Sunday, November 6, 2016

பேலியோ உணவுமுறை தவறா?Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore

நூறு வருடங்களுக்கு முன்பு டிபி எனப்படும் காசநோய்க்கு மருந்து கிடையாது. ஆனால் காலம் காலமாக டிபி நோயாளிகளுக்கு பேலியோ போன்ற உணவுமுறையே பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு காரணம், தானியங்களை ஓரங்கட்டுவதன் மூலம் உடலில் க்ளுக்கோஸ் அளவு கம்மியாகி, பாக்டிரியாக்களுக்கு ஊட்டம் கம்மியாகி அவை பல்கிப் பெருகுவது குறையுமென்பதால். பலர் நன்றாக குணமாகவும் செய்தார்கள்.

இதைப் பற்றி மேலும் அறிய விரும்பிய Weston A Price எனும் பல் மருத்துவர் உலகம் முழுக்க பல்வேறு பழங்குடி இனத்தவரிடம் ஆராய்ச்சி மேற்கொண்டு 1939ல் Nutrition and Physical Degeneration, A Comparison of Primitive and Modern Diets and Their Effects என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதில் பழங்குடியினர் அவர்களின் உணவை உண்ணும் போது தோன்றாத பல் சொத்தை, காசநோய், பிரசவத்தின் போது வரும் பிரச்சினைகள், பர்சனாலிட்டி பிரச்சினைகள், டிப்ரஷன் போன்றவை , இவர்கள் இன்றைய நவீன மனிதனின் உணவுகளை எடுக்க ஆரம்பிக்கும் போது தோன்றுவதை குறிபிட்டுள்ளார்.

1985ல் Boyd Eaton எனும் ஆராய்ச்சியாளர் எழுதிய Paleolithic Nutrition — A Consideration of Its Nature and Current Implications எனும் கட்டுரை பரவலான கவனத்தைப் பெற்றது.

ஒரு நூற்றாண்டிற்கு முன்பே பரிணாம வளர்ச்சியைப் பற்றி ஆய்ந்தறிந்த சார்லஸ் டார்வின், அவர் புத்தகமான origin of species ல், "மனித உடல் மற்றும் உயிர் கற்காலத்திர்காக வடிவமைக்கப்பட்டவை. நவீன சூழல் மற்றும் உணவு பல்வேறு வியாதிகளை உருவாக்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பல வருட ஆராய்ச்சிக்கு பின்னர் Loren Cordain என்ற ஆராய்ச்சியாளர் பேலியோ உணவுமுறை  எனும் நூலை எழுதினார். அதன் பின்னர் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சிகள் அந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு செய்யப்பட்டு, பேலியோஉணவுமுறை  பல வியாதிகளிடமிருந்து மனிதர்களை காப்பாற்ற வல்லது என நிருபிக்கப்பட்டது.

லேட்டாக விழித்துக் கொண்ட அமெரிக்க அரசு 2015ல் "சாட்சுரேட்டட் கொழுப்பு நிரம்பிய வெண்ணையும், முட்டையும் உடலுக்கு தீங்கல்ல, கொலஸ்டிரால் ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற எங்கள் கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்" என அறிவித்தார்கள்.

சர்க்கரை தீமையானது என்பது உலகமே ஒப்புக் கொண்ட ஒரு உண்மை. processed food, junk food, பொரித்த உணவுகள், கோலா பானங்கள், ஆல்கஹால், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றை எல்லா டாக்டர்களும் சாப்பிடக்கூடாது என்றே அறிவுறுத்துகின்றனர்.

மேலே சொன்ன இரு விஷயங்களையும் இன்னொரு காண்செப்ட்டோடு இணைத்தால் அதுவே பேலியோ உணவுமுறை . அந்த கான்செப்ட் என்னவென்றால், உணவில் சேர்க்கப்படும் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்தின் அளவுகளை குறைத்தல்.

பல்வேறு ஆராய்ச்சிகள் மாவுச்சத்தை குறைத்துக் கொடுத்து செய்யப்பட்டதில் சுகர், பிரஷர், உடற்பருமன் போன்ற பல்வேறு வியாதிகள் குறைவதாக/நீங்குவதாக தெரிவிக்கின்றன.

அதன் அடிப்படையில் உருவானது தான் தமிழ் பேலியோ உணவுமுறை . மூன்று வேளை நான்வெஜ் என்றெல்லாம் இதில் இல்லை. பேலியோவின் மூலப்பொருளான, கம்மி கார்ப், மித புரதம், அதிக சாட்சுரேட்டட் கொழுப்பு என்பதை மட்டுமே இதில் வலியுறுத்தப்படுகிறது. அதை சுத்த சைவமாகவும், முட்டை சேர்த்த சைவமாகவும் அல்லது அசைவமாகவும் மக்களே அவர்கள் கலாச்சாரத்திற்கேற்ப தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

ஆயிரக்கணக்கானவர்களுக்கு முழு ரத்த பரிசோதனையின் அடிப்படையில் இலவசமாக உணவுமுறை  வழங்கப்படுகிறது. அவர்கள் எடுக்கும் மருந்தகளை யாரும் நிறுத்த சொல்வதில்லை. வியாதிகள் குறையக் குறைய அவர்கள் தங்கள் குடும்ப மருத்துவரைப் பார்த்து மருந்துகளை குறைக்க/நிறுத்த மட்டுமே சொல்லப்படுகிறது. மற்றும் ஒவ்வொரு மூன்று மாதமும் அவர்கள் ஆரோக்கியம் எந்த அளவு முன்னேறியுள்ளது என்பதைக் காண ரத்த டெஸ்டுகள் பரிந்துரைக்கப் படுகிறது.

இன்றைய தேதியில் தமிழகம் முழுக்க 200க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இந்த உணவுமுறையை  பின்பற்றி நலமாகி வருகிறார்கள். பல்வேறு கல்லூரிகளில் பேலியோ சம்பந்தமான கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஒரு உணவுமுறையை கற்றுக்கொடுப்பது என்பது தவறு என்று உலகின் எந்த சட்டத்திலும் சொல்லப்படவில்லை. மேலும் இலவசமாக அளிக்கப்படும் எந்தவொரு சேவையின் மேலும் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வழியில்லை.

தனியொரு மனிதனின் முயற்சியால் பலரின் பிரச்சினைகள் இல்லாமல் போகும் போது, பலரின் பார்வை அங்கு விழும். புகழ் பெரும் போது பலரின் பொறாமை அவரை நோக்கி திரும்பும். அந்த பொறாமையின் வடிகாலாக சேறு வாரி இறைக்கப்படும். மேலே படும் சேற்றை துடைக்கக் கூட நேரம் இல்லாமல் சேவை செய்வோரை சேறு அல்ல, நெருப்பு கூட நெருங்காது.

இன்றைய தேதியில் தமிழகத்தில் பேலியோ பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. நாளை உலகளவில் சிறந்த ஆராய்ச்சி ஜர்னல்களில் அவை பிரசுரிக்கப்படும் போது, பரவலாக அனைத்து டாக்டர்களாலும் இந்த பேலியோ உணவுமுறை   பரிந்துரைக்கப்படும். அதுவரை தனியொரு மனிதனின் இந்த சேவை தொடரும். நாமும் அவருக்கு பக்கபலமாக இருப்போம்.
Post a Comment