்கள் 51 வயதுக்கு மேல் - 1.4 மிகி
பெண்கள் 11-22 வயது - 1.3 மிகி
பெண்கள் 23 வயதுக்கு மேல் - 1.2 மிகி
கர்ப்பிணிகளுக்கு - 1.5 - 1.6 மிகி
பாலூட்டும் தாய்மார்களுக்கு - 1.7-1.8 மிகி
வைட்டமின் B2 வைத் தேவையான அளவுகளில் எடுத்து உடல் ஆரோக்கியம் காப்போம்.

சக்தி கொடு! - 9 சிவராம் ஜெகதீசன்


ஆரோக்கிய வாழ்வுக்கான வைட்டமின்களும் மினரல்களும்
********************************
வைட்டமின் B காம்ப்ளக்ஸ்***********************
வைட்டமின் B காம்ப்ளக்ஸ் என்ற உடலின் வளர்சிதை மாற்றத்திற்குத் தேவையான, சக்தியை உடலுக்குக் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும், உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் முக்கியக் காரணமான வைட்டமினைப் பற்றிப் பார்ப்போம்.
இந்த வைட்டமின் B என்பது கீழ்க்கண்ட 11 வகையான B வைட்டமின்களின் தொகுப்பு. அனைத்து B வைட்டமின்களை சேர்த்து பி காம்ப்ளக்ஸ் என்று அழைக்கிறார்கள்.
. B1 தையமின் (Thiamine)
. B2 ரிபோஃப்ளேவின் (Riboflavin)
. B3 நியாசின் மற்றும் நியாசினமைட் (Niacin and Niacinamide)
. B5 பேண்டோதெனிக் ஆசிட் (Pantothenic acid)
. B6 பைரிடாக்சின் (Pyridoxine)
. B7 பயோட்டின் (Biotin)
. B9 ஃபோலிக் ஆசிட் (Folic acid)
. B10 பாரா-அமினோபென்சாயிக் ஆசிட் (Para-aminobenzoic acid)
. B12 கோபாலமின் (Cobalamin)
. கோலின் Choline
. ஐனோசிடால் Inositol
இவையல்லாமல் B17 போன்ற வகை வைட்டமின்களும் உள்ளன.
பொதுவாக இந்த பல வகையான வைட்டமின் B க்கள் அனைத்தும் உண்ணும் உணவில் சேர்ந்து கலந்தே உள்ளது. இது ஒரு தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின் வகையாகும். இவை பெரும்பாலும் உடலில் சேமித்து வைக்கப்படாமல் உடலால் வெளியேற்றப் படும். அதனால் உடல் இந்த வைட்டமின் சப்ளிமெண்டுகளை அதிக பட்சம் உபயோகிக்க இரண்டு வேளையாக எடுப்பது நல்ல பலனைத் தரும். அதாவது ஒரு நாளுக்கு 1000 மில்லி கிராம் வைட்டமின் எடுக்க வேண்டும் என்றால் காலையில் 500மிகி இரவில் 500மிகி என்று எடுக்க வேண்டும்.
எஸ்டிரோஜன் தெரபி மற்றும் குழந்தைப் பிறப்பைக் கட்டுப் படுத்தும் மருந்துகள் - போன்ற ஹார்மோன்களைச் சரி செய்யும் மருந்துகள் எடுக்கும் போது உடலுக்கு வைட்டமின் B அதிகம் தேவைப்படும். ஆண்டிபயாடிக்குகள் எடுக்கும் போதும் கூடவே வைட்டமின் பி12 மாத்திரை ஒன்றை எடுக்க வேண்டும். பெரும்பாலும் நீரிழிவு வியாதிக்காரர்கள் அனைவரும் வைட்டமின் B12, B1 அல்லது பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகளை எடுப்பது தவறில்லை என்றாலும், ரத்தப் பரிசோதனையில் வைட்டமின் B பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால் உடனடியா நிறுத்தவோ அல்லது டோசேஜ் குறைக்கவோ வேண்டும்.
வைட்டமின் B யானது, ஈரலின் செயல்பாட்டுக்கு உதவி செய்வது, கால்கள் மரத்துப் போதல் பிரச்சினையைச் சரி செய்வது, தைராய்ட் சுரப்பியின் செயல்பாட்டுக்குக்கு உதவுவது, மூளையின் வேதிச் செயலின் ஸ்திரத்தன்மைக்கு உதவுவது, புரதம்-கொழுப்பு-மாவுச்சத்துகளை உடல் சக்தியாக மாற்றும் வளர்சிதை மாற்றத்தில் உதவுவது போன்ற உடலின் முக்கியச் செயல்களுக்குக் காரணமாகிறது.
வைட்டமின் பி குறைபாட்டால், பசியின்மை, எரிச்சலான மனப்பான்மை, நோயெதிர்ப்பு சக்தியின்மை, தூக்கமின்மை, சர்க்கரை மீதான ஏக்கம் (Sugar Cravings), நரம்பு மண்டலப் பிரச்சினைகள் போன்றவைகள் ஏற்படும்.
வைட்டமின் B1 - தையமின்
***********************
இப்போது வைட்டமின் பி தொகுப்பில் உள்ள முதல் வைட்டமினான B1-தையமின் பற்றிப் பார்ப்போம்.
இந்த B1 - தையமின் வைட்டமின் என்பது, நவரத்தினங்களில் வைரம் போல, உடலுக்கான நுண்சத்து தேவைகளில் மதிப்பு மிக்க ஒன்றாகும்.
இந்த தையமின் வைட்டமின், உண்ட உணவிலிருந்து சக்தியை விடுவித்து உடலுக்கு அளிப்பதில் உதவி செய்கிறது. இந்த சக்தி விடுவிப்பு செயலைச் செய்வதால் உடலின் முக்கியச் நிகழ்வுகளான பசி, ஜீரனம் மற்றும் நரம்பு மண்டலச் செயல்பாடுகளில் முக்கியப் பங்காற்றுகிறது. இந்த தையமின் இருக்கும் உணவுகளில் மற்ற வகையான நுண் சத்துகளும் செறிந்து காணப்படும்.
நம்ம அபிஷேக் பையன் நல்ல படிப்பாளி, ஜிம்முக்கு எல்லாம் போய் நல்லா உடம்பை மெய்ண்டெய்ன் செய்யும் ஒரு டீனேஜர். ஆனா கடந்த ஆறு மாசமா அவனோட நடவடிக்களால அவனோட ஃபிரண்ட்ஸ் கடுப்பாகி யாரும் அவனோட பேசறதே இல்ல. போன வாரம் அவனோட அம்மா ஏதோ சொல்லப் போய் கோபம் வந்து டீவியத் தூக்கிப் போட்டு உடைச்சிட்டான். இது ஒரு சம்பவம்.
நம்ம கோகிலா டீச்சர், செய்யும் ஆசிரியர் தொழிலில் நல்ல ஈடுபாடு உள்ள, கடமையில் எந்தத் தவறும் செய்யாத, அடுத்தது தலைமையாசிரியையாகப் போகும் ஒரு குடும்பத்தலைவி. இவங்க கொஞ்சம் குண்டாவும் இருக்கறதால சாப்பாட்டைக் குறைச்சு, சிப்ஸ், சாக்கலேட் மற்றும் கூல் டிரிங்க்ஸ்னு ஏதோ ஒன்ன சாப்பிட்டுக்கிட்டு ஒழுங்கான சாப்பாட்டைச் சாப்பிடாம ரொம்ப பிசியா இருக்கறவங்க. ஒரு நாள் திடீர்னு பசியே எடுக்காம போய் எடையிழப்பும் ஆக ஆரம்பிச்சது. இது இன்னொரு சம்பவம்.
நம்ம ஸ்டீஃபன் ராஜ் ஒரு ஓட்டப் பந்தைய வீரன், கொஞ்சம் ரவுடிப் பயலும் கூட. அடிக்கடி தகறாரு ஆகி விழுப்புண்கள் ஏற்படறதும் காயங்கள் ஆறுவதும் சகஜம். ஒரு நாள் அப்படி சாதாரனமா ஆன ஒரு காயம் ரொம்ப நாளா ஆறவே இல்ல. இது மூனாவது சம்பவம்.
மூனு பேரும் டாக்டரைப் பார்க்கப் போனாங்க. டாக்டர் என்ன சொன்னாருன்னு சரியா யூகிச்சிருப்பீங்க. அதான் சார், இந்த மூனு பேரோட பிரச்சினைகளுக்கும் காரணம் தையமின் என்று சொல்லப்படும் வைட்டமின் B1 குறைபாடு. வைட்டமின் B1 சப்ளிமெண்டுகளை கொடுத்ததும் படிப்படியா அவங்க பிரச்சினை சரியாக ஆரம்பிச்சது. உடலின் ஒவ்வொரு செல்களிலும் நடக்கும் ஆக்சிடேஷன் செயல்பாட்டில் B1 முக்கியப் பங்கு வகிக்கிறது. முக்கியமாக நரம்பு மண்டலச் செயல்பாட்டில்.
அதிகப் படியான சர்க்கரை சாப்பிடுவதும் B1 செயல்பாட்டையும் உடலின் B1 வைட்டமின் கிரகிப்புத் தன்மையையும் குறைக்கும். இதனால் நரம்பு மண்டலக் கோளாறுகள் ஏற்பட்டு ஞாபக சக்தி போன்ற மூளையின் செயல்பாடுகளையும் குறைக்கும். இதனால் பிஹேவியரல் குறைபாடுகள் எனப்படும் நடத்தையின் மாற்றங்களைக் கொண்டு வரும். திடீரென மூர்க்கமாக நடந்து கொள்ளுதல் போன்றவை இதில் அடங்கும். ஆம், Big Boss நிகழ்ச்சியில் கஞ்சா கருப்பு அவர்கள் தீயனைப்பு சிலிண்டரை எடுத்து பரணியை அடிக்கப் போனதற்கு B1-தையமின் குறைபாடும் காரணமாக இருக்கலாம்.
டயட் இருக்கிறேன் பேர்வழி என்று சரியான சத்துகள் உள்ள உணவுகளைச் சாப்பிடாமல் போனாலும் B1 குறைபாடு வரும். உடல் உஷ்னம் தொடர்ச்சியாக குறைந்திருந்தால் அது B1 குறைபாடாக இருக்கலாம். மாவுச்சத்து சக்தியாக மாற்றப்பட தையமின் அவசியம் தேவை. நீங்கள் குளூக்கோஸேயே சாப்பிட்டாலும், தேவையான தையமின் உடலில் இல்லையென்றால் குளூக்கோஸ் சாப்பிடதுக்கு உண்டான சக்தி உடலில் சேராது. முக்கியமாக குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு தையமின் உடலில் சேராது. உடலில் இருக்கும் தையமினையும் குடிப்பழக்கம் அழித்து விடும்.
மிக மோசமான தையமின் குறைபாடு - தசைகள் கட்டுப்பாடிழப்பு, ஞாபக சக்தி இழப்பு, ஏற்கனவே இருக்கும் உடல் நலக் கோளாறுகளை மேலும் அதிகரிப்பது போன்றவற்றை ஏற்படுத்தி Wernicke-Korsakoff syndrome எனப்படும் மூளை பாதிப்பை உருவாக்கும்.
நரம்பு மண்டலக் கோளாறுகளை உடலில்
நிரந்தரமாக ஏற்படுத்தும்.
மாவுச்சத்து சக்தியாக மாற்றப்படும் போது உருவாகும் லாக்டிக் ஆசிட் சரியாக வெளியேற்றப் படாத போது கால்களில் அசௌகர்யமான ஒரு உணர்வு ஏற்பட்டு Restless Leg Syndrome (RLS) என்ற நிலை வருவதற்குக் காரணம் தையமின் குறைபாடே. இது உடலின் வேறு பகுதிகளிலும் ஏற்படும். கடுமையான உடற்பயிற்சியின் போது ஏற்படும் வலி சரியாவதற்கும் வைட்டமின் பி1 ஐ எடுக்கலாம்.
தையமின் குறைபாடு ஏற்படும் போது ஒவ்வொரு கட்டத்திலும் விதவிதமான அறிகுறிகள் தோன்றும். முதல் நிலையில் சக்தி இல்லாத உணர்வும் சோர்வும் ஏற்படும். மன அழுத்தமும், எரிச்சலான மன நிலையும் ஏற்படும். பசியின்மை ஏற்படும். இதைச் சரி செய்யாத போது அடுத்த நிலையில் இந்த உடல் ரீதியான அசௌகர்யங்கள் அதிகமாகும். தலைவலி, ஜீரனக் கோளாறுகள் போன்றவை ஏற்படும். இதயத் துடிப்பு அதிகமாகும். இதன் அதிக பட்ச குறைபாட்டில் நரம்பு பாதிப்பு ஏற்பட்டு பெரிஃபெரல் நியூரிடிஸ் (peripheral neuritis) என்ற நிலை ஏற்படும். இதனால் கால்களில் மிகுந்த சோர்வு ஏற்பட்டு குறக்களி பிடித்தல், எரியும் உணர்வு, மரத்துப் போதல் போன்றவை ஏற்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் தையமின் குறைபாடு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். இவை சரி செய்யப் படாத போது உச்ச கட்டமாக பெரிபெரி நோய் ஏற்படும்.
வைட்டமின் பி1 குறைபாடு அதிகமாக இருந்தால் வருவது பெரிபெரி (beriberi) நோய். இந்த நிலையில் இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும். இந்த நிலை மோசமானால் என்லார்ஜ்ட் ஹார்ட் எனப்படும் இதயம் வீங்குவது போன்றவை ஏற்பட்டு மாரடைப்புக்குக் காரணமாகும். இதில் வெட் பெரிபெரி (wet) மற்றும் டிரை பெரிபெரி (dry) என்ற இரண்டு வகை உள்ளது. உடல் அதிக நீர்ச் சத்தைத் தேக்கி வைத்துக் கொண்டும், இதயக் கோளாறுகளை ஏற்படுத்துவதும் வெட் டைப் பெரிபெரி. நரம்பு மண்டலம் மற்றும் தசைகளில் ஏற்படும் தையமின் குறைபாடு அறிகுறிகள் டிரை டைப் பெரிபெரி. இதற்குச் சரியான சிகிச்சை எடுக்காவிடில் இறப்பு வரை கொண்டு போகும். இதில் வெட் ஃபார்ம் என்பதை சப்ளிமெண்டுகள் மூலம் முற்றிலும் சரிப்படுத்தலாம். ஆனால் டிரை ஃபார்ம் கோளாறுகளை அவ்வாறு முற்றிலும் சரி செய்ய முடியாது. அது உடலில் நிரந்திரமான பாதிப்பை ஏற்படுத்தும்.
பி1 குறைபாடு இருந்தால் உடலில் உள்ள நரம்புகளைச் சுற்றி உள்ள myelin எனப்படும் பாதுகாப்பு உறை சிதையும். இந்தக் குறைபாடு இருக்கும் போது இப்படி சிதைந்த myelin ஐ மறு சீரமைக்க முடியாது. இந்த நிலையில் விரல்கள், கைகள், கால்கள் மற்றும் பாதங்கள் மரத்துப் போகும் நிலை அல்லது டிங்கிளிங் எனப்படும் கூச்ச உணர்வும் ஏற்படும். இதனால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பெரிஃபெரல் நியூரோபதி எனப்படும் நரம்பு மண்டலக் கோளாறு வைட்டமின் பி1 குறைபாட்டால் ஏற்படும்.
***நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சராசரி மனிதர்களை விட 15 மடங்கு அதிகமாக வைட்டமின் பி1 தேவைப்படும்.
வைட்டமின் பி1 குறைபாட்டால் தலையைத் திருப்பும் போது கண் பார்வை ஒத்துழைக்காமல் போகும். உதாரணத்துக்கு ஒரு பேனாவைப் பார்த்துக் கொண்டு உங்கள் தலையைத் திருப்பினால், தலை போகும் திசைக்கு எதிர்த்திசையில் கண் விழி நகர்ந்து பார்க்கும் பொருள் மீது நிலை கொள்ளும். இதற்கு காதுகளின் உட்புறத்தில் உள்ள நரம்புகளின் ஒருங்கினைப்பால் நடக்கிறது. அதற்கான நரம்புகளின் சமிக்ஞையில், பி1 குறைபாடு இடையூறு செய்கிறது. இதனால் கண் ல்விழி அலைபாயும் நிலை ஏற்படும். இந்த நிலைக்குப் பெயர் Nystagmus. வைட்டமின் பி1 சரியான அளவில் எடுப்பதால் இந்நிலை சரி செய்யப்படும்.
அதிகப்படியான ஸ்டிரெஸ் என்று சொல்லப்படும் மன அழுத்தம் பி1 குறைபாட்டை ஏற்படுத்துகிறது.
இந்த முக்கியமான பி1 (தையமின்) வைட்டமினின் பரிந்துரைக்கப்பட்ட ஒரு நாள் அளவு பின் வருமாறு:
உடல் ரீதியான பிரச்சினைகள் எதுவும் இல்லையென்றால்:
குழந்தைகளில் இருந்து 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு : 0.2 முதல் 1.4 மில்லி கிராம் (மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றே பி1 சப்ளிமெண்ட் எடுக்க வேண்டும்)
18 வயதுக்கு மேல் : ஆண்களுக்கு 1.2 மிகி, பெண்களுக்கு 1.1 மிகி.
பாலூட்டும் தாய்மார்களுக்கு : 1.4 மிகி
தையமின் குறைபாடு இருந்தால்: 50 மிகி வரை மாத்திரையாகவோ அல்லது ஊசி மூலமாகவோ எடுக்க வேண்டும்.
குடிப்பழக்கம் நிறுத்தியவர்களுக்கு அவர்களின் வித்டிராயல் அறிகுறிகளைச் சரிப் படுத்துவதற்காக 100 மிகி ஊசி மூலம் கொடுக்கப்பட வேண்டும்.
நீரிழிவு உள்ளவர்களுக்கு 18 முதல் 20 மில்லி கிராம் வரையில் பி1 தேவை.
தையமின் சப்ளிமெண்ட்டை எடுப்பதன் மூலம் கொசு போன்ற சிறு பூச்சிகள் அணுகுவதில் இருந்து தப்பிக்கலாம். பூண்டு அதிகம் சேர்ப்பதும் கொசுக்கடிகளில் இருந்து தப்பிக்க வைக்கும்.
கீழ்க்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் உங்கள் உடலில் வைட்டமின் B1 குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.
. மனக் குழப்பம்
. பசியின்மை
. சோர்வு
. ஞாபகமறதி
. தலைவலி
. எரிச்சலான மற்றும் பதட்டமான மன நிலை
. மன அழுத்தம்
. இதயத்துடிப்பு அதிகமாதல்
. தூக்கமின்மை
. நரம்புக் கோளாறுகள்
தினசரி ஆல்கஹால் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் மூர்க்கமான செயல்பாடுகள் தையமின் குறைபாட்டினால் ஏற்படுவதே.
கீழ்க்கண்டவைகள் வைட்டமின் பி1 குறைபாட்டை உருவாக்கும்.
. ஆல்கஹால்
. ஆண்டிபயாடிக்ஸ்
. காஃபி மற்றும் டீ
. சிறுநீரகப் பிரச்சினைக்குக் கொடுக்கப்படும் மருந்துகள்
. கருத்தடை மாத்திரைகள்
. சர்க்கரை
. உணவுகளில் சேர்க்கப்படும் ரசாயனங்கள்
. ஆஸ்த்துமாவுக்குக் கொடுக்கப்படும் தியோஃபைலின் மருந்துகள்
இதே தையமின் அதிகமாக எடுத்தால் உடலின் வைட்டமின் பி6ஐயும் மக்னீசியம் குறைபாட்டையும் உருவாக்கும்.
வைட்டமின் பி1 உள்ள உணவுகள்:
. நட்ஸ் எனப்படும் கொட்டை வகைகள்
. மாமிசம் மற்றும் ஈரல்
. பூண்டு
வைட்டமின் B1 உள்ள உணவுகளை தினசரி சேர்ப்பதன் மூலம் வைட்டமின் B1 சம்பந்தமான பிரச்சினைகள் உடலுக்கு வராமல் பாதுகாப்போம்.

சக்தி கொடு! - 8 சிவராம் ஜெகதீசன்

ஆரோக்கிய வாழ்வுக்கான வைட்டமின்களும் மினரல்களும்********************************
இந்த பாகம் தொடங்கி இனிமேல் வரப்போகும் பல பாகங்களிலும், ஒவ்வொரு வைட்டமினால் ஏற்படும் நன்மைகளோடு கூட, அம்மாத்திரைகளை எடுப்பதால் / எடுக்காததால் விளையும் உடற்கேடுகள் குறித்தும் சொல்லப்படும். அடடே இவர் சொல்வது நமக்குப் பொருந்துகிறதே, நமக்கு இந்தப் பிரச்னை இருப்பதுபோலத் தெரிகிறதே என்று உடனே ஃபார்மசிக்குச் சென்று, வைட்டமின் மாத்திரைகளை வாங்கி, பாதாம் உண்ணுவது போல எடுக்கக் கூடாது. உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்த பின்னரே, வைட்டமின் சப்ளிமெண்டுகளை நீங்கள் எடுக்க ஆரம்பிக்க வேண்டும். அப்படி இல்லாமல், நீங்களே சப்ளிமெண்டுகள் எடுப்பது பெரிய ஆபத்து. சரியாகச் சொல்லுவதென்றால், வைட்டமின் குறைவால் விளையும் ஆபத்தைக் காட்டிலும் மிகு வைட்டமின் அதிக ஆபத்து. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டியது உங்கள் கடமை.
வைட்டமின் A 
************
வைட்டமின்கள் கண்டுபிடிக்கப்பட்டு சப்ளிமெண்டுகளாக உபயோகப் படுத்துவதற்குப் பல காலம் முன்னரே சில வகையான உணவுகள் சில வகையான நோய்களைக் குணப்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்து உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். எகிப்தியர்கள் ஈரலை உணவாகக் கொடுக்கும்போது மாலைக்கண் நோய் சரியாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள். ஈரலில் இருக்கும் வைட்டமின் A வே இதற்குக் காரணம்.
1912ஆம் ஆண்டு டாக்டர் காசிமிர் ஃபங்க் (Casimir Funk) என்பவர், நெல் உமியில் உள்ள நுண்சத்துகளைக் கண்டறிந்து அதற்கு Vitamines என்று பெயர் வைத்தார். வைட்டமின் A முதல் முதலாக காட் லிவர் ஆயிலில் இருந்து 1913ஆம் வருடம் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது.

வைட்டமின் A எனப்படும் கொழுப்பில் கரையும் வைட்டமின் இரண்டு வகைப்படும். ரெட்டினாய்டுகள் மற்றும் கரோடினாய்டுகள் (Retinoids and Carotenoids). இதில் ரெட்டினாய்ட் வகை, இறைச்சி உணவிலும் கரோடினாய்ட் வகை, காய்கறி உணவிலும் உள்ளது. ரெட்டினாய்ட் வகை வைட்டமின் ஆக்டிவ் வகை என்று அழைக்கப்படும். அதாவது இறைச்சியில் உள்ள வைட்டமின் A உடல் உபயோகிப்பதற்கான வடிவத்தில் இருக்கும்.

ஆனால் காய்கறிகளில் இருக்கும் கரோடினாய்ட் வகை வைட்டமின் A ப்ரொ வைட்டமின் அல்லது பிரீ கர்சர் என்று அழைக்கப்படும். அதாவது இந்த பிரீகர்சர்களை ஈரல் சேமித்து வைத்துக் கொண்டு உடலுக்குத் தேவைப்படும் நேரத்தில் வைட்டமின் A வாக மாற்றும். இது மேலும் ஆல்பா கரோட்டின், பீட்டா கரோட்டின் மற்றும் காமா கரோட்டின் என்று மூன்று வகைப்படும். இந்த கரொடினாய்டுகள் வைட்டமின் A வாக மாற்றப் பட்டு ஆக்டிவ் வடிவத்துக்கு மாறும். அதிகபட்சமாக உடலானது நான்கு முதல் ஆறு சதவீதம் வரையே கரோடினாய்டுகளை ஆக்டிவ் வைட்டமின் Aவாக மாற்ற முடியும், அதுவும் உடல் நல்ல நலத்துடன் இருந்தால் மட்டுமே. இந்த வைட்டமின் A வகையில் உள்ள பீட்டா கரோட்டின், ஃபிரீ ராடிகல்களால் ஏற்படும் செல்களின் சேதத்தைக் குறைக்க உதவும் ஷாக் அப்சார்பர் போல செயல்படுகிறது. முக்கியமாக கேன்சர் நோய் வராமல் தடுக்க பெருமளவில் உபயோகமாகிறது.
உடலின் இரண்டாவது மூளை எனப்படும் குடல், நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே கரோடின்களை ஆக்டிவ் வைட்டமின் A வாக மாற்ற முடியும். வயிற்றில் சுரக்கும் அமிலங்களும் இந்த வைட்டமினை கிரகிக்க சரியான அளவில் தேவை. ஆண்டாசிட்டுகள் வைட்டமின் A கிரகிப்பைக் குறைக்கும். பித்தப் பையில் சுரக்கும் பித்த நீரும் வைட்டமின் A கிரகிப்புக்கு முக்கியத் தேவை.
காய்கறி உணவுகளில் பிரீகர்சர் எனப்படும் கரோட்டின்கள் உள்ளன என்று பார்த்தோம். நீரிழிவு, ஹைப்போதைராய்டிசம் மற்றும் கல்லீரல் பிரச்சினை இருப்பவர்களுக்கு, உடலானது கரோட்டின்களை வைட்டமின் A வாக மாற்றும் சக்தி குறைகிறது.
கொழுப்பில் கரையும் இந்த வைட்டமின் A, கொழுப்பில் பயனித்து செல்களுக்குள் நேரடியாகச் செல்லும் வல்லமை படைத்தவை. செல்களைச் சுற்றி கொழுப்பு இருப்பதால் தண்ணீரில் கரையும் வைட்டமின்களால் இப்படி செல்களுக்குள் நேரடியாகச் செல்வது இயலாது.
இதன் செயற்கை வடிவங்களாக வைட்டமின் A பால்மிடேட் மற்றும் வைட்டமின் A அசிட்டேட் என்ற இரண்டு வகைகளாக உள்ளது. இந்த செயற்கை வைட்டமின்கள் ரெட்டினாய்ட் போல உடல் உபயோகிக்க ஏற்ற ஆக்டிவ் வடிவத்தில் இருக்கும்.
வைட்டமின் A வின் சிறப்பு வடிவங்களான Trentonoin மற்றும் isotrentinoin முகப்பரு போன்றவற்றைச் சரி செய்ய உதவுகிறது. மேலும் சில வகையான ரெட்டினாய்டுகள் கேன்சர் போன்ற நோய்களைத் தடுப்பதற்கு உபயோகமாகிறது. இந்த வகை ரெட்டினாய்டுகள் இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. இந்த வடிவங்கள் இப்போது சந்தையில் கிடைப்பதில்லை. ஆனால் உணவு மூலம் இவற்றை எடுப்பதில் எந்தத் தடையுமில்லை.

உடலின் கீழ்க்கண்ட செயல்களுக்கு வைட்டமின் A தேவை:
. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. ரத்த வெள்ளை அணுக்களைப் பெருகச் செய்து நோய் எதிர்ப்பில் முக்கியப் பங்காற்றுகிறது.
. தோல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
. சுற்றுச் சூழலால் உடலில் ஏற்படும் நச்சுகளை அகற்ற உதவுகிறது.
. கேன்சர் எனப்படும் புற்று நோய் வராமல் காக்க உதவுகிறது.
. கண் பார்வைக்கு வைட்டமின் A அவசியமான ஒன்றாகும்.
. எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
இந்த வைட்டமின் A ஆண்டி ஆக்சிடண்டுகளில் ஒன்றாகும். கர்ப்பிணிப் பெண்களுக்கும் மூன்றாம் டிரைமெஸ்டர் என்று சொல்லப்படும் 7 மாதங்களுக்கு மேலான நிலையில் வைட்டமின் A வின் தேவை அதிகரிக்கும். அந்த வேளையில் வைட்டமின் A உள்ள உணவுகளையோ சப்ளிமெண்டுகளையோ எடுப்பது தாய்க்கும் சேய்க்கும் நன்மை பயக்கும்.
நம்ம போலீஸ் ஆஃபீஸர் கோகுல் சாரோட மகன் அபிஷேக்குக்கு சில நாளாகவே சாயங்காலமானா கண் பார்வை சரியா தெரியாம இருந்தது. பார்வை மங்கலாக இருந்ததால சாயங்காலம் கூடப் படிக்கற பசங்களோட விளையாட முடியாம சீக்கிரமா வீட்டுக்குப் போக ஆரம்பித்தான். மாதக்கணக்கில் இது நீடிக்கவே, கோகுல்நாத் சார் அவனைக் கூட்டிட்டுப் போய் மருத்துவரைப் பார்த்தார். இது ஒரு நிகழ்வு.
இன்னொரு நிகழ்வாக, நம்ம கோகிலா டீச்சரோட பையன் ரமேஷுக்கு, அடிக்கடி காய்ச்சலும் இன்ஃபெக்‌ஷனும் வந்துட்டே இருந்தது. சின்னதா ரெண்டு துளி மழை தலைல பட்டாக்கூட காய்ச்சல், உடனே காய்ச்சலுக்கு மருந்து சாப்பிட்டுட்டு இருந்தான். இது இன்னொரு நிகழ்வு.
மேலே சொன்ன ரெண்டு பேரும் மருத்துவரைச் சந்தித்ததில், இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம் வைட்டமின் A குறைபாடு இருப்பதைக் கண்டு பிடித்தார். அவர்களுக்குத் தேவையான வைட்டமின் A உள்ள உணவுகளைப் பரிந்துரைத்தும் வைட்டமின் A சப்ளிமெண்டுகளைக் கொடுத்தும் இந்தக் குறைகளைச் சரி செய்தார்.
உங்கள் உடலில் வைட்டமின் A குறைபாடு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடியுமா? முடியும். கீழ்க்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் உங்கள் உடலில் வைட்டமின் A குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.
. கண்கள் வறண்டு போவது
. அடிக்கடி சோர்வுடன் தலை சுற்றல் வருவது
. ஹைப்போ தைராய்டிசம்
. அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுவது
. பெண்களுக்கு அடிக்கடி யீஸ்ட் இன்ஃபெக்‌ஷன் வருவது
. மாலைக் கண் நோய்
. பற்கள் மற்றும் எலும்புகள் வலுவிழத்தல்
. காயங்கள் ஆற அதிக காலம் எடுப்பது
. தோல் வறண்டு போய் செதிள் செதிளாக ஆகுதல்
மேற்கண்ட அறிகுறிகள் உங்களுக்குத் தெரிந்தால் வைட்டமின் A சப்ளிமெண்டுகளையோ அல்லது வைட்டமின் A அதிகம் உள்ள உணவுகளையோ எடுக்க வேண்டும். குறைபாடு இருக்கும் போது 25000 IU வரை ஒரு நாளுக்கு எடுக்கலாம். 50000 IU அளவுகளில் இதை தினமும்
எடுப்பது நச்சுத் தன்மையை உருவாக்கும்.
ஆண்டிபயாடிக்குகள், செரிமானக் கோளாறுகள், கொலஸ்டிராலைக் குறைக்கும் மருந்துகள் போன்றவை வைட்டமின் A குறைபாட்டை உருவாக்கும். ரத்தப் பரிசோதனை மூலம் உங்களுடைய ரத்தத்தில் உள்ள வைட்டமின் A அளவை அறியலாம்.
மேலே சொன்ன உதாரணத்தில் கோகிலா டீச்சர் இந்த வைட்டமின் A ரொம்ப நல்லது போல இருக்கேன்னு, வைட்டமின் சப்ளிமெண்ட்டை தொடர்ச்சியாக, டாக்டர் ரெகமண்ட் செய்த அளவை விட அதிகமான டோஸை தொடர்ச்சியாக கொடுக்க ஆரம்பித்தார். அதன் விளைவாக அவனுக்கு பசி குறைய ஆரம்பித்தது. முடி உதிர ஆரம்பித்தது. விரல்கள் பின்னிக் கொண்டன. வயதுக்குத் தகுந்த வளர்ச்சியும் இல்லை.
ஒரு நாள் மிகவும் முடியாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவனுடைய ஈரலும் மண்ணீரலும் வீங்கியிருப்பதைக் கண்டு பிடித்தார்கள். கோகிலா டீச்சரிடம் கேட்டபோது அவர் வைட்டமின் A சப்ளிமெண்ட்டைக் கொடுத்தைத் தெரிவித்தார். உடனடியாக வைட்டமின் Aவைக் கொடுப்பதை நிறுத்தச் சொன்னவுடன் சில மாதங்களில் ஆரம்பித்து இரண்டு வருசத்துக்குள் எல்லாப் பிரச்சினைகளும் சரியானது.
ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். வைட்டமின்கள் குறைவாக இருந்தாலும் ஆபத்து. அதிகமாகப் போனால் அதை விட ஆபத்து. அதனால் மருத்துவரிடம் ஆலோசனை செய்து அவர் கொடுக்கும் அளவுகளில் மட்டுமே வைட்டமின் சப்ளிமெண்டுகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதிகப் பிரச்சினைகள்தான் வரும்.
வைட்டமின் A வை உணவு மூலம் எடுக்கும்போது வைட்டமின் A நச்சுத்தன்மை உடலில் உருவாக பெரும்பாலும் வாய்ப்பில்லை. உதாரணத்துக்கு ஈரலை மட்டும் தினசரி முழு நேர உணவாக உண்டு கொண்டிருந்தால் மட்டுமே வைட்டமின் அதிகமாகி நச்சுத்தன்மை வரலாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே. இந்த வைட்டமின் A உடலில் அதிகமாகி நச்சானால் கீழ்க்கண்ட அறிகுறிகள் தோன்றும்.
. பசி உணர்வின்மை
. முடி கொட்டிப் போதல்
. அடிக்கடி தலை வலி
. மூட்டுகளில் வலி
. எடையிழப்பு
. எரிச்சலான மனநிலை
வைட்டமின் A வின் பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவு:
0-3 வயது: 2000 IU அல்லது 600 mcg
4-8 வயது: 3000 IU அல்லது 900 mcg
9-13 வயது: 5610 IU அல்லது 1700 mcg
14-18 வயது: 9240 IU அல்லது 2800 mcg
19 வயதுக்கு மேல்: 10000 IU அல்லது 3000 mcg
கீழ்க்கண்ட உணவுகளில் வைட்டமின் A உள்ளது.
அசைவ உணவுகள்: ஈரல், மீன்கள், முட்டை, சிக்கன்.
சைவ உணவுகள்: கேரட், மிளகாய், கீரைகள், ஆப்ரிகாட் பழங்கள், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, வெங்காயத்தாள், பால், பப்பாளிப் பழம், வெண்டைக்காய் தர்பூசனிப் பழம் போன்ற அனைத்துக் காய்கறி பழங்களிலும் கரோடினாய்டுகள் வடிவத்தில் வைட்டமின் A உள்ளது.
தாவர உணவுகளில் உள்ள கரோடினாய்டுகள் 700க்கும் மேல் உள்ளன. அவற்றில் 60 வகையான கரோடினாய்டுகள் உணவுப் பொருட்களில் உள்ளன. அதில் ஆல்ஃபா கரோட்டின், பீட்டா கரோட்டின், கிரிப்டோசாந்தின், லைகோபீன், லூட்டின் மற்றும் ஜீசாந்தின் போன்ற ஆறு வகைகள் நாம் சாதாரனமாக உண்ணும் உணவில் உள்ளன. (Alpha - carotene, beta - carotene, cryptoxanthin, lucopene, luetin and zeaxanthin - உங்களுக்கு விருப்பம் இருந்தால் இது பற்றி மேலதிக தகவல்களை கூகுள் மூலமாகப் பெறுவதற்காக இவற்றை ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறேன்).
இவற்றில் கிரிடோசாந்தின் வகை கரோடினாய்ட் கேன்சர் ஆபத்தைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. இது வெண்ணெய், ஆரஞ்சுப்பழம், முட்டை மஞ்சள் கரு, பப்பாளிப் பழம் போன்றவற்றில் உள்ளது. இது கண்களில் ஏற்படும் பார்வைக் குறைபாடுகளைப் போக்குவதில் முக்கியப் பங்காற்றுகிறது.
லைகோபீன் என்ற வகை கரோடினாய்டும் சில வகையான கேன்சரைத் தடுப்பதில் உதவுகிறது. LDL கொலஸ்டிராலைக் குறைக்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இவை அடர்த்தியான பச்சை நிறமுள்ள கீரைகள், கொய்யா, தர்பூசனிப் பழம், தக்காளி போன்றவற்றில் உள்ளது. இவற்றை கொழுப்புடன் சேர்த்து உணவாகத் தயாரிக்கும் போதும் சீஸுடன் சாப்பிடும் போதும் இதன் பயோஅவைலபிலிட்டி அதிகரிக்கிறது.
லூட்டின் மற்றும் ஜீசாந்தின் வகை கரோடினாய்டுகள் கண்கள் ஒளியை சரியாக கிரகிக்கவும் ஃபிரீ ராடிகல்ஸ்களில் இருந்து கண்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
நுரையீரல், வயிறு மற்றும் பல இடங்களில் உருவாகும் புற்று நோயை வர விடாமல் தடுப்பதுல் வைட்டமின் A முக்கியப் பங்காற்றுகிறது. தொடர்ச்சியாக தினமும் பச்சை மற்றும் மஞ்சள் நிறமுள்ள காய்கறிகளை உண்பது, கேன்சர் வருவதைத் தடுக்கும்.

சக்தி கொடு! - 7 சிவராம் ஜெகதீசன்

ஒவ்வொரு நாளும் உடலானது புதுப்புது செல்களை உருவாக்கியும் பழைய செல்களை வெளியேற்றியும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. இது ஒரு மனிதர் வாழும் காலம் வரை தொடர்ந்து நிகழும் ஒரு செயல். ஒவ்வொரு கணத்திலும், ரத்தச் சிவப்பணுக்கள் ஆக்சிஜனையும், நுண் சத்துகளையும் சுமந்துகொண்டு உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்கிறது. நரம்புகள் சமிக்ஞைகளை ஆயிரக்கணக்கான மைல்கள் பயனிக்க வைத்து மூளைக்கும் உடலும் மற்ற பாகங்களுக்கும் அனுப்புகிறது. உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடையே கெமிக்கல் சமிக்ஞைகளைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் உடலை இயங்கச் செய்கிறது. இதில் ஒன்று தடைபட்டாலும், சமநிலை தவறினாலும் நமக்குப் பிரச்னைகள் வருகின்றன.
உடலின் இந்த இயக்கம் ஒழுங்காக நடைபெற சில மூலப்பொருட்கள் தேவைப்படுகிறது. இதை வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் என்று அழைக்கிறோம். கிட்டத்தட்ட 30 வகையான முக்கியமான வைட்டமின்களும் மினரல்களும் உள்ளன. உடலின் தினசரித் தேவைக்காக இந்த வைட்டமின்களையும் மினரல்களையும் கணக்குப் போடுவது குழப்பத்தைத் தரும் ஒரு விஷயம். இந்த வைட்டமின்கள் பொதுவாக ஆங்கில எழுத்துருக்களில் அழைக்கப்படும். A, B, C, D, K போல. இந்த வைட்டமின்களை உடலால் நேரடியாகத் தயாரிக்க முடியாது. உணவின் மூலமே இது கிடைக்கும். இந்த வைட்டமின்களின் மூலப் பொருட்கள் உள்ள உணவை உண்ணும் பொழுது, அந்த உணவிலிருந்து உடல் அதைத் தயாரித்துக் கொள்கிறது. சத்தான உணவை உண்ண வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுவது இதற்காகத்தான். சத்தற்ற ருசியை மட்டுமே பிரதானமாகக் கொண்ட (பொரித்த அல்லது ஃபாஸ்ட் ஃபுட்) உணவுகளில் இதுபோன்ற அத்யாவசிய வைட்டமின்கள் குறைவாகவும் தரமற்றதாகவும் இருக்கும்.
இந்த வைட்டமின்களை கீழ்க்கண்ட இரு வகைகளாகப் பிரிக்கலாம்:
1. கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்கள் (கொ.க)
2. தண்ணீரில் கரையக் கூடிய வைட்டமின்கள். (த.க)
1. கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்கள் (கொ.க)
*******************************
கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்கள் A, D, E மற்றும் K. இந்த கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின் உள்ள உணவுகளை உண்ணும் பொழுதும் சப்ளிமெண்டுகளை உண்ணும் பொழுதும் கொழுப்புள்ள உணவுகளுடன் உண்ண வேண்டும். சப்ளிமெண்டுகளை ஒரு கை நிறைய வெண்ணெய்யுடனோ அல்லது நெய்யுடனோ எடுப்பது இந்த வைட்டமின்களை உடல் எளிதாக கிரகிக்கவும் சேமித்து வைக்கவும் உதவும். கொழுப்பில் கரையக் கூடிய இந்த வைட்டமின்கள் கீழ்க்கண்ட வழிகளில் பயணித்து ரத்தத்தில் கலக்கிறது.
1. வைட்டமின்கள் உள்ள உணவை உண்ணுகிறோம்.
2. வயிற்றில் உள்ள அமிலங்களால் உணவு உடைக்கப்பட்டு, ஜீரணமாகி, சிறு குடலுக்குள் தள்ளப்பட்டு அங்கு அதில் உள்ள சத்துகள் கு(உ)டலால் உறிஞ்சப் படுகிறது. கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்களை உடல் கிரகிக்க பித்த நீர் தேவை. கல்லீரலால் இந்த பித்த நீர் சுரக்கப்பட்டு சிறுகுடலில் கலந்து, கொழுப்பை உடைத்து சிறுகுடலின் சுவர்கள் மூலம் சத்துகள் உடலால் உறிஞ்சப்படுகிறது.
3. இந்த வைட்டமின்கள் நிணநீர்க் குழாய்கள் வழியாக புரதத்துடன் சேர்ந்து உடல் முழுதும் பயணிக்கிறது. இந்தப் பயனத்தில் உடலால் உபயோகப் படுத்தப்பட்டு, மீதமுள்ள கொழுப்பில்
கரையக் கூடிய வைட்டமின்கள் கல்லீரலிலும் கொழுப்புத் திசுக்களிலும் சேமிக்கப் படுகிறது.
4. எப்பொழுதெல்லாம் இந்த வைட்டமின்கள் உடலுக்குத் தேவைப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் இந்தச் சேமிப்பிலிருந்து உடல் கிரகித்துக் கொள்ளும்.

இந்த சேமிப்பே ஒரு எதிர் விளைவையும் உருவாக்குகிறது. கணக்கு வழக்கில்லாமல் சப்ளிமெண்டுகள் மூலமாக இந்த கொ.க. கூடிய வைட்டமின்களை உண்ணும் பொழுது அதிக டாக்சிக் லெவல் எனப்படும் உடலுக்கு ஊறு விளைக்கக் கூடிய அளவுக்கு இவற்றின் அளவுகள் அதிகமாகும். கொழுப்புள்ள உணவுகளும் கொழுப்பு எண்ணெய்களும் கொ.க. வைட்டமின்களைத் தேக்கி வைக்கும் தேக்கங்கள். உடல், இந்தத் தேக்கங்களில் கொ.க வைட்டமின்களை மாதக்கணக்கில் தேக்கி வைத்து அதாவது சேமித்து வைத்து உடலுக்கு எப்போது தேவையோ அப்போது உடல் அவற்றை உபயோகித்துக் கொள்ளும்.
2. தண்ணீரில் கரையக் கூடிய வைட்டமின்கள். (த.க)
******************************
கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்களான A, D, E, K தவிர மற்ற அனைத்து வைட்டமின்களும் தண்ணீரில்
கரையக் கூடிய வைட்டமின்களாகும். உணவிலிருந்தோ அல்லது சப்ளிமெண்டுகள் மூலமாகவோ இந்த த.க வைட்டமின்களை உண்ணும் பொழுது உணவு செரிமானமாகும் செயலின் மூலமாக இவை நேரடியாக ரத்தத்தில் கலக்கும். அதிகப் படியான த.க வைட்டமின்களை எடுக்கும் போது அவற்றை சிறுநீரகம் சிறுநீரில் வெளியேற்றி விடும். த.க வைட்டமினை உடல் சேமித்து வைக்காது என்றாலும் பி12 மற்றும் சி வைட்டமின்கள் விதி விலக்கு. உதாரணத்துக்கு பல வருடங்களுக்குத் தேவையான வைட்டமின் பி12ஐக் கல்லீரல் சேமித்து வைக்கும். போலவே பல மாதங்களுக்குத் தேவையான வைட்டமின் சியையும்.
உண்ட உணவிலிருந்து சக்தியை உடலுக்குத் தேவையான முறையில் விடுவிக்க இந்த த.க வைட்டமின்கள் ஒரு முக்கியத் தேவை. உணவில் இருந்து சக்தியைத் தயாரிக்கவும் நியாசின், பயோடின் போன்ற த.க வைட்டமின்கள் தேவை. இவை அமினோ அமிலங்களின் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிப்பதன் மூலம் செல்களின் பெருக்கத்துக்கும் இவை தேவைப்படுகிறது. இந்த த.க வைட்டமின்கள் வகையில் உள்ள வைட்டமின் சி யானது, கொலாஜனை உருவாக்கி, காயங்களை ஆற்றுவதிலும், ரத்தக் குழாயின் சுவர்களைப் பாதுகாப்பதிலும், பற்கள் மற்றும் எலும்புகளுக்கான அடிப்படை வேதிப் பொருட்களை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 75 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் நமது உடல் மறு கட்டமைக்கப்படுகிறது. அதாவது 75 சதவீத செல்கள் அழிக்கப்பட்டு மறுபடி உருவாக்கப் படுகிறது. செல்களில் உள்ள டிஎன்ஏ மூலக்கூறுகள் உட்பட. நீங்கள் உண்ணும் உணவில் உள்ள சத்துகளே இதற்குக் காரணம். நீங்கள் உண்ணும் உணவு அல்லது வைட்டமின்களின் தரம் மிக முக்கியம். கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்களை ஒரு நாளுக்கு ஒரு முறை எடுத்தால் போதுமானது. ஆனால் தண்ணீரில் கரையக் கூடிய வைட்டமின்களை ஒரு நாளுக்கு இரு முறை எடுப்பது நல்லது. அதாவது உங்கள் மருத்துவர் தினசரி வைட்டமின் சியை 500 மில்லி கிராம் எடுக்கச் சொன்னால் அதை 250 மில்லி கிராமாக இரு முறை எடுக்க வேண்டும். வைட்டமின்களை குளிர் சாதனப்பெட்டியில் வைப்பது சரியான முறையாகும். ஒவ்வொரு முறையும் முழு டம்ப்ளர் தண்ணீருடன் வைட்டமின் சப்ளிமெண்டுகளை விழுங்க வேண்டும்.
சப்ளிமெண்டுகள் அடல்டரேஷன் ஸ்கிரீன் என்று சொல்லப்படும் ஒரு தரக் கட்டுப்பாட்டு சோதனையால் அதன் பியூரிட்டி எனப்படும் சுத்தத் தன்மை அளவிடப் படுகிறது. இந்தப் பரிசோதனை வைட்டமின் மாத்திரைகளில் ஆர்செனிக், காரீயம், பாதரசம், கேட்மியம் போன்ற உலோகங்கள் கலந்திருக்கிறதா என்று கண்டறிவதற்காக. மேலும் இந்தச் சோதனை வைட்டமின் மாத்திரைகளில் பூச்சிக் கொல்லிகள், பூஞ்சைக் காளான் போன்ற நச்சுப் பொருட்கள் கலந்துள்ளதா என்றும் ஆய்வு செய்கிறது. நாம் இந்தச் சோதனைகளை வீட்டில் செய்ய முடியாது. பாட்டிலில் லேபிளில் போட்டிருப்பதை நம்பிக்கொள்ள வேண்டியதுதான்.
இனி வரும் பாகங்களில் ஒவ்வொரு வைட்டமினைப் பற்றியும் மினரலைப் பற்றியும் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம்.
* ஒவ்வொரு வைட்டமினும் என்ன செய்கிறது அதன் செயல்பாடுகள்
என்னென்ன?
* எந்த உணவுப் பொருட்களில் அந்த வைட்டமின் உள்ளது?
* குறிப்பிட்ட வைட்டமின் குறைபாடுகள் எதனால் வரும்?
* அதன் ரெகமண்டட் டோசேஜ் என்ன?
* குறிப்பிட்ட வைட்டமின்கள் உள்ள உணவுப் பொருட்கள் என்னென்ன?
* அவற்றின் இயற்கை மற்றும் செயற்கை வடிவங்கள் என்ன?
என்பது போன்ற அனைத்துத் தகவல்களையும் வைட்டமின் A யில் ஆரம்பித்து ஒவ்வொன்றாகப் பார்க்கப் போகிறோம்.

சக்தி கொடு! - 6 சிவராம் ஜெகதீசன்

ஆரோக்கிய வாழ்வுக்கான வைட்டமின்களும் மினரல்களும்
********************************
வைட்டமின்களும் மினரல்களும் உடலுக்கு அத்தியாவசியமான சத்துகள் என்பதுடன் நமது உடலில் பெரும்பாலான செயல்களுக்குக் காரணமாகின்றன. எனவே, அவற்றைத் தேவையான அளவு எடுக்க வேண்டும். குறைவான வைட்டமின்களும் மினரல்களும் எவ்வாறு பிரச்னைக்கு வழி வகுக்குமோ அதேபோல் அதிகமாக எடுப்பதும் ஆரோக்கியத்தைக் குலைக்கும்.
எது தேவையான அளவு?
அமெரிக்க உணவுக்கழகம் இதற்காக ஒவ்வொரு வைட்டமின் மற்றும் மினரலுக்கும் Recommended Dietary Allowance - RDA என்று ஒரு அளவைச் சொல்லியிருக்கிறது. இந்த அளவுகள் ஒரு நாளின் தேவைக்கேற்ற அளவு. ஆனால் சில காரணங்களுக்காக அதிகமாக எடுக்க வேண்டியது வரும். அதிலும் தவறில்லை. அளவுக்கதிகமான அளவு என்பது, உடலில் குறிப்பிட்ட வைட்டமின் சப்ளிமெண்டுகளால் சேரும் நச்சுத் தன்மையைப் பொறுத்ததே. இதனால் உடல் ரீதியான பாதிப்பு ஏற்படும்போது குறைக்கவோ நிறுத்தவோ செய்யலாம்.
மைக்ரோ நியூட்ரியண்டுகள் என்று சொல்லப்படும் வைட்டமின்களும் மினரல்களும் உங்களுடைய உடலுக்கு மிகக் குறைந்த அளவே தேவைப்படும். அந்த நுண்ணிய அளவு கூட உடலுக்குக் கிடைக்காத நிலையை வைட்டமின் குறைபாடு என்று சொல்கிறோம்.
உதாரணத்துக்கு வைட்டமின் C குறைபாடு ஸ்கர்வி நோயைக் கொடுக்கும், வைட்டமின் A குறைபாடு பார்வைக் கோளாறுகளைக் கொடுக்கும், வைட்டமின் D குறைபாடு ரிக்கெட்ஸ் எனப்படும் எலும்புகள் பலமிழக்கும் நோயைக் கொடுக்கும்.
போலவே வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் காம்பினேஷன் உடலுக்கு அதிக பட்ச ஆரோக்கியத்தைக் கொடுக்கும். உதாரணத்துக்கு கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் D, வைட்டமின் K அனைத்தும் சேர்ந்து வலிமையான எலும்புகளைக் கொடுக்கும். கர்ப்பிணிப் பெண்கள் போதுமான அளவு ஃபோலிக் ஆசிட் உள்ள உணவுகளை எடுப்பதும் சப்ளிமெண்டுகள் எடுப்பதும் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மூளை மற்றும் தண்டுவட சம்பந்தப்பட்ட குறைபாடுகள் இல்லாமல் காக்கும். பற்களுக்கு நல்ல பாதுகாப்பாக ஃபுளோரைட் இருக்கும். அதனால் தான் நீங்கள் ஃபுளோரைட் சேர்க்கப்பட்ட டூத் பேஸ்டுகள் என்ற விளம்பரத்தைப் பார்க்கலாம்.
உங்கள் உடம்பில் வைட்டமின்கள் குறைவாக இருக்கிறதா, அதிகமாக இருக்கிறதா என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது?
சில வகையான ரத்தப் பரிசோதனைகள் உடலில் இருக்கும் வைட்டமின்களின் அளவைச் சொல்லிவிடும். அதை அடிப்படையாக வைத்து உணவின் மூலமோ அல்லது வைட்டமின் சப்ளிமெண்டுகள் மூலமோ சரி செய்யலாம். பரிசோதனைகளை விடச் சிறந்தது உங்கள் உடம்பில் ஏற்படும் அறிகுறிகள்.
உதாரணமாக உங்களுக்குக் கை கால்களில் மரத்துப் போன உணர்வோ அல்லது கிராம்ப்ஸ் என்னும் குறக்களி அடிக்கடிப் பிடித்தாலோ உங்களுக்கு மக்னீசியம் குறைபாடு என்று அறிந்து கொள்ளலாம். உங்கள் மருத்துவர் அனைத்து ரத்தப் பரிசோதனைகளையும் செய்து விட்டு எல்லாப் பரிசோதனைகளும் நார்மல். ஆனாலும் நோயாளிக்கு பசியின்மை, எரிச்சலான மனநிலை, எடையிழப்பு போன்றவை இருக்கிறது. காரணம் தெரியவில்லை என்று கூறி வைட்டமின்களை எழுதிக் கொடுப்பார். உங்களிடம் இது வயதாவதன் காரணமாக வருவது அல்லது ஸ்டிரெஸ் எனப்படும் மன அழுத்தத்தால் வருவது என்று சொல்வார்.
ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலுக்கு உங்களை விடச் சிறந்த மருத்துவர் உலகில் இல்லை. இது போன்ற நிலைமைதான் ஆரம்பக் கட்ட வைட்டமின் குறைபாடு. இந்த அறிகுறிகள் என்பவை நபருக்கு நபர் வேறுபடும். பொதுவாக, சாதாரண நிலையில் இருந்து எந்த மாற்றம் உடம்பிலோ அல்லது மன நிலையிலோ தெரிந்தாலும் அதை வைட்டமின் மற்றும் மினரல் குறைபாட்டுடன் பொருத்திப் பார்க்க வேண்டும். அல்லது நீரிழிவு போன்ற நோய்கள் அணுகியிருக்கிறதா என்று மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.
இது போன்ற ஆரம்பக்கட்ட வைட்டமின் குறைபாடுகளை, ரத்தப் பரிசோதனைகளாலோ அல்லது மருத்துவராலோ கண்டு பிடிக்க முடியாது. இந்த ஆரம்பக் கட்டத்தை மார்ஜினல் அல்லது சப்-கிளினிகல் டெஃபிசியன்சி என்று சொல்வார்கள். உங்கள் உடலில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல் சேமிப்புகள் கிட்டத்தட்ட மொத்தமாக காலியாகும் வரை இந்தக் குறைபாட்டைக் கண்டு பிடிப்பது சிரமம். ஒவ்வொரு நாளும் உடலில் தோல், செல்கள், திசுக்கள் வளர்ச்சி என்பது நடந்து வளர்சிதை மாற்றம் நடந்து கொண்டே இருக்கிறது. வளர்ச்சிக் குறைபாடோ, ஜீரணக் கோளாறுகளோ, தோலில் ஏற்படும் தடிப்புகள் போன்றவையோ, முடி உதிர்தலோ, நகங்கள் வடிவமிழத்தலோ, அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மையோ, மலஜலம் கழிப்பதில் பிரச்சினைகளோ, அடிக்கடி சளி பிடித்தலோ, வேலை செய்வதில் சலிப்போ, உடலுறவில் நாட்டமின்மையோ, எரிச்சலான மனநிலையோ இப்படி எந்தப் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை வைட்டமின் மற்றும் மினரல் குறைபாட்டுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். இவை ஏற்படும் போது உடலுக்கு தினப்படித் தேவைக்கான வைட்டமின்களும் மினரல்களும் போதுமான அளவில் கிடைக்கப் பெறுவதில்லை. இதனால் உடலில் சத்துகள்-வறுமை ஏற்படுகிறது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் காரணமான வைட்டமின் மற்றும் மினரல்களையும் பின்வரும் பாகங்களில் பார்க்கலாம்.
இது போக நாம் சாப்பிடும் ஆண்டி பயாடிக்குகள் போன்ற மருந்துகளும் உடலில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல் சேமிப்பைக் காலி செய்கின்றன. மேலும் ஆல்கஹால் கிட்டத்தட்ட உடலின் அத்தனை சத்துகள் சேமிப்பையும் காலி செய்கிறது. அத்துடன் இந்த சத்துகள் உடலால் உறிஞ்சப் படுவதையும் ஆல்கஹால் தடுத்து விடுகிறது. நீங்கள் எத்தனை வைட்டமின் மாத்திரைகள் எடுத்தாலும் ஆல்கஹால் அருந்தினால், எடுக்கும் வைட்டமின்களால் எந்த உபயோகமும் இல்லை.
வைட்டமின் C, B1 மற்றும் B6 குறைபாடுகள் Behavioral Problems எனப்படும் நடத்தைக் குறைபாடுகளை உருவாக்கும். எப்போதும் கோபமாகவே இருத்தல், முரட்டுத்தனமாக நடந்து கொள்ளுதல் போன்றவை ஏற்படும். எடுக்கும் உணவில் இருக்கும் சத்துக் குறைபாட்டாலோ, உடலால் சத்துகளை போதுமான அளவு கிரகிக்க முடியாமல் போனாலோ, இந்த வைட்டமின் குறைபாடு ஏற்படத் துவங்கும். எந்த விதமான அறிகுறியுமே இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக வைட்டமின் மற்றும் மினரல் சேமிப்புகள் உடலில் இருந்து காலியாகத் தொடங்கும். மிக அத்தியாவசியமான வைட்டமின்கள் இல்லாத நிலையில், உண்ட உணவை சக்தியாக மாற்றும் என்சைம்கள் அதன் வேலையைச் செய்யாமல் உடையத் தொடங்கும். இந்த நிலையில் உடல்,நோய்க்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும். முதியவர்களுக்கு இந்தப் பிரச்சினை இன்னும் அதிகமாக இருக்கும்.
உடலில் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு வைட்டமின் A மற்றும் C முக்கியமானது. முதியவர்களுக்கு ஏற்படும் குழம்பிய மனநிலை, அல்சைமர் நோய்கள் போன்றவை தையமின் குறைபாட்டால் வரும். வைட்டமின் B வரிசைகளில் உள்ள B1, B2, B5 போன்ற அனைத்தும் ஆரோக்கியமான உடலுக்கும், ஆரோக்கியமான மனநிலைக்கும் முக்கியத் தேவையானவை ஆகும். முதியவர்களைப் போலவே கர்ப்பிணிப் பெண்களுக்கும் வைட்டமின்களும் மினரல்களும் போதுமான அளவில் கிடைப்பதும் தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

சக்தி கொடு! - 5 சிவராம் ஜெகதீசன்

ஃபைட்டோ கெமிகல்ஸ் (Phytochemicals) என்கிற பதத்தை எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
மருத்துவ உலகில், நியூட்ரியண்ட் பிரிவில் நடக்கும் தொடரச்சியான ஆய்வுகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உண்ணுவது பல உடல் நல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு
கொடுக்கிறது என்று கூறுகின்றன. இதற்குக் காரணம் உணவுப் பொருட்களில் உள்ள ஃபைட்டோ கெமிகல்ஸ்.
ஃபைட்டோகெமிகல்ஸ் என்பவை தாவரங்களால் தயாரிக்கப்படும் ஒரு வேதிப் பொருள். இது காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பாதாம் போன்ற கொட்டை வகைகள் அனைத்திலும் உள்ளது. இது உடலுக்குப் பெரும்பாலும் நல்லது செய்தாலும், கெட்டதைச் செய்யும் ஃபைட்டோ கெமிகல்களும் உள்ளன. உதாரணமாக கோகெய்ன் கூட ஒரு பைட்டோகெமிகல்தான்.
நல்லது செய்யும் ஃபைட்டோ கெமிகல்களுக்கு உதாரணமாக கரோடினாய்ட்ஸ் (carotenoids), பாலிஃபீனால் (polyphenols), ஃபிளேவனாய்ட்ஸ் (Flavonoids), ஆந்தோசயனைன்ஸ் (Anthocyanins), லிகன்ஸ் (Ligans), ரெஸ்வரேட்ரால் (Resveratrol) எனச் சிலவற்றைச் சொல்லலாம். இம்மாதிரி ஆயிரக்கணக்கில் உள்ளன.
பொதுவாக இந்த ஃபைட்டோகெமிகல்கள் பழங்களிலும், காய்கறிகளிலும், கிழங்குகளிலும் காணப்படும் நிறத்தைக் கொடுப்பவை. பப்பாளிப் பழத்தின் மஞ்சள் நிறத்துக்கும், கேரட்டின் ஆரஞ்சு நிறத்துக்கும், தக்காளியின் சிவப்பு நிறத்துக்கும் கரோடினாய்டுகளே காரணம். நாம் அறிந்த கரோடினாய்ட் பீட்டா கரோடின் (Beta carotine), ஆரஞ்சு, பூசனி போன்றவற்றில் உள்ளது. உடல் இந்த பீட்டா கரோட்டினைத்தான் வைட்டமின் ஏ வாக மாற்றி உபயோகிக்கும்.
இந்த ஃபைட்டோகெமிகல்கள் மிகச் சிறந்த ஆண்ட்டிஆக்சிடண்டுகள். சென்ற பாகத்தில் பார்த்த ஃபிரீ ராடிகல்ஸ்களால், செல்களுக்கு ஏற்படும் பாதிப்பை இவை சரி செய்கின்றன. அதன் மூலமாக இளமையான தோற்றத்தைத் தக்க வைக்கின்றன. உள்காயத்தை ஆற்றுகின்றன. கண்கள், இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகளுக்கு இவை பாதுகாப்பு அளிக்கின்றன. ரத்த அழுத்தத்தைக் குறைப்பதிலும், நீரிழிவைத் தள்ளிப் போடுவதிலும்,கட்டுப் படுத்திவதிலும், கேன்ஸர் செல்கள் உருவாகாமல் தடுப்பதிலும் இந்த ஃபைட்டோ கெமிக்கல்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
உணவில் ஆரோக்கியமான கொழுப்புகளை எடுக்கும் போது இந்த ஃபைட்டோ கெமிகல்களின் பயோஅவைலபிலிட்டி அதிகரிக்கிறது. செயற்கை உரங்கள் போடாத ஆர்கானிக் காய்கறிகளில் இந்த ஃபைட்டோ கெமிகல்களின் செறிவு அதிகமாக இருக்கிறது.
இவை பூண்டு, கிராம்பு, கேரட், திராட்சை, பப்பாளி, தக்காளி, காலிபிளவர், முட்டைக்கோஸ், கத்திரிக்காய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, ரோஸ்மெரி, ஆலிவ் காய்கள், பாதாம், பிஸ்தா, செர்ரிப் பழங்கள், ஸ்டிராபெர்ரி, புளூபெர்ரி, பிளாக்பெர்ரி, கீரைகள் உட்பட அனைத்துக் காய்கறிகள் பழங்களிலும், டார்க் சாக்கலேட்டிலும் உள்ளன. இவை டிஎன்ஏ மூலக்கூறுகளில் ஏதேனும் பாதிப்பு இருந்தால்கூட அதைச் சரி செய்யும் வல்லமை பெற்றவை.
முக்கியமாக, பளிச்சென்ற நிறங்களை உடைய சிறு பழங்களில் (பெர்ரிகள்) அதிக ஃபைட்டோ கெமிகல்கள் உள்ளன. இவையனைத்தும் நோய் எதிர்ப்புச் செயல்பாட்டில் முக்கியப் பங்காற்றுகின்றன. இவற்றில் உள்ள ஆன்ந்தோசையனின், இதயத்தைப் பாதுகாக்கிறது. மேலும் குடலில் உள்ள நல்லது செய்யும் ப்ரோ-பாக்டிரியாக்களை அதிகரிக்கிறது. அதன் மூலமாக நியூட்ரியண்ட் அப்சார்ப்ஷனை அதிகரிக்கிறது. இந்த நல்லது செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குண்டாக இருப்பவர்களின் உடலில் குறைந்து கொண்டே போகும்.
சரியான அளவில் சேர்ப்பதன் மூலம் அல்சைமர் போன்ற நோய்களை அண்ட விடாமலே செய்யலாம்.
வைட்டமின்கள் மற்றும் மினரல்களுக்கு ஒரு நாளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவு (Recommended Daily Allowance - RDA) என்று இருக்கிறது. ஆனால் ஃபைட்டோ கெமிகல்களுக்கு அப்படி அளவு எதுவும் இல்லை. இருந்தாலும் அதிக டோசேஜ்களில் சப்ளிமெண்டுகளாக இவற்றை எடுக்கும் போது உடலில் உள்ள இரும்புச் சத்தைக் குறைப்பதும், தைராய்ட் போன்ற ஹார்மோன்களின் செயல்பாட்டையும் குழப்புகின்றன.
இந்த ஃபைட்டோ கெமிகல்கள் என்பவை அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் அற்புத சக்தி பெற்றவை அல்ல என்றாலும் தொடர்ச்சியாக ஃபிரெஷ் காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடல் நலத்தில் பலவித பலன்களை அடையலாம். இதற்கான சப்ளிமெண்டுகளும் உள்ளன. வைட்டமின்கள் போலவே இவையும் செயற்கையாக தயாரிக்கப் படுகின்றன.
வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஃபைட்டோ கெமிகல்களை உணவுப் பொருட்களின் மூலமாக எடுப்பதே பாதுகாப்பானது என்று பார்த்தோம். பல காரணிகளால் உணவில் உடலுக்குத் தேவையான சத்துகளை எடுக்க முடியாமல் போகும் போது சப்ளிமெண்டுகளின் உதவியை நாடலாம். இப்படி சப்ளிமெண்டுகள் எடுக்கும்போது சிலவற்றை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்:
* கடுமையான பாதிப்பு : வைட்டமின் மாத்திரைகள் சிலருக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இந்த நிலையில் அவற்றை உடனடியாக முழுமையாக நிறுத்தி விட வேண்டும்.
* நீண்ட காலப் பின் விளைவுகள் : சில வகை வைட்டமின் மாத்திரைகள், தலை வலி போன்ற சிறிய உடல் நலக் கோளாறில் ஆரம்பித்து, நீண்ட கால நோக்கில் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். தொடர்ச்சியாக வைட்டமின் மாத்திரைகளை எடுக்கும் போது இது வரலாம். அதாவது நீங்கள் எடுக்கும் மாத்திரைகளின் நச்சுத்தன்மை உடலில் சிறிது சிறிதாக அதிகமாகும் போது இப்படி ஆகும்.
* முரண்பட்ட மருந்து சேர்க்கைகள் : வைட்டமின் மற்றும் மினரல் சப்ளிமெண்டுகள், ஒன்றுக்கு மேல் ஒரே வேளையில் எடுக்கும் போதோ அல்லது வேறு நோய் தீர்க்கும் மருந்துகளுடன் எடுக்கும் போதோ, ஒன்றுக்கொன்று முரண்பட்டு அதனால் உடல நலத்தில் கெடுதல் உண்டாக்கலாம்.
* பக்க விளைவுகள் : நோயைச் சரி செய்யும் ஆண்ட்டிபயாடிக் மருந்துகளை எடுத்தால் தான் பக்க விளைவுகள் வரும் என்பது இல்லை. வைட்டமின் மாத்திரைகள் எடுத்தாலும் வரலாம். அப்படி ஏதேனும் பக்க விளைவுகள் இருப்பின் மருத்துவரைக் கலந்தாலோசித்துவிட வேண்டும்.
* மறைமுக விளைவுகள் : சில சப்ளிமெண்டுகளை அதிக பட்ச டோசேஜ்களில் எடுக்கும் போது அது வேறு சில நோய் அறிகுறிகளை மறைத்து விடலாம். இதன் காரணமாக உண்மைப் பிரச்சினையைக் கண்டு பிடிக்க முடியாமல் போகலாம். மேலும் ரத்தப் பரிசோதனை அளவுகளில் மாற்றத்தைக் கொடுக்கலாம்.
உங்கள் உடல் நலம் உங்கள் கைகளில். ஏதேனும் சிறு பிரச்சினை என்று தோன்றினாலும் உடனடியாக மருத்துவரை ஆலோசித்துக் கொள்ளவும். எந்த நோய்க்கூறுகளையும், எவ்வளவு விரைவாக கண்டு பிடிக்கிறோமோ அந்த அளவு நல்லது. ஆரம்பத்திலேயே அறிந்து கொள்வதன் மூலம், அதைக் குணப்படுத்துவதன் விகிதத்தை அதிகரிக்க முடியும்.
அதற்காக சிறு சிறு பிரச்சினைகள வரும் போதே எல்லா வைட்டமின்களையும் நிறுத்த வேண்டும் என்பதில்லை. எந்த வைட்டமின்களை எப்படி எடுக்கலாம் என்பதையும் எந்தெந்த வைட்டமின் காம்பினேஷன்களை, எப்படி உடலுக்கு அதிகபட்ச பலன்கள் கிடைக்கும் படியாக எடுக்கலாம் என்பதையும், பல நோய்க்குறிகளுக்கு வைட்டமின் காம்பினேஷன் எப்படி வேலை செய்யும் என்பதையும் பின்வரும் பாகங்களில் விரிவாகப் பார்க்கலாம்.

சக்தி கொடு! - 4 சிவராம் ஜெகதீசன்


ஆரோக்கிய வாழ்வுக்கான வைட்டமின்களும் மினரல்களும்********************************
நாம் உண்ணும் உணவிலிருந்து போதுமான சத்துகள் கிடைப்பதில்லை. அனைத்துக் காய்கறிகளும், பழ வகைகளும், பறிக்கப்பட்டவுடனேயே அதன் சத்துக்களை இழக்கத் துவங்கி விடுகிறது. ஃபிரீஸரில் வைக்கப்படும் போது இன்னும் அதிகமாக சத்துகள் இழப்பு ஏற்படுகிறது. பழங்களும் காய்கறிகளும் கிட்டதட்ட 30 முதல் 50 சதவீதம் வரை குளிரூட்டப்பட்ட நிலையில் சத்துகளை இழக்கின்றன.
உதாரணத்துக்கு, திராட்சைப் பழம் ஃபிரிஜ்ஜில் வைக்கப் படும் போது அது அழுகாமல் வேண்டுமானால் இருக்கும். ஆனால் கடைகளுக்கு வரும் போது அதன் 30 சதவீத வைட்டமின் பி சத்துகளை இழந்திருக்கும். பளபளவென்று கடைகளில் நீங்கள் வாங்கும் ஆரஞ்சுப் பழங்களின் 50 சதவீத வைட்டமின் சி, குளிரூட்டப்படும் முறையால் காணாமல் போய் விடும். அஸ்பராகஸ் எனும் காய், ஒரே வாரத்தில் 90 சதவீதம் வரை வைட்டமின் சியை இழக்கும்.
அதனால் காய்கறிகளை வாரக்கணக்கில் ஃபிரிஜ்ஜில் வைப்பதைத் தவிருங்கள். அன்றன்றைக்கு லோக்கலில் கிடைப்பதை வாங்கி அன்றே சமையலுக்கு உபயோகிப்பதை வழக்கமாக்குங்கள். அதிக பட்ச வெப்பத்தில் சமைப்பதையும் தவிருங்கள். முடிந்த வரை ஆவியில் காய்கறிகளை அதன் நிறம் மாறாமல் வேக வைப்பது, அதிலுள்ள சத்துகளை அதிகபட்சம் உடல் ஏற்றுக் கொள்ளும் நிலையில் உடலில் சேர்க்கும். எண்ணெய்களைச் சேர்த்து அதிக வெப்பத்தில் சமைக்கும் போது, ருசி வேண்டுமானால் சேரலாம், ஆனால் சத்துகளை இழந்து வெறும் சக்கைகளையே உண்பீர்கள்.
இதன் காரணமாகத்தான் வைட்டமின் சப்ளிமெண்டுகளை தற்காலத்தில் அதிகமாக எடுக்கிறோம். டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பழரசங்களையும் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. உதாரணத்துக்கு டப்பாவில் அடைக்கப்பட்ட ஆரஞ்சுப் பழ ரசத்தில் உள்ள வைட்டமின் சி, 40 சதவீதம் வரையில் உடலால் உபயோகப் படுத்த முடியாத செயலற்ற நிலையில்தான் இருக்கும். சப்ளிமெண்டுகளிலும் 500mg, 1000 mg என்று லேபிளில் போட்டிருந்தாலும் அதன் பயோஅவைலபிலிட்டி என்பது மிக மிக குறைவாகவே இருக்கும். ஆனால் உடலுக்குத் தொடர்ச்சியாக இந்த சத்துகளானது தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும்.
சாதாரணமாக உணவில் கிடைக்கும் வைட்டமின்களையும் மினரல்களையும் உடலில் சேர விடாமல் தடுப்பதில் நம் வாழ்க்கை முறையும் பெரும் பங்காற்றுகிறது. ஸ்டிரெஸ் என்று சொல்லப்படும் மன அழுத்தம் பல சத்துகளை உடலில் சேர விடாமல் செய்யும். அதை விட முக்கியமானது ஆல்கஹால். ஆல்கஹால் பழக்கம் நம் உடலில் இருக்கும் அனைத்து வைட்டமின் மற்றும் மினரல் சேமிப்பை மொத்தமாக அழித்து விடும். முக்கியமாக பயோடின், காப்பர், ஜிங்க், மற்றும் வைட்டமின்கள் B1, B6, B12 மற்றும் C.
உண்ணும் உணவை உடைத்து, உடலானது சக்தியைத் தயாரிக்கும் செயலின் போது, அதாவது வளர்சிதை மாற்றத்தின் போது, தயாராகும் இன்னொரு மூலக்கூறு ஃபிரீ ராடிகல்ஸ் (free radicals). இந்த ஃபிரீ ராடிகல் மூலக்கூறுகளில் எலெக்டிரான்கள் இருக்காது அல்லது ஒரு எலெக்டிரான் மட்டுமே இருக்கும். எலெக்டிரான்கள் எப்போதுமே ஜோடியாக இயங்குபவை. அதனால் ஃபிரீ ராடிகல்ஸ் இன்னொரு எலெக்டிரானைத் தேடும். அப்போது உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களின் எலெக்டிரான்களை இவை திருடிக் கொண்டு அந்த செல்களின் அழிவுக்குக் காரணமாகி விடும். இந்த செயல் முறைக்குப் பெயர் ஆக்சிடேஷன். இந்த ஆக்சிடேஷனால், ஆக்சிடேடிவ் ஸ்டிரெஸ் அல்லது டேமேஜ் ஏற்பட்டு திசுக்களைச் சேதப் படுத்தி, நோய்களுக்கும், விரைவாக வயதான தோற்றம் வருவதற்கும் காரணமாகி விடும். இந்த ஃபிரீ ராடிகல்ஸிடமிருந்து காத்துக் கொள்ளவும் நமக்கு அதிகமான சத்துகள் தேவை.
ஃபிரீ ராடிகல்ஸ் மொத்தமாகவே மோசம் என்று சொல்லி விடவும் முடியாது. உதாரணமாக, கல்லீரல் ஃபிரீ ராடிகல்ஸைத் தயாரித்து சில நச்சுப் பொருட்களை உடலிலிருந்து நீக்கும். ரத்த வெள்ளையணுக்கள் ஃபிரீ ராடிகல்ஸை அனுப்பி பாக்டீரியா, வைரஸ் மற்றும் சேதமுற்ற செல்களை அழிக்கும்.
இந்த ஃபிரீ ராடிகல்ஸ் வெளிக்காரணிகளாலும் ஏற்படும். முக்கியமாக இந்தக் காலகட்டத்தில் வெளிக்காரணிகளின் பங்கு அதிகமாகவே உள்ளது. டெலிவிஷன் திரைகள், கம்ப்யூட்டர் திரைகள், செல்போன்கள், விமானப் பயணங்கள், ஹேர் டிரையர்கள், பளிச்சிடும் லைட் பல்புகள், மைக்ரோவேவ் ஓவன்கள், கெமிக்கல்கள்
கலந்த உணவுப் பொருட்கள் / தண்ணீர் / காற்று, அதிகபட்ச சூரிய ஒளி போன்றவை உடலுக்கு வெளியில் இருந்து கொண்டு உடலுக்குள் நடக்கும் ஃபிரீ ராடிகல்ஸ் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
உடல் மேற்சொன்ன காரணிகளுக்கு ஆட்படும்போது, உடலுக்குள் மேலதிக ஆக்சிடேஷன் ஏற்பட்டு, உடலில் ஃபிரீ ராடிகல்ஸ்களின் சுமை அதிகமாகிறது.
அதனால் மேற்கூறியவற்றில் இருந்து முடிந்த வரை உடலைப் பாதுகாக்கவும். இதனால் ஏற்படும் ஆக்சிடேஷன் என்பது, இரும்புச் சாமானில் ஏற்படும் துரு போல. எந்த அளவு உங்கள் உடல் மேற்கூறிய காரணிகளுக்கு எக்ஸ்போஸ் செய்யப்படுகிறதோ அந்த அளவு உடல் மேலும் அதிகமாக துருப் பிடிக்கும். இந்த ஆக்சிடேஷன் செயலை நிறுத்த உங்கள் உடலுக்குத் தேவை ஆண்டி ஆக்சிடண்டுகள். இந்த ஆண்டி ஆக்சிடண்டுகள், ஃபிரீ ராடிகல்ஸ்களுக்குத் தேவையான எலெக்டிரான்களைக் கொடுத்து, செல்களை அழிவிலிருந்து காப்பாற்றுகின்றன.
இந்த ஆண்டி ஆக்சிடண்டுகளையும் மாத்திரைகள் வடிவத்தில் அளவுக்கதிகமாக எடுப்பதும் ஆபத்தே. ஆண்டி ஆக்சிடண்டுகளுக்கு உதாரணமாக வைட்டமின் A, C, E போன்றவைகளையும், செலினியம், கோஎன்சைம் Q10 (CoQ10), ஆல்ஃபா லிப்போயிக் ஆசிட், மெலடோனின் போன்ற சத்துகளைக் கூறலாம்.
பூண்டு ஒரு முக்கியமான ஆண்டி ஆக்சிடண்ட் ஆகும். வயதாக ஆக, உடல் மேற்சொன்ன ஆண்டி ஆக்சிடண்டுகளைக் குறைவாகவே தயாரிக்கும். அதனால் இந்த ஆண்டி ஆக்சிடண்டுகள் உள்ள உணவுகளை - முக்கியமாகப் பழங்களை எடுப்பதன் மூலம் உடலின் ஆண்டி ஆக்சிடண்ட் தேவையைப் பூர்த்தி செய்து வயதான தோற்றம் வருவதைத் தள்ளிப் போடலாம். இதில் மாதுளம் பழமும், பெர்ரிகள் என்று சொல்லப்படும் சிறு பழங்களும், கிரீன் டீயும் முக்கியமானவை.
நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளும் கொத்துமல்லித்தழையிலும் ஆண்டி ஆக்சிடண்டுகள் உள்ளன. கொத்துமல்லித் தழையை உணவைத் தயாரித்த பின் கடைசியில் பச்சையாக மேலே தூவி சாப்பிட வேண்டும். நம் ஊரில் கிடைக்கும் நாவல் பழமும் அருமையானதே. தினசரி நாலைந்து நாவல் பழங்களைத் தொடர்சியாக உணவில் சேர்ப்பதும் மிகுந்த பலனைத் தரும்.
சில பேர் தம் வயது 50க்கு மேல் என்பார்கள். ஆனால் 35 வயது போலத் தோற்றமளிப்பார்கள். அதற்கான முக்கியக் காரணம் ஆண்டி ஆக்சிடடுண்டுகள் அதிகம் உள்ள உணவுகளை அவர்கள் உண்பதே. இப்படி உணவுப் பொருட்களில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட் அளவுகளை அளக்க ORAC Score (Oxygen Radical Absorption Capacity) என்ற அளவு முறையைப் பயன் படுத்துகிறார்கள். 100 கிராம் உணவுப் பொருளில் எவ்வளவு ORAC இருக்கிறது என்ற அளவே இது.
இளமை தங்கவேண்டுமானால் உணவில் ஆண்ட்டி ஆக்சிடண்டுகள் அவசியம்.

சக்தி கொடு! - 3 - சிவராம் ஜெகதீசன்

ஆரோக்கிய வாழ்வுக்கான வைட்டமின்களும் மினரல்களும்
********************************
பயோஅவைலபிலிடி.
நாம் உணவில் எடுக்கும் வைட்டமின்களும் மினரல்களும் எந்த அளவு உடலால் உறிஞ்சப்பட்டு உபயோகிக்கப்படும் என்பதைப் புரிந்து கொள்ள, இந்த பயோஅவைலபிலிட்டியை அறிவது அவசியம்.
இந்த பயோஅவைலபிலிடி என்பது, உண்ணும் உணவு, எடுக்கும் வைட்டமின்கள் & மினரல் சப்ளிமெண்டுகள், மருந்து வகைகள் என்று அனைத்துக்கும் பொருந்தும். ஏதாவது உணவையோ அல்லது பானங்களையோ எடுக்கும்போது அதிலுள்ள நியூட்ரியண்டுகள் ரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்பட்டு, அதன் வழியே கொண்டு செல்லப்பட்டு திசுக்களைச் சென்று அடைகின்றன.
ஒவ்வொரு உணவுக்கும் இந்த பயோஅவைலபிலிடியைக் கணக்கிட கடினமான சமன்பாடுகள் உண்டு. இப்போதைக்கு, உண்ணப்படும் உணவானது உடலால் உறிஞ்சப்படும் அளவை பயோஅவைலபிலிடி என்று எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். உணவு ஜீரனமாதலின் வளர்சிதை மாற்ற வழித்தடத்தில் உணவின் சத்துகள் உடலால் உறிஞ்சப்படுகின்றன. இது வாயில் இருந்து வயிறு, குடல் போன்ற அனைத்துப் பகுதிகளிலும் நடக்கிறது.
இந்த சத்துகள் உடலால் உறிஞ்சப்படும் அளவு என்பது பல வகையான வெளி மற்றும் உட்காரணிகளால் பாதிக்கப்படுகிறது. எடுக்கும் உணவின் தரம் (ரெடிமேட் உணவா, பல நாட்கள் கடைகளில் இருந்த உணவா போன்றவை), எதையெல்லாம் சேர்த்து உண்ணுகிறோம், உண்பவரின் வயது, பாலினம் போன்ற பல காரணிகள் இந்த பயோஅவைலபிலிட்டியைத் தீர்மானிகின்றன. மேக்ரோ நியூட்ரியண்ட்ஸ் என்று சொல்லப்படும் மாவு, புரதம் மற்றும் கொழுப்புச் சத்துகளின் பயோஅவைலபிலிடி அதிகமாக இருக்கும். ஆனால் மைக்ரோ நியூட்ரியண்ட்ஸ் எனப்படும் வைட்டமின்கள் மற்றும் மினரல்களில் பயோஅவைலபிலிட்டி குறைவாகவே இருக்கும்.
உணவில் உள்ள சத்துகளை உடல் உறிஞ்ச முதல் படி நிலை, உணவிலிருந்து அந்த சத்துக்களை விடுவித்து, வேறொரு வடிவத்துக்கு மாற்றி, குடலால் கிரகிக்கப் படுவதற்கு ஏதுவாக மாற்றுவதே. இந்த செயல்பாடு, உணவை மென்று சாப்பிடுவதில் ஆரம்பிக்கிறது. உமிழ்நீருடன் கலந்து உள்ளே செல்லும் போது பலவித என்சைம்கள் மற்றும் வயிற்றிலிருக்கும் அமிலங்களுடன் கலந்து சிறுகுடலுக்குச் செல்கிறது. சிறுகுடலில் பல என்சைம்களுடன் கலந்து உணவு முற்றிலுமாக உடைக்கப்பட்டு, பெரும்பாலான சத்துகள் உடலால் உறிஞ்சப்படுகிறது. இத்துடன் சமைத்தலும் உணவை உடைக்க முக்கியப் பங்காற்றுகிறது.
பல சத்துகள் உடலுக்குத் தேவையான வடிவத்தில் (chemical form) இல்லாமல் வேறு வடிவங்களில் உள்ளது.
உதாரணமாக இரும்புச் சத்து. ஹீம் அயர்ன் மற்றும் நான் ஹீம் அயர்ன் என்று இரு வகை அயர்ன்கள் உள்ளன. இறைச்சிகளில் உள்ள ஹீம் அயர்ன் உணவிலிருந்து விடுவிக்கப்பட்டவுடனேயே, மைய இரும்பு அனுவைச் சுற்றி ஒரு ஹீம் மூலக்கூறாலான பாதுகாப்பு வளையத்தை அமைக்கிறது. இந்த வளையம் மற்ற சத்துகளால் தொடர்பு கொள்ள முடியாமல் ஒரு பாதுகாப்பு கேடயமாக செயல்படுகிறது. இதனால் குடல் செல்களால் நேரடியாக உறிஞ்சப்படுகிறது. தாவரங்களில் இருக்கும் நான் ஹீம் அயர்னில் இந்த அமைப்பு இல்லாததால் வேறு சத்துகளுடன் கலந்து மிகக் குறைவான அளவே குடல் செல்களால் உறிஞ்சப் படுகிறது.
உணவு கம்பெனிகள் சில வித உணவுகளில் வைட்டமின்களைக் கலக்கும். இதனை ஃபோர்டிஃபை செய்வது என்று சொல்வார்கள். உதாரணத்துக்கு வைட்டமின் டி ஏற்றப்பட்ட சமையல் எண்ணெய். இது போல ஃபோர்டிஃபை செய்யப்பட்ட வைட்டமின்கள் கிட்டத்தட்ட 20சதம் முதல் 70 சதம் வரையே பயோஅவைலபிலிட்டியைக் கொண்டிருக்கும். ஆனால், அதிக சதவீத பயோஅவைலபிலிட்டி உள்ள உணவுப் பொருட்கள் உடலுக்கு நல்லது.
இந்த பயோஅவைலபிலிட்டியை மேம்படுத்தும் காரணிகளும் உள்ளன. சத்துகள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும் போது ஒரு சத்தின் கிரகிப்புத்திறன் அதிகரிக்கும் அல்லது இரண்டு சத்துகளுமே ஏற்கப்படாது. உதாரணத்துக்கு வைட்டமின் சியோடு சேர்த்து எடுக்கப்படும் இரும்புச் சத்து இரண்டிலிருந்து மூன்று மடங்கு வரை அதிகரிக்கிறது. இது போல உதவி செய்பவற்றை ஹெல்பர்ஸ் என்று சொல்லலாம்.
இன்னொரு பக்கம் சில சத்துகள் மற்ற சத்துகளை உடல் ஏற்க விடாது. இவற்றை இன்ஹிபிட்டர்ஸ் என்று சொல்லலாம். இவை முக்கிய உயிர்ச்சத்துடன் ஒட்டிக் கொண்டு குடல் செல்களால் ஏற்கப்படாத படிவத்தை அடைந்து விடும். இப்படிச் செய்து அந்த சத்துகளை உடல் உறிஞ்ச விடாமல் செய்து அவற்றை வெளித்தள்ளி விடும். அல்லது இந்த இன்ஹிபிட்டர்ஸ் போட்டி போட்டுக் கொண்டு உண்மையான சத்தை உடல் ஏற்க விடாமல் செய்யும். இந்த இன்ஹிபிட்டர்களில் முக்கியமானது ஃபைட்டிக் ஆசிட். இந்த பைட்டிக் ஆசிட், பாதாம் போன்ற கொட்டை வகைகளிலும் அனைத்து தானியங்களிலும் உள்ளது.
இதனால்தான் பாதாமை ஊற வைக்காமல் உண்ணக்கூடாது. ஊற வைப்பதும், நெய்யில் வறுப்பதும் பாதாமில் உள்ள ஃபைட்டிக் ஆசிட்டை பெரும்பாலான அளவு நீக்கி விடும். இந்த ஃபைட்டிக் ஆசிட், உணவில் இருக்கும் இரும்பு, கால்சியம், ஜிங்க் போன்ற தாதுக்களை உடல் உறிஞ்ச விடாது. இன்னொரு உதாரணம், கால்சியமும் நான் ஹீம் அயனும் ஒன்றாகச் சேர்த்து எடுக்கும் போது, கால்சியம் அயர்ன் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும். அதனால் கால்சியம் மாத்திரையையும் அயர்ன் மாத்திரையையும் ஒன்றாக எடுக்கக் கூடாது.
இன்னொரு உதாரணம் பார்ப்போம். வைட்டமின் பி12, வயிற்றிலிருக்கும் அமிலங்களால் பிரிக்கப்பட்டு வேறொரு ப்ரொட்டீனுடன் (R - protein) சேர்க்கப்பட்டு மேலும் மாற்றமடைந்து உடலால் கிரகிக்கப் படுகிறது. ஆண்டாசிட்கள் (antacid) எனப்படும் ஜெலுசில் போன்றவற்றை எடுக்கும் போது அத்துடன் பி12 எடுத்தால் அந்த பி12 உடலால் கிரகிக்கப்படாது. தொடர்ச்சியாக ஆண்டாசிட்கள் எடுக்கும் போது பி12 குறைபாடு வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்.
இவை ஆரம்ப நிலை உதாரனங்கள் மட்டுமே. இனி வரும் அத்தியாயங்களில் ஒன்றுக்கொன்று எதிராக செயல்படும் சத்துகளையும், ஒன்றுக்கொன்று உதவி செய்யும் ஹெல்பர்ஸ் பற்றியும் விளக்கமாகப் பார்க்கலாம்.

சக்தி கொடு! - 2 , சிவராம் ஜெகதீசன்


ஆரோக்கிய வாழ்வுக்கான வைட்டமின்களும் மினரல்களும் 

********************************
வைட்டமின்கள் & மினரல்கள் என்றால் என்ன?
வைட்டமின், மினரல், ஃபைட்டோ கெமிகல்ஸ், ஆண்ட்டி ஆக்சிடண்ட்ஸ் - இவையெல்லாம் என்ன?
வைட்டமின்கள் என்பவை இயற்கை மூலக்கூறுகள். இவற்றை நம் உடல் தானே தயாரிக்காது. அல்லது மிகுந்த சிரமப்பட்டு ஏதோ கொஞ்சம் தயாரிக்கலாம். சூரிய ஒளியில் இருந்து டி வைட்டமின் தயாரித்துக்கொள்வது போல. ஆனால் வைட்டமின்கள் நமக்கு மிகவும் அவசியம். எனவே, நாம் உண்ணும் உணவிலிருந்துதான் பெரும்பாலான வைட்டமின்கள் உடலுக்குக் கிடைக்கவேண்டும்.
நாம எதைச் சாப்பிடுகிறோம்? தாவரங்கள், மற்றும் இறைச்சிகள். மனிதர்களுக்கிஉ இரையாகும் விலம்க்குகளும் தாவரத்தை உண்பவை தான். அதனால், பொதுவாகத் தாவரங்கள்தாம் இந்த வைட்டமின்கள் கிடைப்பதற்கு ஒரே வழி. அந்தத் தாவரங்கள் எப்படி இந்த வைட்டமின்களைப் பெறுகின்றன? என்றால், மண்ணிலிருந்து.
அதாவது இயற்கையாக மண்ணில் விளைகிறது தாவரம்; அதை உண்ணும் விலங்குகளுக்கு இந்த வைட்டமின்களும் மினரல்களும் கிடைகின்றன. மண்ணிலிருந்து சத்துகளை உறிஞ்சி அதைத் தேவைக்கேற்ப மாற்றி தாவரங்கள் அவற்றைத் தன்னகத்தே வைத்திருக்கும். இதை உண்பதன் மூலம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தேவையான வைட்டமின்களும் மினரல்களும் கிடைக்கின்றன. மலையில் இருந்தும் மழையில் இருந்தும் ஆறு கிளம்பி, அதை அணைகள் தேக்கி, பைப்புகள் வழியே மெட்ரோ வாட்டர் நம் வீட்டுக்கு அனுப்புகிறதல்லவா? அந்த மாதிரி.
பிரச்னை என்னவென்றால், இப்படித் தொடர்ச்சியாக விளைவிக்கப்பட்ட நிலங்கள் அதன் சத்துகளைக் கிட்டத்தட்ட இன்று இழந்தே விட்டது. இந்த நிலங்களில் போடப்படும் உரங்கள் பயிர்களை அதிகமாக வளர்க்க உதவி செய்தாலும், தேவையான அல்லது ஒரு நூற்றாண்டுக்கு முன் இருந்ததைப் போல சத்தான நிலங்கள் இப்போது நம்மிடம் இல்லை. மண்ணிலிருக்கும் நுண்ணுயிரிகளை உரங்கள் பெரும்பாலும் அழித்து விட்டன. உலகில் மிகச் சில விவசாய நிலங்களைத் தவிர பெரும்பாலான விவசாய நிலங்களின் நிலை இதுதான். மேலும் தற்போதைய ஆராய்ச்சிகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளும் உணவுப் பழக்கத்துக்கு வந்து விட்டன. இப்போதே தேவையான நோய்களை வைத்திருக்கிறோம். இன்னும் இந்த நிலை மோசமாக ஆகும்போது நோய்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.
இன்னொரு பிரச்னையும் உள்ளது. இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் உணவுகளையும் பதப்படுத்துதல் என்ற பெயரில் ருசிக்காகவும், அதிக நாட்கள் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களின் அலமாரிகளில் கெடாமல் இருக்கச் செய்வதற்காக இன்னும் அவற்றின் சத்துகள் முற்றிலுமாக உறிஞ்சப்பட்டு, வேறு செயற்கையான ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு, அழகாக பேக் செய்து விற்கப் படுகிறது.
அதனால்தான் பேலியோவில் இயற்கையாகக் கிடைப்பதை மட்டும் (சிறிது சத்துக் குறைபாட்டுடன் இருந்தாலும்) வீட்டில் சமைத்து உண்ணச் சொல்கிறோம். பொரிப்பதையும், ரெடிமேட் உணவுகளையும் வேண்டாம் என்று சொல்கிறோம்.
நாம் உண்ணும் உணவிலிருந்து தேவையான சத்துகளைக் கிரகிக்க முடியாமல் உடல் திணறுகிறது. இன்னும் உணவு வேண்டும் வேண்டும் என்று கேட்கிறது. எதிலிருந்தாவது உடல் தனக்குத் தேவையான சத்துகள் கிடைக்காதா என்று தேடுகிறது. இந்த சத்துகள் உடலுக்கு வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
உணவுகளில் ஏற்பட்ட இந்த உயிர்ச்சத்துகள் பற்றாக் குறையின் காரணமாக மருத்துவ அறிவியல் எந்தக் குறிப்பிட்ட சத்து உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது என்று கண்டு பிடித்து அவற்றை கெமிக்கல்கள் மூலம் கட்டமைத்து, இயற்கையைப் போலவே தோற்றமளிக்கும் செயற்கைப் பிரதிகளை உருவாக்க ஆரம்பித்தது.
தற்போது கடைகளில் கிடைக்கும் காய்கறிகள், லட்சக்கணக்கான ஆண்டுகளாக உண்ணப்பட்டு வந்த காய்கறிளின் வடிவங்களே அல்ல. மலடாகிப் போன மண்ணிலிருந்து விளைவிக்கப்படும் காய்கறிகளில் உடலுக்குத் தேவையான சத்துகள் முழுமையாகக் கிடைக்காது. இதன் காரணமாகத்தான் பல வகையான ஆட்டோ இம்யூன் நோய்களும், மெடபாலிக் சிண்ட்ரோம் என்று சொல்லப்படும் வளர்சிதை மாற்ற நோய்களும், உடல் பருமனும் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை நோய்களும் நமக்கு வருகின்றன.
ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கை வைட்டமின்களை மல்ட்டி வைட்டமின்கள் என்ற பெயரிலும், உணவிலேயே சேர்த்தும் (வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட எண்ணெய், பால், வைட்டமின்களும் மினரல்களும் உள்ள குளிர் பானங்கள் போன்றவை இந்தப் பிரிவில் வருபவை) நம்மிடம் விற்க ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட அனைத்து வகையான மல்ட்டி வைட்டமின்களும் சிந்தெடிக் என்று சொல்லப்படும் செயற்கை வைட்டமின்களே. அதற்காக இந்த செயற்கை வைட்டமின்கள் முழுக்க முழுக்கப் பயனற்றவை என்று சொல்லி விடவும் முடியாது. இந்த செயற்கை வைட்டமின்களைத் தயாரிப்பது சுலபம், விலையும் மலிவு. அதிக நாட்கள் பாட்டிலில் வைத்தாலும் அதன் தன்மை மாறாது, அதாவது கெட்டுப் போகாது. பெரிய அளவான டோசேஜ்களை சின்ன மாத்திரைக்குள் அடக்கி விட முடியும். இந்த செயற்கை வைட்டமின்களையும் "இயற்கை" என்றே சொல்லி விற்க அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.
ஏனெனில் இந்த செயற்கை வைட்டமின்களின் மூலக்கூறுகளும் இயற்கை வைட்டமினின் மூலக்கூறுகளும் ஒன்றே. ஆனால் இயற்கையில் - உணவில் கிடைக்கும் வைட்டமின்களுக்கும் செயற்கைக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு, செயற்கை என்பது தனியாகக் குறிப்பிட்ட வைட்டமினை மட்டுமே கொண்டிருக்கும். இயற்கையில் கிடைக்கும் என்சைம்களும், கோ ஃபேக்டர்களும் செயற்கையில் கிடைக்காது. இந்த கோ ஃபேக்டர்கள் தான் உடலால் இந்த சத்துகள் கிரகிக்கப்படுவதற்கு மிக மிக மிக முக்கியமானது.
இந்த செயற்கை வைட்டமின்கள் தயாரிக்கப்படும் முறைக்கும் இயற்கையாக தாவரங்களோ அல்லது விலங்குகளோ, வளர்சிதை மாற்றத்தினால் தயாரிக்கும் முறைக்கும் அளவு கடந்த வேறுபாடு உள்ளது.
ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கை வைட்டமின்கள், உடலால் கிரகிக்கப்படும் அளவு மிக மிகக் குறைவு. உடல் எதிர்பார்ப்பது இந்த செயற்கை வைட்டமினை அல்ல. பெரும்பாலாலான நேரத்தில் உடலுக்கு இந்த செயற்கை வைட்டமினை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாது விழிக்கும் அல்லது கழிவு என்று வெளியே தள்ளி விடும்.
அதனால், மெகா டோஸ்களில் வைட்டமின்களையும் மினரல்களையும் எடுத்தால் எல்லா வியாதியும் சரியாகிவிடும் என்று நினைக்க வேண்டாம். இதற்கான டோசேஜை மருத்துவரிடம் ஆலோசித்து எடுப்பதே பாதுகாப்பானதாகும்.
உண்ணப்படும் உணவிலிருந்தோ அல்லது எடுக்கும் சப்ளிமெண்டுகளில் இருந்தோ, ஒரு வைட்டமின் எந்த அளவு உடலால் கிரகிக்கப்படுகிறது, உபயோகமாகிறது என்பது முக்கியம்.
இதை பயோஅவைலபிலிடி என்று சொல்வார்கள்.