Saturday, November 5, 2016

மேக்ரோ - பகுதி -1


நம்முடைய பேலியோ லைஃப் ஸ்டைலில் சிலர் கலோரி குறைவாக உண்ணுகின்றனர் என்று எழுந்த சந்தேகத்தில் சங்கர் ஜி ஆரம்பித்த இழையில் “மேக்ரோ பற்றி பேசலாமா?” என நான் கேட்டதற்கு நீங்கள் கொடுத்த ஆதரவின் பேரில் எனக்கு தெரிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என இருக்கிறேன்.
அன்றொரு நாள் என் மனைவியுடன் வாட்சப்பில் சின்ன உரையாடல் நடந்தது. எப்பொழுதுமே “சாப்பிட்டீங்களா, என்ன சாப்பிட்டீங்க” என்று கேட்பார்கள். ஏனென்றால், டயட் அது இதுன்னு அடிக்கடி சாப்பிடாம விரதம் இருக்கிறேன்னு எப்பவுமே ஒரு சந்தேகம் அவங்களுக்கு. அப்படி சாப்பிடாமல் பட்டினியாக இருந்து என்ன சாதிக்கப்போகிறேன் என்று அவர்களுக்கு ஒரு ஆதங்கம். அன்று என்ன பேசினோம்னு கீழே எழுதியிருக்கிறேன். வாசிங்க.
மனைவி: “சாப்பாடு என்ன சாப்பிட்டீங்க?”
நான்: “மூனு பீஸ் க்ரீம் சீஸ். இது மொத்தம் 54 கிராம் இதுல 17 கிராம் ஃபேட் 4 கிராம் ப்ரோட்டீன். ரெண்டு டபுள் ஆம்லெட் இதில 20 கிராம் ஃபேட் 24 கிராம் ப்ரோட்டீன், 5 கிராம் கார்ப். ஒரு சிக்கன் மசாலா இதில 30 கிராம் ப்ரோட்டீன் 5 கிராம் ஃபேட். அப்புறம் 50 கிராம் பட்டர் இதில 40 கிராம் ஃபேட். அப்புறம் ஒரு ப்ளாக் டீ. இதில ஒன்னுமெ இல்லை. ஆக மொத்தம் 82 கிராம் ஃபேட் 58 கிராம் ப்ரோட்டீன் 5 கிராம் கார்ப் சாப்பிட்டிருக்கேன்”.
மனைவி: “இதல்லாம் கணக்கு ப் பார்த்து சாப்பிடவா?”
நான்: “ஹாஹா ஆமா”
மனைவி: “சுத்தம் சோறும் குழம்பும் சாப்பிட்டமா வேலையப்பார்த்தமான்னு போனாப்போதும்”
அத்துடன் அந்த உரையாடல் முடிந்தது. ஆனால், வெறும் சோறும் குழம்பும் மட்டும் சாப்பிட்டோமா, வேலையைப் பார்த்தோமா என்று போய்க்கொண்டிருந்ததால் மட்டுமே எனக்கு டயாபெடீஸ் வந்தது. ஃபாஸ்ட்டிங் சுகர் 250 மேலே எகிறியது. சாப்பாடுக்கு முன்னும் பின்னும் சர்க்கரை அளவைக் குறைப்பதற்காக மாத்திரை சாப்பிட வேண்டியிருந்தது. எடையும் செஞ்சுரியைத் தாண்டி 118 வரை சென்று இன்னமும் அப்படியே நீடித்தால் ஒன்னே கால் சதத்தை எட்டிவிடுவேன் என்று எடை மிரட்டியது. நல்லவேளை என் கண் முன்னால் இந்த குழுமம் உதித்தது. உண்ணும் உணவுகள் மாறின. ஆரோக்கியம் சீரடைந்தது. அந்தக் கதை பற்றி ஏற்கெனவே பேசியாகி விட்டது. இன்றைய பேசுபொருள் அது அல்ல.
இன்று நாம் டயட் உலகின் மிக முக்கியமான வார்த்தைப் பிரயோகமான மேக்ரோவைப் பற்றி அலசி ஆராய வந்திருக்கிறோம்.
மேக்ரோ என்றால் என்ன?
ஒருவரின் வயதுக்கேற்ப எடைக்கேற்ப அவர் வேலை செய்யும் திறனுக்கேற்ப அவரின் மேக்ரோ அளவுகள் எவ்வளவு இருக்க வேண்டும்?
கலோரி டெஃபிசிட் என்றால் என்ன?
எந்தெந்த உணவுகளிலெல்லாம் நல்ல கொழுப்புகள் இருக்கின்றன?
எந்தெந்த உணவுகளிலெல்லாம் நல்ல புரதங்கள் இருக்கின்றன?
எந்தெந்த உணவுகளிலெல்லாம் நல்ல கார்போஹைட்ரேட்கள் இருக்கின்றன?
முக்கியமான நாம் அன்றாடம் சாப்பிடும் எந்தெந்த உணவுகளில் எவ்வளவு கொழுப்பு, எவ்வளவு புரதங்கள், எவ்வளவு கார்ப் இருக்கின்றன?
ஒருவர் எவ்வளவு கொழுப்பு, எவ்வளவு புரதம், எவ்வளவு கார்ப் ஒரு நாளுக்கு சாப்பிட வேண்டும்?
கொழுப்பு எப்பொழுது அதிகமாக உண்ண வேண்டும்? எப்பொழுது குறைவாக உண்ண வேண்டும்?
ஒருவர் தனக்கான மேக்ரோ அளவிலேயே எப்பொழுதும் உண்ண வேண்டுமா இல்லை அவ்வப்பொழுது சற்றே அதிகம் உண்ணலாமா?
ஒரு உணவுக்கும் இன்னொரு உணவுக்கும் இடையே சிறுதீனி எடுக்கலாமா கூடாதா?
எடைக்குறைப்பு மேக்ரோ என்பது என்ன? மெயிண்ட்டனன்ஸ் மேக்ரோ என்பது என்ன?
இதைப் பற்றியெல்லாம் அடுத்து வரும் பாகங்களில் என்னால் முடிந்த அளவிற்கு விரிவாக பார்க்கலாம்.

By Gokul kumaran

No comments: