Showing posts with label Blood Test. Show all posts
Showing posts with label Blood Test. Show all posts

Monday, February 20, 2017

Paleo Blood Test Protocol - பேலியோ உணவுமுறைக்கு முன்பாக எடுக்கவேண்டிய ரத்தப் பரிசோதனை பாக்கேஜ்.

  பேலியோ உணவுமுறைக்கு முன்பாக ரத்தப் பரிசோதனைகள் எடுக்கவேண்டியது கட்டாயம்.
அது ஏன் கட்டாயம் என்று ஏற்கனவே பலமுறை விளக்கி இருந்தாலும், தினமும் குழுவில் புதியவர்கள் இணைவதால் அடிக்கடி இதைப் பற்றி எடுத்துச் சொல்லிப் புரியவைப்பது நம் கடமை.
திருப்பூரில் ஒரு பெண்மணி என்னிடம் இப்படிக் கேட்டார்.

"ஐ அம் பர்பெக்ட்லி ஆல்ரைட். நான் ஏன் இந்த டெஸ்ட் எடுக்கனும்? எனக்கு பீபி, சுகர், தைராய்டு எதுவும் இல்லை. நான் டெஸ்ட் எடுக்காம பேலியோ ட்ரை பண்ணக் கூடாதா?"
 
"ஓ தாராளமாக பேலியோ முயற்சிக்கலாம். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்."

"சொல்லுங்க."

"பேலியோ உணவுமுறைக்கு மாறியபிறகு மறு நாளோ 3 மாதங்களோ கழித்து, யாரோ எதுவோ சொன்னார்கள் என்று ப்ளட் டெஸ்ட் எடுத்து, ஏதேனும் அதில் கூடக் குறைய இருந்தால், 'ஈஸ் திஸ் பிகாஸ் ஆஃப் பேலியோ அன்ட் ஹைபேட்?' என்று கேட்கக் கூடாது. அப்படியே உங்களுக்குள்ளாகவே வைத்துக்கொள்ளவேண்டும், அதற்கும் பேலியோவுக்கும் சம்ப்ந்தமே இல்லை ஓக்கேயா?" என்று கேட்டேன்.
அவர் புரிந்துகொண்டார். அதாவது பேலியோவுக்கு முன்பாக தனக்கு ஒன்றுமே இல்லை என்று நம்புபவரின் நம்பிக்கை பேலியோவிற்குப் பிறகு பொய்த்துப்போய் டெஸ்ட் எடுக்கச் சொல்கிறது. நம்பிக்கைக்கு டெஸ்ட் தரவுகள் இல்லாமல் அவரால் நம்மிடம் கேள்வி ஏதும் கேட்க முடியாது. ஆயிரக்கணக்கான டெஸ்ட் ரிப்போர்ட்களை நாங்கள் பார்த்தவகையில் 30% மக்களுக்கு முதல் முறையாக நாங்கள் சொல்லித்தான் டயபடிக், ஃபேட்டி லிவர், தைராய்டு, விட்டமின் டி குறைபாடு, ஹார்மோன் குறைபாடுகள், கிட்னி பிரச்னைகள் தெரிந்தது. இதில் மருத்துவர்களும் உண்டு என்பது கூடுதல் தகவல். ரத்தப் பரிசோதனை மூலம் மட்டுமே இவற்றை அறிய முடியும். அந்த ரிப்போர்டை வைத்துக்கொண்டு நாங்கள் ஆப்பரேஷனோ, தொடுசிகிச்சையோ, அக்குமர்மமோ செய்வதில்லை. உங்களுக்கு ரிப்போர்ட்படி இந்தக் குறைபாடு இருக்கிறது. உங்கள் குடும்ப மருத்துவரிடம் இந்த ரிப்போர்ட்டைக் காட்டி ஆலோசனை பெறவும் என்று சொல்லி அனுப்புகிறோம். அஷ்டே.

சரி, இனி ரத்தப் பரிசோனை பற்றி சில விவரங்கள்.

மூன்று முக்கிய பரிசோதனைக் கூடங்கள் நம் குழுவிற்காக குறைந்த செலவில் ரத்தப் பரிசோதனைகள் செய்து தருகிறார்கள். இதில் பல டெஸ்ட்கள் பல விலைகளில் சொல்லப்படுவதால். எந்த டெஸ்டை பேலியோவிற்கு முன்பாக செய்வது என்ற குழப்பம் நிலவுகிறது. அதைப் போக்கி உங்களுக்கு ஏற்ற பரிசோதனைகள் பரிந்துரைக்கிறோம். கவனமாக குறித்துக்கொள்ளவும்.

உங்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நீங்கள் முதன் முதலாக பேலியோ உணவுமுறைக்கு வருவதற்கு முன்பாக முழு டெஸ்ட்கள் + அப்டமன் ஸ்கேன் அடங்கிய பாக்கேஜில் உள்ள டெஸ்ட்களை செய்துகொள்வது நல்லது.

முழு டெஸ்ட் பாக்கேஜ்கள் + அப்டமன் ஸ்கான் யாருக்கு?

01. இதுவரை இதுபோன்ற ரத்தப் பரிசோதனைகள் வாழ்க்கையில் / சமீபத்தில் செய்யாதவர்கள்.
02. முழு பரிசோதனையில் உள்ள முக்கியமான டெஸ்ட்களான விட்டமின் டி, ஹார்மோன்கள், eGFR, Microalbumin Urea போன்ற டெஸ்ட்கள் விடுபட்டவர்கள்.
03. குடிப்பழக்கம், சிகரெட் பழக்கம் உள்ளவர்கள்.
04. அதிக உடல் எடை கொண்டவர்கள் 100+
05. உடல் எடை குறைக்க ஹெர்பாலைஃப், மாற்று மருத்துவங்கள், நாட்டு மருந்து, லேகியம், பவுடர் போன்றவைகள் உபயோகித்தவர்கள்.
06. ஆண்டுக்கணக்கில் டயபடிஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள்.
07. ஆண்டுக்கணக்கில் டயபடிஸால் பாதிக்கப்பட்டு சரியாக ஆங்கில மருந்து உட்கொள்ளாமல் மாற்று மருத்துவம், லேகியம், பவுடர் உண்டவர்கள்/ உண்ணாதவர்கள்.
08. குழந்தையின்மைக்காக உடல் பருமன் குறைக்க பேலியோ முயற்சிப்பவர்கள்.
09. சில பல வருடங்களுக்கு முன் செயின் ஸ்மோக்கர், சங்கிலி குடிகாரர்களாக இருந்து தற்பொழுது நல்ல பிள்ளையாக இருப்பவர்கள்.
10. வருடம் தவறாது இதுபோன்ற உடல் பரிசோதனை மேற்கொள்பவர்கள்.
11. முதன் முறையாக பேலியோ முயற்சிக்க வருபவர்கள் அனைவரும்.

 விலை குறைந்த டெஸ்ட்கள் யார் முயற்சிக்கலாம்?

01. பேலியோ பற்றி நன்கு அறிந்து 100 நாட்கள் கடந்தவர்கள்.
02. தன் உடல் நிலை பற்றி ஏற்கனவே முழு டெஸ்ட் எடுத்து அதன் மூலம் தெளிவாக அறிந்துகொண்டவர்கள்.
மேற்கூறியவர்கள் தங்கள் பிரச்னைக்கேற்ப டெஸ்ட் பாக்கேஜ்களை தேர்வுசெய்துகொள்ளலாம்.
இதுபோக கிட்னி பிரச்னை இருப்பவர்கள், தைராய்டு குறைபாடு இருப்பவர்கள் அவரவர் நிலைக்கேற்ப சில டெஸ்ட்களை மாதந்தோறும் எடுக்கவேண்டி இருக்கலாம். அது குறித்து உங்கள் மருத்துவர் முடிவு செய்வார்.
ஆரோக்கியம் நல்வாழ்வில் பேலியோவுக்கு முன்பாக கட்டாயம் எடுக்கவேண்டிய ரத்தப் பரிசோதனைகளை குழு பரிந்துரைக்கும் மூன்று லேப்களில் மட்டும்தான் எடுக்கவேண்டுமா?
அவசியம் இல்லை. நாங்கள் பரிந்துரைக்கும் முழுமையான பாக்கேஜ்களை நீங்கள் உங்கள் அருகாமையில் இருக்கும் பரிசோதனை நிலையங்களில் கூட எடுக்கலாம். ஆனால் விலை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது உங்களுக்கு வித்தியாசம் புரியவரும். மற்றபடி எங்களுக்குத் தேவை எக்ஸல் ஷீட்டில் முழுமையாக நிரப்பப்படும் எண்கள் மட்டுமே.

நீங்கள் பரிந்துரைக்கும் ரத்தப் பரிசோதனை லேப்களில் சிலவற்றில் ஸ்கான் இருக்கிறது, சிலவற்றில் இல்லை. என்ன செய்வது?

உங்களுக்கு உகந்த மூன்று லேபுகளிலோ அல்லது அருகாமையில் இருக்கும் லேபிலோ ரத்தப் பரிசோதனை செய்துகொண்டு அருகில் இருக்கும் பரிசோதனை நிலையத்தில் அப்டமன் ஸ்கேன் மட்டும் தனியாக செய்துகொள்ளலாம். எளிமையாகப் புரிந்துகொள்ளுங்கள். முழு ரத்தப் பரிசோதனை மற்றும் அப்டமன் ஸ்கேன் பரிந்துரைக்கப்படும் லேப்களில் இருப்பின் அங்கேயே இரண்டையும் தள்ளுபடி விலையில் செய்துகொள்ளவும். அல்லது தள்ளுபடி விலையில் ரத்தப் பரிசோதனையும், அப்டமன் ஸ்கானை அருகாமையில் இருக்கும் நல்ல லேபிலும் செய்துகொள்ளலாம்.

நான் வெளிநாட்டில் வசிக்கிறேன். என்னால் இங்கு பரிந்துரைக்கப்படும் எல்லா டெஸ்ட்களையும் எடுக்க இயலாது. ஆனால் நான் பேலியோ முயற்சிக்க விரும்புகிறேன். நான் என்ன செய்வது?

 நீங்கள் வெளிநாட்டில் இருந்தாலும் ரத்தப் பரிசோதனை என்பது அவசியம். ஆனால் வெளிநாடுகளில் இந்தப் பரிசோதனைகள் செய்வது கடினம் மற்றும் மிக அதிக பொருட்செலவினை அளிப்பது என்பதால், நீங்கள் உங்கள் சுய ஆர்வத்தில் பிகினர்ஸ் பேலியோ துவங்கலாம். குறைந்தபட்சம் உங்கள் ரத்த சர்க்கரை அளவுகள், தைராய்டு, விட்டமின் டி, கொழுப்பு அளவுகளை அறிந்துகொண்டு பேலியோ முயற்சிப்பது நலம். இந்தியாவிற்கு வரும்பொழுது முழுமையான டெஸ்ட்கள் எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.

ரத்தப் பரிசோதனை எடுத்தபிறகு என்ன செய்யவேண்டும்?

பின் போஸ்டில் உள்ள இந்த இணைப்பிலிருந்து http://tiny.cc/paleoreport எக்ஸல் ஷீட்டை டவுன்லோடு செய்து அதில் உங்கள் பரிசோதனை ரிசல்ட்டில் உள்ள எண்களை சரியாக உள்ளிட்டு அதை ஒரு ஸ்க்ரீன் ஷாட் அல்லது தெளிவாக மொபைலில் புகைப்படம் எடுத்து குழுவில் அப்லோடு செய்து போஸ்ட் போட்டு தெளிவாக உங்கள் உடல் பிரச்னைகள், தற்பொழுது உண்ணும் மாத்திரை, மருந்துகள், எதற்காக இந்த பேலியோ உணவுமுறையை முயற்சிக்க விரும்புகிறீர்கள் போன்ற தகவல்களை சரியாக விவரித்துக் கேட்டால் உங்களுக்கான பேலியோ பரிந்துரை கிடைக்கும்.

என் குடும்பத்தில் 6 நபர்கள் இருக்கிறோம். நான் மட்டுமே பேலியோ முயற்சிக்க இருக்கிறேன். நான் மட்டும் ரத்தப் பரிசோதனை செய்தால் போதுமா?

பேலியோவுக்கு முன்பான ரத்தப் பரிசோதனைகள் என்பது பேலியோவால் நீங்கள் அடைந்த பலனை ஒப்பிட்டுப் பார்க்கவும், உங்கள் உடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் பேலியோவால் குணமடைந்ததை உங்கள் மருத்துவர் ஒப்பிட்டுப் பார்த்து மருந்துகள் அளவைக் குறைக்கவும் பயன்படும்.
ஆனால், பேலியோவில் அல்லாத உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு வருடம் ஒருமுறையாவது இதுபோன்ற ரத்தப் பரிசோதனைகளை நீங்கள் செய்வதின் மூலம், வருங்கால குறைபாடுகள், நோய்களை முன்னரே கண்டறிந்து காப்பாற்றிக்கொள்ள முடியும். நம் குழுவில் பரிந்துரைக்கப்படும் லேபுகளில் குறைந்த செலவில் பேலியோ பாக்கேஜையோ அல்லது, வெளியில் உள்ள லேபுகளில் குறைந்தபட்ச ரத்தக் கொழுப்பு, சர்க்கரை, தைராய்டு, விட்டமின் டி, லிவர், கிட்னி, ஹார்மோன் டெஸ்ட்களை அவரவர் பொருளாதார வசதி மற்றும் உடல்நலன் அடிப்படையில் எடுத்து மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.

குழு தவிர்த்து வெளியே காசு கொடுத்து மருத்துவர்கள் அல்லாத பேலியோ அடிப்படை அறிவற்ற, ப்ளட் டெஸ்டே எடுக்காமல் மூன்று வேளையும் முட்டையும், கறியும், பாதாமும் தின்னச் சொல்லும் போலிகளிடம் அர்ஜன்ட் பேலியோவை நீங்கள் முயற்சித்து, ஒரிஜினல் டூப்ளிகேட் பேலியோ டயட் புத்தகங்கள் படித்து, அதனால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு எங்களிடம் கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்காமல் இருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இதேபோல பலமுறை குழு சார்பில் பேசி, முக்கிய ரத்தப் பரிசோதனைகளை சகாய விலையில் தருமாறு கோரிக்கை வைத்து புதிய பரிசோதனை நிலையங்களை நாங்கள் அறிமுகப்படுத்தினால் சிலர் டெஸ்ட் எடுக்கவேண்டும் என்று வீட்டுக்கு வரச்சொல்லிவிட்டு காலங்காலையில் ரத்தப் பரிசோதனை எடுக்க வருபவரிடம் இன்னிக்கு வேணாங்க, வடக்குல சூலம் அடுத்த மாசம் பார்க்கலாம் என்று திருப்பி அனுப்பும் பொறுப்பற்றத்தனமும் ரிப்போர்ட் செய்யப்பட்டிருக்கிறது. உங்களுக்கு டெஸ்ட் எடுக்க விருப்பமில்லை என்றால் புக்கிங் செய்யவேண்டாம். புக்கிங் செய்துவிட்டால் டெஸ்ட் எடுத்துவிடுங்கள். உங்களின் பொறுப்பற்ற செயலால், டெஸ்ட் விலைகள் கூடி ஆர்வமுடையவர்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளவும். இதனால் வீட்டிற்கு வந்து டெஸ்ட் எடுப்பது நிறுத்தப்பட்டு நீங்கள் காலங்காலையில் காசு எடுத்துக்கொண்டு லேபில் நிற்கவேண்டிய நிலை வரலாம். ஒரு வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி அதில் மேலும் தள்ளுபடியோ, புதிய வசதிகளோ பெற எங்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
போலவே, சம்பந்தப்பட்ட லேபுகளின் சேவைகளில் ஏதேனும் குறை இருப்பின் நேரடியாக அவர்களைத் தொடர்புகொண்டு புகார் அளித்து நிவாரணம் பெறவும் வேண்டுகிறோம்.

 நன்றி.

Friday, November 4, 2016

உள்ளுறுப்புக்கள் என்னென்ன சாப்பிடலாம்? என்னென்ன நன்மைகள்?


ஈரல்- வைட்டமின் ஏ..பி வைட்டமின்களின் கோட்டை. கொலஸ்டிரால் நிரம்பிய அதியற்புத வைட்டமின் கோட்டை இது. வாரம் ஒரு நாள் கட்டாயம் ஈரல் சாப்பிடணும்
கிட்னி- இதிலும் வைட்டமின் ஏ உள்ளது, ஸிங், புரதம் நிரம்பிய சிறப்புணவு,. வாரம் 1- 2 நாள் இதை சபபிடலாம்
இதயம்- தசைபகுதி மாமிசம். சொ.ஓ.கியு 10 ரிமபியது. இதயத்துக்கு இதமளிப்பது.ஸ்டடின் மத்திரை எடுப்பவர்கள், -ஹார்ட் பேசன்டுகள் சாப்பிடவேண்டிய பொருள் சி ஓ கியு 10 என்பதால் இதயம் அவர்களுக்கு மிக நலமளிப்பது
ரத்தம் - அனிமியா எனும் இரும்புசத்து குறைபாடு உள்லவர்கள் சாப்பிட அக்குறை நீங்கும். புரதமும், இரும்பும் அதிகம். கொழுப்பு குறைவு. ஆண்கள் இதை சாப்பிடும் அவசியம் பொதுவாக இல்லை
எலும்புகள்- தினமும் கூட இதில் சூப் சாப்பிடலாம்....எலும்புகளுக்கு நல்லது
மீன் தலை- கிட்டபார்வை உள்ளவர்களுக்கும், கண்னாடி அணிபவர்களுக்கும், குழந்தைகளுக்கும் நன்மையளிப்பது.
கோழிக்கால்- கால்சியம், கொலாஜன் நிரம்பிய அற்புத உணவு. பாலுக்கு மாற்ராக பருகலாம். ஆர்த்ரைட்டிசுக்கு மிக நல்லது
முட்டை ஓடு-- இது முழுக்க கால்சியமே. ஒரே ஒரு சின்ன துணுக்கு முட்டை ஓட்டை பொடியாக அரைத்து சாப்பிட்டால் ஒரு கப் பாலுக்கு சமம்.
அதே சமயம் இது ஓவர்டோசாகும் அபாயம் இருப்பதால் இதை பயன்படுத்தௌவதில் எச்சரிக்கை அவசியம்
-  Neander Selvan 

Thursday, October 6, 2016

பேலியோ டயட்டிற்கு முன்பு கண்டிப்பாக செய்யவேண்டிய குறைந்தபட்ச ரத்தப் பரிசோதனை விவரம்.(Basic Blood test details)






நீங்கள் ஒரு டயட்டில் இருக்கிறீர்களோ இல்லையோ, வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வது சில சிக்கல்களை வருமுன் காக்க உதவும். 

இரவு கடைசி உணவை 9 மணிக்குள் முடித்துக்கொண்டால், காலையில் ரத்தப் பரிசோதனை எடுக்கும்வரை நீங்கள் எதுவும் சாப்பிடாமல் இருக்கவேண்டும். தண்ணீர் மட்டும் குடிக்கலாம், மேற்கண்ட டெஸ்ட்களை உங்கள் அருகில் உள்ள லேபில் எடுத்துக்கொள்ளலாம்.

டயட் எடுப்பதற்கு முன்பாக பரிசோதனை கட்டாயம், அப்பொழுதுதான் டயட்டின் தாக்கம் உங்கள் உடலில் என்ன என்பது தெரியும், டயட்டுக்கு முன்பாக டெஸ்ட் செய்யாமல், டயட்டிற்குப் பிறகு டெஸ்ட் எடுத்து அது ஏறிவிட்டது, இது குறைந்துவிட்டது என்று கேட்கப்படும் கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்கமுடியாது.

அனைவரும் அல்லது டயபடிக் உள்ளவர்கள் மேற்கண்ட டெஸ்டுகளுடன் அருகிலுள்ள லேபில் உங்கள் சிறுநீரைக்கொடுத்து Microalbuminuria in urine + Urine Routine  டெஸ்ட்களையும் சேர்த்து எடுப்பது நல்லது. இந்த யூரின் டெஸ்டில் உங்கள் கிட்னி செயல்பாடுகள் தெளிவாகத் தெரியவரும், கண்டிப்பாக வருடம் ஒருமுறை எடுத்து உங்கள் கிட்னியின் ஆரோக்கியத்தை அறிந்துகொள்ளலாம்.






© https://www.facebook.com/groups/tamilhealth/

Monday, April 4, 2016

பேலியோ உணவுமுறைக்கு முன்பாக ரத்தப் பரிசோதனை ஏன் அவசியம்? Blood Test Before Paleo Diet

ப்ளட் டெஸ்ட் கண்டிப்பா எடுக்கனுமா? நான் நல்லாத்தான் இருக்கேன் என்று பலர் கேட்கிறீர்கள் அல்லவா?  நமது குழுவின் புதிய மெம்பர் ஒருவரின் ரிபோர்ட்டை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம்.

Cholesterol 417
TGL 200
HDL 49
LDL 328
Weight 89 / Age 30 / Non veg

அவருடைய ரிசல்ட். 30 வயதில் 89 கிலோ எடை என்பது பெரிய விஷயமே அல்ல. 25 வயதில் 100+ எல்லாம் குழுவில் இருக்கிறார்கள். இங்கே நாம் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது அவருடைய கொழுப்பின் அளவுகள்.

இவரிடம் சில கேள்விகள் கேட்டேன். இதற்கு முன்பு எப்பொழுதாவது ரத்தப் பரிசோதனை செய்திருக்கிறாரா?
இல்லை.

ஏதேனும் உடல் பிரச்சனைகள் இருக்கிறதா?
இல்லை.

மருந்து மாத்திரை எடுக்கிறாரா?
இல்லை.


சரி, இப்பொழுது இவரைப் போல ஒருவர், நாம் கூறியபடி ரத்தப் பரிசோதனை எதுவும் எடுக்காமல் பேலியோ எடுத்து ஒரு மாதம் அல்லது ஒருவாரம் கழித்து, இவ்வளவு கொழுப்பு சாப்பிடுகிறோமே என்ற எண்ணத்திலோ, எடை குறைந்ததாலோ பயந்து போய், ஒரு டெஸ்ட் எடுத்துவிடலாம் என்று நினைத்து டெஸ்ட் எடுக்கிறார். பேலியோவால் 0% நன்மை என்றே வைத்துக்கொள்வோம். இப்பொழுது மேலே உள்ள ரிசல்ட்கள் அவருக்கு வருகிறது.

Cholesterol 417
TGL 200
HDL 49
LDL 328

இந்த ரிசல்ட்டை வைத்துக்கொண்டு டாக்டரிடம் செல்கிறார்.

டாக்டர்: என்ன சாப்பிட்டீர்கள்?


15 நாட்களாக டெய்லி 5 முட்டை, 1/2கிலோ சிக்கன், நெய்ல வறுத்த பாதாம், பனீர் 200 கிராம், அவகோடா, சீஸ், வெண்ணெய் டாக்டர் இதுதான் சாப்பிட்டேன்.

டாக்டருக்கு லேசாக மயக்கம் வருகிறது, மெதுவாகக் கீழே கால் இருக்கிறதா என்று பார்த்து வந்தது ஆவி இல்லை மனிதன்தான் என்று கன்பர்ம் செய்துகொள்கிறார்.

இவ்ளோ கொழுப்பு சாப்பிட்டா என்னாங்க ஆகறது? ஏன் இப்படிச் சாப்பிட்டீங்க? தற்கொலைக்கு முயற்சி பண்றீங்களா?

இல்லைங்க டாக்டர் பேலியோன்னு ஒரு டயட், பேஸ்புக்ல...

வாட் நான்சன்ஸ்? நீங்க எல்லாம் படிச்சவங்கதானே? பேஸ்புக்காம் டயட்டாம், உடனே அட்மிட் ஆகுங்க, வீட்டுக்கு தகவல் சொல்லிடுங்க.

பைபாஸ் பண்ணப்போறீங்களா டாக்டர்?





 அவர் வீட்டுக்குத் தகவல் பறக்கிறது. பேலியோ சாப்பிட்டால் நன்றாக இருந்த மனிதரின் கொழுப்பு 400ஆக மாறி உயிர்பிழைத்ததே அதிசயம் என்ற செய்தி பரவுகிறது.


அதைவிட முக்கியமாக வறண்ட சப்பாத்தியும், மஞ்சள் கரு இல்லாத முட்டையும், ஓட்ஸ் கஞ்சியும், பொன்னி அரிசி சாப்பாடும், கொழுப்பில்லாத பாலும் தவிர்த்து ஸ்டாட்டின் மட்டுமே சாப்பிடவேண்டும் என்று தீர்ப்பு வருகிறது .

டேய் சீனியர்களே எங்கடா இருக்கீங்க, என்று வன்மத்தோடு ஒரு போஸ்டும் அவர் மனதில் டைப்பிக்கொண்டிருப்பார். சொந்த பந்தங்கள் டேய் சம்முவம் எட்றா அந்த வீச்சறிவாள என்று டாட்டா சுமோவில் கரும்புகை கக்கக் கிளம்பும்.

இது தேவையா?

இதில் எங்கள் தவறு என்ன?

இதையே, மேலே நண்பரைப் போல சரியாக சொன்னதைக் கேட்டு, பரிந்துரைக்கப்பட்ட ப்ளட் டெஸ்ட் எடுத்தால் , அவருக்கு சரியான உணவு முறையை , மருத்துவரைப் பார்க்கவேண்டி இருப்பின் அந்த அறிவுரையோ கிடைக்கும்தானே?

அவர் விருப்பப்படும் நாளில் மீண்டும் டெஸ்ட் எடுத்துப் பார்க்கும்பொழுது மேலே சொன்னதை விட அளவுகள் குறைந்தால் அவருக்கு நமது டயட்டின் மீது நம்பிக்கை வரும்தானே? வராவிட்டால் இது வேலைக்காவாது என்று வேறு வழியைப் பார்க்கச் சென்றுவிடுவார்தானே?

யோசியுங்கள் மக்களே..

உணவுமுறை முதற்கொண்டு பொழுதுபோகாமல் எதையும் இந்தக் குழு பரிந்துரைப்பதில்லை. அதில் இருப்பதை சரியாகப் பின்பற்றினாலே போதும்.

போலவே, அந்த டெஸ்ட் ரிசல்ட்டை எல்லாம் நீங்கள் உங்கள் மருத்துவரிடம் காண்பித்து சரியான ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளவேண்டும். நாங்கள் அதில் சில விசயங்கள் தவிர்த்து மற்றவற்றை அலசி ஆராய்வதில்லை. ஏனென்றால் அதெல்லாமே நீங்கள் ஒரு மருத்துவரை நேரடியாகக் கலந்து பேசி புரிந்துகொள்ளவேண்டியவை.

உணவுமுறை முன்பாக ரத்தப் பரிசோதனை அவசியம், அலட்சியப்படுத்துபவர்களுக்கு ஆலோசனை கிடைக்காது. அதனால் வரும் பாதிப்புகளுக்கு குழு பொறுப்பல்ல.

Thursday, March 24, 2016

பேலியோ உணவுமுறை முன்பாக எடுக்கவேண்டிய டெஸ்ட்கள்






நீங்கள் ஒரு உணவுமுறையில்  இருக்கிறீகளோ இல்லையோ, வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வது சில சிக்கல்களை வருமுன் காக்க உதவும். மேலே உள்ள தைரோகேர் லாப் மூலம் நீங்கள் ரத்தப் பரிசோதனையை சகாயவிலையில் செய்துகொள்ளலாம், இதை நீங்கள் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் யாருக்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

இரவு கடைசி உணவை 9 மணிக்குள் முடித்துக்கொண்டால், காலையில் அவர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து ரத்தப் பரிசோதனை எடுக்கும்வரை நீங்கள் எதுவும் சாப்பிடாமல் இருக்கவேண்டும். தண்ணீர் மட்டும் குடிக்கலாம், உங்கள் பகுதியில் தைரோகேர் வசதி இல்லையென்றால் மேற்கண்ட டெஸ்ட்களை உங்கள் அருகில் உள்ள லேபில் எடுத்துக்கொள்ளலாம்.

பேலியோ உணவுமுறை  எடுப்பதற்கு முன்பாக பரிசோதனை கட்டாயம், அப்பொழுதுதான் உணவுமுறையின்  தாக்கம் உங்கள் உடலில் என்ன என்பது தெரியும், பேலியோ உணவுமுறைக்கு முன்பாக டெஸ்ட் செய்யாமல், பேலியோ உணவுமுறைக்கு  பிறகு டெஸ்ட் எடுத்து அது ஏறிவிட்டது, இது குறைந்துவிட்டது என்று கேட்கப்படும் கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்கமுடியாது.

அனைவரும் அல்லது டயபடிக் உள்ளவர்கள் மேற்கண்ட டெஸ்டுகளுடன் அருகிலுள்ள லேபில் உங்கள் சிறுநீரைக்கொடுத்து அரோக்கியம் 1.4 ல் உள்ள டெஸ்ட்களுடன் 


Microalbuminuria in urine + Urine Routine  டெஸ்ட்களையும் சேர்த்து எடுப்பது நல்லது. இந்த யூரின் டெஸ்டில் உங்கள் கிட்னி செயல்பாடுகள் தெளிவாகத் தெரியவரும், கண்டிப்பாக வருடம் ஒருமுறை எடுத்து உங்கள் கிட்னியின் ஆரோக்கியத்தை அறிந்துகொள்ளலாம்.






© https://www.facebook.com/groups/tamilhealth/

Saturday, August 8, 2015

What is HbA1C Test? HbA1C டெஸ்ட் என்றால் என்ன? By - Muthuraman Gurusamy

HBA1C என்பது இரத்தத்தில் குளுக்கோஸ் எவ்வளவு சதவீதம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவும் ஒரு மாற்று சோதனை.

இதற்கு ஏற்கனவே இரத்தத்தில் குளுக்கோஸ் எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள Fasting blood sugar, 2-hour postprandial blood sugar, Random blood sugar (RBS), Oral glucose tolerance test என்று பல்வேறு சோதனை முறைகள் உள்ளது.
பின் ஏன் HBA1C பரிந்துரைக்கபடுகிறது.

மேற்சொன்ன சோதனைகள் உங்கள் இரத்தத்தில், குளுக்கோஸின் இப்போதைய நிலைமை என்ன என்பதை மட்டுமே சொல்லும்.

HBA1C கடந்த மூன்று மாதமாக இரத்தத்தில் குளுக்கோஸின் நிலைமை என்ன என்பதின் சராசரியை சொல்லும். அதானால் இது பரிந்துரைக்கபடுகிறது.
பின் என்ன பிரச்னை.

HBA1C சோதனை எடுத்து பார்த்து கடந்த மூன்று மாதமாக இரத்தத்தில் குளுக்கோஸின் சராசரி நிலைமை என்ன என்பதை சரியாக தெரிந்து கொள்ளலாமே.
இங்கு சரியாக என்று சொல்வதில்தான் பிரச்னை.

அதற்க்கு HBA1C சோதனை எவ்வாறு செய்ப்படுகிறது என்பதை புரிந்துகொண்டால்தான் தெரியவரும்.
இரத்தத்தில் உள்ள சிவப்பு இரத்த செல்களில், ஹீமோகுளோபினில் A1A, A1B, A1C என்ற பிரிவுகள் உள்ளது. இதில் A1Cயுடன் குளுக்கோஸ் அதிகமாக ஒட்டிகொள் கிறது. அதை தனியாக பிரித்தெடுத்து அதில் எத்தனை சதவீதம் குளுக்கோஸ் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று கண்டுபிடிக்கவேண்டும். இரத்த சிவப்பு செல்களின் வாழ்நாள் சராசரியாக 90 நாட்கள் அதன் பிறகு அது சிதைந்து விடும். இந்த 90 நாட்களில் படிப்படியாக எவ்வளவு குளுக்கோஸ் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்து சொல்வதுதான் HBA1C சோதனை முடிவுகள்.

இந்த 90 நாட்கள் என்பது சரியான கணக்கு கிடையாது. ஒவ்வொருத்தருக்கும் வேறுபாடும். நீரழிவு(DIABETIC), அனிமியா (ANEMIA) போன்ற இரத்த குறைபாடு உள்ளவர்களுக்கு சிறிது நாட்களிலேயே சிவப்பு இரத்த செல்களின் வாழ்நாள் முடிந்துவிடும் . ஒரு பிரச்னையும் இல்லாதவர்களுக்கு சிவப்பு இரத்த செல்களின் வாழ்நாள் 187 நாட்கள் வரை கூட இருக்கும்.

சிவப்பு இரத்த செல்களின் வாழ்நாள் குறைவாக இருக்கும்போது அதனுடன் ஒட்டிக்கொள்ளும் குளுக்கோஸ் விகிதம் குறைவாக இருக்கும் HBA1C சோதனை முடிவுகள் குறைவாக இருக்கும்.

சிவப்பு இரத்த செல்களின் வாழ்நாள் அதிகமாக இருக்கும்போது அதனுடன் ஒட்டிக்கொள்ளும் குளுக்கோஸ் விகிதம் அதிகமாக இருக்கும். HBA1C சோதனை முடிவுகள் அதிகமாக இருக்கும்.

ஆக HBA1C சோதனை முடிவுகளை நமது உடலில் உள்ள குளுக்கோசை விட நமது உடலில் உள்ள சிவப்பு இரத்த செல்களின் வாழ்நாள்தான் தீர்மானிக்கிறது.

சிவப்பு இரத்த செல்களின் வாழ்நாள் அதிகமாக இருப்பவர்களுக்கு அவர்களின் உடலுக்கு குளுக்கோசை சாமாளிக்கும் திறமை இருந்தாலும் HBA1C சோதனை முடிவுகள் அதிகமாக இருக்கும்.

இதே மாதிரி நீரழிவு(DIABETIC), அனிமியா (ANEMIA) போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கு சிவப்பு இரத்த செல்களின் வாழ்நாள் குறைவாக இருக்கும். அவர்களுக்கு HBA1C சோதனை முடிவுகள் குறைவாக காண்பித்து அவர்கள் நல்ல நிலைமையில் இருப்பதாக முடிவுகள் வரக்கூடும்.

மேலும் ஏ1சி சராசரியைத்தான் காட்டும். அதாவது ஒரு நாள் 300 இருந்து மூன்று நாட்கள் 80 இருந்தால் சராசரி 125. ஆனால் ஒரு நாள் 300 போவதில் இருந்து வரும் பாதிப்பை கட்டுப் படுத்த முடியாது
மேலும் இது இரத்தத்தில் குளுக்கோஸ் ஏறும்போது நம் உடல் அதை எப்படி சாமளிக்கிறது என்பதும் தெரியாது.
இதனால்தான் HBA1C சோதனை முடிவுகளை நம்புவதர்க்கு முடியவில்லை.

எனவே HBA1C எடுக்கும்போது Fasting blood sugar, 2-hour postprandial blood sugarவும் எடுத்து பார்த்துவிடுங்கள் என்பது என் சொந்த கருத்து.

By - Muthuraman Gurusamy

Friday, August 7, 2015

பேலியோ டயட் எடுப்பதற்கு முன்னால் செய்யவேண்டிய பரிசோதனைகள் Tests before starting Paleo Diet.

முழு உடல் பரிசோதனை. இது இங்கே அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. பேலியோ ஆரம்பிக்குமுன் எந்த மாதிரியான உடல் பரிசோதனை செய்யவேண்டும் என்பது எல்லோருக்கும் எழும் சந்தேகம். கீழே உள்ள பரிசோதனைகளை அருகில் இருக்கும் நல்ல லேபில் காலை வெறும் வயிற்றுடன் சென்று எடுத்து அந்த ரிப்போர்ட்டில் உள்ள பிரச்சனைகளை அறிந்துகொண்டு அதற்கேற்ப டயட் துவங்க வேண்டும். 
 



டயட் எடுத்த பிறகு, தேவையான எடை குறைப்பு அடைந்தபிறகு மீண்டும் மேல் கூறிய டெஸ்ட்களை எடுக்கும்பொழுது டயட்டால் உங்களுக்குக் கிடைத்த பலன் என்ன என்பது தெரியவரும். 

--



இந்த டெஸ்ட் எல்லாம் சகாய விலையில் உங்கள் அருகாமையில் உள்ள ரத்தப் பரிசோதனை நிலையங்களில் எடுத்துக்கொள்ளவும். மீண்டும் டயட்டிற்குப் பின்னான டெஸ்ட்டையும் அதே லேபில் பரிசோதிக்கவும்.


நாட்பட்ட டயபடிஸ், க்ரியெட்டின் அளவுகள் அதிகம் போன்றவை இருந்தால் eGFR & Microalbumin Urea போன்ற கிட்னியின் செயல்திறன் அறியும் டெஸ்ட்களையும் சேர்த்து எடுத்துக்கொள்ளவும், இந்தப் பரிசோதனைகளை வருடம் ஒருமுறை செய்து கிட்னியின் ஆரோக்கியத்தை அறிந்துகொள்ளவும்.
  

பேலியோ டயட் எடுப்பதற்கு முன்னால் செய்யவேண்டிய பரிசோதனைகள் Tests before starting Paleo Diet.

முழு உடல் பரிசோதனை. இது இங்கே அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. பேலியோ ஆரம்பிக்குமுன் எந்த மாதிரியான உடல் பரிசோதனை செய்யவேண்டும் என்பது எல்லோருக்கும் எழும் சந்தேகம். கீழே உள்ள பரிசோதனைகளை அருகில் இருக்கும் நல்ல லேபில் காலை வெறும் வயிற்றுடன் சென்று எடுத்து அந்த ரிப்போர்ட்டில் உள்ள பிரச்சனைகளை அறிந்துகொண்டு அதற்கேற்ப டயட் துவங்க வேண்டும். 
 



டயட் எடுத்த பிறகு, தேவையான எடை குறைப்பு அடைந்தபிறகு மீண்டும் மேல் கூறிய டெஸ்ட்களை எடுக்கும்பொழுது டயட்டால் உங்களுக்குக் கிடைத்த பலன் என்ன என்பது தெரியவரும். 

--



இந்த டெஸ்ட் எல்லாம் சகாய விலையில் உங்கள் அருகாமையில் உள்ள ரத்தப் பரிசோதனை நிலையங்களில் எடுத்துக்கொள்ளவும். மீண்டும் டயட்டிற்குப் பின்னான டெஸ்ட்டையும் அதே லேபில் பரிசோதிக்கவும்.


நாட்பட்ட டயபடிஸ், க்ரியெட்டின் அளவுகள் அதிகம் போன்றவை இருந்தால் eGFR & Microalbumin Urea போன்ற கிட்னியின் செயல்திறன் அறியும் டெஸ்ட்களையும் சேர்த்து எடுத்துக்கொள்ளவும், இந்தப் பரிசோதனைகளை வருடம் ஒருமுறை செய்து கிட்னியின் ஆரோக்கியத்தை அறிந்துகொள்ளவும்.